1. கே: ஷிண்டே அவர்களின் மகன் கோயில் கருவறைக்குள் சென்றதைப் பெரும் பிரச்சினையாக்கும் சங்கிகளின் செயல் ஏற்புடையதா?
– த.பாபு, தாம்பரம்.
ப: அவர்களுக்கு வாதாட, போராட வேறு பிரச்சினைகள் கிடைக்காததால் இப்படி என்பது இதன் மூலம் புரிகிறது.
2. கே: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள், கடவுள் வழிகாட்டலில் பாபர் மசூதி பிரச்சினையில் தீர்ப்பு எழுதியதாய்க் கூறியபின், அத்தீர்ப்பையே மறுஆய்வுக்கு உட்படுத்த சட்டப்படி இடம் உண்டா?
– கே.தாமோதரன், செங்கல்பட்டு.
ப: அவர் இப்படி தீர்ப்புக் கூறியது பற்றி கண்டனங்கள் எழுகின்றனவே! அதுவே உங்கள் கருத்துக்கு வலு சேர்ப்பதாகும்.
3. கே: நாவரசைக் கொடூரமாய்க் கொலை செய்த ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டதை தமிழ்நாடு அமைச்சரவை ஏற்றது ஏற்புடையதா?
– வ.சின்னப்பொண்ணு, கோயம்புத்தூர்.
ப: நம் நாட்டுச் சட்டம் வேறு; நீதி வேறு என்பதற்கு இதுவும் ஒரு சான்றாவணம் ஆகும்.
4. கே: தீட்சதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்றம், “கோயில் நிருவாகத்தில் அறநிலையத்துறை எப்படித் தலையிட முடியும்?” என்று வினா எழுப்பியுள்ளது சரியா?
– பெ.காளி, வடலூர்.
ப: நிருவாகத்தில் ஒழுங்கீனம், தவறு ஏற்பட்டால் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரம் உண்டு. மேலும் அரசியல் சட்டம் 25, 26 கூறுகள்படி (Articles) மதச் சுதந்திர உரிமை என்பது லகான் இல்லாத குதிரை அல்ல; அரசும் பல நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டதே! (Not absolute Right)
5. கே: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை ஓர மைல் கல்லுக்கு படையல் போட்ட செய்தி படத்துடன் வந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கே.மன்னை சித்து, மன்னார்குடி.
ப: அறியாமைதான் அதற்கு மூலகாரணம். வெட்கப்பட வேண்டியது.
6. கே: 2024ஆம் ஆண்டின் உலகளாவிய பசி குறியீட்டில் 127 நாடுகளில் இந்தியா 105ஆம் இடத்தில் உள்ளது. இது இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பின் தோல்வியைக் காட்டும் நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது கட்டாயம் அல்லவா?
– டி.சாந்தி, குடியாத்தம்.
ப: நிச்சயமாக. செய்தும் வருகின்றன – மக்கள் மன்றத்தில்.
7. கே: மசூதிக்குள் ‘ஜெய்சிறீராம்’ என்று கோஷமிடுவது மத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகாது என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா அளித்த தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கே.கன்னியம்மாள், ஆரணி.
ப: முற்றிலும் தவறான தீர்ப்பு; அரசியல் சட்டக் கூறுகளுக்கு விரோதமான- ஏற்கத்தகாத தீர்ப்பு.
8. கே: குழந்தைத் திருமணங்களை அறவே தடுக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய – மாநில அரசுகள், முற்போக்கு இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?
– கே.கேசவன், சென்னை.
ப: தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.
9. கே: குஜராத்தில் அய்ந்து ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி மோசடி நடைபெற்றுள்ளதே! இதுதான் குஜராத் மாடலா?
– த.காஞ்சனா, கொடுங்கையூர்.
ப: குஜராத் மாடலின் வெளிச்சத்தின் விளக்கம் அது!