இயக்க வரலாறான தன் வரலாறு (349) – திண்டுக்கல் திராவிடர் எழுச்சி மாநாடு!- கி.வீரமணி

2024 அக்டோபர் 16-30 2024 அய்யாவின் அடிச்சுவட்டில்

கேரளா யுக்திவாதி சங்கத்தின் 24ஆம் ஆண்டு மாநில மாநாடு எர்ணாகுளம் அருகிலுள்ள ஆல்வே நகரில் 2005 டிசம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன. கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று பங்கேற்றோம்.

23.12.2005 அன்று மாலை 6 மணிக்கு இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினோம். அப்போது,

“நான் இங்கு விருந்தினராக வரவில்லை.உங்களில் ஒருவராக வந்திருக்கின்றேன். எனக்கு மலையாளம் தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் பேசுகின்றேன். ஆனால், நமக்கெல்லாம் ஒரே மொழிதான். அதுதான் மனிதநேய மொழி, பகுத்தறிவு மொழி, காரண காரியங்களைக் கண்டறியும் மொழி. நமது பொது மொழியாகிய மனிதநேய மொழி, இங்குள்ள எல்லோருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் உரிமையானது. உலகிலுள்ள ஒவ்வொரு பகுத்தறிவாளருக்கும் சொந்தமான அந்த மொழியை நான் பேசுகின்றேன். அந்த மனிதநேய மொழியை எடுத்துக்கொண்டு, கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்படும் கேரளா யுக்திவாதி சங்கத்தைப் பாராட்டுகிறோம்.

படகு மூலம் பயணம்…

நாம் இணையான போராட்டக்காரர்கள். ஒரு புதிய சமூகத்தை- முழு சமூகநீதியும், பகுத்தறிவும் உள்ள சமூகத்தைப் படைப்பதற்காக தொடர்ந்து போராடும் இணைப் போராளிகள் நாம். இந்த அற்புதமான இலட்சியத்திற்காக நீங்கள் கேரளாவில் பாடுபடுகின்றீர்கள். நாங்கள் தமிழ்நாட்டிலே பாடுபடுகின்றோம்.
நாங்கள் தந்தை பெரியாரின் மண்ணிலிருந்து வந்திருக்கின்றோம். வைக்கம் வீரர் பெரியார்.இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராகிய வைக்கம் போராட்டத்தின் வீரர் பெரியார். 1924இல் மனித உரிமைப் போரில் வெற்றி கண்டவர் பெரியார். வைக்கம் இங்கு பக்கத்தில்தான் உள்ளது. எனவே நாங்கள் உங்களுக்குப் புதியவர்கள் அல்ல. இந்த இடத்திற்கும் புதியவர்கள் அல்லர். நீங்களும் எங்களுக்குப் புதிய உறவுகள் அல்லர்.

மகரஜோதிப் புரட்டை, அமிர்தானந்த மயி போன்றோரின் பித்தலாட்டங்களை, அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்திக் கொண்டு வருகிறீர்கள்.

திராவிடர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர்…

மதத்தை, பழைமைத் தனத்தை உலகம் முழுவதும் பரப்ப சிலர் முயன்று வருகின்றனர். ஆனால், நாம், உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவுவாதிகள், மனிதநேயவாதிகள் ‘உலகமயமாகி’ ஒன்றிணைய வேண்டிய நேரமிது. உலகம் முழுவதும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, மனித நேயத்தைச் செயல்படுத்த பகுத்தறிவு அடிப்படையிலான உலகமயம் தேவைப்படுகிறது. இது கற்பனையல்ல. ஒரு புதிய அத்தியாயத்தை- ஒரு புது உலகை- தொடங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டோம்.

திண்டுக்கல் திராவிடர் எழுச்சி மாநாடு மாநாட்டின் பெயருக்கேற்ப வெகு எழுச்சியுடன் 25.12.2005 ஞாயிறன்று முழு நாளும் நடைபெற்றது அன்று காலை 10 மணிக்கு நாராயண (அய்யர்) திருமண மண்டபத்தில் பாப்பாநாடு பாஸ்கரின் பல்சுவை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன.
தொடர்ந்து சிறப்பானதோர் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். பட்டிமன்றத்தின் நடுவராகத் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் முனைவர்

துரை.சந்திரசேகரன் பொறுப்பேற்று பட்டிமன்றத்தை கருத்துத் தடத்தில் வழிநடத்தினார்.

இன்றைய சமூகத்தின் சீர்கேடுகளுக்குப் பெரிதும் காரணம் “கடவுள் – மதமே” என்ற தலைப்பில் அதிரடி அன்பழகன், சீனி.விடுதலை அரசு, வழக்குரைஞர் கோவிந்தராசு, பழனி இரா.சேது ஆகியோரும், ”பத்திரிகை – சினிமாவே” என்ற தலைப்பில் இரா.பெரியார்செல்வன், பூவை. புலிகேசி, இராம.அன்பழகன், வீர.கலாநிதி ஆகியோரும் அருமையாக வாதிட்டனர்.

சமூகத்தின் சீர்கேடுகளுக்குப் பெரிதும் காரணம் கடவுள்- மதமே என்று தீர்ப்புக் கூறினார் நடுவர் துரை. சந்திரசேகரன்.
மாலை 4 மணிக்கு அதே திருமண மண்டபத்தில் இந்து ராஷ்டிர எதிர்ப்புக் கருத்தரங்கம் தொடங்கப் பட்டது. மாவட்டக் கழகத் துணைத் தலைவர்
சின்னாளப்பட்டி போ.செல்வராசு வரவேற்புரையாற்றினார். இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தென்காசி மக்களவை உறுப்பினர் எம்.அப்பாதுரை கருத்தரங்கிற்குத் தலைமை- வகித்தார்.

திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

“பா.ஜ.க. என்பது பார்ப்பன ஜனதாவே” என்ற தலைப்பில் உரையாற்றினார் வழக்குரைஞர் கி.மகேந்திரன். பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் பதிவாளர் பேராசிரியர் டாக்டர் வேலுசாமி அவர்கள் “சங்பரிவாரும் வரலாற்றுத் திரிபுகளும்’ என்ற தலைப்பில் பேசினார்.

“ஆர்.எஸ்.எஸ்.சும் காந்தியார் படுகொலையும்” என்ற தலைப்பில் பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து உரை நிகழ்த்தினார்.
கருத்தரங்கில் நாம் நிறைவுரை ஆற்றிய போது ஹிந்து ராஷ்டிரம் என்கிற சொல்லை உச்சரிக்கும் போதே, தமிழர்களுக்கும், திராவிடர்களுக்கும் அது சம்பந்தம் இல்லாதது என்று எடுத்த எடுப்பிலேயே விளங்கிவிடும்.

நாராயணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் ஆசிரியர்

இவர்கள் கூறும் ஹிந்து ராஷ்டிரம் வந்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முழு இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பது இருக்குமா? நீடிக்குமா?

ஜனநாயகத்தில் இவர்களுக்கு நம்பிக்கை உண்டா? இவர்கள் ஹிட்லரை நேசிப்பதற்கே காரணம், ஜனநாயகத்தை வெறுத்த அவரின் சர்வாதிகாரப் பாசிசக் கொள்கைகளுக்காகத்தான் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டோம். திண்டுக்கல் மாவட்டக் கழக அமைப்பாளர் ஞானசேகரன் நன்றி கூறிட கருத்தரங்கம் இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.

திராவிடர் எழுச்சி மாநாடு திறந்தவெளி மாநாடாக நகராட்சி வளாகத்தின் பின்புறம் உள்ள திடலில் இரவு 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
சீனி. விடுதலை அரசு, இராம.அன்பழகன், இரா. பெரியார்செல்வன், துரை.சந்திரசேகரன், சு.அறிவுக்கரசு, கலி.பூங்குன்றன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.இராதாகிருஷ்ணன் நன்றி கூற இரவு 9.30 மணிக்கு மாநாடு நிறைவுற்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர்…

மாநாட்டில், வேலை வாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு சட்டம் தேவை; வடநாட்டார் உருவாக்கும் அடுக்ககங்களில் தமிழர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பும் உரிமையும் தேவை; சமூகநீதிக்குப் பாதுகாப்பு தேவை உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் திண்டுக்கல் இரா.நாராயணன் அவர்களின் துணைவியார் முத்துலட்சுமி அம்மையார் சில நாள்களுக்குமுன் மறைந்தார்.

மாநாட்டன்று (25.12.2005) நாராயணன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று மறைந்த அம்மையாரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து நாராயணன் அவர்களுக்கும் அவரின் மகள்கள், மகன் மற்றும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினோம்.

மேலும் அன்று பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் சகோதரி பார்வதி அம்மாள் இல்லத்திற்குச் சென்று, அம்மையாரின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகள் கூறினோம்.

தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட 26.12.2005 அன்று காலை 8.00 மணிக்கு தஞ்சையிலிருந்து புறப்பட்டோம். திருவாரூர், நாகை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கழகப் பொறுப்பாளர்களுடன் நேரில் சென்று பாதிப்பு பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தோம். பாதிக்கப்பட்ட மக்கள் திரளாக வந்து தங்களது குறைகளை எம்மிடம் கூறினர்.

தேவையான உதவிகளைச் செய்து தர நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களுக்கு ஆறுதல் அளித்தோம். மேலும் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளையும் நாம் வழங்கினோம். கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமானோர் எம்முடன் வந்திருந்து களப்பணியாற்றினர்.

சென்னை எருக்கஞ்சேரி பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோ.சொக்கலிங்கம் (வயது 75) அவர்கள் 27.12.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். சென்னை மாவட்டத்தில் ஒரு அரும்பெரும் கழகக் கருவூலம் ஆவார். இளம் வயது முதல் இயக்கப் பணியில் இருந்தவர். அனைத்துப் போராட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்றவர். அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ‘விடுதலை’ இதழில் (27.12.2005) இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற துறையான ‘நேனோ’ அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் 27.12.2005 அன்று வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியிற் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நல்.இராமச்சந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கில் நாம் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினோம்.

கோ.சொக்கலிங்கம்

அமெரிக்க ராணுவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி டாக்டர்.எம்.ஏ. இராசேந்திரன் மற்றும் ஃபுளோரிடா மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் நமாஸ் சந்திரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு ‘நேனோ’ தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் அதன் பயன்களையும் விளக்கி உரையாற்றினர்.

உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்து 28.12.2005 அன்று முற்பகல் 11.00 மணியளவில்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். நாம் உரையாற்றுகை யில், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் பன்மடங்கு இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சவாரி செய்வதா? உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் நியமனம் மற்றும் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினோம்.

திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் எமது தலைமையில் 29.12.2005 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

எமது தலைமையுரையில், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இவ்வளவு கொடூரமானவரா? இவரையா நாம் அதிபராகத் தேர்ந்தெடுத்தோம் என இலங்கை வாக்காளர்கள் எண்ணும் அளவிற்கு அவரின் ஆதிகால சரித்திரத்தை தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினோம். இலங்கை ராணுவத்திற்கு
உதவக்கூடாது என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பெரியார் நூலக வாசகர் வட்டம் என்பது நம் துணை அமைப்புகளில் முக்கியமான ஒன்றாகும். நெருக்கடி காலத்தில் வெளியில் கூட்டங்கள் நடத்திட தடை செய்யப்பட்ட நிலையில் பெரியார் திடலில் உருவாக்கப்பட்டது. வாரந்தோறும் வியாழக்கிழமை அறிஞர்கள் கூடி கலந்துரையாடல் செய்யும் முறையில் உருவான அமைப்பு. இன்று ஒரு வலிமையான பிரச்சார அமைப்பாக நடைபெற்றுவருகிறது. 48 ஆண்டுகளாக இடைவிடாமல் இதுவரை 2500 நிகழ்ச்சிகளைக் கடந்து நடத்திக் கொண்டு வருகிறது. 1998ஆம் ஆண்டு இந்த அமைப்பின் சார்பில் நமக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை விளக்கி ஒரு தொடர் சொற்பொழிவாற்ற வேண்டும் என்பதுதான் அது. நாமும் நம்முடைய தொடர் பணிகள் – பயணங்களுக்கு இடையில்
இந்தப் பணியை ஏற்று பெரியாரியல் சொற்பொழிவுகளை நடத்தினோம். தந்தை பெரியாரை மீண்டும் மாணவனாக வாசிக்கும் வாய்ப்பினை இந்தப் பணி நமக்கு வழங்கியது.

‘நேனோ’ அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு பற்றிய கருத்தரங்கம்

இந்தச் சொற்பொழிவு முறையிலே – மற்ற சொற்பொழிவுகளுக்கும், இதற்கும் அடிப்படையிலே அணுகு முறையிலே – ஒரு வேறுபாட்டைக் கையாள வேண்டியிருந்தது. என்ன அந்த வேறுபாடு என்று சொன்னால், பொதுவாகச் சில குறிப்புகளிலிருந்து உரையாற்றுவதுதான் எமது வழமை.

அந்த முறையை இதிலே பின்பற்றாமல் தந்தை பெரியார் எழுதிய அல்லது பேசிய பெரியாரியல் கருத்துகளை அப்படியே ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு – ஒரு பாட நூலிலே இருக்கக்கூடிய ஒரு பாடத்தை எப்படி நாம் படித்து வரிக்கு வரி ஆய்ந்து தெரிந்து கொள்வோமோ அதுபோல, நாம் அனைவருமே தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டு, அப்படியே அய்யா அவர்கள் எழுதிய எழுத்தை, கருத்தை எடுத்துச் சொல்லவேண்டும் என்ற முறையை நான் கையாளுகின்ற காரணத்தால் தான், என்னுடைய விளக்கங்களை மிகவும் குறைவாக வைத்து – தந்தை பெரியார் அவர்கள் எழுதிய, பேசிய அந்தக் கருத்துக்கே முன்னுரிமை கொடுத்து விளக்கம் தரும் முறையைக் கையாண்டு உரையாற்றினேன்..

பொதுவாக இது சொற்பொழிவு முறைகளுக்குக் கொஞ்சம் மாறுபட்டது என்று சொன்னாலும், இதை நான் வெறும் உரையாகக் கருதாமல் பாடத்தை நாம் பெறுகிறோம் என்ற உணர்வோடு, அதில் முதல் மாணவனாக என்னை ஆக்கிக் கொண்டு, சகமாணவர்களாக நம்முடைய வாசகத் தோழர்களை ஆக்கிக் கொள்பவர்களாக இருக்கக்கூடிய நிலையிலே இந்தச் சொற்பொழிவைப் பயன்படுத்திக் கொண்டேன்.

அந்த வகையில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் எமது பெரியாரியல் 100ஆவது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி – வரலாற்றில் மைல்கல் என்று சொல்லக்கூடிய நிகழ்ச்சி – சென்னை பெரியார் திடலில் 1.1.2006 அன்று காலை 10.40 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன்சிங் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமை வகித்து உரையாற்றினார். அடுத்து நாம் நிறைவுச் சொற்பொழிவாற்றினோம். அப்போது “தந்தை பெரியார் அவர்கள் தொடாத துறையே இல்லை. அவருடைய கண்டிப்புக்கு ஆளாகாதவர் கிடையாது. எப்பொழுதும் அப்பட்டமான உண்மையை யாருக்கும் தயவுதாட்சண்யமின்றிப் பேசக்கூடியவர் – எழுதக்கூடியவர்“ என்று எடுத்துரைத்தோம்.

மேலும், தந்தை பெரியாருக்கும் காமராசர் அவர்களுக்கும் இருந்த நட்பு – உறவு, அதுபற்றி பொதுமக்கள் விமர்சித்த பார்வை, ஆனால் உண்மையிலேயே காமராசருடன் நட்பு இருந்ததா? அது எப்படிப்பட்டதாக இருந்தது? என்பதை பெரியார் அவர்கள் கூறிய அப்பட்டமான உண்மைச் செய்தியை நாம் படித்துக் காட்டி விளக்கிய போது பெரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இவ்விழாவில் பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியின் பாடங்கள் அடங்கிய தொகுதிகளை (பெரியார் பேருரையாளர் மறைந்த பேராசிரியர் புலவர் ந.இராமநாதன் அவர்களின் தொகுப்பு நூலை- இலக்கியத்தை) எமது முன்னிலையில் ஈரோடு தமிழன்பன் அவர்கள் வெளியிட, அதை ஏராளமானனோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், ஈரோடு தமிழன்பன், இரா.செழியன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் பெரியார் நூலக வாசகர் வட்ட துணைச் செயலாளர் த. சுப்பிரமணியம் நன்றி கூற விழா சிறப்புடன் நிறைவடைந்தது.