நம்மை அடிமையாக்கத்தான் மதப் பண்டிகைகள்!

2024 Uncategorized அக்டோபர் 16-30 2024 தலையங்கம்

திராவிடத்தின் ஆதிமக்களாகிய தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.
இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக – தமிழ்நாட்டின் – தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிக மிகக் கடினமான காரியமாகிவிட்டது! தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு அற்ற ஓர் அடிமை ஜீவனாக விளங்குகிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் – நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும், அடிமைத்தன்மையும் தந்து அவற்றை நிலை நிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன’’

– தந்தை பெரியார் (13.1.1970) அறிக்கை

இந்து மதம் தமிழனுக்குரியதா? அதன் பெயரும் தத்துவ மூல வர்ணாசிரம ஜாதிப் பாதுகாப்பும் நம் இன அழிப்புப் பணியை மகிழ்ந்து – பாதிக்கப்பட்டு துயரமும் துக்கமும் கொள்ளவேண்டியவர்களுக்கு பக்தி போதை – மத போதையூட்டி – மதியை இழக்கச் செய்து நயவஞ்சகத்துடன் கொடுக்கப்பட்ட நஞ்சைத் தேன் என்றும், தெவிட்டாத அமுதம் என்றும் கருதிக் குடித்து, அணுவணுவாகச் செத்துக் கொண்டிருக்கவே பண்டிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
நமக்குரிய விழாக்கள் நம் மொழி – செம்மொழியாகிய எம்மொழி தமிழில் அல்லவா அவற்றின் பெயர் – குறைந்தபட்சம் இருக்கவேண்டும்! இருக்கின்றதா?
இல்லையே! ஏன்? சிந்தித்தீர்களா?

தீபாவளி,

கோகுலாஷ்டமி,

விநாயகர் சதுர்த்தி,

ஸ்ரீ இராமநவமி,

கந்தர் சஷ்டி,

கார்த்திகை தீபம்,

பங்குனி உத்திரம்,

மகா சிவ இராத்திரி,

சரஸ்வதி பூஜை,

ஆவணி அவிட்டம்,

விஜயதசமி,

சூரபத்ம சம்ஹாரம்,

வருஷப் பிறப்பு.

தமிழ் வருஷம் என்று திணிக்கப்பட்ட 60 வருஷங்களில் ஒரு பெயர்கூட தமிழ்ப் பெயர் இல்லை என்பதே பச்சை உண்மை.
தமிழர் திருநாள் – பொங்கல் விழா என்ற அறுவடைத் திருவிழா ஒன்றுதானே அர்த்தமுள்ள விழாவாக மிஞ்சும்?
அதனையும் மகர சங்கராந்தியாக்கி விட்டார்களே!

தேவர்கள் (ஆரியர்கள்) அசுரர்களை (திராவிடர்களை) அழித்த கதை தானே ‘விழாக்களாக’ இல்லாமல் ‘பண்டிகைகளாக’ பவனி வருகின்றன.

எனவேதான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி, அவருடைய பகுத்தறிவு ஆய்வுக் கூடத்தில் கண்டறிந்து, நம் இழிவு – ‘சூத்திர, பஞ்சம’ இழிவுகளைப் போக்க சமத்துவம் அடைய – இத்தகைய மதமூடப் பண்டிகைகளைப் புறக்கணித்து, புதிய வழியை சுயமரியாதை இயக்கம் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தி, நம்மை சமத்துவ மனிதர்களாக்க முயன்று, ஆக்கினர். அதை நாம் தொடர வேண்டாமா?

– கி.வீரமணி,
ஆசிரியர்