மனமின்றி அமையாது உலகு!மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

2024 செப்டம்பர் 1-15 மருத்துவம்

மனதின் பண்புகள்

மனம் என்பது ஒரு செயல்பாட்டு அலகு (Functioning Unit). அது மூளையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். மனதின் பண்புகள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? மனம் என்ற ஒன்று ஏன் நமக்கு இருக்கிறது? அதனால் என்ன பயன்கள் என்று பார்ப்போம். ஏனென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால். தான் மனம் நலமாக இருப்பது என்றால் என்ன? மனம் நோய்மையுற்றிருப்பது என்றால் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.

மனதில் மூன்று பரிமாணங்கள் உள்ளன:
சிந்தனைகள் (Thoughts)
உணர்வுகள் (Emotions)
அறிவாற்றல் (Intelligence)

மனம் ஆரோக்கியமாக இருக்கும்போது இந்த மூன்றும் சமநிலையில் இருக்கும். இந்த மூன்றுக்கும் இடையேயான சமநிலை பாதிக்கப்பட்டால் மனம் ஆரோக்கியமாக இல்லை என்று பொருள்.

உதாரணமாக, நாம் ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்றால், அந்த வேலை தொடர்பான எண்ணங்கள் வரவேண்டும், அந்த வேலை செய்வதற்கான உந்துதலை உணர்வுகள் தர வேண்டும், அந்த வேலையைச் செய்து முடிக்கும் நுட்பத்தைப் புத்தி கொடுக்க வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட நேரத்தில் அந்த வேலையை நாம் சரியாகச் செய்து முடிப்போம்.

ஒருவேளை அந்த வேலைக்குத் தொடர்பற்ற சிந்தனைகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தாலோ அல்லது அதைச் செய்வதற்கான ஈடுபாட்டை உணர்வுகள் கொடுக்கவில்லையென்றாலோ அல்லது அதன் நுட்பங்கள் கைவராமல் போனாலோ நம்மால் அந்த வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் ஒழுங்காகச் செய்து முடிக்க முடியாது. அதற்குக் காரணம், மனதின் இந்தச் சமநிலையற்ற தன்மையே.

ஒரு வேலையை நாம் சரியாகச் செய்யவில்லை என்றால் நம் மீதான நமது நம்பிக்கை குறையும், அது அந்த வேலையை இன்னும் கடினமாக்கும், தொடர் தோல்விகள் ஏற்படும், ஒரு கட்டத்தில் நம் மீதான நம்பிக்கை பிறருக்கும் குறையத் தொடங்கும், நம்மை அலட்சியப்படுத்துவார்கள், அவமானப்படுத்துவார்கள், அது இன்னும் மனநிலையை மோசமாக்கும், அப்போது எளிதான வேலை கூட கடினமானதாகத் தோன்றும். அது மேலும் மேலும் நம்மை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும். இப்படித்தான் மனம் நோய்மையடைகிறது.

மனதின் மூன்று பரிமாணங்களும் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டவை. அதாவது நமது சிந்தனைகள் எப்படி இருக்கிறதோ அதற்கேற்றபடியே நமது உணர்வுகளும் இருக்கும், அதையொட்டியே புத்தியும் வேலை செய்யும். இந்தப் பிணப்பு குலையும் போதும் மனம் நோய்மையடைகிறது. உதாரணமாக,

நீங்கள் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மகிழ்ச்சிக்கான எண்ணங்களே வராமல் முற்றிலும் எதிர்மறையான எண்ணங்களாகவே வந்து கொண்டிருந்தால் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.

அண்மையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்க்க வந்தான் “எங்க அம்மா சிரிக்கிறதப் பார்த்தாலே அவங்க செத்துப் போறது மாதிரி எண்ணம் வருது சார்” என்று அழுதான். அதனால் அவன் அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதையே தவிர்த்து வந்தான். எண்ணங்கள் இப்படி தன்னிச்சையாக வந்தாலோ அல்லது உணர்வுகள் தன்னிச்சையாகத் தோன்றினாலோ மனசு சரியில்லை என்று பொருள்.

மனதின் இந்த மூன்று பண்புகளும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமானது. உதாரணத்திற்கு ஒரு மனிதன் பிற மனிதனில் இருந்து வேறுபடுவது இந்த மூன்று பண்புகளால் தான். ஒரு குறிப்பிட்ட சூழலில் எப்படிப்பட்ட சிந்தனைகள் இருக்கின்றன, எப்படிப்பட்ட உணர்வுகளுடன் இருக்கின்றன, அந்தச் சூழலில் புத்தி என்னவாக இருக்கின்றது என்பதைப் பொறுத்தே ஒரு மனிதன் இன்னொரு மனிதனில் இருந்து வேறுபடுகிறான்.

உதாரணத்திற்கு, வேலைக்குப் புறப்பட்டு, தொடர்வண்டியை(Train)த் தவற விட்டுவிடும் நேரத்தில் சில பேர், நமக்கு அதிர்ஷ்டம் இல்லை அதனால் தான் தவற விட்டுவிட்டோம் என நினைக்கலாம், சில பேர், நாம் தாமதமாக வந்ததால் தான் தவற விட்டுவிட்டோம் என நினைக்கலாம். சிலர், கோபப்பட்டு தங்கள் மனைவிகளைத் திட்டிக்கொண்டிருக்கலாம், சிலர் உணர்ச்சிவசப்படாமல் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கலாம். இப்படித்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள், மனதின் இந்தப் பண்புகளினால் வேறுபடுகிறார்கள்,

இந்தப் பண்புகள் எப்படி மனிதர்களுக்கு உருவாகின்றன? ஏன் சிலர் மூட நம்பிக்கைகளை நம்புகிறார்கள்? ஏன் சிலர் அறிவி
யலை மட்டுமே நம்புகிறார்கள்? எப்படி சிலர் எல்லாப் பிரச்சினைகளுக்கும் கடவுளே காரணம் என்று சொல்லுகிறார்கள்? ஏன் சிலர் அறிவுப்பூர்வமான பதில்களைத் தேடுகிறார்கள்? ஒருவருடைய சிந்தனைகளும், உணர்வுகளும், புத்தியும் எப்படி உருவாகின்றன?
மரபணு ரீதியாக ஒருவர் பிறப்பதற்கு முன்பே சில பண்புகளும், பிறந்ததற்குப் பிறகு இந்தச் சமூகத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களிலிருந்தும், கல்வியிலிருந்தும், அந்தச் சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமைகளிடம் இருந்தும் சில பண்புகளும் என இரண்டு வகையான காரணிகளும் உருவாகின்றன.

மனம் உருவாவதில் ஒருவரின் மரபணுக்களும் (Genetic), சமூகமும் (Environment) சமமான பங்களிக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து தான் ஒருவரின் முழுமையான மனதை உருவாக்குகிறது. அதாவது ஒருவரின் எண்ணங்களில், உணர்வுகளில், புத்தியில் இந்த இரண்டிற்கும் சமமான பங்கிருக்கிறது. அது எப்படி என்பதை அடுத்த இதழில் கேள்வி – பதில் வடிவத்தில் பார்ப்போம்.