ஒரு முறை பாஜக தலைவர் ஒருவர் சொன்னார்- ‘எங்களுக்கு மேலைநாடுகளில் இருந்து சிப் (Chip) மட்டும் போதும்; சிப்ஸ் (potato Cips) வேண்டாம்!’ என்று. அதாவது அவர்களது நவீனத் தொழில்நுட்பம் மட்டும் போதும்; அவர்களது உணவுப் பழக்க வழக்கம் தங்களுக்கு வேண்டாம் என்பதைத் தான் இப்படிச் சொன்னார். இப்போது கவர்னர் ஆர்.என்.ரவி, மதச்சார்பின்மை (Secularism) என்னும் அரசியல் ஆங்கிலேயரின் (அந்நியரின்) கண்டுபிடிப்பு. ஆகவே, அது வேண்டாம் என்று சொல்கிறார். அதாவது, அவர்கள் விட்டுச் சென்ற கவர்னர் பதவி மட்டும் அவருக்கு வேண்டும்; ஆனால், அவர்களது மதச்சார்பின்மை எனும் அரசியல் வேண்டாம் என்கிறார். இங்குள்ள அனைத்து வகை அடிப்படைவாதிகளின் குரலும் இப்படித்தான் இருக்
கிறது.
ஆனால், யதார்த்தம் என்னவாக இருக்கிறது? ஒரு நாட்டிடமிருந்து வாங்கப்படும் நவீனத் தொழில்நுட்பத்திலோ அல்லது அவர்கள் உற்பத்தி செய்யும் எந்திரப் பொருட்களிலோ ஒட்டிக் கொண்டிருக்கும் அந்நாட்டின் தத்துவம், அரசியல், மொழி, பண்பாடு, பழக்க வழக்கம் போன்றவற்றை உரித்தெறிந்து விட்டு அதனைப் பயன்படுத்த இயலுமா? அது சாத்தியமா?
நாமறிந்தவரை அது சாத்தியமில்லை. அறிவியலுக்குப் புறம்பான இந்தச் சாத்தியமற்ற ஒன்றைத்தான் இங்குள்ள அனைத்து வகைப் பாசிஸ்டுகளும் விரும்புகின்றனர், பிரச்சாரமும் செய்கின்றனர். இனவெறியர் ஒருவர் உனது
பொருள் வேண்டும். ஆனால், உனது ஆங்கில மொழி வேண்டாம் என்கிறார். மத அடிப்படைவாதியோ மேற்கூறியவாறு எனக்கு உனது நவீனத் தொழில் நுட்பமும் பொருளும் வேண்டும். ஆனால், உனது பழக்க வழக்கம் வேண்டாம் என்கிறார்.
ஆனால், இதுவரையிலான மனிதகுல வரலாறோ வேறு மாதிரியாக உள்ளது. எந்தவொரு உற்பத்திக் கருவியும் அல்லது தொழில் நுட்பமும் ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்புடன் (Social Structure) தொடர்புடையதாகவே உள்ளது. அடிமைச் சமூகத்தில் இருந்த உற்பத்திக் கருவிகள் நிலவுடைமைச் சமூகத்தில் இல்லை. அதே போல நிலவுடைமைக்கால கைவினைப் பட்டறைத் தொழிலும் கருவிகளும் நவீன முதலாளியச் சமூகத்தில் இல்லாது ஒழிந்து போயின. அவ்விடத்தில் எந்திரத் தொழிற்சாலைகள் ஓங்கி வளர்ந்தன.
கருவிகள் மட்டுமல்ல; பண்ணையம் செய்தவர்களும் பண்ணையடிமைகளும் இல்லாமலாகி, அவ்விடத்திற்கு சுதந்திரமான தொழிலாளிகள் வந்து விட்டனர். ஆகவே, ஒரு தொழில் நுட்பத்துடனோ உற்பத்திக் கருவியுடனோ ஒரு தத்துவமும் அரசியலும் பண்பாடும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையில்லை. இவ்விடத்தில் மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டும். விவசாயத்தை மய்யமாகக் கொண்ட பண்ணையடிமைச் சமூகக் காலத்தில் வாயிருந்தும் ஊமைகளாய், பொட்டுப் பூச்சிகளாய் வாழ்ந்தவர்கள் எந்திரமயமான முதலாளியச் சமூகத்தில் வாழ இயலாமல் அழிந்து போய் விட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கு நவீனக் கருவிகளும், பொருட்களும், அதனால் விளையும் சுக போகங்களும் மட்டும் வேண்டுமே தவிர, அவை கூட்டிக்கொண்டு வரும் பண்பாடும் உணவுப் பழக்கங்களும் முற்போக்குக் கருத்தாக்கங்களும், அரசியல் சித்தாந்தங்களும் வேண்டாதவையாகி எட்டிக்காயாய்க் கசக்கின்றன.
ஆனால், இது சாத்தியமற்ற ஒன்றாக – சமூக அறிவியலுக்கு முரணானதாக இருக்கிறது. ஆம்! அவர்கள் மனித உடலில் யானைத் தலையை பொருத்தப் பார்ப்பவர்களாகவே உள்ளனர். தங்களது முன்னோரது கண்டுபிடிப்பான பார்ப்பனியச் சனாதன தர்மத் தத்துவத்தை எக்காலத்திற்கும் உரித்தானதாகக் கருதுகின்றனர். 2000 ஆண்டுகளாக அதனை விடாப்பிடியாகத் தூக்கிச் சுமந்து கொண்டு திரிகின்றனர்.
தமிழ் மக்கள் அடிமைச் சமூகத்தையும் பண்ணையடிமைத்தனத்தையும் வெறுத்து உதறிவிட்டு சுதந்திர மனிதர்களாக வாழத் தலைப்பட்டுவிட்ட பிறகும் பார்ப்பனர்கள் வர்ணாசிரம தர்மம் எனும் பார்ப்பனிய அதர்மத்தை, 2000 ஆண்டுகாலத்திற்கு முந்தைய அழுகிப் புழுத்துப்போன பிணத்தைத் தூக்கிக் கொண்டுவந்து பார்ப்பனரல்லாத மக்களைச் சுமக்கச் சொல்லி நிர்பந்திக்கின்றனர். மேலும் 200 ஆண்டுகால ஆங்கிலேயர் (முதலாளிய ) ஆட்சியில் இங்கு புகுத்தப்பட்ட நவீன கல்வி, அரசியல், பண்பாடு, தத்துவம் அனைத்தையும் உதறச் சொல்கின்றனர். அவற்றுக்குப் பதிலாக பார்ப்பன நால் வர்ணத் தத்துவத்தையும், மதவாத அரசியலையும், பார்ப்பனியப் பண்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர். (ஆனால் இந்த உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தான்: அக்ரஹாரத்திற்கு அல்ல!)
இதன் தொடர்ச்சியாகத்தான் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கின்றனர். மெக்காலே எனும் அந்நியர் புகுத்திய கல்வி வேண்டாம் என்று சொல்லி குருகுலக் கல்வியைப் (விஸ்வகர்மா யோஜனா) புகுத்துகின்றனர். அதாவது இந்த நவீனக் கல்வியும், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சமதர்மம் எனும் அரசியல், தத்துவங்களும் தானே இந்தச் சூத்திரர்களை விழிப்புணர்வு பெற்ற மனிதர்களாக மாற்றுகின்றன என்று அவற்றை வெறுக்கின்றனர்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பன அதிகாரம் கொடிகட்டிப் பறந்த மத்திய காலத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றனர். பார்ப்பனரல்லாத மக்கள் எவ்வித உரிமைகளும் அற்று கோயிலுக்குள்ளும் அக்ரஹாரத்திற்குள்ளும் நுழைய முடியாமல் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, கூனிக்குறுகி பணிந்து நின்று, பார்ப்பனர்கள் காலால் இட்ட பணிகளைச் சூத்திரர்கள் தங்களது தலையில் சுமந்து நிறைவேற்றிய காலத்திற்குத் திரும்பிச் சென்று விட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
தங்களது ஆதிக்கக் கனவைக் குலைத்துப் போடும் அனைத்தையும் வெறுக்கின்றனர். இந்த வெறுப்பை இப்போது மிக அப்பட்டமாகத் திமிரோடு வெளிப்படுத்தவும் செய்கின்றனர். ‘நால்வர்ண முறை மிகவும் க்ஷேமகரமானது’ என்று நவீன ஊடகங்கள் (Youtube) வாயிலாகப் பிரச்சாரம் செய்கின்றனர். குலத்தொழில் முறையே சிறந்தது என்கின்றனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தீவிரமாக எதிர்த்துப் பேசுகின்றனர். குழந்தைத் திருமணத்தை ஆதரித்துப் பேசுகின்றனர். அகமணமுறையே சரியானது என்றும் அறிவிக்கின்றனர்.
ஏனென்றால், தற்போது ஒன்றிய அதிகாரம் தங்களது கைகளில் இருப்பதால் இடைக்காலத்தில் (1960-1980) பூண்டது போல முற்போக்கு வேடம் போடவேண்டிய தேவை இனியில்லை என்று கருதி தங்களது பூணூலையும் குடுமியையும் ஊரறியக் காட்டிக்கொண்டு நவீன ஊடகங்களில் வந்து வர்ணதர்மத்தை ஆதரித்துத் துணிச்சலாகப் பேசுகின்றனர்.
ஆனால், கழுதையாக அவர்கள் கத்தினாலும் கருவாடு ஒரு நாளும் மீனாகாது! ஓ… சாரி! அவாளுக்குப் புரியும் விதமாகச் சொல்வதென்றால், கறந்த பால் மடி புகாது! வெண்ணெய் ஒருபோதும் பால் ஆக மாறாது! அதே போல தமிழ்நாடு ஒருபோதும் ஆரிய வர்த்தமாகாது!
அது பெரியார் மண்ணாகிப் பெரும் மாற்றங்களை விளைவித்துக் கொண்டிருக்கிறது!