திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மய்யத்தில் வாரந்தோறும் முனைவர் பட்ட ஆய்வாளர் சந்திப்பு நிகழ்கிறது. அதில் கடந்த மாதம், செப்டம்பர் 16-30 உண்மை இதழ் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதுபோது உண்மை இதழின் சமூக அக்கறையும் பெரியாரின் கருத்தியல் களும் எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வாளர் ம.புகழேந்திர சோழன் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி.
தமிழினம், மனிதநேயம், சமூகநீதி போன்ற பண்புகளின் வெளிப்பாட்டை இது உரிமை; பிச்சை அல்ல! என்னும் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரையின் மூலம் உரை முடிகின்றது.
இக்கால கட்டத்தில் வெகுசன ஊடகங்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலை குறித்து பேசுவதில் மௌனம் சாய்க்கின்றபொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும் தமிழினம் குறித்தும், தமிழரின் சமூக விடுதலை குறித்தும் தொடர்ந்து முழங்கும் இதழாகவும் அமைந்துள்ளதை உணரலாம். இவ்வாறான பெரியாரியக் கருத்தியல் நிறைந்த கட்டுரைகளை வெளியிடுவதில் உண்மை இதழ் முதன்மை பெறுகிறது.
மதம் குறித்த பெரியாரின் கொள்கைகளுள் ஒன்றான கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை கடவுளால் ஆகாதது எனும் டி.கே.சீனிவாசன் அவர்களின் சிறுகதை வழியும் வடை எனும் அனு கலைமகள் எழுதிய கதை வழியும் விளங்கிக் கொள்ள முடிகின்றது. அதாவது ஒருவன் தன் இயலாமையால்தான் அவன் நினைத்த காரியத்தில் வெற்றிபெற முடியவில்லை என்பதனையும் கடவுளால் எதுவும் நிகழாது.
முயற்சி செய்தால் பகுத்தறிவோடு திகழ்ந்தால் மட்டுமே எண்ணியதைச் செய்ய முடியும் என்பதனை கடவுளால் ஆகாதது எனும் சிறுகதையின் மூலம் விளக்குகின்றார். வடை என்ற கதையில், சிறுவனின் வடை ஆசையை நிறைவு செய்யாத பெற்றோரின் நிலையையும் அவர்களின் மடத்தனமான கடவுள் கொள்கையையும் இவ்விதழ் சுட்டிக் காட்டுகின்றது.
இவ்வாறு பெரியாரின் கடவுள் பற்றிய, மதம் பற்றிய கொள்கைகளை பரப்புவதாக உண்மை இதழ் விளங்குகிறது. அறிவு சார்ந்த பெரியாரின் கொள்கைகளுள் ஒன்றான அறிவியல் கோட்பாட்டை படித்த _ படிக்காத பாமரர்கள் எனும் மணிமகன் எழுதிய கட்டுரையின் வழி விளங்கிக்கொள்ள முடிகின்றது.
அறிவியல் வளர்ந்த இந்த நூற்றாண்டில் அறிவியல் உண்மைகளைப் பகுத்தறிவோடு நம்புதல் வேண்டுமே தவிர அறிவியலை சாமிக்கு இறையாக்கக் கூடாது என்ற கருத்தை இவ்விதழ் வெளிக்கொணர்கிறது.
உண்மை வெளியிடும் இத்தகு படைப்புகளானது. பெரியாருக்குப் பின்பும் அவர்தம் கருத்துக்களையும் பொருள்முதல் வாதக் கொள்கைகளையும் அவர்தம் அறிவியல் சார்ந்து இருப்பதற்கு மக்களைத் தூண்டிய பணியினையும் இன்றைய சூழலில் உண்மை இதழ் பகிர்ந்து கொண்டு வருகிறது என்பதற்கு இக்கட்டுரை சான்றாக அமையும்.
பெரியாரின் பெண்ணியச் சிந்தனை என்ற கருத்தியல்களை சிந்தனையில் விடுதலை என்னும் இரா.உமா எழுதிய கட்டுரையின் வழி இவ்விதழ் விளக்குகின்றது.
மக்களின் ஆழ் மனதில் படிந்து கிடக்கும் பழமைவாய்ந்த மூடப்பழக்க வழக்கங்களை அகற்றுவதற்கு அன்றாடம் நிகழும் செய்திகளின் அடிப்படையிலான நிகழ்வுகளைச் சுட்டி அதன் தன்மைகளை எடுத்து விளக்கும் பகுதியாக முகநூல் என்ற பக்கம் செயல்படுகின்றது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு எனும் கி.தளபதிராஜ் எழுதிய கட்டுரையின் வழி ஆன்மீகம் என்ற பெயரில் போலிச் சிந்தனைகளையும் மூடநம்பிக்கைகளையும் பரப்பிவரும் சாமியார்களின் உண்மை உருவத்தை தோளுரித்து காட்டுகிறார்.
பெரியாரியத்தின் வழி மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதிலும் உலகப் பகுத்தறிவாளர்களின் வழி சான்றுரைத்து விளக்குவதிலும் தனிப்பெரும் பணியினைக் கொண்டு தமிழ் ஊடகச் சூழலில் பெரும்பணி ஆற்றிவருகிறது உண்மை இதழ்.