முழுப் பொய்யைவிட, அரை உண்மை ஆபத்தானது என்று சொல்லப்படுவது உண்மைதான் என்பதை நாம் இப்போது பார்த்து வருகிறோம். ஆம், இப்பொழுதெல்லாம் மூடக் கருத்துகளைப் பேசுவோர் அறிவியலைத் துணைக்கழைத்துக் கொண்டு, தாம் பேசும் கருத்து அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று அடித்துப் பேசுவதைப் பார்க்கிறோம்.
ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களிடம் கடந்த காலத்தினைப் போல கடவுளின் சக்தி, மந்திர சக்தி என்று சொல்லி எதையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியாத காரணத்தினால் அறிவியல் விளக்கம் ஒன்றைச் சொல்லி, ஆகவே இது நல்லது இதனைச் செய் எனக் கூறுவதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, குழந்தைகளுக்குக் காது குத்துவது கடவுள் அல்லது மத நம்பிக்கை சார்ந்த ஒன்றல்ல, காது குத்துவதால் நரம்புகள் முடுக்கி விடப்படுகின்றன என்று அறிவியல் விளக்கம் கொடுக்க முனைவதைப் பார்க்கிறோம். இப்படித்தான் இந்து மதப் பழக்க வழக்கங்களான வாசலில் சாணம் தெளிப்பது, கோலமிடுவது, பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பூசுவது என ஒவ்வொன்றுக்கும் ஓர் அறிவியல் விளக்கத்தை இப்போது அளிக்கின்றனர்.
இதனைப் போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் மாட்டு மூத்திரத்திற்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்றும், அது ஆய்வகச் சோதனையில் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றும் ஒருவர் பேசியதைப் பார்த்திருப்பீர்கள். அதே போல திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு மேல் ஆகாயத்தில் ஒரு காந்த சக்தி உள்ளது என்று ஒருவர் தொலைக்காட்சி நிகழ்வில் பேசியது உள்ளிட்ட நிறையப் போலி அறிவியல் கதைகளை நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்போது இந்தக் கதைகள் அறிவியல் கண்டுபிடிப்பான புலனத்தில் (Whatsapp) மிக அதிக அளவில் பகிரப்படுவதையும் பரப்பப்படுவதையும் காண்கிறோம். ‘Whatsapp’ போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி போலி அறிவியல் செய்திகள் பரப்பப்படுவது உலகில் வேறு நாடுகள் எதிலும் உண்டா எனத் தெரியவில்லை. அதிலும் ‘Whatsapp’இல் மருத்துவக் குறிப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் ஆயிரக்கணக்கில் பகிரப்படுகின்றன.
செய்தி ஊடகங்களில் மாட்டுச் சாணத்தை மனிதர்கள் உருட்டி உருட்டி விழுங்கும் அருவருப்பான
காட்சிகளும், மாடு மூத்திரம் பெய்யும் போது அதில் தலையை நீட்டிக் குளிக்கும் அவலக் காட்சியையும் நாம் காண்கிறோம்.
இந்த மூடத்தனங்கள் இப்போதுதான் புதிதாகத் தோன்றின என்று கருத வேண்டாம். 1980களில் கோயில் யானை வீதி உலா வரும்போது போடும் லத்திகளின் (யானையின் சாணம்) மீது சிறுவர்கள் ஏறி மிதித்து விளையாடுவது உண்டு. ஏன் என்று கேட்டால் பித்தவெடிப்பு குணமாகும் என்ற நம்பிக்கை. இது எத்தனை ஆபத்தானது. மிருகங்களின் சாணத்தை மிதிப்பதால் டெட்டனஸ் நோய் வர வாய்ப்புண்டு என்பதை அறியாத பருவத்தினர்; அதே போல மண்ணுளிப்பாம்பு கடிப்பது தான் குஷ்ட ரோகத்திற்குக் காரணம். எனவே, அந்தப் பாம்பைப் பிடித்து நறுக்கித் துண்டுகளாக்கி அப்படியே வாழைப்பழத்திற்குள் வைத்து விழுங்கிவிட்டால் தொழுநோய் குணமாகி விடும் என்ற கதையும் அப்போது மிகப் பிரபலம்.
அன்று செவிவழிச் செய்தியாகப் பரவிய இந்தப் பொய்கள் அல்லது போலி அறிவியல் கண்டு பிடிப்புகள் இன்று புலனத்தின் வழியே மிக வேகமாகவும் அதிகமாகவும் பரவுகின்றன. இவ்வாறு ‘Whatsapp’இல் வரும் செய்திகளை எல்லாம் உண்மை என நம்பி அவற்றை மேலும் பரப்பும் மக்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு மூடத்தனங்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பரப்புவதில் ஆன்மிகவாதிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
காலத்தையும் மனித உழைப்பையும் மிச்சப்படுத்துவதற்காக, சிரமத்தைக் குறைப்பதற்காக மேலை நாட்டினர் கண்டு பிடித்த கணிப்பொறியை இந்த நாட்டில் ஜாதகம் கணிக்கவும் சோதிடத்திற்கும் பயன்படுத்திச் சம்பாதிப்பதை நாம் பார்க்கிறோமே! இந்த இழிச் செயலை, மூடத்தனத்தை ஏதோ மிகப் பெருமைக்குரியதான செயல் போல “கம்ப்யூட்டர் ஜாதகம் ” என எழுதி வைத்து விளம்பரம் செய்து கூடுதல் பணம் பறிப்பதையும் காண்கிறோம்.
அடுத்து, மேலை நாட்டினர் அறிவியல் தொழில்நுட்பத்துடன் எதைக் கண்டு பிடித்தாலும்
அது முன்னோர்கள் கண்டுபிடித்தது என்றும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தம்பட்டம் அடிக்கின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரியா, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையா, ஏவுகணையா அல்லது செயற்கைக்கோளா எல்லாமே நாங்கள் கண்டு பிடித்ததுதான் என்று கூசாமல் பேசும் போக்கு அதிகரித்துள்ளது.
ஆனால், இவற்றை மேலை நாட்டினர் கண்டுபிடித்து வெளியே சொல்வதற்கு முன் இவர்கள் ஏன் அதுபற்றிப் பேசவில்லை என்று எவரும் கேட்பதுமில்லை. கேட்டால் பதிலும் இல்லை. இவ்வாறு போலி அறிவியல் (Pseudo Science) கருத்துகள் இங்கு மக்கள் மத்தியில் ஆதிக்கம் செய்வதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. நம் நாட்டில் பெரிய படிப்பைப் படித்தவர்களும், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் கூட பகுத்தறிவுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டவர்களாக இருப்பதுடன், தங்களது சாதனைகளுக்குக் காரணம் அறிவியல் தான் என்று நம்பாமலும் உள்ளனர்.
நாட்டின் மிக நவீன அறிவியல் துறையான விண்வெளி ஆய்வு மய்யத்தில்கூட ராக்கெட் ஏவுவதற்கு நல்ல நேரம் பார்க்கும் அவலம் காணப்படுகிறது. (இதைப் பற்றி 1970இல் கலைஞரின் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்திலேயே நையாண்டிப் பாடல் இடம் பெற்றுள்ளது). அதே போல பெரும் பாலான மருத்துவமனை வளாகங்களில் கோயில்கள் கட்டப்பட்டு இருப்பதையும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் நோய் குணமாக வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுவதையும் நாம் பார்க்கிறோம்.
16ஆம் நூற்றாண்டில் தொலை நோக்கியைக் கண்டுபிடித்த கலிலியோவை மதவாதிகள் சாகும் வரை வீட்டுச் சிறையிலேயே வைத்திருந்தனர். அதற்கும் முந்தைய நூற்றாண்டுகளில் விஞ்ஞானிகளை வேட்டையாடினர். கொடூரமாகக் கொலை செய்தனர்.
ஆனால், இன்று இங்குள்ள நவீன அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் பலர் ஆன்மிகத்துடன் சமரசம் செய்து கொண்டு சமாதான சகவாழ்வு நடத்துகின்றனர். அறிவியலுக்கு எதிராகப் பேசும் சாமியார்களையும் மந்திரவாதிகளையும் எதிர்த்து அறிவியல் உண்மைகளைக்கூடப் பேச மறுக்கின்ற னர். ஆகவேதான் நம் நாட்டில் சாமியார்களும், ஜோதிடர்களும், மந்திரவாதிகளும் அறிவியல் கண்டு பிடிப்புகளைத் தங்களது பித்தலாட்டங்களுக்குப் பயன்படுத்தி மக்களை ஏய்க்கும் வேலையில் துணிச்சலாக ஈடுபடுகின்றனர்.