பேச வேண்டியதைப் பேசும் ‘அஞ்சாமை’!- திருப்பத்தூர் ம.கவிதா

2024 அக்டோபர் 1-15 திரைப்பார்வை

“அப்பா எக்ஸாம் எழுத முடியாதாப்பா…”

“ச்சே ச்சே…அப்பா இருக்கேன் பா… நீ ஏன்பா கவலைப்படுற… நாம போவோம் பா…”

இந்த உரையாடல்களில் உள்ளிருக்கும் சிக்கல்களுக்குள் சிக்கிக் கொண்டது பூக்கள் பயிரிடும் ஓர் எளிய விவசாயக் குடும்பம். கூத்துக் கட்டும் தந்தை போல மகனும் வந்து விடக்கூடாது, கல்வி கற்க வேண்டும் என்று கவனமாக இருந்த துணைவி… அரசுப் பள்ளியில் பயின்று மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த மகன்… அண்ணனின் படிப்பிற்காக தொலைக்காட்சியைச் சற்றுத் தள்ளி வைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்ட செல்லத் தங்கை… ஆங்கில வழிக் கல்வியில் இலவசமாக சேர்த்துக் கொள்கின்றோம் என்று கேட்டு வந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளித் தாளாளருக்கு மறுப்புத் தெரிவித்து, தமிழ் வழியிலேயே படிக்க ஆசைப்பட்ட மகனின் விருப்பப்படியே படிக்கட்டும் என்று சொன்னதால், உன் தகுதிக்கு நீ எல்லாம் எப்படி மருத்துவம் படிக்க வைத்து விடுவாய், பார்த்துவிடலாம் என்று இளக்காரமாய் வந்தவர்கள் திமிறிவிட்டுப் போக, மதிப்பெண் குறைந்து விடக்கடாது என்று அங்கே இங்கே கடன் வாங்கி டியூஷனில் சேர்த்து நல்ல மதிப்பெண்ணோடு பன்னிரண்டாம் வகுப்பில் வெற்றி பெற்று வெளியே வரும் போது, மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு செய்தித்தாளில் வர, இலட்சக்கணக்கில் பணம் திரட்ட வேண்டிய கட்டாயத்தால் சொத்தை அடமானம் வைத்து ‘கோச்சிங் சென்டரில்’ சேர்த்துவிட்டு, பின்பு தேர்வு மய்யம் மதுரை என்று இருந்தது ஜெய்ப்பூர் என்று மாறிய அதிர்ச்சியை ஆற்றிக் கொள்ள அவகாசமும் இல்லாமல், காதில், மூக்கில் இருப்பதைக் கழட்டிக் கொடுத்து போய் வாருங்கள் என்று தாய் அனுப்ப, இரயிலில் முன்பதிவு செய்யவும் இயலாத நிலையில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு, சோறு – தண்ணீர் இல்லாமல் சோர்ந்து போய், முன்பின் அறியாத இடத்திற்கு எப்போது சேர்வோம் என்று கூட தெரியாமல் தத்தளித்து, மொழி தெரியாத இடத்தில் இடம்மாற்றி இறக்கி விட்ட ஆட்டோக்காரரிடம் புலம்பிக் கெஞ்சி, அடித்துப் பிடித்து தேர்வு மய்யத்தை அடையும் நேரம் வாயில் கதவு மூடப்பட, “தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுத இவ்வளவு தூரம் வந்திருக்கோம்’ எங்க புள்ளையை அனுப்புங்க” என்று அவர்கள் காலில் போய் விழுந்து உள்ளே அனுப்பி வைத்த ஒரு தந்தை சொன்னதுதான் மேற்குறிப்பிட்ட

“அப்பா இருக்கேன் பா”!

இந்த உரையாடல் இடம் பெற்ற திரைப்படம் ‘அஞ்சாமை!’

திரையில் ஒரு புரட்சி!

உணவு, உழைப்பு, களிப்பு, என்ற வாழ்க்கைச் சூழலுக்குள் வேகமாய் ஓடும் மனிதர்களின் உணர்வுகளைத் தொட்டுவிடும் வல்லமை திரைப்படங்களுக்கு உண்டு. திரைப்படங்கள்தான் மிகப் பெரிய இளைப்பாற்றிகள் என்பதால் பெரிதும் கற்பனை வயப்பட்ட கதைகளில் ஊடாடும் மனித வாழ்வின் உண்மைச் சம்பவங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டு ஆட்டம், பாட்டம் எனக் கூட்டி திரைப்படங்களாக வெளிவரும்.

சமூகத்தில் நடக்கிற மக்களின் உரிமைப் போராட்டங்கள் ஒரு திசையில் என்றால், திரைப்படங்கள் அதற்குத் தொடர்பு இல்லாதது போல் வேறு பக்கம் திசை மாறிச் சென்று கொண்டிருக்கும். ‘‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்’’ என்ற ஆதிக்கக் கோட்டை மீது வைத்த அதிர்வேட்டு வசனங்கள் முன்பு வந்து, திரையின் போக்கைச் சற்று திருப்பியது போல, நடப்பு வாழ்வின் ‘நீட்’ போராட்ட வடிவம் திரைப்படமாக உருக்கொண்டது திரையில் ஒரு புரட்சியாகும்!

ஏன் ‘நீட்’ கூடாது என்பதற்கான விளக்கங்கள் காட்சிகளாக இப்படத்தில் மாற்றப்பட்டிருக்கிறது.

‘நீட்’ வேண்டாம் என்று திராவிடர் கழகம் தொடர்ச்சியான போராட்டங்களை அறிவித்து முன்னெடுத்து வருவதும் அனைத்துக் கட்சியினரையும் அதில் ஒன்றிணைத்துச் செயல்படுவதும் தமிழ்நாட்டில் ‘நீட்’ எதிர்ப்பு மனநிலையும் இந்திய அளவில் அதன் நியாயத்தைப் புரிய வைத்ததும் அனைவரும் அறிந்ததே….

அதற்கான நியாயமான காரணங்கள் என்னென்ன முன்வைக்கப்பட்டனவோ, அத்தனையும் படம் பார்க்க வருவோரிடம் இயல்பு வாழ்வின் உணர்வுகளோடு பின்னிப்் பிணைந்த எளிய அழகிய காட்சிகளுடன் கொண்டு சேர்க்கும் இந்தப் படத்தின் வசனங்கள் வெறும் வசனங்களாக இல்லை. அதிகாரத்தின் மீது கேட்கப்படும் அழுத்தமான கேள்விகள்!
அறத்தின் அஞ்சாமைக் குரல்!

சிலம்பம் கத்துக்கிட்டு களத்துல நின்ன பின்னாடி கத்திச் சண்டை போடச் சொன்னா எப்படி? என்று மனம் ஆற்றாமல் கேட்கிற மாணவனின் தந்தை சர்க்கார் தன் மகனைப் பார்த்து, நமக்குக் கல்விதான் மிகப்பெரிய ஆயுதம். ஆடு மாடு மேயும் அதே சின்ன செடிகள் வளர்ந்து மரமாகும் போது அந்த ஆடு மாடுகள் அதன் நிழலில் நிற்கும் என்று கல்வியின் முக்கியத்துவத்தை மகன் அருந்தவத்திற்கு ஊட்டுகிறார்.

பள்ளியில் படித்த பின் அந்தப் படிப்பு தகுதி இல்லை என்றால், நாம் ஏன் பள்ளிக்குப் போக வேண்டும் கோச்சிங் சென்டருக்கே போகலாமே…

ஒரு தகுதித் தேர்வு என்றால் அனைவருக்கும் ஒரே கல்விமுறை தானே வழங்கப்பட வேண்டும்?

இந்தச் சமூகத்தில் மக்களுக்கிடையே பாகுபாடுகள் இருக்கின்றன என்பது உண்மையாக இருக்கும் பொழுது, ஏன் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு? இதுதான் இந்தச் சமூகத்தின் உண்மை நிலை என்று ஆனபின் சமமற்ற சமூகத்தில் தேர்வு எப்படி சமமாக இருக்க முடியும்? ஒரு சில ஆயிரம் பேர் படிக்கிற பாடத்திட்டத்தை கோடிக்கணக்கானவர்கள் தலையில் திணிப்பது அநியாயம் அல்லவா ? என்று வழக்காடுகிற வக்கீலாகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் இருந்து அந்தப் பணியை உதறித் தள்ளி விட்டு வந்த வக்கீல் கதாபாத்திரத்தில் ரகுமானின் வாதங்கள் ஒவ்வொன்றும் உண்மையின் உரை கற்கள்!

‘நீட்’டை எதிர்கொண்ட குடும்பங்களில் பெற்றோர்களும் பிள்ளைகளும் சந்தித்த உளவியல் சிக்கல்களைத் திறம்பட எடுத்துக்காட்டும் காட்சிகள் படம் பார்க்கையில். ‘திக் திக்’ என்று நமக்கும் நகர்கிறது.

தன் மகன் இரவு பகலாகக் கண்விழித்துப் படிக்கும் போது மருத்துவக் கனவு நிறைவேறாமல் உயிரை மாய்த்துக் கொண்ட ஒரு மாணவரின் செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்து விட்ட அப்பா தன் மகனுக்கும் இது போல் ஏதாவது நேர்ந்து விடுமோ என்று நொடிக்கு நொடி பயந்து தூக்கத்தைத் தொலைக்கிறார். மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டால் என்னாவது என்ற அச்சத்தில் மின்விசிறியைக் கழட்டி சுவரில் வேறொன்று மாட்டி விடுகிறார். கிணற்றில் வாளி விழும் சத்தத்தைக் கேட்டு பதறி அடித்து ஓடிப்போய் கிணத்துக்குக் கம்பி வலை போட்டு மூடுகிறார். ஒவ்வொரு நிமிடமும் அச்சத்துக்குள் அவருடைய மனம் உறைந்து கிடக்கிறது. படத்தில் முதல் பாதி முழுவதையும் அதைத் திறம்பட வெளிப்படுத்தி நடிப்பால் நம்மை ஆட்கொண்டு விடுகிறார் தந்தையாக நடித்த விதார்த்! காட்சிகள் பரபரப்பாக மட்டுமல்லாமல் பதை பதைப்பாகவும் நகர்கிறது!

தேர்வுக்கு முன் சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் உளவியல் சார்ந்த கொடுமை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தந்தையின் உடல் வரும் வாகனம் ஊருக்குள் வந்ததும், “அப்பா மகனே சர்க்கார், இது ஆண்டவன் செய்த விதியோ? இல்லை ஆண்ட அவன் செய்த சதியோ? இறக்கும் வயதா உனக்கு? இரக்கமே இல்லையா அவனுக்கு? உன்னை இழப்பதற்கு என்ன காரணமடா?” என்று ஊரே கூடி அழும் போது நிச்சயம் நம்மையும் அழ வைக்கிறார்கள்.

மாணவர்கள் எழுச்சி:

பாதிக்கப்பட்ட மாணவர்களே திரண்டு வந்து நீதி கேட்டுப் போராடுவது இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். போராட்டங்கள் மூலம் தான் இந்தக் கல்வி உரிமை நமக்குக் கிடைத்திருக்கிறது. போராடித்தான் நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர் சமுதாயத்தில் விதைக்கக் கூடிய ஒரு படமாக, உண்மைகளை ஒளிவு மறைவின்றி உரக்கச் சொல்லுகிற ஒரு படமாக, பேச வேண்டியதைப் பேசாமல் மூடி மறைத்து பூசி மெழுகாமல், திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் கூறியது போல ‘நீட்’ ஏற்படுத்தும் சமுதாயச் சிக்கல்களை ‘ஸ்கேன்’ செய்வது போல வெளிப்படுத்துகிறது இந்தப் படம்! இறுதியில் போராட்டங்கள் ஓய்வதில்லை என்ற பொருளில் முடியாமல் முடிகிறது. நாமும் நல்ல முடிவுக்காகத் தான் காத்திருக்கின்றோம்.

பேச வேண்டியதைப் பேசிய ‘அஞ்சாமை’ கல்வி வாய்ப்புகளுக்கான ஓர் அறவழிப் போராட்டத்தின் வடிவம் என்பதால் அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். தற்போது பெரியார் விஷனில் இப்படம் நமக்குக் காணக் கிடைக்கிறது. பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்கள் இதில் நீதிபதியாக நடித்துள்ளார்கள்.

இச்சிறந்த படத்தைச் சமூகத்திற்கு தந்த இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் அவர்களும் படத்தைத் தயாரித்த மருத்துவர் எம்.திருநாவுக்கரசு அவர்கள் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டுவோம்!