Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனமின்றி அமையாது உலகு (4)

மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர்

இரண்டு வகையான உளவியல் பிரச்சினையில் சிக்கி நான் ஊசலாடியிருக்கிறேன்.
கேள்வி:

1. அறிஞர் அண்ணா எழுதிய ‘சாது’ சிறுகதையில் வருவது போல முதலாளியிடம் திட்டு வாங்கியதில் உள்ளத்தில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அதைத் தன் மனைவியிடம் காட்டி ஆசுவாசப்படும் தோட்டக்காரனின் மனைவி அவன் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு தன் கோபத்துக்கு வடிகாலாய் குழாயடிச்சண்டையில் ஈடுபடுவாள். உள்ளத்தில் உணர்வெழுச்சிகளைப் புதைத்து அடக்கி வைத்து அதனை சம்பந்தமற்றவர்களிடம் அல்லது கோபம் செல்லுபடி ஆகக்கூடியவரிடம் வெளிப்படுத்திவிடுத்துவது,

நமக்கு ஏற்படும் எதிர்மறை உணர்வு நிலைகளை ஏன் நாம் வலியவர்களை விட எளியவர்கள் மீதே காட்டுகிறோம்?

2.) எந்த ஒரு உணர்வானாலும் அதனைப் பெரும் வீரியத்துடனே வெளிப்படுத்துவது. சமநிலையின்றி ஒரு துருவத்தில் கடைக்கோடி எல்லையிலிருந்து மற்ற எல்லைக்குப் போவது; கிடைத்தால் நிறைய கிடைக்க வேண்டும்; இல்லை என்றால் ஒன்றுமே வேண்டாம் என்ற மனநிலை. (Bipolar போல) .
இந்த இருவகையான பிரச்சனைகளுக்கான உளவியல் விளக்கமும், இவ்விரு பிரச்சனைகளுக்கும் இடையே காரண காரியத் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும் அறிந்து கொள்ள விழைகிறேன்.

-அரவிந்த்.சி, சென்னை முகப்பேர்

பதில்:

வால்டோ டாப்லர் என்ற அறிஞர் புவியியல் சார்ந்த ஒரு கோட்பாட்டை நிறுவியிருக்கிறார். அந்தக் கோட்பாடு:
“இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் எல்லாவற்றோடும் ஒரு தொடர்பில் இருக்கிறது. அண்மையில் இருப்பனவற்றுக்கு இடையே இந்தத் தொடர்பு அதிகமாகவும், தொலைவில் இருப்பனவற்றுக்கு இடையே இந்தத் தொடர்பு குறைவாகவும் இருக்கும்”.
இந்தக் கோட்பாடு அப்படியே நமது உணர்வுகளுக்கும் பொருந்திப் போகும். ‘Mood is infectious’ என்பது உளவியலில் பாலபாடம். அதாவது நம்முடைய உணர்வுகள் அத்தனையும் இன்னொருவருக்குத் தொற்றக்கூடிய பண்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கணத்தில் என் மனதில் உள்ள உணர்ச்சிகள் வேறு யாரோ ஒருவரிடம் இருந்து பெற்றதாகவே இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களில் யாரேனும் ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அன்றைய நாள் முழுவதும் கூட அந்த மகிழ்ச்சி நம்மிடம் தங்கிவிடுகிறது.

ஒருவருடைய உணர்வுகள் என்பது இப்படித்தான் எப்போதும் அடுத்தவருக்குக் கடத்தப்படக்கூடியதாகவே இருக்கிறது. எந்த ஒரு முனைப்பும் அல்லாமல் இன்னொருவருடைய உணர்வு என்பது இப்படி தன்னிச்சையாகவே நமக்குள் வந்து விடுகிறது.

இப்படிக் கடத்தப்படும் உணர்வுகளில் நேர்மறை உணர்நிலைகளை விட எதிர்மறை உணர்வுகள் மிக வேகமாகத் தொற்றக்கூடியது. உதாரணத்திற்கு நிறைய நண்பர்கள் கூடியிருக்கும் ஓரிடத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கிருக்கும் நண்பர்களில் யாரேனும் ஒருவர் வருத்தமாக இருந்தால் அனைவரது மகிழ்ச்சியும் வற்றிப் போய் அங்கு வருத்தம் மட்டுமே முதன்மையானதாக இருக்கும்.

ஏனென்றால் எதிர்மறை உணர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில், நாம் ஏதோ ஒரு வகையில் அதை உடனே வெளிப்படுத்தி விடுகிறோம். ஒருவர் மகிழ்ச்சியாய் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்தவுடன் சொல்வது கடினம். ஆனால், ஒருவர் கவலையாக இருப்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். அதற்குக் காரணம் எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைப்பதும் வெளிப்படுத்தாமல் இருப்பதும் அத்தனை கடினமான ஒன்று.

மகிழ்ச்சியையோ அல்லது மற்ற நேர்மறை உணர்வுகளையோ நாம் எல்லோரிடமும் பொதுவாகவே வெளிப்படுத்துகிறோம். ஆனால், எதிர்மறை உணர்வுகளை மட்டும் நாம் எளியவர்கள் மீதே காட்டுகிறோம்.

நமக்கு மேல் இருக்கும் ஒருவர் நம்மை இகழும்போது அவர் மீது நமக்கு ஏற்படும் கோபத்தை அவரிடம் காட்டாமால் நமக்குக் கீழே உள்ள ஒருவரிடமே காட்டுகிறோமே அது ஏன்? ஏனென்றால் ஒரு மனநிலையை நாம் உணர்வது என்பது தன்னிச்சையானது. கோபம் என்பது தன்னிச்சையாகவே நமக்குள் வந்து அமர்ந்து கொள்கிறது, ஆனால், அதை வெளிப்படுத்துவது
என்பது நமது தேர்வு. நமக்குத் தோன்றும் உணர்வுகளை நாம் அப்படியே வெளிப்படுத்து
வதில்லை. இடம்,காலம், மனிதர்கள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டே நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அது தான் நமக்கும் மற்ற மிருகங்களுக்கும் உள்ள வேறுபாடு.

நாம் நமது உணர்வுகளை மதிப்பிடுகிறோம்; அதன் விளைவுகளைக் கவனத்தில் கொள்கிறோம்; அதை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம், நமது உணர்வுகளைக் கொண்டே நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் பிணைப்பை உருவாக்கிக் கொள்கிறோம். ஒருவர் மீது நமக்கு இருக்கும் அளவுக்கு மீறிய அன்பையோ அல்லது தீவிர வெறுப்பையோ நாம் நமது உணர்வுகளின் வழியாகவே செய்கிறோம். உணர்வுகளை வெளிப்படுத்துவது நமது தேர்வு தான் என்று வரும் போது நாம் அதை எங்கு வெளிப்படுத்த வேண்டும், எப்படி வெளிப்படுத்த வேண்டும், யாரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்கிறோம்.
எங்கு நாம் நமது பலவீனங்களுடன் புரிந்து கொள்ளப்படுகிறோமோதா அங்கு தான் இத்தகையை உணர்வுகளை நாம் பொதுவாக வெளிப்படுத்துவோம். ஏனென்றால், இத்தகைய எதிர்மறை உணர்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அங்கு நமக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அதேபோல எங்கு நமது மதிப்பை உணர்த்தத் தேவையில்லையோ அங்கும் நாம் இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

நமது உணர்வுகள் என்பது தன்னிச்சையாக இன்னொருவரிடம் இருந்து நாம் பெறுவது. அதே போல அது நம்மிடம் இருந்து இன்னொருவருக்கும் கடத்தப்படும். ஒரு உணர்வைப் பெறுவதுதான் தன்னிச்சையானது. ஆனால், அதை வெளிப்
படுத்துவது நமது தேர்வு. நமது எதிர்மறை உணர்வுகளை இரண்டு இடங்களில் மட்டுமே நாம் பொதுவாக வெளிப்படுத்துவோம்.
ஒன்று, நம்மைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கும் இடங்களில்; மற்றொன்று, நம்மையும், நமது மதிப்பையும் நிறுவ அவசியமில்லாத இடத்தில். அதனால் நம்மைச் சுற்றியுள்ள யாரேனும் நமக்குத் தெரிந்த ஒருவர் இப்படி அதிகப்படியான எதிர்மறை உணர்வை வெளிப்படுத்தினால் அதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது: 1. அந்த உணர்வை அவர் வேறு யாரோ ஒருவரிடம் இருந்து பெற்றிருக்கிறார். 2. நாம் அவரை முழுமையாகப் புரிந்து கொள்வோம் என்று அவர் நம்புகிறார்.
நன்றி.