ஆக்கியவர்கள் அல்லர்; அழித்தவர்கள் பார்ப்பனர்கள்!- சுமன் கவி

2024 அக்டோபர் 16-30 2024 கட்டுரைகள்

எந்த ஒரு நல்ல நிகழ்வுக்குப் பின்னாலும் தாங்கள்தான் இருக்க வேண்டும் என்பதற்காக வரலாற்றைத் திரித்து எழுதுவதும், குற்ற நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் தங்களது பங்கை மறைத்து வேறு காரணங்களைப் புனைவதும் பார்ப்பனக் கூட்டத்திற்கு கைவந்த கலை.

அந்த வகையில், வரலாற்றில் இல்லாத ஒரு கற்பனைப் பாத்திரமான கவுடில்யன் என்கிற சாணக்கியனை மவுரிய வரலாற்றில் புகுத்தியவர்கள் பார்ப்பனர்கள்.

இன்று வரலாறு அறியாத சாதாரண மக்களும் கூட அறிந்திருக்கும் பெயர்களில் ஒன்று சாணக்கியன். சாணக்கியத் தந்திரம் என்றும், சாணக்கியத்தனம் என்றும், புத்திக் கூர்மைக்கு அடையாளமாகக் காட்டப்படுபவன் சாணக்கியன்.

“அரசியல் சாணக்கியன்” என்று இன்றும் கூட சிலரைச் சொல்வதன் மூலம் சாணக்கியன் என்ற பெயரையும், அதற்கான பொருளையும் மீண்டும் மீண்டும் நம் மனதில் பதியவைத்தவை இன்றுள்ள பார்ப்பன ஊடகங்கள். ஆனால், வரலாற்றில் அவ்வாறு சாணக்கியன் என்ற ஒருவன் மவுரியப் பேரரசு உருவான காலத்தில் இருந்ததற்கான சமகால ஆதாரங்கள் ஏதும் இல்லை.

சாணக்கியன் என்ற நபரைக் குறித்துக் கூறும் பொழுது, அவன் நந்த வம்சத்து அரசனான தனநந்தனைச் சந்திக்கச் சென்றபோது அவர் சாணக்கியனை அவமதித்துவிட்டதாகவும், அதனால் உன்னை வீழ்த்துவேன் என்று சாணக்கியன் சபதம் ஏற்றதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன. அப்போது அவிழ்க்கப்பட்ட தனது கூந்தலை நந்த அரசு வீழ்ச்சியடையும் வரை முடிவதில்லை என்று சாணக்கியன் வைராக்கியத்தோடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின் சாணக்கியன் சந்திர குப்தனைக் கொண்டு தனநந்தனை வீழ்த்தி மவுரியப் பேரரசை உருவாக்கினான் என்று கூறுகின்றனர்.

சாணக்கிய சபதம் என்னும் பெயரில் தற்காலத்தில், இது திரைப்படமாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக இருப்பது ‘முத்ரா ராட்சசம்’ எனும் நாடக நூல். இது விசாகதத்தர் என்பவர் குப்தர்கள் காலத்தில் அதாவது சந்திரகுப்த மவுரியருக்குப் பின் 700 ஆண்டுகள் கழித்து எழுதிய ஒரு கற்பனை நாடகம். இதனையே ஆதாரமாக வைத்துக்கொண்டு மவுரிய சாம்ராஜ்யத்தை சாணக்கியர்தான் உருவாக்கினார் என்று இன்றுவரை கதைகட்டுகிறது பார்ப்பனக் கூட்டம்.

சந்திரகுப்த மவுரியர் நந்தர்களை வீழ்த்துவதற்காக, அலெக்சாண்டரிடம் உதவி கேட்டதாக அவரது கிரேக்கக் குறிப்புகள் உள்ளன. அவற்றில் “செட்ன்டாமிஸ்”, “ஸான்ட்ரகோட்டஸ்” என்று சந்திரகுப்தரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சாணக்கியனைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

கி.மு. 323இல் அலெக்சாண்டரின் மரணத்திற்குப் பின் அவர் கைப்பற்றிய ஆசியப் பகுதிகள் அவரது படைத் தளபதிகளால் ஆளப்பட்டன. அவற்றில் செலுக்கியப் பேரரசை ஆண்ட செலுயூகஸ் நிகேடர் என்பவர் கிமு. 303இல் இருந்து 305 வரை சந்திரகுப்த மவுரியரோடு நிகழ்த்திய ஈராண்டுப் போருக்குப் பின் அவரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, சிந்து, பஞ்சாப் பகுதிகளை சந்திரகுப்தருக்கே வழங்குகிறார். தனது மகளையும் சந்திரகுப்தருக்கு மணம் முடித்து வைக்கிறார். சந்திரகுப்தரின் சமகாலத்தவரான செலுயூகஸ் நிகேடரின் அவைக் குறிப்புகளிலும், ஒப்பந்தங்களிலும் சந்திரகுப்த மவுரியர் பற்றி உள்ளதே தவிர, அவருக்கு ஆலோசனை சொல்லுமளவிற்குப் புகழ்பெற்று விளங்கியதான எவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

சந்திரகுப்தர், செலுயூகஸ் நிகேடர் ஒப்பந்தத்திற்குப் பின் செலுகஸின் பிரதிநிதியாக சந்திரகுப்தரின் அரசவையில் இருந்து அவை நிகழ்வுகளைப் பதிவு செய்தவர் மெகஸ்தனிஸ். வரலாற்றையும் அரச நிகழ்வுகளையும் தெளிவாகக் குறித்து வைக்கும் பழக்கமுடையவர்கள் கிரேக்கர்கள். அவ்வாறு மெகஸ்தனிஸ் குறிப்புகளும், அவர் எழுதிய ‘இண்டிகா’ எனும் நூலும்தான் சந்திரகுப்தரின் அவை நிகழ்வுகளையும், அவரின் சமகால அரசியல் சூழலையும் நமக்கு உணர்த்துகிற முக்கியமான ஆதாரங்கள். அவற்றில் கவுடில்யர், சாணக்கியர், அல்லது விஷ்ணு குப்தர் போன்ற எந்தப் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.

அரசனையே ஆட்டிவைக்கும் அவருக்கு ஆலோசனை சொல்லும் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவர் பற்றி மெகஸ்தனிஸ் குறிப்பிடாதது ஆச்சரியமளிக்கிறது என்றுதான் சில இந்திய வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.

அதே போல் சாணக்கியர் எழுதியதாகச் சொல்லப்படும் ‘அர்த்த சாஸ்திரம்’ எனும் நூலில் மெகஸ்தனிஸ் பற்றி எந்தவிதக் குறிப்புகளும் இல்லை.
கவுடில்யர், சாணக்கியர் இருவரும் வேறு வேறு நபர்கள் என்றும் சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எந்தவித நம்பகத் தன்மையும் அற்ற முத்ரா ராட்சசம் என்ற கற்பனைக் கதையில்தான் சாணக்கியன் என்கிற பார்ப்பன ராஜதந்திரி மவுரியனின் வெற்றிக்குப் பின்னால் புனையப் பட்டிருக்கிறாரே தவிர, அப்படி ஒரு நபர் மவுரிய அரசவையில் இல்லவே இல்லை எனலாம்.

இதைப் பற்றி மிக விரிவாக, வரலாற்று ஆதாரங்களுடன் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் அவர்கள் ‘யூடியூப்’ தளத்தில் பேசியிருக்கிறார். இந்தியாவில் தோன்றிய முதல் பேரரசான மவுரியப் பேரரசை உருவாக்க மூளையாக இருந்தவர்களே நாங்கள்தான் என்று பார்ப்பனக் கூட்டம் கட்டிவிட்ட மாபெரும் பொய்தான் இந்தச் சாணக்கியன் என்கிறார்.

இந்தியாவில் தோன்றிய முதல் மாபெரும் பேரரசு உலகமே போற்றிப் புகழும் அசோகன் என்ற தலைசிறந்த மன்னன் உருவாக்கிய பேரரசுதான்.
பார்ப்பனியத்திற்கு நேர் விரோதமான பவுத்தக் கொள்கைகளைப் பின்பற்றியவர் அசோகர். அக்கொள்கைகளை, தான் பின்பற்றியது மட்டுமல்லாது, அதை உலகமெங்கும் பரவச் செய்தவர். அவரால் புத்தம் இந்தியாவெங்கும் செழித்து வளர்ந்தது. ஆரியப் பார்ப்பனர்களின் வேள்விக் கலாச்சாரம் வழக்கொழியத் துவங்கியது. அசோகருக்குப் பிந்தைய ஆட்சியாளர்களும் பவுத்த சமயத்தையே பின்பற்றினர். இதனால் பார்ப்பனியம் படு வீழ்ச்சி கண்டது.

பார்ப்பனியத்தின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரகத்திரதன் என்னும் மவுரிய அரசனை நயவஞ்சகமாகக் கொன்று, சுங்க வம்சத்தைத் தோற்றுவித்தான் புஷ்யமித்திர சுங்கன் என்னும் படைத்தளபதி. நந்தர்கள் மற்றும் மவுரியர்கள், வைதிக பார்ப்பனியத்திற்கு மாற்றான சமண, பவுத்த மதங்களைப் பின்பற்றினர். இரு வம்சங்களின் ஆட்சியிலும் அரச அங்கீகாரம் அற்றுப் போன வேத, வேள்விகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தான் பார்ப்பனனான புஷ்யமித்திர சுங்கன். பவுத்தர்களின் தலைகளுக்குப் பொற்காசுகள் அறிவித்து அவர்களைக் கொன்றொழித்து பவுத்தத்தை அழிவின் விளிம்பிற்குத் தள்ளினான்.

ஆனால், அரவிந்தன் நீலகண்டன் எனும் சனாதன எழுத்தாளர், புஷ்யமித்திரன் பவுத்தர்களைக் கொல்லவில்லை என்கிறார். சுங்கன். பிரகத்திரத மவுரியரைக் கொன்றதற்குக் காரணம் பிரகத்திரதன் அந்நியப் படையெடுப்புகளைத் தடுத்து நிறுத்தும் வலிமையற்று இருந்தான். அதனால்தான் அவனது படைத் தளபதியான சுங்கன் நாட்டைக் காக்கும் நோக்கோடு அவனைக் கொன்றான் என்று, சுங்கனின் துரோகத்திற்கு தேசபக்திச் சாயம் பூசுகிறார் நீலகண்டன்.

ஆனால், மவுரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்புதான், பகலவர், சாகர், சைத்தியர், பார்த்தியர் என அந்நியர்கள் இந்தியாவைத் தாக்க ஆரம்பித்தனர்.
அந்நியப் படையெடுப்புகளைத் தடுக்கும் மாபெரும் சக்தியாக இருந்த மவுரியப் பேரரசை வஞ்சகத்தால் வீழ்த்தி, இந்திய அரசியலில் நிலையற்ற
தன்மையை ஏற்படுத்தியவனே புஷ்யமித்திர சுங்கன்தான் என்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் பேரரசு என்ற பெருமை கொண்ட மவுரிய சாம்ராஜ்யத்தை அழித்து இல்லாமல் செய்ததுதான் பார்ப்பனியத்தின் சாதனை. வரலாற்றுப்பூர்வமான இந்த உண்மையை மறைத்துவிட்டு, மவுரியப் பேரரசே ஒரு பார்ப்பனனின் சபதத்தால்தான் தோற்றுவிக்கப்பட்டது என்று கதை கட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இதை அறிவு ஜீவிகள் என்கிற போர்வையில் தொடர்ந்து வரலாற்றில் பதிவு செய்துகொண்டே இருக்கின்றனர் பார்ப்பனர்கள். இந்தச் சூழ்ச்சிகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஆழ்ந்த வரலாற்று அறிவு தேவை.