வாழைத் தோட்டம் சென்று வந்தோம்… – வழக்குரைஞர் துரை. அருண்

2024 செப்டம்பர் 1-15 திரைப்பார்வை

கண்டதாவது…
“காலுக்கு செருப்புமில்லை
கால் வயிற்றுக்கு கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா
என்தோழனே
பசையற்றுப் போனோமடா
என் தோழனே”

என்ற முதுபெரும் பொதுவுடைமை இயக்க தலைவர் ஜீவாவின் பாடலுக்கு ‘வாழை’ திரைக்காவியத்தில் பதவுரை எழுதி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

உழைப்பாளி மக்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி சுரண்டப்படுகிறார்கள் – அதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் – வெறும் உடல் உழைப்பைச் செலுத்தும் உழைப்பாளிகள் இறுதிவரை வாழைத் தார் சுமக்கும் கூலிகளாகவே இருக்க நிர்பந்திப்பதும் – ஒரு தாருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி தரக் கோருவதும் ,- அதற்கு உரிமையாளார் தர மறுப்பதும், பின்னர் போராட்டத்திற்குப் பிறகு கோரிக்கையை ஏற்று ஆனால் வாழையை ஏற்றிச் செல்லும் லாரியில் உழைப்பாளி மக்களை வீட்டுக்குச் செல்ல நிர்பந்திப்பதும் முதலாளி + அதிகார வர்க்கத்தின் கோர முகத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
தொழிலாளர்களுக்குக் கூலி உயர்வு மட்டுமல்ல, அவர்களுக்கு போக்குவரத்து, உணவு போன்ற அடிப்படை வசதிகளையும் சேர்த்தே சுரண்டுகிறார்கள் முதலாளிகள் என்பதை காட்சிப்படுத்தியுள்ளார்.

வறுமையின் உச்சத்தையும் – அதன் கொடூரத்தையும்- ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் கதையின் நாயகன் சிவனைந்தன் படும் பாடுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆற்றொணாத் துயரம்…

பள்ளிப் பருவத்தையும் – தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழும் விளிம்பு நிலை மக்களின் அப்போதைய வாழ்க்கைத் தரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர்.

பள்ளி செல்லும் சிறுவர்களின் – குறிப்பாக 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்களின் இளமைக் காலம் எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது. அந்தப் பருவத்தின் 1990 கால கட்டத்தில் இருந்த பள்ளிச்சூழல், கிராமச்சூழல் ஒளிப்பதிவாளரால் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது – அழகு – அருமை!

ஆசிரியர் மீதான ஒரு பிரியம், பெண் ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களைத் தங்கள் குழந்தைகள் போல நடத்தும் பாங்கு கொண்டவர்கள்- அப்படிப்பட்ட ஆசிரியர்களைக் கண்டதும் உண்டு.

ஒரு காட்சியில், “டீச்சர் ஒன்னு சொல்லட்டுமா! நீங்கள் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க…,’’ உடனே டீச்சர், “ஏண்டா, நேத்து நான் அழகா இல்லையா?,” “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க – இன்னைக்கு எங்க அக்கா மாதிரி அழகா இருக்கீங்க’’ என அந்தக் கதையின் நாயகன் சிவனைந்தன் சொல்லும் போது இதயத்தைத் தொடுகிறார் இயக்குநர்.

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மகிழ்ச்சியாக விளையாட நினைக்கும் பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் குடும்ப வறுமையின் காரணமாக வாழைக்காய் சுமக்கச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் அந்தச் சிறுவர்களை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கச் செய்கிறது. வறுமையின் விளிம்பில் இருந்து வரும் ஒவ்வொருவரும் இவ்வாறான நாட்களைக் கடந்து வந்திருப்பார்கள்.

வாழைக்காய் சுமக்கச் செல்லும் போது இரு வாழைத் தார்களை வாழைத் தோட்டத்தில் இருந்து தலையில் சுமந்துகொண்டு அந்தச் சகதியில் நடந்துவந்து லாரி நிற்கும் இடத்தில் அந்தப் பதின்பருவ இளைஞர்கள் கொண்டு வந்து சேர்ப்பது கொடும் துயரம்…
நமது பள்ளிப் பருவத்தில் கமல் + ரஜினிகாந்த் ரசிகர் போட்டி நடக்கும். அதையும் அந்தச் சிறுவர்கள் ஊடாக காட்சிப்படுத்திய விதம் மிகச்சிறப்பு.

கூலி உயர்வுக்காகப் போராடும் கலையரசன் மீதும் சிவனைந்தன் அக்கா காதல் கொள்வதும் – சிவனைந்தன் பெட்டியில் அரிவாள் சுத்தியல் சின்னம் இருப்பதும் – கலையரசனிடம் மருதாணி கொடுக்கும் போது அதைக் கீழே பரப்பச்செய்து அதன் நடுவே அரிவாள் சுத்தியல் சின்னத்தை வைத்து ரசிப்பதும் அழகான காட்சியமைப்பு.

பின்னணி இசைக் கோர்வையும் – டீச்சரின் கர்ச்சீப்பை எடுத்து முகர்ந்து பார்க்கும் போது வரும் “மஞ்சள் பொடி தேய்க்கையிலே என் நெஞ்சை தொட்டு போன புள்ள ” எனும் இளையராஜாவின் பாடலும் மிக அழகு!

படம் முழுக்க கம்யூனிசம் பேசப்பட்டுள்ளது.எந்த இடத்திலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், மாவோ, கோசிமின், பிடல், சேகுவேரா வசனமில்லாமல் கம்யூனிசம் பேசப்பட்டுள்ளது.

சிரிக்கவும், சிந்திக்கவும், வறுமையின் கோரத்தையும், சுரண்டலின் கொடூரத்தையும் கண்டுவர வாழைத் தோட்டத்திற்குச் சென்று வாருங்கள்.

உழைப்புச் சுராண்டலுக்கு எதிரான ஒரு திரைப்படம்.
கண்டு வந்ததில் மகிழ்ச்சி.