ஆசிரியர் பதில்கள்

அக்டோபர் 1-15

கேள்வி : நாட்டின் முதல் குடிமகன் திருப்பதி கோவிலில் பார்ப்பனர்கள் முன்னே பணிந்து போவது எதைக் காட்டுகிறது?

–  பா.வெற்றிவேல், திருச்சி

பதில் : இந்திய அரசின் மதச்சார்பின்மை – முகப்புரை (Preamble)ல் கூறப்பட்ட தத்துவம் தோல்வி அடைந்து, மதம், ஜாதி வெறியின் முன் மண்டியிடுகிறது என்பதைக் காட்டுகிறது.

கேள்வி : அதிகார வரம்புகளை மீறி நீதித்துறை செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறியுள்ளது பற்றி?

– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : பொதுவான நோக்கில் இது வரவேற்கப்பட வேண்டியதே! அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவது – ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பு வழங்கிய இறுதியாக்கப்பட்ட வழக்கில்கூட மீண்டும் – தங்கள் உயர்ஜாதி ஆணவப் புத்திக்கேற்ப – எடுத்து விசாரிக்க உத்திரவிடுவது அதீதமானதல்லவா? Judicial Activism ஏற்கத்தக்கதல்ல – மார்கண்டேய கட்ஜு உட்பட பலரும் இதைக் கூறியுள்ளனரே!

கேள்வி : கோள்களுக்கு ஏவுகணைகளை செலுத்தும் இஸ்ரோவின் தலைவரே மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறாரே? இது சரியா?

– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : வேலியே பயிரை மேயும் கேலிக்கூத்து. முன்பு ஒருமுறை இவர் குருவாயூரப்பன் கோவிந்தா கடவுளை வேண்டியும் தோல்வி ஏற்பட்டதைப் பார்த்தும் புத்தி வரவில்லையே. கண்டனத்திற்குரியது இது!

கேள்வி : கூடங்குளத்திலே போட்ட பணத்திற்கே கண்ணீர் வடிப்பவர்கள்… சேது சமுத்திரத்திலே போட்ட பணத்தைப் பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன்?

– க.அன்பரசு, வேலூர்

பதில் : முறையே அரசியல் – மதவாதம் இது! ஆறாம் தடத்தில் முடிக்க என்ன தயக்கம்?

கேள்வி : தமிழக மீனவர்களை இலங்கை ராணுவமும் சுடுகிறது. தமிழ்நாட்டு காவல்துறையும் சுட்டுக் கொல்கிறது. இந்த சோக வரலாற்றுக்கு என்ன காரணம்? யார் காரணம்?

– அர.வீரநிதி, மதுராந்தகம்

பதில் : திராவிடன் – தமிழன் என்றால் நாதியற்ற இனமாகி விட்டது! அரசியல் விளைவாக இக்காவுகள் கேட்பாரில் லாமல் நடக்கிறது. ஒரே வழி…? டெல்லிதான் சொல்லவேண்டும். இளிச்சவாயனா தமிழன்?

கேள்வி : மாநிலங்களுக்கு பிரிந்துபோகும் உரிமையை வழங்கிய ரஷ்யா – ஈழத்தில் தமிழ் தேசிய இனத்தை அழித்து ஒழிக்க சிங்கள அரசுக்கு துணை போவது ஏன்?

– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : ரஷ்யா அக்கொள்கை விட்டுவிட்டு நகர்ந்து பல ஆண்டு ஆகின்றதே – சோவியத் ரஷ்யா USSR அல்லவே இப்போது! லெனினிஸத்திலேகூட இப்போதைய ரஷ்ய நிலைப்பாடு விரோதமானது. நமது பொதுவுடைமைக் கட்சியினர் இதை அந்த அரசுக்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

கேள்வி : தங்களைப் பற்றிய சுயவிமர்சனம்?

– மன்னை சித்து, மன்னார்குடி-

பதில் : என்றும் பெரியாரின் மாணவன்.

கேள்வி : உயர்பதவி பெற்ற உடனேயே சில அரசியல் பிரமுகர்கள் பணக்கார கோயில்களை நாடிச் செல்வதேன்?

– வெ.வேலவன், காஞ்சி

பதில் : பேராசையும் தன்னம்பிக்கையற்ற பண்பும்தான் காரணம்.

கேள்வி : குஜராத் சட்டமன்ற தேர்தலில் மோடி மீண்டும் வெற்றிபெற்று விடுவார் என்று ஊடகங்கள் சொல்கின்றனவே?

– கு.வணங்காமுடி, குடியாத்தம்

பதில் : அப்படியா? அச்சுறுத்தல் அரசியல் இன்னமும் தொடர்கிறது குஜராத்தில் என்று தெரிகிறது இதன்மூலம்!

கேள்வி : நீதிமன்றங்கள் இருக்கும்போது கணக்குத் தணிக்கைக்குழு போன்ற அமைப்புகள் தேவையா?

– எஸ்.பிரகாஷ், விளாங்குடி

பதில் : கணக்கு தணிக்கைப் பணி வேறு. ஆனால், அவை அரசியல்வாதிகளாகவும், அரசியல் வாதிகளின் கைப்பாவைகளாகவும் கருவிகளாகவும்தான் இருக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *