மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்
மனநோய்களைப் பற்றி இங்கிருக்கும் பொதுவான கருத்து – “அனைத்து மனநோய்களும் ஒன்று’ என்பதுதான்.
“அய்யய்யோ, என் பையனுக்கு மனநோயா? வாழ்க்கை முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டியிருக்குமா? அவனால் அவன இனிமே பாத்துக்கவே முடியாதா?” என்று சொல்வது தான் மனநோய். இப்படிச் சொன்னால் உடனடியாக வரும் எதிர்வினை.
அப்படியெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. நவீன மனநலக் குறிப்பேடுகளின்படி கிட்டத்தட்ட அய்ந்நூறுக்கும் மேற்பட்ட மனநோய்கள் இன்று இருக்கின்றன. அதில் இரண்டு அல்லது மூன்று மனநோய்களே மிகவும் தீவிரமானவை, மீதி உள்ள அனைத்து மனநோய்களும் சில நாட்கள் சிகிச்சையிலேயே முழுவதுமாக குணமாகக்கூடியவை.
மனநோய்களை எளிமையாகப் பிரிக்க வேண்டுமானால் மூன்றாகப் பிரிக்கலாம் :
1. சிந்தனை மற்றும் எண்ணங்களில் ஏற்படக்கூடிய நோய்கள்
2. உணர்வுகளில் ஏற்படக்கூடிய நோய்கள்
3. அறிவாற்றலில் ஏற்படக்கூடிய நோய்கள்
சிந்தனை அல்லது எண்ணங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் :
பொதுவாகவே நமது மனம் என்பது எண்ணங்களால் நிரம்பியது. ஒரு அமைதியான வேளையில், எந்த ஒரு வேலையும் இல்லாதிருக்கும் சூழலில் நம் மனம் பல்வேறு எண்ணங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கும். தேவையான எண்ணங்கள், தேவையற்றவை, நல்லவை, கெட்டவை, தீயவை, அச்சமூட்டுபவை, கிளர்ச்சியூட்டுபவை, சந்தேகம் கொள்பவை என ஏதேதோ எண்ணங்கள் மனம் முழுக்க நிரம்பியிருக்கும். இந்த எண்ணங்கள் எல்லாம் நாமாக நினைப்பவை அல்ல, நாம் ஓய்வாக இருக்கும் சூழலில் அதுவாக வந்து மனதை நிரப்பிக் கொள்பவை. ஒரு செயலை நாம் செய்ய எத்தனிக்கையில் இந்த எண்ணங்களெல்லாம் உடனடியாக மனதில் இருந்து வெளியேறிவிடும். அந்தச் செயலைச் செய்வதற்குரிய எண்ணங்களை மட்டும் மனதில் கொண்டு நாம் அந்தச் செயலில் மூழ்கிவிடுவோம். அது சார்ந்த சிந்தனை முழுவதும் அந்தச் செயல் முடியும் வரை மனதில் நிறைந்திருக்கும். இப்படித்தான் நம் சிந்தனைகளையும், எண்ணங்களையும் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறோம்.
இந்த எண்ணங்களும், சிந்தனைகளும் அக மற்றும் புறச்சூழல் சார்ந்தவையாக இருக்கின்றன. அதாவது, நமது மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது மகிழ்ச்சியான எண்ணங்கள் பிறக்கின்றன. அதே போல, சுற்றுப்புறத்தில் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு நடக்கும்போது மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றுகின்றன.
ஒருவேளை மனதில் திடீரென தோன்றும் ஓர் எண்ணம், அக மற்றும் புறச் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபாடாகவும், அறிவுக்குத் தொடர்பில்லாமலும், வழக்கத்திற்கு மாறாக மனதை முழுதாகக் கட்டுப்படுத்தும் ஒன்றாகவும் மாறும்போது அந்த எண்ணம் நோய்மையடைந்திருக்கிறது என்று பொருள். இந்த நோய்மையடைந்த எண்ணத்தினால் அந்த நபரின் நடவடிக்கைகள் மாறத் தொடங்குகின்றன. இதனால் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை தொடர்ச்சியாக இருக்கும் போது அது சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்குச் செல்கிறது.
உணர்வுகளில் வரக்கூடிய நோய்கள்:
நமது அன்றாடச் செயல்களுக்கான உந்துதல், ஆற்றல், கவனம், ஈடுபாடு, திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் என அனைத்தும் நமது உணர்வு நிலையைச் சார்ந்தவை. நம் உணர்வு நிலை சம நிலையில் இருக்கும் போது நாம் செய்யும் செயல்கள் அத்தனையும் மிக நேர்த்தியாகவும், திருப்தியானதாகவும், நாம் எடுக்கும் முடிவுகள் அத்தனையும் சரியானதாகவும் இருக்கும். உணர்வு நிலை சரியில்லையென்றால் இவை அத்தனையிலும் பாதிப்புகள் ஏற்படும். எடுத்துக்காட்டாக, நம் உணர்வு நிலை சோர்வான ஒன்றாக இருக்கிறதென்றால் எதிலும் முனைப்பிருக்காது, ஆர்வம், கவனம், ஈடுபாடு, ஆற்றல் என எதுவும் இருக்காது. அந்தச் சூழ்நிலையில் எடுக்கும் முடிவுகளெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாகவும், தவறானதாகவுமே இருக்கும். நம்மைச் சுற்றி நடப்பவற்றை நம்மால் சரியாகக் கணிக்க முடியாது. அத்தனையும் எதிர்மறையாகவே தெரியும், எதிலும் நம்பிக்கை இருக்காது, நம்மைப் பற்றியான எண்ணமே மிகவும் தாழ்வானதாக இருக்கும். அதுவே, நமது உணர்வு நிலை மிகவும் பரவசமானதாகவும்,
மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தால் நமது செயல்கள் இதற்கு நேர்மாறானதாக இருக்கும். அளப்பரிய ஆற்றல், ஈடுபாடு என செயல்கள் அனைத்தும் சரியானதாகவும் திருப்திகரமானதாகவும் இருக்கும்.
நமது உணர்வு நிலை என்பது நம் மீதான நமது நம்பிக்கையிலிருந்து, நம்மைச் சுற்றி உள்ளவற்றையும், நடப்பவற்றையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்வது வரை அத்தனையையும் தீர்மானிக்கிறது. இந்த உணர்வு நிலை பாதிப்படையும் போது இவை அத்தனையும் பாதிப்படைகிறது. இதனால் அன்றாடச் செயல்கள் பாதிக்கப்படுகின்றன, அது அந்த நபரையும் அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பல்வேறு வகைகளில் பாதிக்கிறது. இந்தப் பாதிப்புகள் தொடர்ச்சியாக சில கால அளவைத் தாண்டி இருக்கும்போது உணர்வு நிலை நோய்மையடைந்திருக்கிறது என்று பொருள். அப்போது அதற்கான சிகிச்சையைத் தொடங்கி அந்த நபரையும், அவரைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
அறிவாற்றலில் வரக்கூடிய நோய்கள்:
மனம் என்பது வெறும் சிந்தனையும், உணர்வுகளும் மட்டுமல்ல. அறிவாற்றலும், புத்திக் கூர்மையும், நுண்ணறிவுத் திறன்களும் என அத்தனையும் கலந்தவையே.
நம் அறிவாற்றல் பல்வேறு சிறு நுண்ணறிவுத் திறன்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன:
• கவனத் திறன்
• நீடித்த கவனம்
• நினைவுத் திறன்
• முடிவெடுக்கும் திறன்
• பரந்த சிந்தனை
• புத்திக் கூர்மை
• தன்னிலையுணர்தல்
• மொழியாளுமை
இந்த நுண்ணறிவுகளே ஒரு மனிதனின் அன்றாடச் செயல்திறன்களை நிர்ணயிக்கின்றன. இந்த நுண்ணறிவுத்திறன்கள் மரபணுக்கள் வழியாகவும், அனுபவங்களின் வாயிலாகவும், கல்வியின் வாயிலாகவும் கிடைக்கிறது. கல்வியில் சிறந்து விளங்க இந்த நுண்ணறிவுகள் அவசியமானது. அதே நேரத்தில் இந்த நுண்ணறிவுத் திறன்களுக்கு கல்வி அத்தனை அவசியமானதில்லை. படிக்காதவர் கூட இந்த நுண்ணறிவுத் திறன்களில் திறமையானவராக இருக்கலாம்.
இந்த நுண்ணறிவுத்திறன்கள் மொத்தமாகவோ அல்லது தனித்தனியாகவோ பாதிக்கப்படலாம். உதாரணத்திற்கு, கவனமின்மை மட்டுமே கூட ஒருவருக்குப் பிரச்சினையாக வரலாம். நினைவுத் திறன் பாதிப்பது மட்டுமே கூட ஒருவருக்கு வரலாம். அதே நேரத்தில் மூளை வளர்ச்சியின்மை, ஆட்டிசம், முதுமையில் வரும் மறதிநோய் போன்றவற்றில் அத்தனை நுண்ணறிவுத் திறன்களும் மிதமானது முதல் தீவிரமானது வரை பாதிக்கப்படலாம்.
இந்த மூன்று விதமான மனதின் பண்புகளில் வரும் நோய்களே மனநோய்கள். குறிப்பிட்ட மனநோயின் வகை, பண்பு போன்றவற்றைப் பொறுத்து அதன் தீவிரத் தன்மை மாறுபடும். மேலே குறிப்பிட்ட மனநோய்களின் வகைகளைக் கருத்தில் கொண்டால் மன நோய்கள் என்பவை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நம் அனைவருக்குமே கூட எப்போதாவது ஏதாவது ஒரு மனநல பிரச்சினைகள் வந்திருக்கலாம் அல்லது இனியும் வரலாம் என்பது புரிகிறது.
ஆமாம்! மனநோய்கள் யாருக்கும் வரலாம். அப்படி வரும் பெரும்பாலான மனநோய்கள் மிதமான ஒன்றாகவும், முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகவுமே இருக்கிறது. அதனால் மனநோய் என்றாலே அதைக் குணப்படுத்த முடியாது என அச்சப்பட வேண்டாம். மனநோய்களைப் புரிந்து கொண்டு அதற்கான முறையான சிகிச்சையை விரைவாக எடுத்துக்கொண்டால் அதுவும் மற்ற உடல் நலப் பிரச்சினைகளைப் போல முழுமையாகக் குணமடையக்கூடியதே என்று புரியும்.