தந்தை பெரியார் பொதுக்கூட்ட உரையை இறுதிவரை காரில் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தவர் “குன்றக்குடி அடிகளார்”!- சாமி திராவிடமணி

2024 அக்டோபர் 1-15 கட்டுரைகள்

குன்றக்குடி அடிகளார் என்று தமிழ்ப் பெருமக்களால் அன்புடன் அழைக்கப்படும் திருவண்ணாமலை ஆதீனம் சார்ந்த குன்றக்குடி மடத்தின் 45ஆம் ஆதீனகர்த்தரான தவத்திரு. குன்றக்குடி தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தந்தை பெரியார் மீது பேரன்பும் மதிப்பும் கொண்டவர். தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் அவ்வாறே அடிகளார் மீதும் மதிப்புக் கொண்டவர்கள். தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி நகருக்கு ஒவ்வோர் ஆண்டும் கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள். 1960இல் என் தந்தையார் என்.ஆர்.சாமி அவர்கள் பழைய ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகவும் மாவட்டத் தலைவராக வழக்குரைஞர் அய்யா இரா.சண்முகநாதன் அவர்களும் இருந்தனர்.

எனக்கு 15 வயது இருக்கும். குன்றக்குடி மடத்திற்கு அடிகளாரின் அழைப்பை ஏற்று தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருடன் சென்றார்கள். தவத்திரு குன்றக்குடி ஆதீனம் வெள்ளித் தாம்பாளத் தட்டில் பழங்களுடன் கருப்புச்சட்டைத் துணியும், கருப்புச் சேலையும் சேர்த்து, பெரியாரின் கையில் கொடுத்து வரவேற்ற காட்சி என் கண்முன் நிழலாடுகின்றது.

தந்தை பெரியார் அவர்கள், “பச்சைத்தமிழர்” பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாள் மாநாடுகள் நடத்தினார்கள். இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 5ஆவது மாநாடாக காரைக்குடி காந்தி சதுக்கத்திடலில், “1966 டிசம்பர் 19, 20 சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் “திராவிடர் கழக மாநாடும்”, “சமதர்ம மாநாடும்” ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. (இதில் எனது மூத்த சகோதரியார் தமிழரசி – பா.செயராமன் இணையரின் திருமணம் நடந்தது) சமதர்ம மாநாட்டுத் திறப்பாளராகப் பொறுப்பேற்ற தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் நீண்ட கருத்தாழமிக்க உரையாற்றினார்கள். அந்த உரையினை அச்சடிக்கப்பட்ட புத்தகமாக, மக்களிடம் வழங்கியதில் நானும் ஒருவன்.

தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி நகருக்குப் பொதுக்கூட்டம் பேசும் நிகழ்வுக்கு வரும்போதெல்லாம், கூட்டம் நடக்கும் திடலுக்கு, தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் காரில் வருகை புரிந்து திடலின் ஒரு மூலையில் காரில் இருந்தபடியே பெரியார் அய்யாவின் உரை முழுவதையும் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். இத்தகவலைத் தவத்திரு. அடிகளார் அவர்களே எங்களிடம் கூறியிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி அனைத்து மாவட்டங்களிலும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியிலும் ஏற்பாடு செய்து, “இராமவிலாசம் திரையரங்கில்”, காலை நிகழ்வாகப் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது. நடுவர் பொறுப்பில் குன்றக்குடி அடிகளார் உரையாற்றுவதற்கு, பட்டிமன்றத்தின் தலைப்பு கேட்டபோது, “தமிழின வீழ்ச்சிக்குப் பெரிதும் காரணம், ‘அகப்பகையே’! ‘புறப்பகையே’, “ஊடுருவலே” என்று தலைப்பிடுமாறு கூறினார். அதன்படி மூன்று அணிகளாக வாதிட்ட பரபரப்பான பட்டிமன்றத்தில் நானும் ஓர் அணியில் பேசினேன்.

1982ஆம் ஆண்டுகளில், “மக்கள்திலகம்” எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி தமிழகம் முழுவதும்
பள்ளிகளில் அரசு அனுமதித்துள்ள தந்தை பெரியாரின் உருவப்படங்களை வைக்கும்படி சுற்றறிக்கை வந்தது. அதுசமயம் காரைக்குடி பகுத்தறிவாளர் கழகம் சார்பாக, அன்று தலைவராக இருந்தவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், அரசு மின்சார வாரிய உதவிக் கோட்டப் பொறியாளருமான மானமிகு மு.சொக்கலிங்கம் ஏற்பாட்டில், “இராமசாமி தமிழ்க் கல்லூரி”யில், காரைக்குடி பள்ளிகள் 30க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் உருவப்படங்கள் வழங்கும் விழாவிற்கு, தவத்திரு. குன்றக்குடி அடிகளார், தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் மெ.சுந்தரம், எனது தந்தையார் என்.ஆர்.சாமி ஆகியோருடன் நானும் பங்கேற்றேன். அந்த நிகழ்வு ஒரு புதுப் புரட்சியுடன் நடந்தது.

மேலும் மறைந்த சன்னிதானம் குன்றக்குடி அடிகளாருக்குப் பின்னர் 46ஆவது ஆதீனகர்த்தராக

“இளையபட்டம்” சூட்டு விழாவுக்கு எனக்கு
அழைப்பு வந்ததை ஏற்று, நான் கருப்புச் சட்டையுடன் விழாவில் பங்கேற்றேன்.

அதேபோல 04.04.2003 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அ.இராமசாமி அவர்களால் ஆசிரியர் அவர்களுக்கு” டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு முதல் நாளான 03.04.2003
அன்று, தற்போது 46ஆவது மகாசன்னிதானம் பொறுப்பிலுள்ள, தவத்திரு. பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சாமிகள் அழைப்பை ஏற்று, மாலையில் குன்றக்குடி மடம் சார்பாக விமரிசையான வரவேற்பு அளித்து மகிழ்ந்தார்கள்.

குன்றக்குடி மடத்துடன் திராவிடர் கழகத்துக்கு இருந்துவரும் தொடர்பு நெடுங்காலத்தையது. அதன் தொடர்ச்சியாகத்தான் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவைத் திராவிடர் கழகம் காரைக்குடியில் 30.08.2024 அன்று கொண்டாடி
மகிழ்ந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், அமைச்சர் பெரியகருப்பன் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.