வினா – விடை வடிவில் அமைந்த கருத்து:
question: Since everything in the universe requires a cause must not the universe itself have a cause. Which is God?
Answer: There are two basic fallacies in this argument. The first is the assumption that if universe required a causal explanation the positing of a “God” would provide it. To posit God as the creator of the universe is only to push the problem back one step farther. Who then created God? Was there a still earlier God who created the God in question? We are thus led to an infinite regress- the very dilemma that the positing of a “God” was intended to solve. But if it is argued that no one created God, that God does not require a cause, that god has existed eternally _ then on what grounds is it denied that the universe has existed eternally?
ஈ) முதற்காரணக் கொள்கையின்படி முடிவுற்றுப் பின்னோக்கி நீளும் நீட்சியின் அபத்தத்தைத் தோலுரிக்கும் வகையில் ரசல் அவர்கள் தனது “கடவுள் உண்டா?” (Is there a God?) எனும் சிறுநூலில் இந்து மதத்தில் நிலவும் கதை ஒன்றினைக் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகிறார்.
ஓர் இந்து மதச் சிந்தனையாளர் இந்தப் பூமி ஒரு யானையின் மீது நிற்கிறது என்று நம்புகிறார். அந்த யானை எதன்மீது நிற்கிறது என்று கேட்டால் அவர், ‘அந்த யானை ஓர் ஆமையின் மீது நிற்கிறது’ என்று கூறுகிறார். அந்த ஆமை எதன்மீது நிற்கிறது என்று கேட்டால் அவர் (பொறுமையிழந்து), ‘எனக்குக் களைப்பாக இருக்கிறது. நாம் வேறு விஷயம் பற்றிப் பேசலாம்’ என்று நழுவுகிறார். (இதுபோல்தான் முதற்காரணக் கொள்கையும் உள்ளது.)
உ) ரசல் அவர்கள் “நான் ஏன் கிறிஸ்தவனல்ல?” எனும் தனது நூலில் கடவுள் இருப்பையும் அதன் தேவையையும் முன்னிறுத்தி நம்பிக்கையாளர்கள் கூறும் காரணங்களை மறுத்து அறிவார்ந்த வாதங்களின்மூலம் தவிடுபொடியாக்குகிறார்.
1. இவ்வுலகம் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்குற நடப்பதாலேயே, அதற்குக் காரணமான கடவுளின் இருப்பு உறுதியாகிறது என்னும் நம்பிக்கையாளர்களின் வாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இயற்கை விதி, ஒழுங்கு என்பதெல்லாம் மனிதனின் கற்பனையே என்றும், இயற்கை விதிப்படி ஈர்ப்பு ஆற்றலால் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதற்குக் காரணம் நமக்குத் தெரியாத ஏதோ ஓர் இயற்கை சக்தியின் (கடவுள்) கட்டளையினால்தான் என்னும் (நியூட்டனின்) கருத்து அய்ன்ஸ்டீனின் புதிய கண்டுபிடிப்பால் (சார்பு நிலைக்கொள்கை) மாறிவிட்டது என்றும் ரசல் கூறினார்.
2. உலகில் உள்ள ஒவ்வோர் உயிரினமும் அது வாழ்வதற்கு ஏற்ற வகையிலேயே இயற்கையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அதற்குக் காரணமான கடவுள் என்பவர் ஒருவர் இருக்கிறார் என்பது நிச்சயமாகிறது எனும் நம்பிக்கையாளர்களின் கருத்து பிழையானது என்றும், இது எப்படி இருக்கிறது என்றால் வேட்டைக்காரன் எளிதில் வேட்டையாடுவதற்கு ஏற்பவே குழிமுயல்களுக்கு வால் வெள்ளையாக அமைந்திருக்கிறது என்றும், மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்வதற்காகவே மூக்கு இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுவது போல் இருக்கிறது என்றும், டார்வின் கொள்கைப்படி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு இடம் மற்றும் சூழல் அமைந்தில்லை; மாறாக உயிர் இனங்கள்தான் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன என்றும் ரசல் கூறினார்.
3. இந்த உலகில் நீதியையும் ஒழுக்கத்தையும் நிலைநாட்ட வேண்டுமானால் கடவுள் இருந்தாக வேண்டும் எனும் கருத்தை மறுத்த ரசல் இவ்வுலகில் அநீதியும் ஒழுக்கக்கேடும் இருப்பதாலேயே கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என்று கூறினார்.
2 ரசலைப் போலவே உலகின் தலைசிறந்த நாத்திகத் தலைவராக விளங்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு அவரது வாழ்நாளில் எப்போதிலிருந்து கடவுள் என்பதன்மீது நம்பிக்கையின்மை தோன்றியது?
“எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்போதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை.”
(1937இல் நவமணி ஆண்டு மலரில் தந்தை பெரியார் எழுதியது – சாமி.சிதம்பரனாரின் தமிழர் தலைவர் எனும் வரலாற்று நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பக்கம் 33 பதிப்பு: எட்டாம் பதிப்பு- 1983.
3.(அ) தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு 56 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூருக்கு அருகில் உள்ள விடயபுரம் என்ற ஊரில் நடத்திய சுயமரியாதைப் பயிற்சி வகுப்பில் 1967ஆம் ஆண்டு மே மாதம் 24, 25 நாட்களில் உரையாற்றினார். இப்பயிற்சி வகுப்பில் பெரியாரால் உருவாக்கப்பட்டவையே பின்வரும் உலகப்புகழ் பெற்ற கடவுள் மறுப்பு வாசகங்கள்;-
கடவுள் இல்லை; கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்.
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்.
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.
இக்கடவுள் மறுப்பு வாசகங்களை ஒவ்வொரு கழக நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் முழங்க வேண்டும் என்று 14.6.1967இல் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்து வேண்டினார்.
ஆ) இப்பயிற்சி வகுப்பு நடக்க அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர் ஓர் ஆத்திக அன்பர் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். பழுத்த ஆத்திகவாதியான அப்பாசாமி நாயுடு என்பவர் இப்பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடைபெற பெரிதும் உதவினார். இவர் பெரியார் தங்குவதற்கு கோடைக்காலம் என்பதால் ஒரு குடிசை அமைத்து, அதன் மேல் கூரையில் பூங்கொடிகளை வளர்த்து, பூங்கொடி இல்லம் என்று பெயரிட்டு, தனது செலவில் சாப்பாடு போட்டு பயிற்சிப் பட்டறைக்கு உதவினார். அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘‘தனக்குக் கடவுள் பற்று உண்டு. பெரியார் பற்றும் உண்டு’’ என்று கூறினார். (திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 15.12.2021இல் சென்னையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆற்றிய உரை – ‘விடுதலை’ 21.12.2021, பக்கம்: 4)
இ) இது போன்ற ஒரு கடவுள் மறுப்புப் பிரகடனத்தினை முத்தாய்ப்பாக, ஒரு சூத்திரம் போல நாத்திக உலகில் வேறு எந்தத் தலைவரும் வெளியிட்டுள்ளாரா என்பது அய்யத்துக்குரியது. இந்தக் கடவுள் மறுப்பு வாசகங்களைக் கண்டு ஆத்திகப் போர்வையில் சில மதவெறியர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியதோடு, கடவுளைக் கற்பித்தவர் கண்ணியவான், கடவுளைக் கற்பிக்காதவன் முட்டாள் என்பன போன்றவாசகங்களை எழுதியும் பேசியும் தங்கள் அறியாமையைக் காட்டிக்கொண்டனர்.
தந்தை பெரியார் அவர்கள் அத்தகையோர்க்கு விடையளிக்கும் வகையில் “அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி கடவுள் கற்பிக்கப்பட்டதா என்று வினா எழுப்பியதும் பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போயினர். தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைகள் பலவற்றிலும் இந்தக் கடவுள் மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
4. தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழில் (30.12.1928) கடவுள் பற்றி எழுதியுள்ள கருத்து வருமாறு:
மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; கோவிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது; என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அழியச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரிக் கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட மாபெரும் மக்கள் சமூகம் இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும் சாந்தத்தோடும் அகிம்சா தர்மத்தோடும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்றும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர்வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர்துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? (பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் பக்கம் 147)
5 தந்தை பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய எழுத்தும் பேச்சும் அடங்கிய அய்ந்து தொகுதிகள் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நூல் வடிவில் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியம் என்ற பெயரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. பெரியாரின் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்துகள் அவற்றுள் பொதிந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ள எவரும் அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது.
– தொடரும்…