எனது ஆதரவு இதன் அடிப்படையில்தான் – தந்தை பெரியார்

2024 செப்டம்பர் 16-30-2024 பெரியார் பேசுகிறார்

நான் 1920இல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.

நான் 1900-க்கு முன்னே கடவுள், மத, ஜாதி விஷயங்களின் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.

நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும் வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும் தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்;

மாடு – எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக்கொண்டு ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.
1900இல் இருந்தே எனக்கு ஜோசியம் முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது என்னிடத்தில்” “வாய்கொடுத்து மீளமுடியாது” என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள்.

நான் எனது 5, 6, 7 வயது முதற்கொண்டே தறுதலைப் பிள்ளை’யாகத் திரிந்தாலும் அந்த வயது முதற்கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்) தலைவனாகவே – மற்றவர்கள் என் சொல் கேட்பவர்களாகவே இருக்கும்வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.

இன்றுவரையிலும்கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக்கிறேனே ஒழிய, ஒரு சாதாரண அங்கத்தினனாக எதிலும் இருந்ததில்லை.

அதுபோலவே எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிரத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக்கிறேனே ஒழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு – உதவி கேட்டதே இல்லை. இதுபோலவே யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியவற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன்; கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள். அல்லது பொதுவாக அனுப்பிக் கொடுப்பார்கள் அவ்வளவுதான்; நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியது கிடையாது.

எனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு. செலவு செய்யவும் மனது வராது. யாரையும் கேட்கவும் மாட்டேன்.

ஆனால், பணம் வந்துகொண்டே இருக்கும். சேர்த்துக் கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துகெண்டே இருப்பேன். சரியாகக் கணக்கு வைக்கமாட்டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக்கொள்வேன்.

எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்கள்) ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் “பார்ப்பனர்” இருக்கக்கூடாது, இதுதான் எனது கொள்கை. இதற்காகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.

நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்.

ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப்பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.

ஜஸ்டிஸ் கட்சித் தலைமை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்காகத்தான். அக்கட்சித் தலைமை ஏற்றவுடன் அக்கட்சிக் கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்‌ஷனில் நிற்பதில்லை. பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்காகத்தான். காங்கிரசு கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.

வெள்ளையன் போன பின்பு 1952இல் நடந்த தேர்தலின் போதுகூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோதுகூட என் கழகத்தில் இருந்து ஒருத்தரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்ட்களுக்கும் காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்து, காங்கிரசைத் தோற்கடித்ததும் இதற்கு (எனது மேற்கண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

1952இல் காங்கிரஸ் தோற்றும், மேற்கண்ட எனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வரமுடியாமல் போனதால் காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாகக் கூறியும், நான் மறுத்துவிட்டு காங்கிரசை விட்டுப் போகும்படி செய்தது இதற்கு ஆகத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் காமராசரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் – அதாவது காமராசர் பதவிக்கு வந்த உடன், பார்ப்பனர்களும், அவர்களது சில கூலிகளும் காங்கிரசை (காமராசரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங்கிரசை (காமராசரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிவித்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண்டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கும்) இதற்கு ஆகத்தான்.

இந்தச் சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக்கொண்டு இருந்தாலும் இதற்கு ஆகத்தான்.

அதாவது, இந்தச் சந்தர்ப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதரவாக இருந்ததாலும் தி.மு.க.வும் “நாங்கள் பார்ப்பனர் கைப்பொம்மைகள்தான்” என்று பட்டாங்கமாகச் சொல்லிக்கொண்டு இருந்ததாலும் தி.மு.க.வை எதிர்க்க வேண்டி வந்தது. 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப்பனர் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும் காங்கிரஸ் பார்ப்பனருடன் சேர்ந்துகொண்டு தி.மு.க.வை ஒழிக்கப்பாடுபடுவதாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதரவாளனாக இருக்க வேண்டியதாகியதும் இதற்கு ஆகத்தான்.

ஆகவே, எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித்தும் தொண்டாற்றிக்கொண்டு வந்திருக்கிறேன். வருகிறேன்.

எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய, கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.

இவ்வளவு மாத்திரம் அல்ல; இனியும் எந்தக் கட்சியை எதிர்ப்பேனோ, எதை எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது.
பொதுவாக நான் சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.
குறிப்பு:- இந்த மூன்றிலும் அதாவது பகுத்தறிவு (நாத்திகத் தன்மை) வளர்ச்சி, ஜாதிஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகிவிடுவார்களே ஆனால், எனது நிலையை இப்படியே இருக்கும் ளஎன்று சொல்ல முடியாது.

– ‘விடுதலை’ தலையங்கம் – 19.9.1968