“இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள். நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன் பெண்களுக்குக் கூட வெறுப்பாய்ச் சகிக்க முடியாததாய்த் தோன்றலாம். இந்த வியாதி கடினமானது. தழையடித்து மந்திரம் போடுவதாலும் பூச்சுப் பூசி பத்துப் போடுவதாலும் விலகக் கூடியதல்ல. இது கூர்மையான ஆயுதத்தால் ஆழமாக அறுத்துக் கிளறி கார மருந்து போட்டு போக்கடிக்க வேண்டிய வியாதி! அழுத்திப் பிடித்து கண்டித்து, அதட்டி, அறுத்துத் தீர வேண்டியதாகும். நான் வெறும் அலங்காரப் பேச்சை தொண்டாகக் கொண்டவனல்ல! அவசியப்பட்ட வேலை நடக்க வேண்டும். ஆதலால் ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்! நம் பெண்கள் உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும்” என்று 80 ஆண்டுகளுக்கு முன்னரே சுயமரியாதைத் திருமண மேடைகள் தோறும் தந்தை பெரியார் முழங்கினார்.
ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்; ஆண்களுக்காகவே படைக்கப்பட்டவர்கள் நாம் என்ற எண்ணத்தை ஆழமாகப் பெண்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்றும், அந்தக் கருத்தைக் காலாவதியின்றிக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றால் அதற்கென சடங்கு சம்பிரதாயங்களை ஏற்படுத்தி அதைப் பண்டிகையாக்கிவிட்டால் போதும் என்றும் மநுதர்மவாதிகள் ஆக்கி வைத்துள்ளனர் என்பதைக் கண்கூடாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் ஆண்கள் இல்லாவிட்டால் பெண்கள் ‘வாழவே கூடாது’ என்ற சதி மனநிலையின் மாற்று வடிவமாக ‘வாழ முடியாது’ என்று பெண் மனத்திற்குள் தொடர்ந்து விதைக்கப்படுகிறது. (ஆனால் உண்மை என்னவோ வேறு மாதிரி உள்ளது. மனைவியை இழந்தபின் கணவனால்தான் அதிக நாள் வாழ முடிவதில்லை.)
கர்வா சவுத் !
எங்கே நாம் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவோமோ? பூவும் பொட்டும் இழந்து விடுவோமோ?
என்று பெண்ணினமே அச்சமுறுகிற பலவீனமான மனநிலைக்குத் தீனி போடும் ‘கர்வா சவுத்’
என்ற ஒரு பண்டிகை கடந்த அக்டோபர் 20 அன்று வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டிருக்கிறது. கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ மணமான இந்துப் பெண்கள் விரதம் இருந்து இப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அதிகாலையிலிருந்தே எதுவும் உண்ணாமல் நாள் முழுவதும் (சிலர் தண்ணீரும் அருந்தாமல்) இரவு எப்போது நிலவு தெரிகிறதோ அதுவரை எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் பட்டினியாகக் கிடந்து, சல்லடை வழியாக முதலில் நிலாவைப் பார்த்து, அதே சல்லடை வழியாகத் தன் கணவனைப் பார்த்து, பின்பு ஒரு சிறு பானையில் தண்ணீர் வைத்துச் சடங்கைச் செய்து விரதத்தை முடிக்கின்றனர்.
ஆணுக்காகவே வாழ்கிறோம் எனும் எண்ணம்!
மனைவியின் பட்டினிக்கும் கணவனின் ஆயுளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் என்றாலும், இந்த மூடத்தனங்கள் கூட பெண்ணுக்குத்தான் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைக் கவனமாக நுணுகிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப் பெண்கள் விருப்பத்துடன் தங்களை வருத்திக்கொள்ளத் தூண்டுவதும், தங்களை மிகையாய் அலங்கரித்துக் கொண்டு பூஜை செய்வதும் தந்தை பெரியார் மேற்கூறிய ‘ஆணுக்காகவே வாழ்கிறோம் நாம்’ என்ற அடிமைத்தனத்தை நிலை நிறுத்தவே அன்றி வேறில்லை.
வறுமையும் வாங்கும் பெருக்கமும்!
வரலட்சுமி நோன்பு என்று சுமங்கலிப் பெண்கள் பூஜை செய்யும் பழக்கம் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே உண்டு என்றாலும் வட மாநிலங்களில் இது பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வாங்கும் அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான பெண்களால் கொண்டாடப்படுகிறது.
சென்ற ஆண்டு மட்டும் பூஜைப் பொருட்கள், உடைகள், குறிப்பாக சிவப்பு நிறத்தில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் வளையல்கள், பழங்கள் என 15000 கோடிக்கு மேல் விற்பனை ஆயிற்றாம்! கை கால்களில் மெஹந்தி போட்டுக் கொள்வதும் தனியாக, வியாபாரமாக மாறி இருக்கிறது. டெல்லியில் மட்டும் இந்த ஆண்டு நான்காயிரம்
கோடிக்கு பொருள்கள் விற்பனை ஆகியிருக்கிறதாம்! இந்தியா என்பது 70 கோடி மக்களுக்கு மேல் வறுமையில் வாழும் நாடு என்பதும் வடமாநிலங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் வெந்நீரில் மஞ்சள், உப்பு, மிளகாய்த் தூள் கலந்து ரேஷன் அரிசி சோற்றுக்கு ஊற்றிச் சாப்பிடக் கொடுக்கும் பரிதாப நிலையும் இதே நாட்டில்தான் இருக்கிறது என்பதும் எத்தகைய முரண்பாடு!
அதோடு இந்த சுமங்கலிப் பெருமைகள் தான், கணவனை இழந்த பெண்கள் எந்த நிகழ்விலும் முன்னிருக்கக் கூடாது, அது அமங்கலம் என்று அவர்களைத் தள்ளி வைக்கும் கொடுமையையும் இந்நாட்டில் ஏற்படுத்தி வைத்திருக்கிறதே!
பட்டினியால் பலன் என்ன?
உடல்நலக் கண்ணோட்டத்திலும்கூட, பல மணி நேரம் பட்டினி கிடப்பது உடலுக்கு நல்லது என்று எந்த மருத்துவரும் இதுவரை சொன்னதில்லை.நீராகாரங்களோ பழம் போன்றவைகளோ எடுத்துக் கொண்டு சில மணி நேரம் உடல் உள் உறுப்புகளின் செரிமான வேலையைக் குறைக்கச் செய்யலாமே தவிர, காலை உணவைத் தவிர்ப்பதைக் கூட யாரும் பரிந்துரைப்பதே இல்லை! ஆனால், பக்தி என்று வந்துவிட்டால் புத்தி திரிந்து விடுகிறது என்பதற்கும் இந்தப் பட்டினி நிகழ்வு மேலும் ஒரு சான்றாகும்.
பொதுவாகவே பெண்களுக்கு வேலை நேரம் என்பது மிகக் கூடுதலானது. அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஆண்களை விட ஒப்பீட்டளவில் பல மணி நேரம் கூடுதலாக வேலை செய்ய வேண்டிய நிலைமை. இதனால் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பெரிதும் அவதிப்படுபவர்களாகவே இருக்கிறார்கள்; இந்நிலையில் பெண்களின் ஆரோக்கியத்தை முன்னெடுக்காமல் எப்போதும் “உன் எண்ணம், சொல், செயல் எல்லாம் ஆண்களுக்கானதாகவே இருக்க வேண்டும்!” என்று அவர்களின்
தன்னம்பிக்கையையும் சிதைத்து விடுவது தான் இந்தப் பட்டினிப் பண்டிகை பெண்களுக்குத் தரும் பலனாகும்!
ஆணும் பெண்ணும் தங்கள் ஆயுளை நீட்டிக் கொள்ள ஆயிரமாயிரம் வழிமுறைகளை மருத்துவ அறிவியல் தந்துள்ள நிலையில், ஊடகங்களும் இவற்றில் உரத்த சிந்தனைகளை எழுப்பாமல் ஊமைகளாகி, வெறும் செய்திகளை மட்டும் வெளியிட்டு வேடிக்கை பார்க்கும் போக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இந்த மூடநம்பிக்கைப் பண்டிகைகளை இடைவிடாமல் வட நாட்டு ஊடகங்கள் ஒளிபரப்பி, மிகப்பெரிய விளம்பரத்தைக் கொடுக்கின்றனர். விட்டில் பூச்சிகளாய் பெண்கள் இந்தப் பண்டிகைகளுக்குள் மாட்டிக் கொள்ளச் செய்வதில் ஊடகங்களின் பங்கும் பெருமளவில் இருக்கிறது.
பெரியார் சொன்னது போல இந்த வியாதி கடினமானது. சல்லடையால் நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களின் கைகளில் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தைக் கொடுத்துப் படிக்க வைக்க வேண்டிய காலமிது என்பதே நாம் உரக்கச் சொல்வதாகும்!