ஆவணக் காப்பாளர் ஆல்பர்ட்!- வி.சி.வில்வம்

2024 செப்டம்பர் 1-15 வரலாற்றுச் சுவடுகள்

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றாலும், இவரை ஆவணக் காப்பாளர் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இலால்குடி மாவட்ட நிலப்பரப்பில், ஒவ்வொரு சதுரடியும் இவருக்கு அத்துப்படி. இவர் கால்படாத கழகத்தினர் வீடுகளே இல்லை. எந்த ஒரு நிகழ்வையும் ஆண்டு, மாதம், தேதி வரை கண நேரத்தில் கூறும் அபார நினைவாற்றல் கொண்டவர். வயது 85 என்பார்கள்.ஆனால் சுறுசுறுப்பின் சூறாவளி இவர். இவரின் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனம் தரையிலேயே பறக்கும் தன்மை கொண்டது. இப்போது தான் அது சற்று ஓய்ந்திருக்கிறது.

இவரின் தந்தையார் பரஞ்சோதி அவர்களும் பெரியார் கொள்கையில் பற்றுக் கொண்டவர். கூகூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர்கள் அப்பாவு, கே.பி.பாலசுந்தரம், பாப்பு ஆகியோர் வேலைக்குச் செல்ல இரயில் நிலையத்திற்கு 5 கிலோ மீட்டர் நடந்தே செல்வார்களாம்.
சிறையில் ஒரு மாதக் குழந்தை!

இதில் அப்பாவு மகளுக்குப் பெரியார் தான் திருமணம் செய்து வைத்துள்ளார். பெரியாரை வைத்துத் திருமணம் செய்தால் குழந்தை பிறக்காது என்கிற புரட்டு அப்போது கிராமத்தில் இருந்துள்ளது. ஆனால், அப்பாவு துணிச்சலான இயக்கவாதி. இவரின் அண்ணன் பையன் தான் திருச்சி பீமநகரில் இருந்த தங்கராசு அவர்கள். அதேபோல பாப்பு அவர்களின் இணையர் ஆரோக்கியமேரி சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவர். பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையுடன் சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத் தலைவர்கள் நிறைந்த ஊர்!

ஆல்பர்ட் அவர்கள் வளர்ந்தது கூகூர் பகுதி என்றாலும், பிறந்தது பூவாளூர் கிராமம். திருச்சி மாவட்டத் தலைவராக இருந்த டி.டி.வீரப்பா, போர்ட்மெயில் பொன்னம்பலனார், பொறியாளர் சண்முகவடிவேல் மூவரும் பூவாளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதேபோல கோமாகுடி பிச்சையப்பா, செம்பறை நடராசன், பேராசிரியர் அன்பரசு ஆகியோரும் இலால்குடியைச் சுற்றி வசித்தவர்களே. ஆக, திருச்சி மாவட்டத் தலைவர்களாக இந்தப் பகுதியில் இருந்து அதிகம் பேர் இருந்துள்ளனர்.
பெரியார் பெருந்தொண்டர்கள் ஆதரவுடன், கூகூர் கிராமத்தில் “மூவேந்தர் வாசக சாலை” எனும் அமைப்பை ஏற்படுத்தி, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லி கொடுத்துள்ளார் ஆல்பர்ட் அவர்கள். குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ஈரோட்டுப் பாதை, குயில், புரட்சி, விடுதலை தமிழ்நாடு, சுதேசமித்திரன் எனப் பல பத்திரிகைகள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஆல்பர்ட் அவர்கள் பழைய

பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ இதழை வாசித்ததும் அங்குதானாம்!
ஓட, ஓட விரட்டிய தோழர்கள்!

ஆல்பர்ட் அவர்கள் நாலணா கொடுத்துத் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் ஆனதோடு, சக வயது கூட்டாளிகள் 10 பேருக்குப் பணம் கட்டி கிளைக் கழகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து என்.வி.இராஜன் அவர்களின் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். கூகூர் கிராமம் மூடநம்பிக்கை மற்றும் அய்தீகம் நிறைந்த ஊராம். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்ட பந்தல் உடைத்து நொறுக்கப்பட்டதாம். அதேநேரம் கலை நிகழ்ச்சிக்கு வந்த இராஜன் 5 பேருடன் மாட்டு வண்டியில் வந்து இறங்கிவிட்டார்.

இது நடந்தது 1952ஆம் ஆண்டு. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் எனப் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சியைத் தொடங்கி இருக்கிறார்கள். சிறிது நேரத்தில் பெரும் கூட்டம் ஒன்று கத்தி, அரிவாளுடன் மேடையை நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த நன்னிமங்கலம், மும்முடிச்சோழமங்கலம், அபிசேகபுரம், இடையாற்றுமங்கலம் தோழர்கள் ஒன்று கூடி, ஆக்ரோசமாக வெகுண்டெழுந்து, கலவரக்காரர்களை ஓட, ஓட விரட்டியுள்ளனர். நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர். பிறிதொரு கூட்டத்திற்கு அன்பில் தர்மலிங்கம் அவர்கள் பேச வந்துள்ளார். அதுசமயம் அந்தக் கிராமத்தில் இருந்த இரட்டைக் குவளை முறையை எடுத்துக் கூறி, அந்நிலையை மாற்றியுள்ளார்.

ஆசிரியரின் இன்னிசைக் கச்சேரி!

இலால்குடிக்கு வந்த பெரியாரை 1948இல் ஆல்பர்ட் அவர்கள் சந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல கூட்டங்களும் நடத்தியுள்ளார். அதேபோல நமது தமிழர் தலைவர் அவர்கள் மாணவராக இலால்குடிக்குச் சென்று, நாற்காலியின் மீது ஏறிப் பேசியுள்ளார். பேசும் முன்பாக மாணவர் வீரமணி அவர்கள் பாடுவது வழக்கமாம்.

“மாட்டிக்கிட்டு முழிக்குதுண்ணே மானங்கெட்ட ரெண்டு காளை
மண்ட ஒடைஞ்ச காளை பொன்னம்மா இப்ப மாட்டுன தும்பை அந்து திரியுது பொன்னம்மா” எனும் பாடலை அப்போது ஆசிரியர் பாடினார்களாம்.

பெரியாருடன் அறிமுகம்!

ஆக, எஸ்.எஸ்.எல்.சி முடிக்கும் முன்பாகவே களப்பணியில் தீவிரமாக இருந்துள்ளார் ஆல்பர்ட் அவர்கள். பின்னர் 1958 இல் திருச்சி அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கல்வி முடித்து, நன்னியூர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து செவந்திபாளையம், மச்சகவுண்டன்புதூர், வைப்பூர், தாளக்குடி, அகலங்கநல்லூர் ஆகிய ஊர்களில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

இப்படியான நிலையில் 1969 ஆம் ஆண்டு பெரியாருடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு இலால்குடியில் பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி இருக்கிறார். தலைவராக அன்பரசு, செயலாளராக ஆல்பர்ட் அவர்களும் இருந்துள்ளனர். அதன் பிறகு தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் “பகுத்தறிவு ஆசிரியர் அணி” தொடங்கப்பட்டு, அதில் 100 ஆசிரியர்கள் வரை உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

பயிற்சிப் பட்டறைகள்!

1983 இல் கோமாகுடியில் 3 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளார். பெரம்பலூர் கே.எஸ்.ராஜு, பேராசிரியர் இராமநாதன், மன்னார்குடி இராமதாஸ், அ.இறையன் போன்றோர் வகுப்பெடுத்துள்ளனர். இதில் 40 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். நிறைவு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். மாவட்டம் முழுவதும் ஆல்பர்ட், அன்பரசு, முத்துச்செழியன், சக்குபாய், நெடுஞ்செழியன், வெற்றியழகன் ஆகியோர் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் எனப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளனர்.

கிராமங்கள் தோறும் பெரியார் சிலைகள்!

இலால்குடியில் 2007 ஆம் ஆண்டு ஜாதி ஒழிப்பு மாநாடு நடந்த போது தாளக்குடி, மேலவாளாடி, மணக்கால், பூவாளூர் ஆகிய இடங்களில், ஒரே நாளில் 5 பெரியார் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர வாழ்மன்பாளையம், இடையாற்றுமங்கலம், செம்பறை, கோமாகுடி, புள்ளம்பாடி, விடுதலைபுரம், பெருவளப்பூர் ஆகிய இடங்களில் 12 பெரியார் சிலைகள் இருக்கின்றன. ஓய்வுக்குப் பிறகு இலால்குடி மாவட்டச் செயலாளர், மாவட்டத் துணைத் தலைவர், மண்டலச் செயலாளர், மண்டலத் தலைவர், பிறகு தலைமைக் கழக அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இலால்குடி தேவசகாயம் அய்யாவுடன் இணைந்து எண்ணற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

ஆல்பர்ட் அய்யாவின் இணையர் பெயர் ஜேம்ஸ் மேரி. ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் முடிந்த 1965 முதல் இன்று வரை, தனது பொதுச் சேவைக்குச் சலிப்பில்லாமல் உதவி செய்வார் என அடிக்கடி தனது இணையர் பற்றி நினைவு கூர்வார். இவர்களுக்கு மெட்டில்டா என்கிற மகள் உண்டு. இவருக்கு சேலம் பவள விழா மாநாட்டு மேடையில் திருமணம் நடைபெற்றது. ராம்விலாஸ் பாஸ்வான், முலாயம்சிங் யாதவ் போன்ற தலைவர்கள் அங்கு இருந்தனர். மகன் விக்டர் அவர்களுக்கு வழக்குரைஞர் அருள்மொழி திருமணம் செய்து வைத்தார்.

சட்ட எரிப்புப் போரில் சாதனை!

1957இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டம் என்பது, இலால்குடியைக் கல்வெட்டில் பொறிக்கக் காரணமாக இருந்தது. இன்றளவும் அந்தச் சாதனை பேசப்பட்டு வருகிறது. ஆம்! ஜாதியைப் பாதுகாக்கும் அந்தக் கொடும் சட்டத்தை எரித்த போரில் 349 பேர் சிறை சென்றனர். பெரும்பாலானோர் ஓர் ஆண்டு சிறைவாசம் அனுபவித்தனர்! யார் யார் எந்தெந்தச் சிறை, எத்தனை நாட்கள், எவ்வளவு பாதிப்புகள் என்கிற முழு விவரமும் ஆல்பர்ட் அய்யாவிற்கு அத்துப்படி. அந்த வகையில் கீழவாளாடி, கீழப்பெருங்காவூர், மைக்கேல்பட்டி, T.வளவனூர், நன்னிமங்கலம், மும்முடிச்சோழமங்கலம், ஆங்கரை, கூகூர், அகலங்கநல்லூர், இடையாற்றுமங்கலம், மயிலரங்கம், திருமங்கலம், சிறுதையூர், மணக்கால், பெரியார் நகர், பெரியவர் சீலி, மேலவாழை, அன்பில், கோமாகுடி, பொக்கட்டகுடி, பெருவளப்பூர், தாளக்குடி, பூவாளூர், மருதூர், பிச்சாண்டார்கோவில், துறையூர், மேட்டுப்பாளையம், சித்தூர், கோட்டூர், மண்ணச்சநல்லூர் ஆகிய ஊர்கள் இதில் அடக்கம்.

இதில் சிறையில் இறந்தவர்கள், 15 வயதிற்கு உட்பட்டவர்கள், காலை திருமணம் முடித்து மாலையில் தம்பதி சகிதம் சிறை சென்றவர்கள், திருமணம் ஆகாத 160 இளைஞர்கள் என ஒவ்வொரு விவரங்களையும் கேட்க கேட்கப் புல்லரித்துப் போகும். இவர்களில் பலருக்கும் இன்றளவும் மாவட்டக் கழகம் சார்பில் மாதாந்திர உதவிகளைச் செய்து வருகிறார்கள் என்றால், எப்பேர்ப்பட்ட புடம் போட்ட கொள்கைத் தடமாக இலால்குடி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இந்த வரலாற்றில் 75 ஆண்டுகளாகத் தன்னை ஒப்படைத்து, ஓடி, ஓடி சாதனை படைத்து வரும் அற்புதத் தோழர் தான் அய்யா ஆல்பர்ட் அவர்கள்! பெரியார் எனும் ஆலமரத்தின் வேர்கள் இவர்கள்!