எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! அறிஞர் போற்றும்
இராவணநற் காவியத்தைப் படைத்த ஏந்தல்!
பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை
பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்!
குழந்தையிவர் பெயரில்தான்! சீர்தி ருத்தக்
கொள்கையுரம் வாய்ந்தஇவர் புலமை ஆழி!
முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின்
முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்!
இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக,
ஏற்றமுடன் விளக்குகிற காவி யத்தை
உலகெங்கும் வாழ்தமிழர் உவகை எய்த
ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்!
சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர்
சிறுமதியோர் தடைநீக்கி மாண்பைச் சேர்த்தார்!
பலபனுவல் யாத்தஇவர் ஞாலம் போற்றும்
பகுத்தறிவை, தன்மதிப்பைப் பதியம் இட்டார் !
அறிவுலகம் பாராட்டும் ஆய்வால் நந்தம்
அருந்தமிழ்க்கு வளம்சேர்த்தார் குழந்தை! கம்பன்
விரித்திட்ட இராமாயணம் தன்னை விஞ்சும்
வியத்தகுசீர் நயம்பலவும் சேர்த்தார்! தந்தை
பெரியாரின் தன்மான இயக்கம் சேர்ந்து
பெரும்புரட்சிக் கருத்துமழை பொழிந்தார்! போற்றும்
திருக்குறளுக்(கு) உரைகண்டார்; எளியோர் கற்றுத்
தேர்ந்திட”யாப் பதிகாரம்” சிறக்கத் தந்தார்!
ஆரியர்தம் நாகரிகம், அவர்க ளாலே
அணுகிவந்த துன்பங்கள், தமிழர்க் கான
சீரியதோர் பண்பாடு, பிற்றை நாளில்
சிதைவுண்ட கலை, ஒழுக்கம் தம்மை எல்லாம்
வீரியமாய் விதந்துரைத்தார்! தன்மா னத்தின்
வீறார்ந்த கருத்துவிதை ஊன்றி நம்மோர்
பேரிழிவைத் தடுத்திடவும் விழிப்பு ணர்ச்சி
பெருகிடவும் தம்படைப்பால் புகழ்கொண் டாரே!