பெருகிவரும் பெரியாரின் தேவை!- பேரா. பூ.சி. இளங்கோவன்

2024 செப்டம்பர் 16-30-2024

தந்தை பெரியார் மறைந்து அய்ம்

பது ஆண்டுகள் கடந்து விட்டாலும், அவரின் கொள்கைகளுக்கு, தொண்டுக்கு நாளுக்கு நாள் தேவை அதிகரித்
துக்கொண்டே வருகிறது. எந்தத் தலைவர்களும் காலமான பிறகு, நாட்கள் செல்லச் செல்ல அவர்களைப் பற்றிய
நினைவுகளும் மங்கிக் கொண்டே செல்லும். ஆனால், தந்தை பெரியார் மறைந்து நாள் ஆக ஆக அவரின் தேவை அதிகரிக்கக் காரணம், அவர் கொள்கைகளின் உண்மைத் தன்மையும் நடைமுறைத் தேவையும் அவர்தம் கொள்கைகளுக்கு எதிர் கொள்கைகள் வளருவதும்தான் என்பதை உணரவேண்டும். இதனால் நம் பணிகள் நாளுக்கு நாள் கூடுகின்றன.

தந்தை பெரியார் வாழ்ந்த காலகட்டத்தில், மதவாத சக்திகள் இந்த அளவு அரசு ஆதரவுடன் ஆட்டம் போடவில்லை. அன்றைய தினம் ஒன்றிய அரசை ஆண்டவர்கள், மதச்சார்பின்மையைப் பின்பற்றி, அனைத்து மதத்தினருக்கும் ஏற்புடையதான நடுநிலையுடன் ஆட்சி புரிந்தனர். ஆனால், இன்றைய ஒன்றிய அரசு மதவாத சக்தி கொண்டல்ல; இந்துமத வெறியுடன் ஆட்சியைத் தொடர்கிறது. இதைத்தான், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், “பெரியார் காலத்து எதிரிகள் நாணயமானவர்கள்; நம் காலத்து எதிரிகள் நாணயமற்றவர்கள்” என்று நாணயமாகத் தெரிவித்துள்ளார்.

இக்கருத்தைத்தான், ‘பெரியார் விஷன்’ தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ‘இனமுரசு’ நடிகர் சத்யராஜ் அவர்கள், “நாங்கள் எதிர்ப்பில்தான் வளருவோம்” -என்று கூறினார். ஒரு பந்தைச் சுவரில் எந்த அளவு வேகமாக அடிக்கின்றோமோ, அந்த அளவுக்கு வேகமாகத் திரும்பிவரும் என்பதுதான் இயற்கையின் நியதி ஆகும். அதுபோல, மதவெறியும், ஜாதிவெறியும் எந்த அளவு அதிகரிக்கிறதோ – அதே அளவு பெரியாரின் கொள்கைகளுக்கும் தேவை அதிகரிக்கும். இந்த நிலைதான் இன்றுள்ளது.
தந்தை பெரியார் வாழ்ந்த காலகட்டத்தில், அவரைச் சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அழைத்துப் பேச வைத்தனர். தந்தை பெரியார் 1968, 1969 ஆகிய இரு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக விழாவில் உரையாற்ற அதன் நிருவாகத்தால் அழைக்கப்பட்டார். துணைவேந்தர்கள் தலைமையில் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் பேச வைக்கப்பட்டார். ஆனால், இன்றைய தினம் பல பல்கலைக்கழகங்களில் ‘பெரியார் இருக்கை’கள் (PERIYAR CHAIR) அமைக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியாரைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டு, பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தந்தை பெரியாரின் தொண்டு பல கல்வி நிறுவனங்களில் பேசு பொருளாக – ஆய்வுப் பொருளாக மாறியுள்ளனவென்றால் – பெரியார் மற்ற தலைவர்களைப் போல் மறக்கப்படவில்லை, மாறாக, அதிகம் தேவைப்படுகிறார் என்றுதான் பொருள். அக்காலத்தில் பள்ளிச் சுவர்களில் பெரியாரின் படம் வரையப்படவில்லை; ஆனால், இன்று பெரியாரின் படம் பள்ளிகளின் சுவர்களை அலங்கரிக்கின்றன. எனவே, பெரியார் மறக்கப்படவில்லை மதிக்கப்படுகிறார்; வளர்க்கப்படுகிறார்; தேவைப்படுகிறார்.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, இன்றுதான், அவரின் நூல்கள் இந்தியாவிலுள்ள மொழிகளில் மட்டுமல்லாமல், உலகின் பல மொழிகளில் பெயர்க்கப்படுகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி, கனடா நாடுகளில் பெரியார் பன்னாட்டு அமைப்புகள் செயல்பட்டு, பெரியார் கொள்கைகளைப் பெருமளவில் பரப்பி வருகின்றன. இன்றைக்குள்ள சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் பெரியாரின் சிந்தனைகள் உலக அளவில் அதிகம் பரப்பப்படுகின்றன.

‘இனிவரும் உலகம்’ – என்னும் நூலில் தந்தை பெரியார் சொன்னதெல்லாம், இன்று நடைமுறையில் வருவதைக் காண்கிறோம். ஆண் – பெண் சேராமல் குழந்தை பெறலாம் என்ற கருத்து, இன்று ‘டெஸ்ட் டியூப்’ குழந்தையாக நடைமுறைக்கு வந்துள்ளதைக் காண்கிறோம். வருங்காலத்தில், ஒவ்வொருவரும் ‘டெலிபோனை’ சட்டைப் பையில் வைத்திருப்பார்கள் என்றார். அன்று இக்கருத்தை நம்பாமல், “அதெப்படி ‘டெலிபோனை’ சட்டைப்பையில் வைக்க முடியும்” – என்று பேசினர். ஆனால், இன்று அனைவரும் ‘செல்போனை’ பையில் வைத்துக்கொண்டு அலைகின்றனர். பக்தர்களாக இருந்தால் அவரைத் தீர்க்கதரிசி என்பார்கள்; ஆனால், பகுத்தறிவாளர்களாகிய நாம், அவரைச் ‘சமுதாய விஞ்ஞானி’ -(Social Scientist) என்கிறோம்.