வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து உண்மை வரலாற்றை உலகிற்குக் காட்டுவோம்!- மஞ்சை வசந்தன்

2024 அக்டோபர் 1-15 முகப்பு கட்டுரை

இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களோடு மட்டும் தொடர்புபடுத்திக் காலவரையறை செய்யப்பட்டு வந்த காலக்கட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு அதற்கும் முந்தையது. அது நகர நாகரிக வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்களை முன்னிறுத்திய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜான் மார்ஷலையேச் சேரும்.

ஜான் மார்ஷல்

“சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், முதிர்ந்த பண்பாட்டோடு, அருமையாகக் கட்டியெழுப்பிய நகரங்களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்களோடும், வளமான எழுத்தறிவோடும் வாழ்ந்துள்ளனர்” என்ற ஜான் மார்ஷலின் கருத்து, இந்தியத் துணைக்கண்ட வரலாற்று போக்கைப் புரட்டிப்போட்டது. இந்திய வரலாற்றுக்குப் புதிய முகவரி அளித்த அந்த ஜான் மார்ஷலுக்கு முழு உருவச்சிலை திறப்பதென்ற தமிழ்நாடு அரசின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது; சாலப் பொருத்தமானது. அவர் ஆய்வின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நேரத்தில் எடுத்த இம்முடிவு சிறப்பும் வாய்ந்தது.

‘இந்தியத் தொல்லியல் துறை ‘திராவிடக் கருதுகோள்’ (Dravidian Hypothesis) என்ற ஆய்வு நோக்கி நகர்ந்தது. சிந்துவெளிப் பண்பாட்டின் அறிவிப்புக்குப் பின்னர் நேர்ந்த மிகப் பெரிய மாற்றம் இது. ‘ஆரியர்களுக்கு முற்பட்ட தொல்குடிகள் காலத்தில், ஹிந்து மதம் என்று தற்போது அறியப்படும் கோட்பாடோ, வேறு சமயச் சிந்தனைகளோ தோன்றவில்லை. நன்றியின்பாற்பட்ட வழிபாடே பயன் கருதி செய்யப்பட்டது. அத்தகைய தொல்குடியினரின் தாய்த்தெய்வ வழிபாடு, குறிப்பாக, பூமித்தாய் வழிபாடு மிக வலுவானது; மிக ஆழமாக வேரூன்றியது. இந்தியாவிலும் சரி, வேறு எங்கும் சரி… ஆரியர்களிடம் பெண் வழிபாடு இல்லை. பெண்களை கடவுளர் கூட்டத்தின் தலைமை இடத்துக்குத் தாய்த்தெய்வமாக முதல் நிலைக்கு உயர்த்தியதாய் சான்றுகள் எதுவும் இல்லை’ என்றும்
ஜான் மார்ஷல் எழுதியுள்ளார்.

1924 டிசம்பரில் சுனிதி குமார் சாட்டர்ஜி, திராவிடக் கருதுகோளைத் தெளிவாக முன்வைத்தார். 1925 தொடக்கத்தில் இதற்கு மாற்றாக இந்தோ-ஆரியக் கருதுகோள்களும் தோன்றின.

தொல்லியல், மொழியியலைவிட மரபணு ஆய்வுகள் துல்லியமானவை என்கிற கருத்து பரவலாக இப்போது நிலவுகிறது. இந்தியத் துணைக்கண்ட மக்களின் தொன்மையான மரபணுத்தொகுதி தொல் தென்னிந்திய மூதாதையர் (AASI) என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இம்மக்களுடன் ஈரானிய வேளாண், வேட்டைக்குடியினரின் குருதிக் கலப்பால் ஹரப்பா பண்பாடு உருவானது. இந்தக் ஹரப்பா பண்பாட்டு மக்கள் ஏற்கெனவே இங்கிருந்த தொல்தென்னிந்திய மூதாதையருடன் கலந்து தென்னிந்திய மரபணு மக்கள்தொகை உருவானது.

இதைப் போலவே ஹரப்பா பண்பாட்டு மக்களுடன் ஸ்டெப்பி (புல்வெளி) மேய்ச்சல் பண்பாட்டினர் கலந்து, தொல் வட இந்திய மூதாதையர்கள் தோன்றினார்கள். இன்றைய தெற்காசிய மக்கள்தொகை இந்த இரண்டு மக்கள்தொகையும் கலந்து உருவானதே.
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக் கோட்டை, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வுகள் புதிய வெளிச்சம் தருகின்றன. சிந்துவெளித் தடயங்கள், சங்க இலக்கிய மீள்நினைவுப் பதிவுகள், தமிழ்நாடு அகழாய்வுத் தடயங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நின்று பேசுகின்றன’’ என்று தொல்லியல் அறிஞர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுகள் இப்போது கவனத்தில் கொள்ளத்தக்கவை.

சிந்து சமவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா

சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை- பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.09.2024 மாலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

திராவிடர் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

தமிழினத் தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு! – ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு! அந்த வரிசையில் சிந்துச் சமவெளி பண்பாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் 20.9.1924. இதுதான் தமிழ் – தமிழர் பண்பாட்டுப் பெருமையை உலகம் அறிந்த நாளாகும். இதனை உலகுக்குச் சொன்னவர் ஜான் மார்ஷல். இந்திய தொல்லியல் துறையின் அன்றைய இயக்குநர் அவர். அப்படி அறிவிக்கப்பட்ட நூற்றாண்டும் இப்போது கொண்டாடப்படுகிறது.

சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மைகளை, சிறப்புகளை வேத காலத்திற்கும் முற்பட்ட நாகரிகம் எனப் பிரகடனப்படுத்திய சர்.ஜான் மார்ஷல் அவர்களின் உருவப்படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர்

கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார். நூற்றாண்டு தொடக்க விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், வரலாற்றுப் பேராசிரியர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன் தொடக்கவுரையாற்றினார்.

பேராசிரியர் ஜெகதீசன் தொடக்கவுரை

சர்.ஜான் மார்ஷலுக்கு முன்பு வரலாற்றை கட்டி யமைத்தவர்கள் ஆரியம் கலந்த நிலையினைத் தான் உருவாக்கினர். இத்தகைய போக்கிற்கு வித்திட்டவர் வில்லியம் ஜோன்ஸ். வரலாற்றுத் துறை அறிஞர் ஏ.எல்.பாதம் போன்றவர்கள் சமஸ்கிருத ஆதிக்கப் போக்கிற்கு எதிராக உண்மைக் கருத்தினை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பொருZளாதாரப் பேராசிரியராக விளங்கிய கில்பர்ட் ஸ்கேட்டர் இந்தியாவின் தென்பகுதி பற்றி ஆய்வு செய்து திராவிடத்தின் சிறப்பு பற்றி பதிவு செய்துள்ளார். அத்தகைய அறிஞர் பெருமக்களின் ஆய்வுப் பாரம்பரியம் தேடப்பட்டு திராவிட நாகரிகம் பற்றிய உண்மைகள் கருத்தாக்கங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்’’. இவ்வாறு பெ.ஜகதீசன் பேசினார்.

பேரா. கருணானந்தம் உரை

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம் தனது உரையில்,
வேத கால நாகரிகத்தை தூக்கிப் பிடித்திட இல்லாத வழியினை ஓடாத சரஸ்வதி நதியை வேத சரஸ்வதி நாகரிகம் என சிந்துவெளி நாகரிகத்தை திரிபு செய்திட முனைந்து வருகிறார். இதை வரலாற்று விழிப்புடன் தடுத்திட வேண்டும். சர். ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் அல்லாத (Non Aryan), ஆரியருக்கு முந்தைய (Pre Aryan) நாகரிகம் என குறிப்பிட்டார். ரிக் வேதத்தில் எந்த நாகரிகமும் குறிப்பிடப்பவில்லை. எதிரிகளை, புரங்களில் வாழ்பவர்களை குறிப்பிடுகின்றன. புரங்களில் வாழ்ந்தவர்கள் – கோட்டையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என கருதப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உழவுத் தொழில் செய்திட கட்டப்பட்ட தடுப்பணையை ஆரியர்கள் பூசண பாம்பு என கருதி இடிக்க முற்பட்டனர். கதை கட்டினர்.

கடல் கடந்து செல்லுதல் என்பது ஆரியத்திற்கு புறம்பானது. கடல் கடந்து வணிகம் செய்வது திராவிடம் சார்ந்தது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழர் முதுமொழி. ‘திராவிட’ என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் – இந்தியாவிற்கு மட்டும் உரியது அல்ல. கருப்பர் என்பது திராவிடர் அடையாளமே. அன்றைக்கு சிந்து சமவெளி பற்றிய மொழி அறிஞர் ஹென்றி ஹிகர்ஸ் பாதிரியார் அண்மையில் பல்கலைக்கழகத்தில் 1940களில் உரையாற்றிய பொழுது மாணவராக
இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாதிரியாரிடம் புத்தகத்தில் செய்யப்பட வேண்டிய பொழுது ‘நான் ஸ்பெயின் நாட்டு திராவிடன்’ (I am a Dravidian from Spain) என குறிப்பிட்டு கையொப்பம் இட்டாராம்.

தொடர்ந்து திராவிட நாகரிகத்தின் மேன்மை, சிறப்பு, மாற்ற முடியாத அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு க.கருணானந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உரை

சிந்து வெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று சர்.ஜான் மார்ஷல் அவர்களால் அறிவிக்கப்பட்டதன்
நூற்றாண்டு விழா முக்கயமானது. சர்.ஜான் மார்ஷல் அவர்களின் சிந்து வெளி குறித்த அறிக்க இந்திய வரலாற்றில் மிக முதன்மையான அங்கம். அந்த அறிக்கையின்றி இந்திய வரலாறு முழுமை பெறாது. அந்த அறிக்கையின் பதிவின்றி இந்திய வரலாற்றை ஏற்க இயலாது.

வேத காலமே நாகரிகத்தின் தொடக்கம் என்று தப்பான வரலாற்றைப் பரப்பிக் கொண்டிருந்த நிலையில் மார்ஷலின் அறிக்கைதான் உண்மையை உலகிற்குக் காட்டியது. ஆரியர்கள் பேசிவந்த திரிபு வரலாற்றை – மோசடி முயற்சிகளைத் தகர்த்து சரியான வரலாற்றைத் தந்தவர் இவர்.

சிந்து வெளி, ஹரப்பா நாகரிகங்களை ஆரிய நாகரிகமாகக் காட்ட ஆரியர்கள் ரிக் வேத காலத்தை பின்னாள் தள்ளிக் காட்ட எடுத்த முயற்சிகளும், குதிரையைக் கொண்டுவந்து நுழைக்க முயன்றமையும் அவர்களின் மோசடி முயற்சிக்குச் சரியான சான்றுகள். ஆனால், அவை தரவுகள் அற்ற கற்பனைகள் என்பதால், பல்வேறு ஆய்வு முடிவுகள் அவர்களின் கற்பனை வாதங்களை தகர்த்து எறிந்தன.

சிந்துவெளி நகர நாகரிகம் என்பதும், அங்கு வாழ்ந்த தொல்குடியினர் தமிழர்கள் (திராவிடர்கள்) என்பதும், அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதும், அங்கு கிடைத்த தடயங்களில் உள்ள எழுத்துக்கள் தமிழ் என்பதும் ஆய்வுகளுக்குப் பின் அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளன.

ரிக் வேதத்திலே திராவிடச் சொற்கள் காணப்படுவது, தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுகிறது என்றார் ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன்.

தரவுகளால் வரலாறு கட்டமைக்கப்படாவிட்டால், கட்டுக்கதைகள் வரலாறாகிவிடும். ஆரியர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் கிளை அமைப்புகளும் கற்பனைக் கட்டுக்கதைகளை வரலாறக ஆக்க முயற்சிக்கின்றன. எனவே, நாம் விழிப்போடு இருந்து அம்முயற்சிகளை முறியடிக்கவேண்டும். உண்மையான வரலாற்றை உலகுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கான தொடக்க விழாவாக இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். இது முதல் முயற்சி. இம்முயற்சி தொடர்ந்து பெருகி, நாடு முழுவதும் பரவி மக்களிடையே விழிப்பு உருவாக்கப்பட்டு உண்மை வரலாறு உறுதி செய்யப்படவேண்டும்’’ என்று ஆர். பாலகிருஷ்ணன் பேசினார்.

அமர்நாத் ராமகிருஷ்ணா உரை

இந்தியத் தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில்,
சிந்து சமவெளி – மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய் வினை சார்லஸ் மேசன் (Charles Meason) தொடங்கினார். திராவிட மொழிப் பேசியவர்கள் வாழ்ந்த பகுதி இது என்று குறிப்பிடுகிறார்.

அதற்குமேல் அவர் ஆய்வு செய்திடவில்லை. அலெக்ஸாண்டர் கர்னிங் பிரபு (Alexander Curning Prabu) பவுத்த ஸ்தலங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். சிந்து வெளியின் சிறப்பு, முக்கியத்துவம், தனித்துவம் பற்றி வெளிக் கொணர்ந்தவர் சர்.ஜான் மார்ஷல். ஆவார்.மொகஞ்சதாரோ – ஹரப்பா இடங்களுக்குள்ள இடைவெளி 600 மைல்.ஆனால் அந்த அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள், தடயங்கள் ஒரே மாதிரியாக இருந்ததை, பெரிதாக அன்று பேசப்பட்ட வேதகால நாகரிகக் குறிப்புகள் எதுவும் அங்கில்லை. சுமேரிய – மெசபடோமிய நாகரிகங்கள் இடையின நாகரிகம் என சிந்து நாகரிகங்கள் அகாழய்வு முடிவுகளில் அறியப்பட்டது. வேதகால நாகரிகத்திற்குள் நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள்தான் வளமை, நாகரிக முன்றேற்றம் காண முடியும். சிந்து சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகள் நிலையாக வாழ்ந்தவர்களான தமிழ் நகர நாகரிகத்தினர்.

கீழடி அகழாய்விலும் நமது நாகரிகங்கள் கண்டுடிக்கப்பட்டன. 13 லட்சம் ச.கி. மீட்டரில் ஆய்வுகளில் சிந்து சமவெளி பரவி இருந்தது. தொல்லியல் முடிவுகள், முக்கிய ஆதாரங்களைக் கொண்டு இலக்கியக் குறிப்புகளின் துணையுடன் மேலும் ஆய்வு முடிவுகள் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆசிரியரின் தலைமையுரை

வேத கால நாகரிகமான ஆரிய நாகரிகம்தான் சிறந்தது, தொன்மையானது என்று கற்பிதம் செய்யப்பட்ட நிலையில், மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் 1920களில் நடத்தப்பட்ட அகழாய்வில் கற்பிக்கப்பட்ட நாகரிகத்திற்கு முந்தைய காலக் கட்ட நாகரிகம் அந்தப் பகுதியில் நிலவியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அது முற்றிலும் வேறுபட்ட நாகரிகம் என்பதை பிரகடனம் செய்த சர். ஜான் மார்ஷல் அதுவரை நிலவி வந்த கருத்துகளை உடைத்தெறிந்தார். அந்தப் புதிய நகர நாகரிகம் ஆரியரல்லாத நாகரிகம் என தொடக்கத்தில் அடையாளப்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மை மக்களது நாகரிகம், சிறுபான்மை மக்கள் அல்லாதார் பெயரில் அடையாளப்படுவது சரியல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, ‘‘சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே’’ எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இன்றைக்குப் பரவலாகவும் அது அறியப்படுகிறது. திராவிடம் எனும் பெயரில் பிரிவினைவாதம் பேசி வருகிறது என்று விமர்சிக்கும் வேத கால வரலாற்றாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ‘திராவிடம்’எனும் நிலப்பரப்பு அன்று நிலவியதாக அசல் மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப் பேசினார் ஆசிரியர்.

மனுதர்மம் 10 ஆவது அத்தியாயம்;
44 ஆவது சுலோகம்:

‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள்.’’

மனுதர்மம் கூறும் திராவிடம் உள்பட பல நிலப்பரப்புகளில் வாழ்ந்தவர்கள் சூத்திரர்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட நாகரிகம் என சிந்துவெளி நாகரிகம் அறியப்பட அரும்பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் அவர்களது படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம். இந்த நிகழ்வு தொடக்கம்தான். தமிழ்நாடு முழுவதும் தெருத் தெருவாக சர். ஜான் மார்ஷல் பேசப்படுவார். திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை அந்த நாகரிகத்தின் வழிவந்த மக்கள் உணரவேண்டும். இப்படி கூறுவதால், இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல. ஒரு பண்பாட்டு இயக்கம். (It is not a Sectarian Movement; but a cultural Movement)

“திருடர்கள் ஜாக்கிரதை” என்று போடுவார்கள். அதேபோல, “வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை” என்று மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றோம்.

இது ஆண்டு விழாவினுடைய தொடக்கம்.  ஆராய்ச்சி மன்றத்தில், ஆராய்ச்சி அகங்களில்,
ஆய்வுக்கூடங்களில் நீங்கள் இதைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். அதைத் தெருத் தெருவாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்களுடைய வேலை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துச் சொல்லி, இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெற வேண்டும்; அதன்மூலமாக வரலாற்றுத் தொய்வுகள் இல்லாமல் மாற்ற வேண்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மற்ற ஆய்வறிஞர்களும் எச்சரிப்பது போல வரலாற்றைத் திரித்து திராவிட நாகரிகத்தை மறைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று கூறி திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
குதிரை இருந்ததாகப் பொய் கூறுகிறார்கள். குதிரை அங்கு இல்லை என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஓமகுண்டம் இருந்தது என்கின்றனர். அங்கு ஓமகுண்டம் எங்கும் இல்லை. அடுப்பைத்தான் ஓமகுண்டம் என்று திரித்துக் காட்டப் பார்க்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் தோற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். காரணம், அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் அளவிற்கு நாம் விழிப்பும் அறிவும் தெளிவும் பெற்றுள்ளோம்.

சிந்துச் சமவெளி, ஹரப்பா பகுதியில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குத் தோண்டினாலும் தமிழர் (திராவிடர்) நாகரிக தடயங்கள்தான் கிடைக்கின்றன.

தாய்வழிச் சமுதாயம் தமிழருடையது. அதுதான் அகழ்வாய்வில் கிடைக்கிறது. ஆண் பெண் உறுப்புக்கு நன்றி கூறுவது தமிழர் மரபு. அதுதான் சிந்துவெளியில் கிடைக்கிறது. நகர நாகரிகம் தமிழருடையது. அதுதான் அகழ்வாய்வில் வெளிப்படுகிறது.
தமிழரின் தொல் எழுத்துக்கள்தான் அகழ்வாய்வில் கிடைக்கின்றன. இது தமிழரின் கூட்டெழுத்து. இதில் ஓ + ம் என இரண்டு எழுத்துக்கள் உள்ளன. இந்த இரண்டு எழுத்தையும் சேர்த்து இப்படி எழுதினர். இந்த எழுத்து சிந்துவெளியிலும் கிடைக்கிறது; கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரிலும் கிடைக்கிறது. ஆக, அய்யத்திற்கு இடமின்றி இந்தியாவின் மக்கள் தமிழர்கள். அவர்கள் கிழக்காசிய நாடு முழுவதும் பரவி வாழ்ந்தனர் என்பது பல்வேறு தடயங்களால் தொடர்ந்து உறுதி செய்யப்படுகின்றன.

மாறாக, ஆரிய நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் முதன்மை ஆவணமான வேதங்களிலும் எந்தவிதச் சான்றுகளும் இல்லை. எதையாவது செய்து, ஆரிய நாகரிகம் என்று நிலைநாட்டத் தொடர்ந்து ஆரியர்கள் முயற்சி செய்தாலும், அவர்கள் தொடர்ந்து தோற்றே வருகிறார்கள். காரணம், மத்திய ஆசியா பகுதியிலிருந்து தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் பிழைக்க வந்தவர், அதை மறைத்து, தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று ஒரு மோசடியான கருத்தைப் பரப்புகிறார்கள்.

அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம் வரலாற்றை மாற்றி எழுத, தங்களுக்குச் சாதகமாகக் குழு அமைக்கிறார்கள். அண்மையில் அமைக்கப்பட்ட குழுவில் 85% பார்ப்பனர்கள். அந்தக் குழுவின் ஆய்வும், அறிக்கையும் எப்படியிருக்கும்? எல்லாவற்றிலும் மோசடி, பித்தலாட்டம்.

தமிழர்கள் தமிழ் நாட்டோடு ஒதுங்கிப் போனவர்கள் அல்லர். அவர்கள் மொழியால் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்டாலும், இனத்தால் இந்தியா முழுக்க வாழ்கிறார்கள். அதனால், தொல் தமிழர்கள் (திராவிடர்கள்) மொழிகடந்து, இன உணர்வோடு, நாம் மண்ணின் மக்கள்; நம் பண்பாடு, நாகரிகம், அறிவியல், தொழில்நுட்பத் திறன் உலக அளவில் ஈடு இணையற்றது; மொழி, எழுத்து, நகர நாகரிகம், கப்பல் செலுத்துதல், அணைகட்டுதல், கட்டடங்கள் கட்டுதல் போன்றவற்றில் உலக அளவில் உலகிலேயே உயர்ந்து நின்றவர்கள்; இம்மண்ணுக்கு உரிய நாம் பெரும்பான்மை மக்கள்; இனச் சிறுபான்மையினரையும் அணைத்து அன்பு செலுத்தி அவர்களின் நலத்தையும் நாடக் கூடியவர்கள். ஆனாலும், இனச் சிறுபான்மையினரான ஆரியவந் தேறிகள் தொடர்ந்து நம்மை, சாஸ்திரங்கள் பேரால் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, அதைத் தவிர்க்க, தடுக்க, ஆதிக்கம் ஒழிக்க, இழிவு நீங்க நம் உண்மை வரலாறுகளைத் தொடர்ந்து கண்டறிந்து பரப்ப வேண்டும்.

வரலாற்றுத் திரிபை அவர்கள் செய்வதன் நோக்கமே, தொடர்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை உயர்ந்தவர்களாகவும் உரிமையுள்ளவர்களாகவும் காட்டவுமே ஆகும்.

எனவே, நாம் விழிப்போடு இருப்பதோடு, இந்தியா முழுமையும் ஆரியர் அல்லாத மக்கள் விழிப்புப் பெற, உண்மை அறிய, தொடர்ந்து உண்மை வரலாற்றைப் பரப்ப வேண்டும்; திரிபுகளை, மோசடிகளை விளக்க வேண்டும்.

மரபணு சோதனை கூறும்
மகத்தான உண்மை

ஆரியர்கள் தொடர்ந்து செய்துவரும் வரலாற்றுத் திரிபுகளையும், தப்பான கருத்துப் பதிவுகளையும்,
பரப்புதல்களையும் முறியடிக்கும் வகையில், பொய்யாக்கும் வகையில் மரபணு சோதனைகள் உண்மைகளை ஓங்கி ஒலித்தன. இந்தியாவில் வாழ்ந்த தொல்மக்கள் தமிழர்களே (திராவிடர்களே) என்பதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளன. ஆரியர்கள் வந்தேறிகள் என்பதையும் அது உறுதி செய்துள்ளது.

ஆய்வுகள் விரிந்து, பரந்து தொடரவேண்டும்! வரலாற்றைத் திரிப்பது, உண்மைகளை மறைப்பது போல ஆய்வுகள் நடைபெறாமல் தடுக்கும் ஆரியர்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றனர். இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டி ,முனைப்போடு செயல்படும் அவர்கள், உண்மை வரலாற்றை, உறுதி செய்யப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து
செய்ய தவிர்க்கின்றனர்; தடை செய்து முடக்குகின்றனர்.

எனவே, இச்சூழ்ச்சியை, சதியை முறியடித்து, ஆய்வுகள் விரிந்து, பரந்து நடைபெற மண்ணின் மக்களான ஆரியர் அல்லாத பெரும்பான்மையினர் போராட வேண்டும்; உண்மையைக் காண வேண்டும்; உண்மையை உலகிற்கு அறிவிக்க வேண்டும்; உரிமை காக்க வேண்டும்; இழிவு நீக்கி, ஏற்றம் பெறவேண்டும்.

வரலாற்றை அதில் தகுதியும், அனுபவமும், ஆழ்ந்த அறிவும் உடைய, ஒருதலைச் சார்பற்ற, நடுநிலையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்; இதில் அரசின் தலையீடு அறவே இருக்கக்கூடாது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களையே 90% ஆய்வுக் குழுவில் அமர்த்துவது அப்பட்டமான மோசடி! அவர்கள் செய்யும் ஆய்வு எப்படி சரியானதாக, நேர்மையானதாக, உண்மையானதாக இருக்க முடியும்?

வரலாற்று ஆய்வுக்குழு அமைப்பதில் உச்சநீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு, ஆய்வுகளையும் கண்காணிக்க வேண்டியது கட்டாயமாகும். வரலாறு என்பது காலக்கண்ணாடி யாகும். அது உள்ளதை உள்ளபடி காட்டக்கூடியதாய் இருக்க வேண்டும்.
எனவே, வரலாற்றை ஆய்வதில், உண்மை காண்பதில் மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும்; தொடர்ந்து ஆய்வு செய்து உண்மை காண வேண்டும்;

அதை நிலைநாட்ட வேண்டும், பரப்பவேண்டும்.