உடனடி நடவடிக்கை எடுத்த
கல்வி அமைச்சருக்குப் பாராட்டு!
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஊக்க உரை (Motivational Speech) என்ற பெயரில் ‘‘பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு’’ என்பவர் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஆற்றிய உரையும், அது மாணவிகளிடம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த நிறுவனமே வெளியிட்ட காணொளியால் நேற்று (5.9.2024) சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குச் சில நாள்களுக்கு முன்பே சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதே போன்ற நிகழ்விலும், குருகுலக் கல்வி, முன் ஜென்ம பலன், பாவம், புண்ணியம் என்று பேசி, அதன் பலன் தான் இப்பிறவியில் ஒருவரின் பிறப்பு என்றும் பேசியதைக் கண்டித்து, அங்கேயே பார்வை மாற்றுத் திறனாளியான சங்கர் என்ற தமிழாசிரியர் எதிர்க் கேள்வி எழுப்பியிருக்கிறார். எதிர்க் கேள்வி எழுந்ததுமே, உங்கள் பெயர் என்ன என்று கேட்டு அவரை மிரட்டத் தொடங்கி, குறைந்தபட்ச மனிதநேயமும், நாகரிகமும் இன்றி நடந்துகொண்ட காணொளியும் நேற்று இதனுடனே வெளியாகியது. இதனைக் கண்ட நாம் உள்பட அனைத்துத் தரப்பினரும் அதிர்ந்து போனோம்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காகவும், அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கல்வியின் எல்லா வாய்ப்புகளும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் சிறந்த முறையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டு, நிர்வகிக்கப்படும் துறை என்னும் அளவிற்கு பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அரசுப் பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருப்பது மிகுந்த எச்சரிக்கையுடன் நோக்கத் தக்கதாகும். இளம் பிஞ்சுகளிடம் மதவாத நஞ்சை விதைக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இந்தியா முழுவதும் செய்து வரும் சதிச் செயலாகும். அதிலும், குறிப்பாக தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-சும், அதன் அமைப்புகளும் செயலாற்றி வருவதையும், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
பல வேடங்களைத் தரித்துக் கொள்வது ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் புதியதல்ல. கல்வியாளர், ஊக்க உரையாளர், யோகா பயிற்றுநர், பேச்சாளர் என்ற பல போர்வைகளில் பள்ளிகளை அவர்கள் குறிவைக்கின்றனர். தனியார் அமைப்புகளாகவும், சில தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரிலும், யோகா – உடற்பயிற்சி வகுப்புகள் என்ற பெயரிலும் நுழைய முயற்சிப்பதும், நாம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அமைப்பினர் சுட்டிக்காட்டுவதும், அதே நேரத்தில் அரசு அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து, உரிய சுற்றறிக்கைகள் ஆணைகள் மூலம் தடுத்துக் கொண்டு வருவதையும் அனைவரும் அறிவோம்.
தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரிலும், அதையொட்டிய பல்வேறு திட்டங்கள் என்ற பெயரிலும் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து நெருக்கடிகளை, மறைமுகமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் பல திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. ஆளுநர் என்ற பெயரில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் ஒருவர் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையையும், பள்ளிக் கல்வித்துறையையும் குறிவைத்துக் காய் நகர்த்துகிறார்.
அறிவு விடுதலைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நடைபெறும் இந்தப் போர் சாமானியத்தில் ஓயக் கூடியதல்ல. தனியார் கல்வி நிறுவனங்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அதை நோக்கியும் அரசு கவனத்தைச் செலுத்தி வருகிறது. செலுத்தவும் வேண்டும்.
இந்தச் சூழலில்தான் இந்த நிகழ்ச்சி அனைவரின் கொந்தளிப்புக்கும், கடுமையான கண்டனத்துக்கும் உடனடிக் காரணமாகி உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதையும், உச்சபட்ச விழிப்பு நிலையில் தமிழ்நாடு இருக்கி றது என்பதையும் இந்த எதிர்ப்புணர்வு பதிவு செய்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அமெரிக்காவில் மிக முக்கியமான பயணத்தில் ஈடுபட்டிருந்தாலும், உடனடியாக இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். “தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும், வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட” தாம் ஆணையிட்டுள்ளதைத் தெரிவித்தும், “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று தம் அரசின் பாதையைத் தெளிவாகவும் தெரிவித்துள்ளார்.
நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரிலேயே அப்பள்ளிக்குச் சென்று நிலைமையை விசாரித்து. துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்து (இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.) உணர்வுப் பூர்வமாக எதிர்க் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கர் அவர்களையும் அழைத்துப் பாராட்டி அவரை அருகில் வைத்துக் கொண்டே செய்தியாளர்களைச் சந்தித்து உரிய விளக்கங்களையும், அரசின் நிலைப்பாட்டையும் தெரிவித்ததுடன், பள்ளியில் மிக மோசமாக நடந்துகொண்டு, ஆசிரியரை மிரட்டி, மூடநம்பிக்கைக் கருத்துகளை விதைத்த அந்தப் பேச்சாளர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மிகுந்த உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா அன்று ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவும் நிகழ்ச்சி என்று மாணவர்கள்மீது திணிக்கப்படும் அருவருப்பான நிகழ்ச்சி குறித்தும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், இது தொடர்பான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு, இவை தடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். பெற்றோர் காலைக் கழுவுங்கள் என்று சில பள்ளிகள் நடத்தும் நிகழ்ச்சி உள்பட எல்லா இழிவுகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
மாதிரிப் பள்ளிகள் என்பவையும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனபதையும், எவ்விதத்திலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் வழியாக காவித்தனம் நுழையவோ, அதன் சாயல் கொண்ட திட்டங்களை நுழைக்கவோ இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அரசுப் பள்ளி வளாகத்துக்குள் இருந்து கொண்டு ஆசிரியரை மிரட்ட இவர்களுக்கு எங்கிருந்து இந்தத் துணிச்சல் வருகிறது? அமைச்சரின் கொதிப்பு திராவிட இயக்க உணர்வின் வெளிப்பாடாகும். இதன் பின்னால் இருப்போர் யார்? யாருடைய தூண்டுதல் அல்லது ஊடுருவலில் இது நடக்கிறது என்பதையும் உரிய வகையில் கண்டுபிடித்துக் களைய வேண்டியது அவசியமாகும். இந்த நடவடிக்கையில் எத்தனை அதிகார மய்யங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அரசுக்குக் கருத்தியல் ரீதியாகவே பக்க பலமாக மக்கள் ஆதரவு உண்டு என்பதை இந்த ஒரே இரவில் மக்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்ற போதே ‘‘தி.மு.க. அரசு தந்தை பெரியாருக்குக் காணிக்கை’’ என்று அறிவித்தார். அதன் நீட்சியாகத் தான் முத்தமிழறிஞர் கலைஞரும், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஆட்சி நடத்தி வருகின்றனர். இத்தகைய ஊடுருவல் முயற்சிகள் வரலாறு நெடுக நடந்துவருகின்றன. அதற்கு உரிய பதிலை உடனடியாகச் செய்துள்ளது தான் ‘திராவிட மாடல்’ ஆகும்.
“It shall be the duty of every citizen of India to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform” என்று இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h) ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இதைத் தான் வரையறுத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு எடுத்திருப்பது சட்ட ரீதியாகச் சரியான நடவடிக்கை ஆகும்.
ஆசிரியர் அமைப்புகள் இத்தகைய பிரச்சினைகளில் விழிப்போடு இருந்து, கல்வி நிலையங்களுக்குள் ஊடுருவ முயலும் மதவாதப் பாம்புகளை அடையாளம் காண வேண்டும்.
கல்வித் துறையின் மூலம் நவீன தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளோம். அந்தக் கோட்டைக்குள் இத்தகைய குள்ளநரிகளை அனுமதித்துவிடக் கூடாது. கல்வித் துறைக்குள்ளும் களைகள் முளைத்திருப்பின் அவற்றையும் களைந்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது.
ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டதன் பின்னணியில், இத்தகைய ஊடுருவல் நடவடிக்கைகளுக்கான நோக்கம் தான் உள்ளது. தமிழ்நாட்டில் வெளிப்படையாக அப்படி இருக்க முடியாது என்பதால் மறைமுகமாகச் செயல்படுவோர் உண்டு. அதனைக் கவனித்து ஊடுருவல்களைத் தடுத்து, மாணவ நாற்றுகளைக் காக்க வேண்டியது நம் கடமை.
சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வோடு உடனடியாகக் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரும், தகவல் தெரிந்த உடனே நடவடிக்கைகள் எடுத்த தமிழ்நாடு அரசின் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் நமது பாராட்டுக்குரியவர்களாவார்கள்.
இது ஒரு நாள் இரு நாள் பிரச்சினையல்ல. “Eternal vigilance is the price of liberty”. அரசு, கல்வித் துறை, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், சமூக இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமாகும்
– கி.வீரமணி,
ஆசிரியர்