மதம் நீங்கிய மனித வாழ்வு: நார்வே நாட்டின் அமைதி வாழ்க்கை

அக்டோபர் 1-15

– ஈவன்கிரான்,(நார்வே மனிதநேயர்)

(நார்வே நாடு, அய்ரோப்பியக் கண்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஸ்காண்டிநேவியன் நாடுகளில் ஒன்றாகும். மற்றொரு ஸ்காண்டிநேவியன் நாடு ஸ்வீடன். மானிட மேம்பாட்டிற்காக அறிவியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்காகப் பாடுபட்டு வரும் அறிஞர் பெருமக்களுக்கு உலகளாவிய பெருமைமிகு நோபல் பரிசுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் நாடு ஸ்வீடன்.அதனை ஒட்டிய நிலப்பரப்பினை கொண்டுள்ள நார்வே, மனித நேய அமைப்புகள் பலவற்றின் செயல்பாடுகளால் உலக அமைதிக்கு தனது பங்களிப்பினை ஆற்றிவரும் நாடு. தமிழ் ஈழ மக்களின் போராட்ட உணர்வுகளை, அதன் நியாயத்தினை உணர்ந்து நார்வே அரசு பல ஆண்டுகளாக சிறீலங்காவில் அமைதி நிலவிட வலியுறுத்தி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

 

நார்வே நாட்டில் இன்று நிலவி வரும் மதச்சார்பின்மை, சமூக அரசியல் நிலைமைகள் திடீரென்று உருவானவை அல்ல. தொடக்கத்தில் நிலவிய சூழலும், மதச்சார்பின்மை சார்ந்ததாக இல்லை. மதத்தின் பிடியிலிருந்து நார்வேநாட்டு மக்கள் எவ்வாறு மீண்டு வந்தனர் என்பது அந்நாட்டு வரலாற்றைக் கூறுவதாக மட்டுமல்லாமல், மதத்தின் மடியில் கட்டுண்டு, சிக்கித் தவித்துவரும் பல்வேறு நாடுகளுக்கும், முன்மாதிரியாக, மதச்சார் பின்மையின் நடைமுறையினை, சமூக நல்லிணக்கத்தினை பறைசாற்றுவதாக உள்ளது.)

சென்னை – பெரியார் திடலில் 5.8.2012 அன்று நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவின் தொகுப்பும் – தமிழாக்கமும்: வீ.குமரேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

நார்வே பன்னெடும் காலமாக மரபு சார்ந்த ஓர்மை பண்பாட்டு (mono culture), ஓர் இனக்குழு, ஒரே மதம் கொண்ட நாடாகவே விளங்கி வந்தது. தனது பொருளாதாரச் செயல்பாட்டிற்கு மீன்பிடித் தொழிலையும், வாழ்வாதார வேளாண்மைத் தொழிலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிறித்துவம் பெரும்பான்மை மதமாக நிலவிவரும் நாடு. அதன் காரணமாகவே அரவணைத்துச் செல்லும், சகிப்புத்தன்மை ஆகிய தன்மைகளற்ற சமூகச் சூழல்களே நிலவிவந்தன.

எடுத்துக்காட்டாக 1569இல் நார்வே நாட்டினை ஆண்ட டேனிஷ் மன்னன், நார்வே நாட்டினைபார்வையிட வரும் எந்த ஒரு வெளிநாட்டவரும் லூத்தரன் கிறிஸ்தவ மதப்பிரிவினைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் (கிறிஸ்தவ மதத்தின் பிற பிரிவினருக்குக் கூட அனுமதி கிடையாது). கிறிஸ்தவ மதத்தின் பிற பிரிவினரை வெறுக்கும் மனப்பான்மை அண்மைக்காலம் வரை அங்கு நிலவி வந்த சமூகச் சூழலாகும்.

நார்வே நாட்டுக்கு அருகிலேயேதான் பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவத்தினை வலியுறுத்திய பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றதற்கு பின்புதான், 1814 ஆம் ஆண்டு நார்வே நாட்டு அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டது.

அந்தச் சட்டத்திலும் கத்தோலிக்க மதகுருமார்களின் நடவடிக்கைகள், ஜெஸூட்டுகள், யூதர்கள் ஆகியோர் தடை செய்யப்பட்டனர். இந்த அரசமைப்புச்சட்டம் உருவான நாளான மே 17- நார்வே நாட்டின் தேசியத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இன்று நிலவிவரும், அரசமைப்புச்சட்டம் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க குருமார்கள், ஜெஸூட்டுகள், யூதர்கள் இப்பொழுது நார்வே நாட்டுக்கு வருகை தரலாம். நார்வே நாட்டு லூத்தரன் தேவாலயத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டவிதிகளைக் கொண்டதாக அரசமைப்புச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

அந்நாளில் பல்வேறு சமூகத்தடைகள் நிலவிவந்தாலும், வெளி உலகத் தொடர்புகளிலிருந்து நார்வே நாடு முற்றிலும் துண்டிக்கப்படவில்லை. 19மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் வெளிப்பட்ட அறிவுப்புரட்சியின் தாக்கம், நார்வே நாட்டில் ஏற்பட்டு, அந்நாடு பன்முகப்பண்பாட்டினை நோக்கிப் பயணப்பட தலைப்பட்டது.

1845 ஆம் ஆண்டு சட்டத்தால் லூத்தரன் பிரிவு பிரச்சாரம் தவிர கிறித்துவ மதத்தின் பிற பிரிவுப் பிரச்சாரம் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், கிறித்துவம் தவிர்த்த பிற மதப் பிரச்சாரம் அனுமதிக்கப்படவில்லை. நாத்திகம் பற்றிப் பேசிடவே முடியாது.

மெல்ல, மெல்ல – காலம் செல்லச் செல்ல சரியான பாதையில் நார்வே நாட்டு சமூகம் நடக்கத் தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நார்வே சுதந்திர சிந்தனையாளர் இயக்கம் (Norwegian Free Thinkers Movement) மாற்றத்தினை சமூகத்தில் உருவாக்கிட முனைந்தது. மக்களிடம் சுயசிந்தனைப்போக்கு தலைப்பட்டது.

மனநிலையில் மாற்றம் தொடங்கியது. பழைமையுடன் நேசம் கொள்வதா? புதுமைக்கு தோள் கொடுப்பதா? என்ற கேள்வி நிலையால் சமூகக் கட்டுப்பாடு என்பதிலிருந்து விடுபட்டு, எதுவும் தனிநபர் விருப்பத் தெரிவாக (Individual choice) மாறியது.

கிறித்துவ மத நம்பிக்கையைப் பின்பற்றுவதா, அதில் எந்த பிரிவினைக் கடைப்பிடிப்பது என்பதெல்லாம் அவரவர் முடிவு எடுத்திடும் நிலையாக மாறியது. இந்த நிலைமைகள் ஆரம்பக் காலங்களில் நினைத்துக் கூடப் பார்க்க இயலாதவைகளாக இருந்தன. மத நம்பிக்கை என்பது ஒரு சமூகத்தில் பிறந்ததன் விளைவு என்ற நிலைமையிலிருந்து மதநம்பிக்கை என்பது தனிநபர் விருப்பம், தெரிவு என பெரும் மாற்றம் கண்டது.

மேற்கத்திய நாடுகளில் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் உருவான தனிநபராக்கத்தின் (individualisation) தொடர்பு நார்வே நாட்டிலும் தென்பட்டது. மக்கள் மனநிலை மாற்றத்திற்கு அறிவியல் வளர்ச்சியும் பிறிதொரு காரணமாக அமைந்தது. வடக்கு அய்ரோப்பாவில் உருவான பகுத்தறிவு சார்ந்த எண்ணங்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சி கிறித்துவ மதத்தில் குறிப்பாக லூத்தரன் பிரிவு நம்பிக்கைகளை தகர்ப்பதாகவும், மக்கள் மன நிலையில் மாற்றம் வந்திடவும் காரணமாக விளங்கியது.

இந்த மனமாற்றங்கள் உலகளாவிய அளவில் இரண்டு வித சமூகமாற்ற போக்குகள் உருவாக்கின. வாழ்ந்தால் போதும் நெறி (Survival values) எதிர் எழுச்சிபெறும் நெறி (emancipatatory values)மற்றும் மரபு நெறி (Traditional value) எதிர் மதம் சாராத பகுத்தறிவு நெறி (Secular/ rational values) இவ்வகையான இரண்டு எதிர்வினை மனப்போக்குகளின் வெளிப்பாடாகவே பல்வேறு நாடுகளில் மக்களின் மனப்பாங்கு நிலவுகிறது.

வாழ்ந்தால் போதும் என்ற நிலையிலிருந்து எழுச்சி பெறும் நிலைக்கு நெறிப்படுத்தலும், மரபுக்குரிய நிலையிலிருந்து மதம் சாராத பகுத்தறிவு நெறிக்கு ஆட்படுதலும் மனித வளர்ச்சியின் சரியான இணக்கமான பயணமாக விளங்குகின்றன. இந்த பயணத்தின் அழுத்தம், வேகம் ஆகியவைகள் அந்தந்த சமூகத்தில் நிலவும் அமைதியான சூழலுக்கும், மனிதநேயம் கலந்த வாழ்விற்கும் ஆதாரமாக உள்ளன என்பது அறிவியல் அடிப்படையில் நிரூபணம் ஆகியுள்ளது.

மத உணர்வு மங்கிய, மதம் சாராத நாடு எப்படி இருக்கும்? நார்வே நாட்டு நிலைமை.

உலகிலேயே ஸ்வீடனுக்கு அடுத்தபடியாக மதஉணர்வு மங்கிய, மதம் சாராத நாடாக நார்வே விளங்குகிறது. மதம் நீங்கிய, மதம் சாராத சமூகத்தில் மக்கள் நிலை எவ்வாறு இருக்கும்?

பொது வாழ்க்கைச் சூழலில் மதம் சார்ந்த வாதத்திற்கு இடம் இல்லை. எடுத்துக்காட்டாக பைபிளிலோ, குரானிலோ உள்ளது எனக் குறிப்பிட்டுப் பேசினால், வாதம் புரிந்தால், அந்தக் கூற்று கருத்து வளம் உள்ளதாகக் கருதப்பட மாட்டாது. மதம் சாராத பகுத்தறிவு சார்ந்த கூற்றுகளுக்கே, வாதங்களுக்கே மதிப்பு,  மரியாதை  நிலவுகிறது.

மதமும், மதத் தலைவர்களும் முன்பு தக்க வைத்திருந்த அரசியல் அதிகாரம் தகர்ந்துவிடும்; அவர்களிடமிருந்து தளர்ந்துவிடும். மதம் சாராத நெறிகளுக்கு ஏற்றவாறு மதம் தன்னை மாற்றிக்கொள்ளும். கடந்த காலங்களிலும் மத நெறிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் நிலைமைகள் இருந்தன.

சமூக ஒழுக்கத்தின் தன்மை பற்றி மத குருமார்கள் வரையறுக்கும் நிலைமை மாறி விட்டது. மதநெறி என கருதப்பட்டவை எல்லாம் மனிதநேய, மதம் சாராத நெறிகளால் வரையறை செய்யப்படுகின்றன. மாற்றம் பெற்று வருகின்றன.

மதம் என்பது தனிநபர் தொடர்பானதாக மாறியுள்ளது. அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் மதத்திற்கும், மத நம்பிக்கைக்கும் தொடர்பில்லாத நிலைக்கு – இன்னும் ஒரு நிலை உயர்ந்து அவைகளை தொலைவுப்படுத்திப் புறந்தள்ளும் நிலைக்கு மாறிவிடும்.

மதம் சார்ந்த வாழ்வு மங்கிக்கொண்டு வருகிறது. இது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டபொழுது 40-_45 விழுக்காட்டினர் ஏதோ ஒரு கடவுள் (some sort of god) இருக்கிறார் என்ற அளவில்தான் கருத்துத் தெரிவித்தனர். இப்படிப்பட்ட கருத்தாளர்களை சட்ட ரீதியான நாத்திகர்கள் (defacto atheist) என்றே குறிப்பிட வேண்டும். இவர்களது நம்பிக்கை மிகவும் தளர்வானது.

கிறிஸ்தவ மதக்கோட்பாட்டை குறிப்பிட்டு எடுத்துக்காட்டாக, ஏசு கிறிஸ்து மக்களின் பாவத்தினைப் போக்கிட தன்னை சிலுவையில் அறைந்திட்டு உயிர்விட்டார். அது குறித்த நம்பிக்கையினை வினவினால் 10_15 விழுக்காட்டினரே ஒப்புதல் தந்தனர். மேற்குறிப்பிட்ட, சட்ட ரீதியான நாத்திகர்கள் தங்களை வெளிப்படையாக நாத்திகர்கள் என அடையாளப்படுத்திக்கொள் மாட்டார்கள். 10-_15 விழுக்காட்டினரே நாத்திகர் என பகிரங்கப்படுத்திக்கொள்வார்கள்.

மதம் சாராத தன்மையின் முக்கியக் கூறு, மதத்தினையே மதம் சாராத நிலைக்கு மாற்றுவதாகும். மதத்தை மரபு சார்ந்த கோட்பாட்டிலிருந்ரு படிப்படியாக நீக்கி, இக்கால நிலைமைக்கு, புத்தாக நிலைக்கு, பரந்துபட்ட, தாராளநிலைக்கு மாற்றுவதாகும். நார்வே நாட்டின் அரசு தேவலாயச் செயல்முறையே இந்த மாற்ற நிலைக்கு சரியான எடுத்துக்காட்டாகும்.

கடந்த 50-_100 ஆண்டுகளில் அதிகாரம் மிக்க மரபு நிலையிலிருந்த அரசு தேவாலயம், பெரும்பான்மை மக்களுக்கான நிலையினை அமைத்தது. இதில் நார்வே மனிதநேய சங்கத்தினரின் பங்களிப்பு மகத்தானதாகும். மகளிரும், ஓரினசேர்க்கையாளரும் மதகுருமார்கள் ஆகும் நிலை ஏற்பட்டது. இந்த மாற்றத்தில் மேலும் பலதூரம் பயணப்பட வேண்டும்.

நார்வே நாட்டில் இன்னும் ஓரின சேர்க்கையாளர் பிஷப் நிலைக்கு உயர முடியவில்லை. ஓரின சேர்க்கையாளர்கள் தேவாலயங்களில் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அண்டை நாடான சுவீடனிலோ, பெரும்பான்மையான லூத்தரன் தேவாலயம் ஏற்கெனவே ஓரின சேர்க்கையாளரை பிஷப்பாக அங்கீகரித்துள்ளது.

அவர்களது திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்து வருகிறது. டென்மார்க் நாட்டில் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதோரும் அங்குள்ள தேவாலயங்களில் மத போதர்களாக வர முடிகிறது. அப்படிப்பட்ட கடவுள் மீது நம்பிக்கையற்ற மத போதகரின் கூற்று இவ்வாறு உள்ளது.

கடவுள் கடந்த காலத்திற்குச் சொந்தமானவர். கடவுள் உண்மையில் ஒரு பழமைவாதி. இக்கால மக்கள் கடவுள் இருக்கிறார் என்பதை ஏன் நம்ப வேண்டும்! கடவுளின் ஒப்புதல்களையும், முடிவும் தொடக்கமும் இல்லாத கடவுளின் தன்மையினைப் பற்றிய வெற்றுப் பேச்சினை பேசிப் பேசி நான் சலிப்படைந்துவிட்டேன்.

மதபோதகரின் இத்தகைய கூற்றுக்கு எதிர்ப்பு ஏராளமாக வந்தாலும், மதபோதகர் நிலையிலேயே அவர் தொடர்கிறார்.

அரசு தேவாலயத்தின் ஆளுமையிலிருந்து விடுதலை

நார்வே நாட்டில் உள்ள தேவாலயம் அரசு ஆலயமாகும். 80 விழுக்காடு மக்கள் தேவாலயத்தின் உறுப்பினர்களாக இருந்தாலும் 10_-15 விழுக்காட்டினரே கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர். அரசே தேவாலயத்தின் உடையாளராக இருந்தாலும் மதச் சார்பின்மை போக்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. அரசமைப்புச்சட்டம் கிறிஸ்தவத்தின் லூத்தரன் பிரிவினை அரசு மதமாக அங்கீகரித்துள்ளது. ஒரு பக்கம் அரசு தேவாலயம், மறுபக்கம் அரசு அங்கீகரித்துள்ள மதப்பிரிவு.

இவைகளுக்கிடையில் மக்களிடம் வளர்ந்து வரும் மதச்சார்பின்மை. முரண்பட்ட இந்த நிலைகளின் விளக்கம் எதுவென்றால், அரசு தேவாலயத்தை மக்கள் மதத்தின் அடையாளமாக; கருதவில்லை. பண்பாட்டு அமைப்பாகவே மதிக்கின்றனர். தேவாலயத்தில் ஞானஸ்நானம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை நடத்திக்கொள்கின்றனர்.

இறந்தவர்களைப் புதைப்பதற்கும் தேவாலயம் பயன்படுகிறது. மற்ற நேரங்களில் தேவாலய உறுப்பினர்களில் மிகப் பலர் தேவாலயத்திற்குச் செல்லுவதே இல்லை. தேவாலயத்தில் உறுப்பினர் அதிகமாகக் கூடுவது கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டுமே. கிறிஸ்துமஸ் நாளை வழிபாட்டு வெளிப்படாக அல்லாமல், மரபுக்கு மதிப்பு கொடுக்கும் நாளாகக் கருதி ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்துக்கொள்வதோடு முடித்துக் கொள்கின்றனர். வழிபாட்டில் அக்கறை காடடுவதில்லை.

இந்த ஆண்டு நார்வே நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அரசு தேவாலயத்திற்கு ஒரு முடிவு கட்டப்பட்டது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த லூத்தரன் நெறி முறை அரசு மதமாக இருக்கும் – இந்த வரிகளை நார்வே நாட்டு தேசியப் பேரவை வாக்கெடுப்பின் மூலம் நீக்கியது.

அதற்குப் பதிலாக எங்களது வாழ்வியல் மதிப்பீடு, கிறிஸ்தவ, மனிதநேய பாரம்பரியத் தன்மையில் இருக்கும். இந்த அரசமைப்புச்சட்டம் மக்களாட்சியினை, சட்டத்தின் ஆட்சியினை மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதாக இருக்கும். – இந்த வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மதம் நீங்கிய சமுதாயப் பயணத்தில் மேற்குறிப்பிட்ட திருத்தம் சரியான ஒரு சாதனைக் கட்டமாகும். கிறிஸ்தவ மனிதநேயப் பாரம்பரியம் நீடிக்கும், எனும் சொற்றொடர் தேவையில்லாத நிலையிலும், இந்த திருத்தம் ஒரு மாபெரும் மாற்றம்தான்.

மேலும் சில திருத்தங்கள் அரசமைப்புச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டன. கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கிறிஸ்தவ மதநம்பிக்கையுடன் வளர்த்திட வேண்டும் எனும் விதி முற்றிலும் நீக்கப்பட்டது. இருப்பினும் தேவாலயம், அரசு தேவாலயமாக நீடிக்கிறது.

அதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இனி பிஷப் பொறுப்பிற்கான தெரிவினை அரசு செய்வதிலிருந்து விடுபட்டு தேவாலயமே முடிவு செய்து கொள்ளும். நாட்டின் அரசர் லூத்தரன் கிறிஸ்தவராக இருப்பார். தேவாலயம் ஒரு மத குமுகாய அடையாளமாக , அதற்காக வடிவமைக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்ட அமைப்பாக செயல்படும்.

நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தினர், அரசு தேவாலயம் நீடிப்பதை விரும்பவில்லை. அரசமைப்புச்சட்டத்திருத்தத்திலும் நிறைவு கொள்ளவில்லை. இருப்பினும் இந்த அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் சரியான பாதையில் எடுத்து வைக்கப்பட்ட முக்கிய சுவடுகளாகும். ஒட்டுமொத்த மதச்சார்பின்மை பயணத்தின் ஒரு ஆளுமையிலிருந்து விடுதலைபெற்ற அடையாளமாகும்.

கல்விக்கூடங்களில் கட்டாய மதக் கல்வி இல்லை!

நார்வே நாட்டு பொதுக்கல்வித்திட்டம் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுப் பாரம்பரியத்திலிருந்து மீள முடியாமல்இருந்தது. 1974ஆம் ஆண்டு வரை அரசு மதமான கிறிஸ்தவத்தைப் பற்றிய பாடம் கற்பிக்கப்பட்டது. இந்த மதக்கல்வி கற்பதிலிருந்து மாணவர்கள் விருப்பப்பட்டால் விடுபடலாம். ஆனால் அப்படி விடுபடுவோர்களுக்கு மாற்றுப்பாடம் எதுவும் வழங்கப்படவில்லை. நார்வே மனிதநேயர் சங்கம் எடுத்த முயற்சிகளின் காரணமாக 2008ஆம் ஆண்டிலிருந்து நிலைமைகள் மாறத் தொடங்கின.

கிறிஸ்தவத்திற்கு மாற்றாக நடுநிலையான வாழ்வாதாரக் கல்வியினை பெறுவதற்கு பெற்றோர்கள் சிலர் குழு அமைத்து சட்ட ரீதியாக போராடி கிறிஸ்தவ மதக் கல்வி மூலம் மனித உரிமை பறிக்கப்படுகிறது என நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த முறையீட்டிற்கு நார்வே மனிதநேயர் சங்கத்தினர் உறுதுணை புரிந்தனர். ஆரம்பத்தில் தோல்வி கண்டஅப்பெற்றோர்கள் பிரான்ஸ் நாட்டின் ஸ்டராஸ்பர்க் நகரிலுள்ள அய்ரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி கண்டனர். இந்த நீதிமன்றத் தீர்ப்பால் மதச்சார்பின்மைக்கு மற்றுமோர் வெற்றி கிடைத்தது.

நார்வே நாட்டு பொதுக்கல்வி கூடங்களின் பழைய மற்றும் புதிய சமய பணிக்குழு அறிவிக்கைகள்

பொதுக்கல்விக் கூடங்கள் மற்றும் மழலையர் பள்ளிகளின் சமயப் பணிக்குழு அறிவிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. 2008ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கிறிஸ்தவ நெறி வளர்ப்பு பற்றிய கல்வியினை அளிக்க சட்ட ரீதியாக வலியுறுத்தப்பட்டது. பின்னர் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

கிறிஸ்தவர் மற்றும் மனிதநேயர் பற்றிய பாரம்பரியம் மரபு பற்றிய அடிப்படை மதிப்பீடுகளை வளர்ப்பது எனும் நிலை வலியுறுத்தப்பட்டு கல்விக்கூடங்களின் மதம் சார்ந்த கல்வி தகர்த்தப்பட்டது. நார்வே மனிதநேயர் சங்கம் இந்த மாற்றத்திற்கு பாடுபட்டாலும், மாற்ற நிலையில் முழுவதும் நிறைவு அடைந்திடவில்லை. இருந்தபோதிலும் மதச்சார்பின்மையினை நடைமுறைப்படுத்தும் பயணத்தில் கல்விநிலையங்களில் கடைப்பிடிக் கப்படும் கற்பிக்கும் நிலை மாற்றங்கள் முக்கிய கட்டங்களாகும்.

மத உணர்வு நீங்கிய சமுதாயத்தில் மதங்களின் நிலை

படித்தோர்கள் மத்தியில் பட்டிமன்ற விவாதம் நடைபெற்று வருகிறது. மதச்சார்பின்மை உண்மையில் முன்னேறுகிறதா அல்லது பின்னடைவு ஆகிறதா, என சொற்போர் நிகழ்கிறது. மத உணர்வுகள் வலுப்பட்டு வருவதாகச் சிலர் கருதுகின்றனர். பழமையான மதம் மீண்டும் அதிகார நிலைக்கு வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க நாட்டில் கருத்துரு நிலவுகிறது.

அய்ரோப்பிய நாடுகளில் மதச்சார்பின்மைப் பயணம் இன்னும் தொடர்வதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அய்ரோப்பிய நாடுகளில் குடிபுகும் முஸ்லீம் மக்கள், மத மரபு சார்ந்த மதிப்பீடுகளை விடுத்து, இக்கால மதச்சார்பற்ற, மத உணர்வு குறைந்த மதிப்பீடுகளைக் கடைப்பிடிக்கின்றனர். மரபு சார்ந்த, சமுதாயம் சார்ந்த மத உணர்வுகள், நடப்பு மதச்சார்பின்மை மயத்தால் (Secularisation) மாறி வருகின்றன.

மதங்கள் அதிகார வலுவினை இழந்து வருகின்றன. அதே நேரம் மற்றொரு முகாமில் புதுயுகம் என்பதன் பேரால் புத்திக்குப் பொருந்தாத ஆன்மிகக் கருத்துகள் பரவலாக்கப்படுகின்றன. ஆன்மிகம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கியதாக ஆவி பற்றிய வானுலகு பற்றிய சிந்தனைகளைத் தூவி வருகிறது. இந்து மதத்தின் பங்கு இந்து ஆன்மிகச் சிந்தனைப் பரப்பலில் அதிகமாகவே உள்ளது.

ஒவ்வொரு தனிநபரும், தனது சிந்தனை மற்றும் அனுபவங்களை, உலக மதங்களின் கூற்றுகளோடு பொருத்திப் பார்க்கின்றனர். ஆன்மிக உலகில் இதுதான் சரி, இது தவறு என எதுவும் இல்லை. அறிவியலுக்கு புறம்பானது ஆன்மிக உலகம். இந்த புதுயுகத்தில் சமுதாயம் சார்ந்த, மரபுரீதியான மதம் சிதைந்து விடுகிறது. தனிநபர் சார்ந்த சிந்தனை, செயல்பாடு மேலோங்குகிறது.

ஆன்மிகத்தை தனிநபர் மதம் எனக் குறிப்பிடலாம். ஒருவருக்கான அடிப்படை மதத்தை அவர் உருவாக்கிக்கொள்ளலாம். அதிகாரம், விதிமுறைகளுக்கு அவற்றில் இடமில்லை. ஏமாறும் மக்களின் பரிதாப நிலையினை சில இந்திய சாமியார்களும், குற்றங்கண்டு பரிகாரம் செய்பவர்களும் சரியாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் கலந்த இந்த புதுயுகத்தில் வணிகமயமும் சங்கமிக்கிறது. உடல் உபாதைகள், தீராத நோய்கள் கண்டோர்களிடம் அறிவியலுக்குப் புறம்பான ஆன்மிகம் வணிகப்படுத்தப்படுகிறது. இறக்கும் தருவாயில் இருப்பவர்களிடம், இல்லாததைச் சொல்லி அவர் தம்மை சுரண்டும்போக்கு நிலவுகிறது. இப்படிப்பட்ட அவல நிலைகள் நார்வேயிலும் உள்ளன. இந்தியாவிலும் இருக்கின்றன.

பகுத்தறிவையும், அறிவியலையும் வழிகாட்டும் நெறிமுறையாகக் கொண்டுள்ள நர்வே நாட்டினரின் செல்வம் அவர்களது ஒன்று கலந்த நாட்டுணர்வின் அடிப்படையில் உள்ளது. புதுயுகத்தின் சிந்தன வளமற்ற, அறிவியலுக்கு புறம்பான பிரச்சார முறையால் அந்தச் செல்வத்திற்கு ஆபத்து நேரலாம். இந்த ஆபத்துப் போக்கினை உணர்ந்து நார்வே மனிதநேயர் சங்கம் முட்டாளாகிட யாரும் விரும்புவதில்லை (Nobody likes to be fooled) எனும் பிரச்சார இயக்கத்தினை தொடங்கியுள்ளனர்.

விளக்கங்களின் மூலம் விடை தரும் அறிவியல் கொள்கைகளை மக்களிடம் பரப்பி, சிந்தனை வளமற்ற புதுயுகத்தின், மருத்துவம் சாராத மாற்று மருந்தினை நோயாளிகளிடம் அளிக்கும் ஆன்மிகப் பரிந்துரையினைப் பற்றி எச்சரித்து வருகின்றனர். பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும் நார்வே நாட்டு மக்களின் மனதில் பின்னிப் பிணைந்து இருப்பதால், ஆன்மிக போக்கு மிகவும் சிறு அளவிலேதான் தென்படுகிறது. மக்கள் தங்களது செழுமையின் அடிப்படையினை உணர்ந்து கொள்ளுவதில்லை. இதை மக்களுக்கு புரிய வைப்பதில் நார்வே மனிதநேய சங்கத்தினர் அரும்பணி ஆற்றுகின்றனர்.

மதச்சார்பின்மை பற்றிய இந்தியா (எதிர்) நார்வே சிந்தனைகள்.

நார்வே நாட்டினைவிட இந்தியாவில் மதத்தின் வலிமை அதிகம். ஆனால் இந்தியாவில் மதச்சார்பின்மை உணர்வு நன்றாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நார்வே ஓர்மை பண்பாட்டு சூழல் நிலவும் நாடு. ஒரே மதம், ஒரே இனமக்களை கொண்ட நாடு. ஆனால் இந்தியாவோ, மதப்பன்மை, இனப்பன்மை நிலவும் நாடாகும். இனம், மதம் ஆகியவற்றுக்கு அப்பால் ஒரு வித சமூக இணக்க நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

சகிப்புத்தன்மை இந்தியாவில் அதிகமாகவே நிலவுகிறது.  ஆனால் நார்வே நாட்டில் முஸ்லீம் மக்கள் குடிபுகுவதைக் குறித்து அச்சம் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலுக்கு இந்தியா ஏற்கெனவே பழக்கப்பட்டு விட்டது. வேறுபாடுகளுடனும், இணைந்து வாழ முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. கத்தோலிக்க பெண் துறவியர் மருத்துவ சிகிச்சைக்காக விஜயவாடா நாத்திகர் மய்யத்தில் காத்துநிற்பதைக் காண முடிகிறது.

சகிப்புத்தன்மை வேறுபல வடிவங்களிலும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நிலவுகிறது. சென்னையில் தந்தை பெரியாருக்கு பல இடங்களில் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலை பீடங்களில் தந்தை பெரியாரது கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கடவுள் இல்லை;

கடவுள் இல்லவே இல்லை;

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;

கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;

கடவுளை மற! மனிதனை நினை!

எங்களைப் பொறுத்த அளவில் இந்த வாசகங்கள் கடுமையானவை. நார்வே நாட்டு தலைநகர் ஆஸ்லோ அல்லது இதர அய்ரோப்பிய நகரங்களிலே இப்படி சிலை எழுப்பி வாசகங்கள் எழுதப்பட முடியுமா என்பது வியப்பாக இருக்கிறது.

தந்தை பெரியாரின் பிரச்சாரம் மக்களை அந்த அளவிற்கு  பக்குவப்படுத்தியிருக்கிறது. இந்திய நாத்திகர்கள் இதர மேற்கத்திய நாடுகளில் உள்ள நாத்திகர்களை விட சகித்துக் கொள்ளப்படுகிறார்கள். இது மாபெரும் புரட்சிகர சூழலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *