லப்பர் பந்து…

2024 அக்டோபர் 16-30 2024 திரைப்பார்வை

கிராமத்திலும் அதையொட்டிய சிறு நகரத்திலும் நடக்கும் அசலான கிரிக்கெட் போட்டிகள் – அப்படியே நம்மைக் கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் காட்சியில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிந்து திட்டக்குடியில் நடக்கும் போட்டியில் தனது ஊர் சார்பாகக் கலந்துகொள்ளும் ஜாலிபாய்ஸ் அணிக்காக விளையாடச் செல்வார் அன்பு. அப்போது அன்புவைக் கடந்து செல்லும் ஒரு சிறுவன் தனது சக நண்பனிடம் ’டேய் இந்த அண்ணண் எங்க ஸ்கூல்ல தாண்டா படிக்குது. செம்மையா யார்க்கர் போடும்டா’ எனச் சொல்லி… அன்பு ஒரு சிறந்த வீரர் எனக் கோடிட்டுச் சொல்லிச் செல்வான். ஆனால், ஜாலி பாய்ஸ் அணியின் கேப்டனோ, ‘நீ என்னடா இங்க’… எனக் கேட்பார். உடனே அன்பு, காளி வெங்கட் தன்னை விளையாட வரச்சொன்னதாகச் சொல்வார். ஜாலி பாய்சின் கேப்டன் வெங்கடேசு காளி வெங்கட்டைப் பார்த்து, “அண்ணே! என்ன இது?” என்று கேட்பார். அதோடு, ‘‘நீ காலனி வாத்தியார் பையன் தானே?’’ என்பார். அதற்கு உடனே அன்பு, “அண்ணே! வாத்தியார் பையன்னு சொல்லு” என்பார். அன்புவை வேண்டா வெறுப்பாக அணியில் சேர்த்துக்கொண்டு விளையாடுவார்கள், சிறப்பாகப் பந்து வீசுபவருக்கு பந்து வீச வாய்ப்பே தர மாட்டார்கள்.

கிராமத்தில் ஒரு தேர்ந்த ஆட்டக்காரராக இருக்கும் தினேஸ் ஜாலி பாய்ஸ் அணியினரின் பந்துகளை நாலாபுறமும் அடித்து துவம்சம் செய்வார். அப்போது அணியின் கேப்டனிடம் அன்பு சென்று, ‘லெக் சைடில் பந்துகளை வீசுவதால் தினேஸ் ஈசியாக அடித்துவிடுகிறார், ஆஃப் சைடில் பந்துகளை அடிக்க சிரமப்படுகிறார்.

எனவே, ஆஃப் சைடில் பந்துவீசுமாறு சொல்வார். ஆனால், அன்பு சொல்வதைக் கேட்கவும் மாட்டார்கள், அன்புவுக்கு பந்து வீச வாய்ப்பும் தர மாட்டார்கள் . ஜாலி பாய்ஸ் அணியினர் தோற்றாலும் பரவாயில்லை. காலனி வாத்தியார் பையன் அன்புவைச் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறும் இடத்தில் வித்தியாசமான ஜாதி உணர்வைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குநர்.

வேலைக்குச் செல்லாமல் கிரிக்கெட் விளையாடும் தன் கணவரை அழைத்துச் செல்ல வரும் தினேசின் மனைவி ஸ்வாசிகா டிராக்டர் ஓட்டி வருவார் – கிராமத்தில் அந்தக் காலகட்டத்தில் பெண்கள் டிராக்டர் ஓட்டுவது அரிது. அந்த வகையில் பெண்களை ஆளுமை மிக்கவராகக் காட்டியுள்ளார் இயக்குநர்.
தினேசை அழைத்துக்கொண்டு செல்லும் போது பந்து வீசப் பயன்படுத்தப்படும் தளத்தை டிராக்டரால் சிதைத்துவிட்டு, “இனி யாராவது என் வீட்டுக்காரரைக் கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டீங்கனா உங்கள் கிரிக்கெட் மைதானம் காலிடா“ என்று சொல்லிச் செல்வார்.

கிராமத்தில் டிராக்டரோடும் கொஞ்சம் வசதி வாய்ப்போடும் இருக்கும் தினேஸ் வேலையில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட் விளையாட்டின்மீது கொண்ட மோகம் காரணமாக குடும்பத்தைப் பொருளாதாரச் சிரமத்திற்கு உள்ளாக்குவதைப் பார்த்து கோபப்படுவது இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது.
படத்தில் தினேஸ் பந்துகளைச் சிக்சருக்குத் தூக்கி அடிக்கும் போது அவருக்காக இசைக்கப்படும் கங்கை அமரன் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்து மலேசியா வாசுதேவன் பாடிய ‘பொன்மனச் செல்வன்’ படப் பாடலான “நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம்” எனும் பாடல் படத்திற்கு உயிர் ஊட்டுகிறது; திரையரங்கம் அதிர்கிறது. பார்வையாளர்களை அந்தப் பாடலில் பயணம் செய்ய வைத்து விட்டார் இயக்குநர் தமிழரசன் இளையராஜாவின் வழியாக.

படத்தில் வரும் பின்னணி இசையைக் காட்டிலும் தேவாவின் பாடலுக்கு ‘ராஜா ராஜா தான்’ எனச் சொல்லும் பாடலும் சரி, ‘பொட்டு வச்ச தங்க குடம்’ என்ற பாடலும் சரி, தற்கால இசையமைப்பாளர்களுக்கு இளையராஜாவும், ரஹ்மானும்,தேவாவும் சிம்மசொப்பனமே என்பது புரிகிறது.

ஜாலி பாய்ஸ் அணியினர் அன்புவைக் காலனியைச் (ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி) சேர்ந்தவர் என்பதால் அணியில் சேர்க்க மறுப்பார்கள். இதனால் அவர் கெஸ்ட் ப்ளேயராக விளையாடி வருவார்.

“வெறும் திறமை மட்டுமே போதாது. திறமையான வீரருக்கு போதிய வாய்ப்பும், ஊக்கமும் அளிக்கும் போது அவர் வெற்றியாளராக உருவாகிறார் என்பதை இயக்குநர் தமிழரசன் காட்சிகள் மூலம் மிக நேர்த்தியாகப் பதிவு செய்கிறார்.

படத்தைப் பார்த்துச் செல்பவர்கள் பாகுபாடுகளை உணர்ந்து செல்லும் அதே வேளையில் அதை அனைவரும் கொண்டாடும் பொருட்டு மிக நேர்த்தியாகக் கதையை வடித்துள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேறொரு அணிக்காக விளையாட வருவார் அன்பு. எதிர் அணியில் தினேஸ் இருப்பார். வழக்கம்போல தினேஸ் அடித்து துவம்சம் செய்வார். இறுதியாக அன்பு பந்து வீச வருவார். அன்பு நேர்த்தியான முறையில் ஆஃப் சைடில் வீசும் பந்துகளை அடிக்கச் சிரமப்படுவார் தினேஸ். ஒரு கட்டத்தில் தினேசை அன்பு போல்டாக்குவார். அந்தக் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

ஜாலி பாய்ஸ் அணியின் 25ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட ஒரு போட்டியை நடத்துவார் காளி வெங்கட். அதனிடையே பால சரவணனுக்கும் காளி வெங்கட்டிற்கும் அன்புவின் ஜெராக்ஸ் கடையில் நடக்கும் உரையாடல் சிறப்பானது. ‘‘என்னதான் அன்பு நல்லா விளையாடினாலும் ஜாலி பாய்சில் சேர்த்துக்க மாட்டிங்கறீங்க. ஏனெனில் ஜாலி பாய்சில் கடைபிடிக்கப்படும் ஜாதிய ஒதுக்கல் என்பார் பால சரவணன் – இந்த முறை அன்புவை டீமில் நான் சேர்க்கிறேன் என்பார் காளி. ஆனால் ஜாலி பாய்ஸ் அணியினர், தாங்கள் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை அன்புவை டீமில் சேர்க்க மாட்டோம் என்பார்கள். அதனால் அன்புவும் காளி வெங்கட்டும் இணைந்து புதிய குழுவை அமைப்பார்கள்; அந்த அந்தக் குழுவில் காளி வெங்கட்டின் மகள் அகிலாவைச் சேர்ப்பார்கள். “ஒரு பெண்ணை அணியில் சேர்த்தால் நாங்கள் விளையாட வர மாட்டோம் என்று சென்று விடுவார்கள்” அப்போது அன்புவிடம் கோபப்பட்டு, “ஏண்டா அந்தப் பெண்ணைச் சேர்த்த?” என்று கேட்கும் பாலாவிடம் அன்பு சொல்லும் காட்சி தான் படத்தின் முத்தாய்ப்பான காட்சிகளில் ஒன்று. “ஏண்டா! அன்னைக்கு ஜாலி பாய்சில் என்னைச் சேர்த்தபோது அந்தப் பசங்க விளையாட மறுத்தாங்க; இப்போ பெண் ஆண்களுடன் விளையாடுவதா என்ற காரணத்திற்காகத்தான் நீங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறீங்க’’ என்பார் அன்பு. சமத்துவம் என்பது பாலின சமத்துவத்தையும் உள்ளடக்கியதே என்கிறார் இயக்குநர்.

அகிலாவும் நேர்திசையில் பவுண்டரி அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். ஒரு கட்டத்தில் அன்பு அணியினரைச் சமாளிக்க மற்றொரு ஊரில் உள்ள காலனி பகுதியைச் சார்ந்த மூன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை ஜாலி பாய்ஸ் அணியினர் சேர்த்துக்கொள்கின்றனர். யார் அன்புவைச் சேர்க்க மறுத்தாரோ அதே வெங்கடேசு தன்னுடைய ஜாலி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்தப் பாகுபாடும் பார்க்காமல் திறமையான வீரர்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சேர்த்துக்கொள்வோம் எனும் மனமாற்றத்திற்கு வந்துவிடுகிறார்.

நெருக்கடி வரும்போது ஜாதியப் பாகுபாடுகள் தகர்ந்து போகும் என்பதை நேர்த்தியாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் எடுத்துக்காட்டியுள்ளார் இயக்குநர். கபில்தேவைப் போலத்தான் கதையில் வரும் அன்பு கதாபாத்திரம்.

படத்தின் துவக்கக் காட்சியில் ‘இந்த அண்ணன் செம்மையா யார்க்கர் போடும்டா’ எனச் சொல்லிச் செல்லும் காலனி பகுதியைச் சார்ந்த சிறுவன் பாலையா தான் வளர்ந்து ஜாலி பாய்ஸ் அணியை வெற்றி பெற வைக்கிறான்.

ஓர் அசலான கடலூர் – பெரம்பலூர் மாவட்ட பேச்சுவழக்கு மாறாமல் கிரிக்கெட்டும் அதில் நடக்கும் சமூக எதார்த்தங்களும் நிரம்பிய கொண்டாட்டமும், துள்ளலும் கொண்ட திரைக்காவியம் லப்பர் பந்து.