மனச்சிதைவு நோய் (Schizophrenia)

2024 கட்டுரைகள் நவம்பர் 1-15

மனமின்றி அமையாது உலகு! (8)

எண்ணங்களில் வரும் நோய்களில் முதன்மையானது மனச்சிதைவு நோய். மேலும் அனைத்து மனநோய்களை விட தீவிரத் தன்மை வாய்ந்ததும் இந்த மனச்சிதைவு நோயே. சாலைகளில் ஆதரவின்றிச் சுற்றித் திரிபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மனநோய் என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தனியாகப் பேசுவது, சிரிப்பது போன்ற தன்மைகளெல்லாம் இந்த நோயின் குணாதிசயங்களே.

எமில் கிரெப்பலின் என்ற ஃபிரெஞ்ச் நரம்பியல் நோய் நிபுணர் 1800களிலேயே இந்த நோய் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருக்கிறார். ‘Dementia Precox’ என்று அவர் இந்த நோயைக் குறிப்பிடுகிறார். அதாவது, இளமையில் ஏற்படும் டிமென்சியா என்கிறார். வழக்கமாக டிமென்சியா நோய் முதுமையிலேயே ஏற்படும். மறதி உட்பட மூளையின் நுண்ணறிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மந்தமடைவதே டிமென்சியா நோயின் தன்மை. இதே தன்மை இளமையிலேயே அதாவது 15 முதல் 20 வயதுக்குள்ளாகவே ஏற்பட்டால் அதுதான் ‘Dementia Precox’ என்கிறார். வளரிளம் பருவம் முதல் மூளையின் நுண்ணறிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து மந்தமடையும் நிலையே இந்த நோயின் அடிப்படைப் பண்பு என்கிறார்.

ஈஜின் பிளாய்லர் என்னும் நரம்பியல் நிபுணர், முதன்முதலில் இந்த நோயை ஸ்கீசோஃபிரெனியா என அழைக்கிறார். அதில் அவர் ஸ்கீசோஃபிரெனியாவின் நான்கு அடிப்படைப் பண்புகளைச் சொல்கிறார்:

1. Autism (சமூகவிலகல்)

2. Affective flattening (உணர்ச்சியற்ற நிலை)

3. Ambivalence (தீர்க்கமான முடிவெடுக்க முடியாமை)

4. Association disturbances (சிந்தனை, உணர்வுகள், அறிவாற்றல் போன்றவற்றிற்கிடையேயான பிணைப்புக் குறைதல்)

அதாவது ஸ்கீசோஃபிரெனியா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமூகத்திலிருந்து விலகியே இருப்பார், அவரால் யாரிடமும் ஓர் உறவை உருவாக்கவோ அல்லது தொடரவோ முடியாது. பெரும்பாலும் தனிமையையே விரும்புவார், மற்றவர்கள் அருகில் இருக்கும் நேரத்தில் மிகவும் அசவுகரியமாக உணருவார், மற்றவர்களுக்காக எதையும் விட்டுத்தரவோ அல்லது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ அவரால் முடியாது. எளிமையாகச் சொன்னால் தனக்கான தனிப்பட்ட உலகில், தனக்காகவே, தனக்குத்தானே என்று வாழ்ந்து கொண்டிருப்பார்.

மேலும் இந்த நோயால் பாதிக்கப்படும்போது உணர்வுகளைக் கையாளும் திறன் குறைந்து விடும். அவர்களால் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கோ அல்லது மற்றவர்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கோ இயலாது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் முக அசைவுகள் – அதாவது முகபாவனை மூலம் எந்த வித உணர்வையும்வெளிப்படுத்த மாட்டார்கள். மொத்தத்தில் உணர்வுகள் பெருமளவு மட்டுப்பட்டே இருக்கும். பிளாய்லரின் கருத்துப்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அடுத்த முக்கியமான பண்பு எந்த ஒரு விஷயத்திலும் அவர்களால் தெளிவாகவும், தீர்க்கமாகவும் முடிவெடுக்க முடியாது. எப்போதும் இதுவா அல்லது அதுவா என ஊசலாடிக்கொண்டேயிருப்பார்கள்.

இறுதியாக சிந்தனை, உணர்வுகள், அறிவாற்றல் போன்றவற்றிற்கிடையே எந்த இசைவும் இல்லாமல் ஒவ்வொன்றும் தன்னிச்சையாகச் செயல்படும். உதாரணத்திற்கு, உணர்வுகள் பதற்றமாக இருந்தால் அந்தப் பதற்றம் எண்ணங்களில் வெளிப்படாது, எண்ணங்கள் வேறுவிதமாக இருக்கும். அதே போல அறிவாற்றல் வேறு ஒரு மாதிரி இருக்கும். மனதின் மூன்று பரிமாணங்களும் இலக்கற்று, இசைவற்று, தன்னிச்சையாகச் செயல்பட்டு அந்த நபரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த நான்கு பண்புகள் கொண்டவையே ஸ்கீசோஃபிரெனியா என்கிறார் பிளாய்லர்.

கார்ட் ஸ்னைடர் என்ற மனநல மருத்துவர் ஸ்கீசோஃபிரெனியாவிற்கான பத்து அறிகுறிகளைப் பட்டியலிட்டார். பின்னாளில் இந்த நோயை சர்வதேச மருத்துவ அமைப்புகள் அட்டவணைப்படுத்திய போது ஸ்னைடரின் இந்தப் பத்து அறிகுறிகளையே முதன்மையாகக் கொண்டது.

ஸ்கீசோஃபிரெனியா நோயைக் கண்டறிய ஸ்னைடரின் இந்தப் பத்து அறிகுறிகளையே இன்றும் கூட பெரும்பாலான மனநல மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.
ஸ்னைடரின் அந்த பத்து அறிகுறிகள் :

1. ஒருவருடைய எண்ணங்களே குரலாக அவருக்குள் ஒலிப்பது:

“நான் நினைக்கிறதெல்லாம் சத்தமாக எனக்கே கேட்குது டாக்டர்” என நோயாளிகள் சொல்வார்கள். அதனால் எந்த நேரமும் அந்த எண்ணங்கள் மேலேயே கவனமாக இருப்பார்கள், இதன் விளைவாக தங்களைச் சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் விலகி தனிமையில் இருப்பார்கள். தனிமையில் சத்தமாகக் கேட்கும் தங்களது எண்ணங்களுடன் பேசிக்கொண்டோ, விவாதித்துக்கொண்டோ இருப்பார்கள். உங்க எண்ணமே உங்ககிட்ட பேசுறது போல இருந்தா எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதே கஷ்டம்தான் நோயாளர்களும் படுவார்கள்.

2. ஒருவருடைய எண்ணங்கள் மற்றவர்களுக்கும் தெரிவது, ஒலிபரப்பு செய்யப்படுவது:

“நான் என்ன நினைச்சாலும் அது மத்தவங்களுக்குத் தெரிய வந்துடுது டாக்டர், என்னால மனசுல எதையுமே ரகசியமா வச்சுக்க முடியல, நான் நினைச்ச அடுத்த நிமிடமே மத்தவங்களுக்குத் தெரிஞ்சிடுது, சில நேரம் டிவியில கூட நான் நினைக்கிறதச் சொல்றாங்க, நேத்து ஒரு நாடகம் பார்த்தேன், அதுல வர ஒருத்தன் என் மனசுல நான் நினைக்கிறத யெல்லாம் வரிசையா சொல்லிக்கிட்டு இருந்தான்” என நோயாளிகள் சொல்வார்கள். அவர்களின் எண்ணங்கள் பலருக்கும் தெரிவதாகவும், அது இப்படி ஊடகங்களின் வாயிலாக ஒலிபரப்புச் செய்யப்படுவதாகவும் நம்புவார்கள்.

3. வேறு யாருடைய எண்ணங்களோ தனது மனதில் புகுத்தப்படுவது:

திட்டமிட்டு மற்றவர்களுடைய எண்ணங்கள் தனது மனதில் செருகப்படுவதாக நம்புவது. அதன் விளைவாக தனது சிந்தனைகள், எண்ணங்கள் என அனைத்துமே வேறு யாரோ ஒருவருடையது என்பதைத் தீவிரமாக நம்புவது.

4. தனது எண்ணங்கள் திருடப்படுவது:

தனது எண்ணங்கள் அனைத்தும் உடனடியாக மனதில் இருந்து வெளியேறிவிடுகிறது, வேறு யாரோ சிலர் தொடர்ச்சியாகத் தனது எண்ணங்களை அபகரிக்கிறார்கள், உடனுக்குடன் தனது மனதிலிருந்து பறித்துக்கொள்கிறார்கள், அந்த எண்ணங்களைக் கொண்டு ஏதோ திட்டமிடுகிறார்கள் என நம்புவார்கள்.

5. தனிமையில் கேட்கும் குரல்கள்:

யாருமே இல்லாத நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் குரல்கள் தங்களுக்குள் விவாதிக்கொண்டிருப்பதும் அல்லது பாதிக்கப்பட்ட நபரின் செயல்களை வர்ணணைசெய்துகொண்டிருப்பதும் கேட்டுக்கொண்டேயிருக்கும். “யாரோ ரெண்டு பேர் நான் பண்ற எல்லாத்த பத்தியும் சொல்லிட்டே இருக்காங்க டாக்டர், நானும் சுத்திச் சுத்தித் தேடறேன் ஆனால் யாருமேயில்லை, ‘இவன் தலை சீவறான்’, ‘சாப்பிடப் போறான்’, ‘குண்டா இருந்துகிட்டு எவ்வளவு சாப்பிடுறான் பாரு’ அப்படினு ஒவ்வொன்னையும் சொல்லிக்கிட்டே இருக்காங்க” எனச் சொல்வார்கள்.

6. தனது செயல்களை யாரோ கட்டுப்படுத்துவதாக உணர்வது:

“நான்தான் செய்றேன், ஆனால், என்னை யாரோ செய்ய வைக்கிறாங்க; எனது கை அசைத்தாலும் சரி, இல்ல அமைதியா உட்கார்ந்திருந்தாலும் சரி. எதுவுமே நானா செய்வதில்லை, என்னை யாரோ செய்ய வைக்கிறாங்க” எனக் கூறுவார்கள்.

7. தனது எண்ணங்களை யாரோ கட்டுப்படுத்துவதாக உணர்வது:

செயல்களைக் கட்டுப்படுத்துவது போல தங்களது உணர்வுகளும் வேறு யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுவதாக நம்புவார்கள்.

8. தனது உணர்வுகளை யாரோ கட்டுப்படுத்தவதாக உணர்வது:

கவலையோ, வருத்தமோ, சந்தோசமோ இப்படி எந்த உணர்வும் தன்னிசையாக வராமல் வேறு யாரோலோ திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக நினைப்பார்கள். மனதிற்கென்று அசலான எந்த உணர்வும் இல்லை என்ற அவர்களின் நம்பிக்கை அத்தனையிலிருந்தும் அவர்களை விலக்கி வைத்திருக்கும்.
தனது உடலையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் வேறு யாரோ எந்த நேரமும் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதாக நினைப்பதன் விளைவாக அதீத மனவுளைச்சலுக்கும், மனப் பதற்றத்திற்கும் ஆளாவார்கள்.

9. சிந்தனைகளும், உணர்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும், அதே போல பேச்சும், சிந்தனையும் சீரற்றும், தொடர்பற்றும் இருக்கும். இதனால் அவர்களின் செயல்கள் இலக்கற்றும், விசித்திரமாகவும், விநோதமாகவும் இருக்கும். பார்க்கும் நமக்குத்தான் அப்படி இருக்குமே தவிர, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஒவ்வொரு செயலுக்கும் தனிப்பட்ட விளக்கங்கள் வைத்திருப்பார்கள். (சூதுகவ்வும் படத்தில் வரும் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகளை ஓரளவு உதாரணமாகக் கொள்ளலாம்)

10. பிறழ் நம்பிக்கை:

எந்த ஓர் அடிப்படையுமில்லாமல் ஒரு எண்ணம் திடீரென நம்பிக்கையாக மாறுகிறதென்றால் அந்த நம்பிக்கை பிறழ் நம்பிக்கையாகக் (Delusion) கருதப்படும்.
இந்தப் பத்து அறிகுறிகளில் பெரும்பான்மையாக ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவருக்கு மனச்சிதைவு நோய் இருக்கலாம் என்கிறார் ஸ்னைடர்.

கேள்வி:

நான் சில நேரங்களில் பணம், செல்போன், ஏடிஎம் கார்டு, வீட்டுச் சாவி போன்ற பொருள்களை வேறு ஏதாவது சிந்தனையில் இருக்கும் போது தொலைத்துள்ளேன். இந்த நிலையிலிருந்து மீள்வது எப்படி?

– கார்த்திகேயன், சென்னை

பதில் :

சில நேரங்களில் நம் எல்லாருக்கும் கூட இது போன்று நிகழ்வதுண்டு. “வர வர நிறைய மறதிகள் இருக்கு” என்று நாமே கூட நினைப்பதுண்டு. ஆனால், இது மறதி அல்ல; ‘கவனக் குறைபாடு’. நாம் ஒரு செயலைச் செய்யும்போது நம் முழு கவனமும் செய்யும் அந்த செயலில் இருக்க வேண்டும். அப்போது தான் அது நம் மூளையில் ஒரு நினைவாகத் தங்கும். இப்படிச் சேகரிக்கப்பட்ட நினைவுகளைத்தான் நாம் தேவையான போது வெளிக்கொணர முடியும்.

உதாரணத்திற்கு, புதிதாக நாம் ஒருவரைப் பார்க்கிறோம் என்றால் உடனடியாக நாம் அவரது நினைவுகளைச் சேகரிக்க மாட்டோம். பார்க்கும் அனைவரையும் நாம் நமது நினைவடுக்குகளில் சேகரிப்பது கிடையாது. இதுவே ஏதோ ஒரு வகையில் அந்த மனிதர் நமது கவனத்தைக் கவர்ந்தால் அவரின் நினைவு நமக்குள் சேமிக்கப்படும். ஒரு நினைவு மூளையில் சேகரிக்கப்படவேண்டுமென்றால் அதில் நமது கவனம் அத்தியாவசியமான ஒன்று. சேமிக்கப்பட்ட நினைவுகளை வெளிக்கொணர முடியவில்லை என்றால் தான் அது மறதி. ஒரு தகவல் அல்லது ஒரு செயல் மூளையில் சேமிக்கப்படவே இல்லை என்றால் அது கவனக் குறைபாடு.

ஏன் கவனக் குறைபாடு வருகிறது என்றால் இரண்டு வகையான காரணங்களினால் வருகிறது. ஒன்று ஒரு செயலைச் செய்யும் போது வேறு சிந்தனைகளில் நமது மனம் இருக்கும்போது அந்தச் செயலில் நமது கவனம் இருக்காது மற்றொன்று, அந்தச் செயல் நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லையென்றால் அல்லது அதில் நமக்கு அந்தளவிற்கு ஈடுபாடு இல்லையென்றால் அதன் மேல் கவனமும் இருக்காது.

இந்தக் கவனக் குறைபாடு என்பது எல்லாருக்கும் சில நேரங்களில் வருவதுண்டு. சில நேரங்களில், சில செயல்களில் அப்படி கவனக் குறைபாடு வருவது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், செய்யும் எல்லாச் செயல்களிலும் கவனம் இருப்பதில்லை. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஈடுபாடு வருவதில்லை. எப்போதும் ஏதோ தேவையற்ற சிந்தனைகளிலேயே இருப்பதும், அதன் விளைவாக எதிலும் கவனமற்று இருப்பதும் தான் பிரச்சினை. இப்படி இருந்தால் நாம் முதலில் கவனக் குறைபாடு நமக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வதன் வழியாகவே அதில் இருந்து மீள்வது குறித்து யோசிக்க முடியும். அல்லது அதற்கு ஏற்றாற்போல திட்டமிட முடியும்.
உதாரணத்திற்கு, காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போது ‘நான் சிலவற்றை மறந்துவிட்டுச் சென்றுவிடுகிறேன்’ என்பதை உணர்ந்தால் அதற்கு ஏற்றவாறு திட்டமிடலாம்.
எந்தெந்தப் பொருட்களை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு அட்டவணையைத் தயாரிக்கலாம், அதை நாம் வீட்டில் இருந்து வெளியேறும் இடத்தில் கண்ணில் படுமாறு ஒட்டிவைக்கலாம். இப்படி நமது பலவீனங் களுக்கு ஏற்றவாறு நமது அன்றாடச் செயல்களைத் திட்டமிடுவதன் வழியாகத்தான் நாம் அந்தப் பலவீனங்களைக் கடந்து வர முடியும்.

இந்தக் கேள்வியில் நீங்கள் சொல்வது அன்றாடம் நீங்கள் செய்யக் கூடிய செயல்களில் உள்ள கவனக் குறைபாடு. அதற்கும் மேல்சொன்னது போல திட்டமிட வேண்டும். இந்தப் பொருட்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்து எடுப்பதன் வழியாக – அதாவது இவைகளுக்கென்று பொதுவான இடத்தை ஏற்படுத்தி, அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் இந்தப் பொருட்களை வைக்ககூடாது என்று திட்டமிடுவதன் வழியாக – இந்தச் செயல்களின் மீதான கவனக் குறைவில் இருந்து நாம் வெளியேறலாம்.