தற்போது உலகம் முழுவதும் எரிசக்திக்கான தேவைகள் அதிகம் இருப்பதால் பலவிதமான மாற்று முன்னேற்பாடுகளை உலக நாடுகள் செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இயற்கை ஆற்றலைப் பயன்படுத்தி எரிசக்தி உருவாக்கும் தொழில்நுட்பங்களுக்கு உலக நாடுகள் மாறி வருகின்றன. அந்த வகையில் சீனா தற்போது செயற்கைச் சூரியனை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது.
இதில் வியக்கத்தக்க செய்தி என்னவென்றால், சீனா உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்தச் செயற்கைச் சூரியன் இயற்கைச் சூரியனைவிட 7 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. வரும் 2035ஆம் ஆண்டிற்குள் தயாரித்து முழுமை பெறச் செய்ய சீனா திட்டமிட்டுள்ள இந்தச் செயற்கைச் சூரியன் அணுக்கரு இணைவை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது இயற்பியலில் ‘நியூக்ளியர் ஃபியூசன்’ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயற்கைச் சூரியனை சீனா உருவாக்குகிறது.
CNNC என்னும் சீன அரசு நிறுவனம் தயாரிக்கும் இந்தச் செயற்கைச் சூரியன் திட்டத்தை 2050ஆம் ஆண்டிற்குள் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பா நாடுகளும் இதில் மும்முரமாகக் களம் இறங்கி உள்ளன. இந்த முயற்சி பூமிக்கு நன்மையாக அமையுமா? அல்லது மிகப்பெரிய தீமையை விளைவிக்குமா? எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…