ஜப்பான் நாட்டின் வரலாற்றிலிருந்து மற்ற உலக நாட்டு மக்கள் கற்றறிந்து பயன் பெறும் பல்வகைப் பாடங்கள் ஏராளம் உண்டு.
‘‘மனிதர்களே மனிதர்களை அழிக்கும் போரின் அழிவுகளிலிருந்து மீள பல தலைமுறைகள் ஆகும்’’ என்ற பொது உண்மையை, தங்களது தன்னம்பிக்கையாலும், தளரா உழைப்பினாலும், அடக்கம்மிகு அறிவு, அறவாழ்வியல் முறையாலும் மாற்றியது அந்நாடு!
அழிவுகளிலிருந்து மீண்டு ஆக்கப்பூர்வத்திற்குரிய அடிக்கட்டுமானத்தை அமைத்து, அறிவுப்பூர்வமான சாதனைகளைத் தங்களது விடா முயற்சியினால் உலகுக்குத் தங்கள் வெற்றியை இன்றும் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சிறப்புமிகுந்த நாடு ஜப்பான்.
‘விழுவது’ இயல்பு என்றாலும், ‘எழுவது’ – அதுவும் குறுகிய காலத்திலேயே எழுந்து, புத்தாக்கத்தை வாழ்க்கையில், சமூகத்தில் உருவாக்கும் பண்பாட்டுப் பாடத்தை அவர்களிடமிருந்து கற்க வேண்டும். பாதிப்பு ஒரு பொருட்டல்ல; அதனை ஆற்றலுடன் எதிர்கொண்டு எழுதலே முக்கியம் என்று கடும் உழைப்பாலும், மானுடப் பற்று மிதக்கும் மகத்தான வாழ்வு முறையாலும், ‘‘இடுக்கண் வரும்போதெல்லாம் நகுக’’ என்ற துணிவுப் பாடத்தைத் தானும் கற்று, கனிவுடன் பல தலைமுறைகளுக்கும் சொல்லித் தரும் தனித்தன்மையால் தலை நிமிர்ந்த நாடு அது!
‘‘எதிர்ப்புக் கண்டு அஞ்சாதே; இலக்கில் குறியாக இரு. தானாகப் பிறக்காதவர்கள் மனிதர்கள்; தனக்காகவும் பிறக்காதவர்கள் மனிதர்கள். எனவே, கூட்டு வாழ்க்கைபோல, எதையும் எதிர்கொண்டு வெற்றி வாகை சூடலாம். வேதனைகளை – சோதனைகளை – சாதனைகளாக மாற்றி மகிழ்ச்சியில் நீந்தலாம்’’ என்ற அரிய வாழ்க்கைப் பாடத்தை வையகத்திற்குக் கற்றுத் தரும் அறிவுச் சூரியன் அற்புத ஓளிக்கதிர்களைப் பரப்பும் நாடு ஜப்பான்! பருவம் மாறினாலும், மாறாத பண்பாட்டையும், பாசமிகு உழைப்பையும், அன்பு அறவழியையும் பெற்று பதற்றமில்லாத புதுவாழ்வுக்குரியவர்களாகவும் இருப்பதால், ஆரவாரமில்லாத அமைதியுடன், சரித்திரச் சாதனைகளையும் சாதாரண நிகழ்வுகள்போல் நிகழ்த்தி வாழும் அவர்களது அன்றாட வாழ்வியல் – அங்கு சென்று காணுவோர் எவரையும் வியக்க வைக்கும்!
அயலகத்தைத் தமது வாழ்விடமாக்கி, அந்நாட்டு நிரந்தர குடியேற்றமும், பின்னர் குடியுரிமையும் பெற்றவர்களான இந்தத் தலைமுறையினர், தாம் பெற்ற படிப்பறிவாலும், பகுத்தறிவாலும், ஒரு நூற்றாண்டு திராவிடர் இயக்கத்தால் பாய்ச்சப்பட்ட கல்வி நீரோடை மூலம் செழித்த பயிர்களும், விளைச்சல்களும் ஆவார்கள்.
இன்றுள்ள திராவிடர் அரசு, அயலகத்தில் வாழும் நம் மக்கள்மீது தனி அக்கறை கொண்டு, தாய்க்கோழி தம் குஞ்சுகள்மீது எப்போதும் ஓர் கண் வைப்பதுபோன்று, கவனத்தோடு கண்காணித்து, தோன்றாத் துணையாக உள்ளது.
அதற்கான நன்றியைக் குவிக்கும் வகையில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராசர், அத்திராவிடர் ஆட்சியின் தொடர்ச்சியான நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர், இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்பட, பலரது தொடர் முயற்சிகளால், படிப்பும் பணியும் பெற்றோம் என்பதை உணர்ந்து, வேர்களுக்கு நன்றி சொல்ல, ‘திராவிட விழுதுகளாகிய நாங்கள் தாய் மண்ணை, பெரியார் மண்ணை மறவோம்’ என்று பிரகடனப்படுத்திட, தமிழ்நாட்டினை மிஞ்சும் அளவுக்குப் பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழாக்களை கடந்த 15.9.2024 ஞாயிறு மாலை நடத்தினார்கள்!
சென்ற ஆண்டுகளில் ஜப்பானிய மொழியில் ‘‘தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள், வைக்கம் வீரர்’’ ஆகிய இரண்டு நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிடும் சாதனையைத் தொடங்கினர்; அது பிறகு இவ்வாறு விரிந்தது.
பூகம்பங்களை எப்போதும் எதிர்நோக்கி வாழும் அச்சத்தை அகற்றிட்ட வாழ்வு கண்ட நிலையில், துன்பம் தராது, இன்பமும், மகிழ்ச்சியும் தரும் புதிய பூகம்ப அனுபவத்தை அவர்கள் பெற்றார்கள். நமக்கும் அந்த மகிழ்ச்சியில் திளைக்க வாய்ப்பளித்தார்கள்!
ஆம்! அங்கே ஏற்பட்டது ஈரோட்டுப் பூகம்பம் – அது புதுமைக்கான பூபாளத்தினை வரவழைத்த விசித்திர பூகம்பம்.
இவ்வாண்டு நாங்கள் சென்றபோது அங்கே நமது திராவிட உறவுகளின் உணர்வுகளை எப்படிப் பாராட்டுவது என்றே புரியாமல் அன்பெனும் வெள்ளத்தில் சிக்கி, மீள முடியாமல் மகிழ்ச்சியோடு நீந்திக் கரை சேர்ந்தோம்.
வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) என்ற அமைப்பின் சார்பில் திட்டமிட்ட விழாக்களை எடுத்துக்காட்டி சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், பெரியாரிஸ்ட்டுமான சகோதரர் எம்.எம்.அப்துல்லா அவர்களையும், என்னையும் அழைத்து, பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதுவரை இல்லாத வகையில் 200 குடும்பங்களைத் திரட்டி, ஒரு குடும்ப உறவாடல் சூழலை ஏற்படுத்தி, தாங்களும் மகிழ்ந்து, எங்களையும் மகிழ்வித்தனர்.
மகளிரும், குடும்பத்தினரும் கலகலப்புடன் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சிகள், ஜப்பான் நாட்டு மக்களின் பறை இசை, நடனங்கள் சிறப்பாக அமைந்தன.
முக்கியப் பொறுப்பாளர்கள், இல்லத்தரசிகள் நமது கொள்கைச் சொந்தங்களாகவே ஆகி நம்மை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினர்.
பெரியார் – அண்ணா கொள்கைத் தத்துவங்கள்
அவர்களை மாற்றி யோசிக்க வைத்து, கூட்டம் முடிந்து சுமார் ஒரு மணிநேரம் நின்று, தொடர்ந்து ஒளிப்படம் எடுத்து, அன்பினைப் பொழிந்ததை எளிதில் மறக்க முடியாது.
தந்தை பெரியார் நமக்கு கல்விக் கண் தந்தார்; திராவிடர் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்து, கல்வி நீரைப் பாய்ச்சி, வளர்த்த சமூகநீதிப் பயிரின் விளைச்சலின் அறுவடை வெற்றித் திருவிழாவாகவே கண்டும், பிரியா விடை பெற்று, சிங்கப்பூர் பெரியார் பிறந்த நாளுக்காகப் புறப்பட்டோம்.
நிகழ்ச்சியை நேரலை காணொலி மூலம் பார்த்து மகிழ்ந்த பலரும் ஜப்பானுக்குச் சென்றபொழுது 91 வயது என்றனர். விழா முடிந்து திரும்பியபோது 19 ஆக திரும்பினேன். இதைவிட வாழ்வின் கொள்கைப் பரப்பும் வாய்ப்பு-பேறு வேறு கிட்டுமா?
‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’ என்பதற்கு, ஜப்பான் நிகழ்வு ஏற்படுத்திட்ட அதிர்வலைகள் ஆழமானது, அகலமானது, விரிவான விளைவுகளும், வியப்பையும் தரும் விழா!
– கி.வீரமணி,
ஆசிரியர்