பொதுவாக, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, காலத்திற்கு ஏற்ற பலவகைக் கட்டுக்கதைகளையும், புனைவுகளையும் ஏற்படுத்தத் தவற மாட்டார்கள். வரலாறு நெடுகிலும் அவ்வாறு புனையப்பட்ட அனைத்துமே பார்ப்பனர் அல்லாத மக்களை அடிமைப்படுத்துவதற்கான காரணிகளாக அமைந்திருக்கின்றன. அவ்வகையில், எவை எல்லாம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு ‘அறிவினை’ வழங்குமோ அவை அனைத்தையும் அம்மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுவதற்கு அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் பார்ப்பனியம் மேற்கொண்டு இருக்கிறது. ஒன்றை உயர்வாகக் காட்டி, அதன் மேல் ஒரு புனிதத் தன்மையைப் பூசி இவையெல்லாம் அணுகக் கூடாதவைகள்; மீறி அணுகினால் ‘தீட்டு’ என்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தினர். பார்ப்பனரல்லாத மக்கள் இவற்றை அணுகக்கூடாது என்று நேரடியாகச் சொல்லமுடியாத அனைத்தையும் ‘புனிதம்’ என்று பரப்பத் தொடங்கினர்.
பார்ப்பனர்கள், அவர்களின் கல்வி, சமஸ்கிருதம்,
கோவில்கள், வேதங்கள், பார்ப்பனக் கலைகள், பார்ப்பன அரசியல் என அனைத்திற்கும் புனிதப் பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
புனிதத்தைக் கேள்வி
கேட்க முடியாது என்ற சூழ்ச்சி உருவானது. தெளிவாகக் கூற வேண்டுமென்றால் கேள்வி கேட்க முடியாதவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை தான் ‘புனிதம்’ என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். அன்று தொடங்கி இன்று வரை எதைப் பற்றியும் கேள்வி கேட்க மக்கள் தயங்குவதற்குக் காரணம் அதன்மீது கட்டி எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய புனிதத்தன்மை தான்.
சான்றாக, கோவில் என்பது புனிதமான இடம்; புனிதத்தின் உருவம்தான் அங்கிருக்கும் கடவுள் சிலைகள்; எனவே, அவற்றை பார்ப்பனர் அல்லாத மக்கள் தொட்டு வணங்கினால் கோவிலும் கடவுளும் தீட்டாகிவிடும் என்று நம் மக்களையே நம்ப வைத்து இருக்கின்றனர். படித்து பட்டம் பெற்றவர்கள்கூட எங்களை விட சக்தி படைத்தவர் கடவுள் என்றும், கடவுள்தான் நம்மையே படைத்தார் என்றும் கூறுகிறீர்களே, சாதாரண மனிதராகிய நாங்கள் தொட்டால் தீட்டாகி விடக்கூடிய அளவிற்கு உங்கள் கடவுளும் அது வசிக்கும் கோவிலும் சக்தி அற்றதா? என்ற கேள்வியைக் கேட்கத் துணிவதில்லை. காரணம், இவைகள் அனைத்தும் கேள்விக்கு அப்பாற்பட்டவை என்பதைப் பார்ப்பனர் அல்லாத பக்திமான்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ஏமாறுவதற்குத் தயாராக இருக்கின்றனர்.
யார் கேட்கத் துணிந்தாலும், இல்லையென்றாலும் நான் கேட்பேன்; மேற்சொன்ன அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துவேன்; பதில் இல்லை என்றால் அதன் புனிதத் தன்மையை உடைப்பேன்; அவ்வாறு உடைப்பதன் மூலம் இவை அனைத்துமே பொய் என்றும், கட்டுக்கதைகள்தாம் என்பதை அனைத்து மக்களுக்கும் புரிய வைப்பேன் என்று உறுதியுடன் பேசியும், எழுதியும், போராடியும் இம்மண்ணில் பெரும்பாலான மக்களுக்குப் பார்ப்பன சூழ்ச்சியைப் புரிய வைத்த தலைவர் தான் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கருஞ்சட்டை தோழர்கள்தான் இன்றுவரை புனிதம் என்ற பெயரால் பார்ப்பனர்களால் நிகழ்த்தப்படக்கூடிய மாபெரும் ‘‘மனித உரிமை மீறல்களை’’ தீரத்துடன் எதிர்த்து நிற்கின்றனர்.
பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள்; அவர்கள் முன்பு போல் இல்லை என்று தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக் கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு, நாங்கள் திருந்தப் போவதே இல்லை என்பதை ‘திருப்பதி லட்டு’ சர்ச்சையின் மூலம் நிரூபணம் செய்துள்ளனர். பார்ப்பன அம்மையார் ஒருவர் மிகத் தெளிவாக தங்கள் ஆதிக்க, வர்ணப் புத்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘‘பலவா கைப்படுது… அதனால் நாங்கள் லட்டு சாப்பிடுறத நிறுத்தி ரொம்ப வருஷம் ஆயிடுத்து’’ என்கிறார். 2024ஆம் ஆண்டிலும் இத்தகைய தீண்டாமை மிகு சொற்களையும், நாங்கள் புனிதமானவர்கள் – சுத்தமானவர்கள்; நீங்கள் எல்லாம் அசுத்தமானவர்கள் என்று பார்ப்பனர்களால் கூற முடிவதன் அடிப்படையை நம் மக்கள் உணர வேண்டாமா? தங்களின் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவும், தாங்கள்தான் சுத்தமானவர்கள் என்பதைக் கட்டமைக்கவும், அவர்களைத் தவிர மற்ற எல்லோருமே உடல், உடை, உணவு, இருப்பிடம் என அனைத்திலும் அசுத்தமான மக்கள் என்பதை மிக ஆழமாக நம்ப வைத்து இருக்கின்றனர். தயிர் சாதம் புனிதம்; மாட்டுக்கறி தீட்டு என்பது வரை இந்தச் சூழ்ச்சியின் வெளிப்பாடு தான்!
நம் மண்ணிலே நம்மோடு வாழ்ந்து கொண்டே, நம் உழைப்பின் பலன்களை அனுபவித்துக் கொண்டே, பொருளாதார ரீதியாகவும் நம்மால் பலன் பெற்றுக்கொண்டே, நம்மை இவ்வளவு கீழாக நினைக்கும் போக்கினைப் பார்ப்பனர்கள் கொண்டிருப்பதற்கு நம் மக்களிடையே தன்மான உணர்வும், கேள்வி கேட்கும் திறனும் அற்றுப்போய் இருப்பதுதான் மிக அடிப்படைக் காரணம்.
இவர்கள் யார்? இவர்களால் நம் நாட்டிற்கு என்ன பயன்? இவர்களால் இம்மண்ணில் விளைந்த மாற்றங்கள் என்ன? என்ற கேள்விகளை நாம் முன் வைக்கத் தொடங்கினால் இவர்களின் அனைத்து புனித பிம்பங்களும் கிழித்தெறியப்படும். அப்படியான பல கேள்விகளால் பார்ப்பனர்களைத் துளைத்தெடுத்து, அவர்களின் ஆதிக்கக் குடுமியை,மேலாதிக்க நூலை அசைத்துப் பார்த்தார் தந்தை பெரியார். அதன் விளைவு தான், இன்றைக்கு பல கடவுள் நம்பிக்கையாளர்களும் தங்களை அறியாமலேயே ‘லட்டு’ சர்ச்சையில் பார்ப்பனர்கள் செய்யும் புனிதத் தன்மை சூழ்ச்சிகளைக் கேலிக்கு உட்படுத்துகின்றனர். இவை அனைத்துமே தமிழ்நாட்டுமரபில், தந்தை பெரியாரால் கடத்தப்பட்ட ‘‘சுயமரியாதை உணர்வின் வெளிப்பாடு’’. பெரியார் கேட்ட கேள்விகளை நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டும். மீள் ஆய்வு செய்ய வேண்டும். 1949ஆம் ஆண்டு பெரியார் கேட்ட கேள்விகளுக்கு, இன்றைய அறிவியல், தொழில்நுட்ப காலகட்டத்திலாவது பதில் கிடைத்திருக்கிறதா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதோ, தந்தை பெரியார் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள்:
‘‘ஆரியர்கள் இந்நாட்டில் என்று காலடி வைத்தார்களோ அன்று முதல் இன்றுவரை பலவித வஞ்சகங்களாலும், சூழ்ச்சிகளாலும் இந்நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களைச் சின்னா பின்னமாகப் பிரித்து, ஆபாசக் கற்பனைகளையும் நடத்தைகளையும் வேதமாகவும், மோட்ச சாதனமாகவும் ஆக்கி, இந்நாட்டு மக்களுக்கு அவர்களே ஆதிக்கக்காரர்களாகவும் – ‘இகம்’, ‘பரம்’ இரண்டிற்கும் தர்மகர்த்தாக்களாகவும், சமுதாயம், அரசியல் இரண்டிற்கும் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், எஜமானர்களாகவும் கூட தங்களை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்,
இவர்களது தர்மகர்த்தாத் தன்மையிலும் எஜமானத் தன்மையிலும் வழிகாட்டித் தன்மையிலும் இந்நாட்டுக்கு எந்தத் துறையிலாவது ஏதாவது கடுகளவு முற்போக்கோ, நன்மையோ ஏற்பட்டு இருக்கின்றன என்று யாராவது சொல்ல முடியுமா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்றுதான்சொல்ல வேண்டும்.
இந்தியாவுக்கோ, இந்திய நாட்டுப் பழம்பெருங்குடி மக்களுக்கோ ஏதாவது ஒரு நன்மை – சிறிதளவாவது ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அதில் ஒரு சிறிது முஸ்லிம் அரசர்களாலும், பெரும்பாலும் அய்ரோப்பிய ஆட்சியாலும் ஏற்பட்டதென்றே சொல்லலாம். அதுவும் ஆரியர்களின் முட்டுக்கட்டையையும், தொல்லைகளையும் சமாளித்து ஏற்பட்டவைகள் என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, மற்றபடி ஆரியர்கள் முயற்சியோ, உதவியோ ஒரு சிறிதாவது கொண்டு ஏற்பட்டனவென்று எதையும் சொல்ல முடியாது. மேலும், இன்று அரசியல்,சமூக இயல், பொருளியல், அறிவியல் ஆகியநான்கு துறைகளிலும் இந்நாட்டு மக்கள் அடைந்தி
ருக்கும் ஈனநிலைக்கு இந்த ஆரியர்களே காரணம் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது”.
(பெரியார், குடிஅரசு -_ கட்டுரை 10-.09.-1949).
தந்தை பெரியாரின் கருத்துகளும், துணிச்சலான கேள்விகளும் நமக்கு உணர்த்தும் செய்தி ஒன்றுதான். சமூக, பொருளாதார, அரசியல் அறிவியல் துறைகளில் இன்று வரை நாம் அடைந்திருக்கும் இழிநிலைக்கும், வீழ்ச்சி அடைந்திருக்கும் தன்மைக்கும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியே காரணம். ஆனால், நம் வளர்ச்சியில் அவர்களின் பங்கு எப்போதும் இருந்ததில்லை; இப்போதும் இல்லை. இதனை பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திப்பார்களா?