உள்ளமெல்லாம் தடுமாடுதே!

அக்டோபர் 1-15

– க.அருள்மொழி

மண வாழ்க்கையில் மன நிறைவு (மகிழ்ச்சி,இன்பம்) அடையாதவர்கள்தான் இணையரை ஏமாற்றுகிறார்கள்: ஒரு ஆய்வின்படி ‘புறமண’ உறவில் ஈடுபடும் ஆண்களில் 56 விழுக்காட்டினரும் பெண்களில் 36 விழுக்காட்டினரும் தங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாகவோ அல்லது மிக மகிழ்ச்சியாகவோ இருந்தும் புறமண உறவில் ஈடுபடுகிறார்கள்.

 

பெண்கள் புறமண உறவில் ஈடுபடக் காரணங்கள் ஆராயப்பட்டதில் பழி வாங்கும் நோக்கம், பாலுறவில் புதுமையை விரும்புதல், அடிக்கடி உறவுகொள்ள விரும்புதல் போன்ற காரணங்களை விட ‘தனிமை’ யில் இருத்தல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.   நீங்கள் ‘சந்தேக’ ப் பட்டால் உங்கள் இணையரிடம் கலந்துரையாட வேண்டுமா?: ஒருவேளை நீங்கள் உங்கள் துணைவரின்/துணைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக நினைத்தால் அதுபற்றி  அவரிடம் பேச வேண்டுமா? ‘சந்தேகம்’ என்பதே ‘உறுதிப் படுத்தப்படாத’ என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்கிறது.

அதனால் பொறுமையுடனும் நிதானத்துடனும் வார்த்தைகளில் கவனத்துடனும் நீங்கள் நினைப்பது அல்லது கேள்விப்பட்டது பற்றி பேச வேண்டும். இருவழி தகவல் தொடர்பு மிக முக்கியம். அது உங்கள் எதிர்கால உறவு பற்றி தீர்மானிக்கக் கூடியது.

சரி, உளவு  அல்லது ஒற்றன் வேலை பார்க்கலாமா? வேண்டாம்! இது போன்ற செயல்கள் நல்லுறவையும் நம்பிக்கையையும் மிகவும் பாதிக்கும். இது உண்மையில் ‘துரோகம்’ செய்வதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நேரடி பேச்சு வார்த்தையே சரி.

அதிகம் துரோகம் செய்பவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா?: 25 முதல் 60 வயதுவரை உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் படிக்காதவர்கள் அல்லது குறைவாகப் படித்தவர்களே கல்லூரிப் பட்டம் பெற்றவர்களை விட அதிகமாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள்.

அதிகம் துரோகம் செய்பவர்கள் யார்?: கணவனின் வருவாய்க்குச் சமமாக சம்பாதிப்பவர்களா? கணவனை விட அதிகமாகச் சம்பாதிப்பவர்களா? சற்று குறைவாக சம்பாதிப்பவர்களா? மிகக் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களா? என்று பார்த்தால் ஆணின் வருமானத்தை விடக் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் ஆண்களை அதிகம் நம்பி இருப்பதால் அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்வது குறைவாகவே இருக்கிறது. ஆனால் பெண்ணின் வருமானத்தை நம்பி இருக்கும் ஆண்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக துரோகம் செய்கிறார்கள்.

‘துரோக’ மனப்பான்மைக்கும் பரம்பரைக்கும் தொடர்பு உண்டா?: குடிப்பழக்கம், சூதாடுவது போன்ற பழக்கங்களுக்கும் மரபணுக்களுக்கும் தொடர்பு உள்ளதைப் போலவே நம்பிக்கையாக வாழ்வதற்கும் நம்பிக்கை துரோகம் செய்வதற்கும் கூட மரபுப் பண்புகள் காரணமாக அமைகின்றன. DRD4 என்ற ஜீனை  ஆய்வு செய்ததில் அந்த மரபணுவில் 7R+ என்ற மாறுபட்ட மரபுப் பண்பு உள்ளவர்களில் 50 விழுக்காட்டினர் துரோகம் செய்கிறார்கள். இந்த மாறுபட்ட மரபணு இல்லாதவர்கள் 22 விழுக்காட்டினர்தான்  துரோகம் செய்கிறார்கள்.

துரோகம் செய்வதற்கான அறிகுறிகள் உண்டா?: திடீரென்று அவர்களுடைய தோற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது, கணவனை/மனைவியை விமர்சனம் செய்வது, அல்லது எதிர்பாராத பரிசுகள் கொடுப்பது அவன்/அவள் இன்னொரு காதலில் இருக்கிறான்(ள்) என்பதைக் காட்டும்.

மேலும்,

#    வழக்கமான வாழ்க்கை முறையில் குறிப்பிடுமளவுக்கு மாற்றம்- அதாவது உங்களிடம் அல்லது குழந்தைகளிடம் அக்கறையின்மை. வேலை மற்றும்  பொழுது போக்குகளில் அக்கறை இல்லாமை.

#    வாழ்க்கையில் சிலிர்ப்பான (thrill) அனுபவம் வேண்டுமென்று சொல்வது.

# உங்கள் இருவருக்குமிடையேயான நெருக்கம் குறைதல். அனேகமாக உடல் தொடர்பே இல்லாமை.

# தன்மதிப்பு (self-esteem) குறைந்து காணப்படுதல்.

# குழப்பத்துடன் காணப்படுதல்.

#    வீட்டில் இருக்கும்போது சோம்பேறித்தனமாகக் காணப்படுதல்.

# எதிர் மறையாகப் பேசுதல் நடந்து கொள்ளுதல்.

#    அருகில் இருந்து பேசும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்தல்.

#    நீங்கள் அவன்/அவள் செய்யும் துரோகத்தைப் பற்றிப் பேசும்போது தீவிரமாக மறுத்துப் பேசுதல்.

#    வழக்கத்தை விட விழிப்பு(ணர்வு)டன் இருத்தல்.

#    பணியிடத்தில் அதிக நேரம் இருத்தல்.

#    சீராக உடையணிதல், சீரான தோற்றத்திலேயே இருத்தல்.

#    கடன் அட்டை விவரப்பட்டியல் பல செய்திகளைச் சொல்லும்.

#    வீட்டில் நடக்கும் விழாக்களில் இருந்து விலகி இருத்தல்.

#    பல விஷயங்களில் பொய் சொல்வதை நீங்கள் கவனிக்க முடியும்.

#    பணம் பற்றி  உங்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை வரும்.

#    உங்களுடன் சேர்ந்து எங்காவது போவதையோ செய்வதையோ தவிர்த்தல்.

#    நீங்கள் சண்டை போடும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்தல்.

#    உங்களைத் தவிர்ப்பது கண்கூடாகத் தெரியும்.

#    ஒதுங்கி இருத்தல்.

#    பெண்களின் பொட்டு, உதட்டுச் சாயம், முடி போன்ற அடையாளங்கள்.

#    பால்வினை நோய்கள் போன்ற சோதனைகள் செய்துகொள்ளல். (இணையரின் மூலமாக உங்களுக்குப் பரவி இருக்கின்றதா என்று).

மேற்கண்ட அறிகுறிகளில் சில அல்லது பல குறிப்பிடத்தகுந்த அளவு காணப்பட்டால் அது உங்கள் இணையரின் நம்பிக்கை துரோகத்தை உறுதிப் படுத்துவதாகும். உண்மையில் இந்தச் செய்தி உங்களுக்குப் பேரிடியாகத்தான் இருக்கும்.  நம்பிக்கை துரோகத்தை எப்படி சமாளிப்பது? எப்படி எதிர்கொள்வது?

உடனடியாக திருமண உறவை முறித்துக்கொள்வது போன்ற  எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்.இது உங்கள் திருமண வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம். இன்னும் எதிர்காலத்தில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள், பிரச்சனைகள் இதைவிடப் பெரிதாக இருக்கிறதா என்று பாருங்கள்.

துரோகம் செய்துவிட்ட இணையருடன் இருக்கும்போது கடுங்கோபம், அதிர்ச்சி, நிச்சயமற்ற தன்மை, சண்டை, பயம், அழுகை, மன அழுத்தம், மனக் குழப்பம் போன்ற உணர்ச்சிகள் மாறி மாறி உண்டாவது இயல்பானதுதான் என்று புரிந்துகொள்வது நல்லது.

உங்கள் நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். துரோகம் உங்களைப் பாதிக்கும்போது குமட்டல், வயிற்றுப் போக்கு, தூக்கக் குறைபாடு(மிகக் குறைவாக அல்லது மிக அதிகமாகத் தூங்குவது) நடுக்கம், கவனக் குறைபாடு, உண்பதில்  குறைபாடு போன்ற உடலியல் பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை உரிய முறையில் சரி செய்யுங்கள்.

சரியான நலமளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் அன்றாட வேலைகளைச் சரியான நேரத்தில் செய்யுங்கள், வழக்கமான நேரத்தில் தூங்குங்கள். நாள்தோறும் சிறிது நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், சில வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பாருங்கள். உங்களை சிரிக்க வைக்கக் கூடிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வலிதரும் துணையை   மறந்து வாழ்க்கை போகும் போக்கில் விடுங்கள்.

முதல் மரியாதைப் படத்தில் வைரமுத்து எழுதிய “பூங்காற்று திரும்புமா……”பாடலை முழுவதுமாக  நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் துணைவரின் துரோகத்தை உங்களுடைய உணர்ச்சிகளுக்கேற்ப உங்கள் சிந்தனையில் தோன்றியதை எழுதி வையுங்கள்.

துரோகம் செய்த உங்கள் துணைவருடன் பேசுங்கள். தான் செய்த துரோகம் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தால் அதைப் பற்றி அவருக்கு உணர்த்த அது உதவும்.

துரோகத்தை அனுசரித்து அதனுடனே (அவருடனே) வாழ்வதைவிட நல்ல குடும்ப நல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.   இருவரும் ஒரே நேரத்தில் AIDS/HIV மற்றும்  STD போன்ற பாலியல் நோய் சோதனைகளை செய்துகொள்வது நல்லது. மீண்டும் உடல் தொடர்பைத் துவங்கும் முன் இந்தச் சோதனை அவசியம்.

இருவரும் தொடர்ந்து  சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுப்பதாக இருந்தால் அவரவர் எல்லை எது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் மறைக்காதீர்கள். நீங்கள் காயப் பட்டிருப்பதை தெரிவியுங்கள். உங்கள் இணையர் செய்த துரோகத்தை வைத்து குழந்தைகளை எடை போடாதீர்கள்.(“அப்பனப் போலத்தான புள்ள இருக்கும்”- “ஆத்தாள போல மவ” என்பது போன்ற வார்த்தைகள் வேண்டாம்.)

துரோகம் நடந்ததற்குக் காரணம் யார் அல்லது எது என்று பார்த்து அவரைப் பழி வாங்கும் வேலை வேண்டாம். அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

இன்னும் ‘அந்த’ விஷயம் உங்களை உறுத்திக் கொண்டே இருக்குமானால் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நடந்த அந்த ‘விபத்து’ அதனால் ஏற்பட்ட காயம் எல்லாம் ஆறுவதற்கு சிறிது காலம் ஆகும். அதுவரை அவசரப்படாமல் திருமண வாழ்க்கையை நிலை நிறுத்துங்கள்.

உங்கள் வருமானம், போதுமான பணம், சொத்து, வீடு, வேலை, குழந்தைகள் போன்ற எல்லா விஷயத்தையும் சிந்தித்தே  மண வாழ்க்கையத் தொடர்வது அல்லது முடித்துக் கொள்வது என்று முடிவெடுங்கள்.

உங்களுக்கு என்ன தேவை?:

+ உறக்கம்

+ ஆரோக்கியமான உணவு.

+ உடற் பயிற்சி

+ நிறைய தண்ணீர்.

+ நகைச்சுவை (சிரிப்பு)

+ தகுந்த காலம்.

+ மன்னிக்கும் மனப்பான்மை.

மேற்சொன்ன செய்திகளெல்லாம் ஏமாற்றுவதும் ஏமாற்றப்படுவதும் தெரிந்த பின்னர் செய்ய வேண்டிய விஷயங்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் இது நடக்ககூடாது என்றால் என்ன செய்வது? துரோகத்தைத் தவிர்ப்பது எப்படி? அதாவது துரோகம் செய்யாமலிருப்பது அல்லது துரோகம் நடக்கவிடாமல் செய்வது!

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது அதாவது ‘கால் கட்டு’ போட்டாகிவிட்டது. உங்கள் பெற்றோருக்கு கடமை முடிந்துவிட்ட நிம்மதி. இனி உங்களுக்கு இரவு நேரத்தில் ஏற்படும்  ‘அந்த’ இயற்கை உபாதைக்கு துணைக்கு வர ஆள் கிடைத்தாகி விட்டது.

எனவே இனி உங்கள் இனக்கவர்ச்சி உணர்வுகளெல்லாம் இனி நின்று போய் விடும்? அப்படியா? இல்லையே!…அப்படி இல்லையே! நீங்கள் இன்னமும் அடுத்த பெண்ணால் அல்லது ஆணால் ஈர்க்கப்படுகிறீர்கள். உங்கள் கண்கள் போகும் திசையை நோக்கி உங்கள் துணைவரின் கண்களும் பொறாமையோடும் கோபத்தோடும் பின் தொடர்கிறதே?

இதை எப்படி கையாள்வது? ஒரு ‘கூடா நட்பு’ நிகழ்ந்து விடாமல் தடுப்பது எப்படி?  முன்பே சொன்னதுபோல் 25% ஆண்களும் 10_-15 விழுக்காடு பெண்களும் ஏமாற்று நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பல ‘மன’ முறிவுகளும் அதனால் கொலை,தற்கொலை, மண விலக்குகளும் ‘ஏமாற்றத்தினால்’ தான் ஏற்படுகின்றன. உங்கள் வாழ்க்கைப் படகு ஓட்டை விழாமல் (leak proof) செல்ல வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் அல்லது செயக்கூடாது?

உங்கள் திருமண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: அதாவது உங்கள் இணையர்தான்  (கணவன்/மனைவி) எல்லாவற்றிலும் முதன்மையானவர்.முக்கியமானவர். குடும்பத்திலுள்ள மற்றவர்களும் நண்பர்களும் முக்கியம்தான் என்றாலும் அவர்கள் உங்கள் இருவருக்கிடையே ‘நுழையாமல்’ பார்த்துக்கொள்ளுங்கள். பழைய ‘நட்பு’ எதுவும் இருந்தால்  மீண்டும் புதுப்பிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

சென்றவாரம் அலுவலகம் அல்லது தொழிலில் அல்லது நண்பர்களுடன்  அதிக நேரம் செலவிட வேண்டியிருந்திருந்தால் இந்த வாரம் அவற்றைத் தவிர்த்து குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்கள் செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை அணைத்து வையுங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இருவருமாகச் சேர்ந்து குடும்பத்திற்கான முடிவுகளை எடுங்கள்.

எல்லைக்கோடு போடுங்கள்: சிலர் (ஆண்களும் பெண்களும்) இயற்கையாகவே நெருக்கமாக பழகும் (தொட்டுப் பேசுவது, அளவுக்கு அதிகமாக சிரிப்பது, எச்சில் உணவைப் பகிர்ந்து கொள்வது போன்ற ) இயல்புடையவர்கள்.

திருமணம் ஆன பின்னரும் இது தொடரும்போது அது சிக்கலை ஏற்படுத்துகிறது. அது தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அந்தரங்க விவகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பேச்சுக்கள் நிச்சயம் தவிர்க்கப் படவேண்டும். அவை உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டவை. (Reserved).

ரகசியம் வேண்டாம்: ரகசியமாக எதையும் செய்யாதீர்கள். நீங்கள் ‘வெளியுறவு’ ஏதும் இல்லாமலிருந்தாலும் நீங்கள் எதையாவது மறைக்கிறீர்கள் என்ற உணர்வு வந்துவிட்டால் உங்கள் மீதான நம்பிக்கை போய்விடும். தகவல் தொடர்பில் விரிசல் ஏற்பட்டால் மனக்காயத்தை ஏற்படுத்தும். அவர்களாக எதையும் ‘கண்டுபிடிக்கும் படி’ நடந்துகொள்ள வேண்டாம். தினசரி நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது. உண்மையாக இருப்பது நம்பிக்கையை வளர்க்கும்.

அபாயப் பகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பல ‘காதல்’கள் பணியிடத்தில் துவங்குகின்றன. தற்செயலாக ஆரம்பித்து ‘துர்’செயலாக மாறி விடுகின்றது. குடும்பத்தினருடன் இருப்பதை விடக்  கூட வேலை செய்பவர்களுடன் அதிக நேரம் இருப்பது ‘நட்பு’ என்ற நிலையிலிருந்து ‘உறவு’ என்ற நிலைக்கு வழுக்கிச் செல்லக் காரணமாகி விடுகிறது.

மேலும் இப்போது இன்டர்நெட், செல்போன் ஆகியவற்றின் வளர்ச்சியால் cyber sex எனப்படும் வலைப் புணர்ச்சி வேகமாக வளர்ந்து(?) வருகிறது. இவற்றை தவிர்ப்பது நல்லது. உங்கள் துணைவர் இல்லாமல் விடுமுறையைக் கழிக்க வெளியில் செல்வதும் துரோகம் நடக்கக் காரணமாகி விடக்கூடும்.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதையும் உங்கள் இருவருக்குமான உறவில் விரிசல் ஏற்படுவதை விரும்பவில்லை என்பதையும் சுற்றியுள்ளவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இருவருக்கிடையே மற்றவர் யாரும் வருவதை விரும்பவில்லை என்பதை உணர்த்துங்கள். வெளியிடங்களுக்கு உங்கள் துணைவருடனே செல்லுங்கள். இண்டர்நெட்டை ‘நட்பு’ தேடப் பயன்படுத்தாதீர்கள். கூடா நட்பு ஏற்படும் சூழலைத் தவிர்த்து விடுங்கள்.

நண்பர்கள்-எச்சரிக்கை! சில நேரங்களில் எதிர் பாலின நண்பர்கள் இருவருக்குமே இருப்பார்கள். அது இயற்கைதான். ஆனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் நட்பு நீடித்திருக்க வேண்டும். உண்மைதான். அதே வேளையில் உங்கள் வாழ்க்கைத் துணைவருடன் பகிர்ந்து கொள்ளும் எல்லா விஷயங்களையும், உணர்ச்சிகளையும் அல்லது அதே அளவு நேரத்தையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது-கூடாது.

உங்கள் நண்பர்கள் உங்கள் துணைவரின் நண்பர்களாகவும் ஆவார்கள். அவர்கள் உங்கள் துணைவரின் எதிர் பாலினராக இருக்கக் கூடும்.அவர்கள் இருவரும் தனியாக இருக்கும் சூழல் வரக்கூடும். இதனால் இது போன்ற நட்பையே சிலர் தள்ளி வைக்கவோ அல்லது தவிர்த்து விடவோ செய்கிறார்கள். சில நண்பர்கள் திருமணம் ஆனது தெரிந்தும் பழையபடியே நண்பர்களாக இருப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் உங்கள் திருமண வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் உங்கள் நட்பைத் துண்டித்து விடுங்கள்.

உங்கள் இணையருக்குச் சொல்லுங்கள்: ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். ஒரு மனிதனாக (மனுஷியாக) நீங்கள் மற்றவர்களால் ஈர்க்கப் பட்டதை வெளிப்படுத்துங்கள். நீங்கள் (இணையர் வேறு யாராலும் கவர்ப்பட்டதைப் பார்த்து) பொறாமைப்பட்ட அல்லது கோபப்பட்ட  நேரத்தை பொறுமையாக நிதானமாக சொல்லிப்புரிய வையுங்கள்.

நீங்கள் ‘தடுமாற’ இருந்த அல்லது இருக்கக்கூடிய  நேரத்தையும் அதைத் தவிர்க்க என்ன செய்வது என்பதையும் குடும்ப வாழ்க்கையில் ஏதேனும் தொய்வு அல்லது குறைபாடு இருந்தால் அதை நீக்கி முன்னேறிச் செல்வது பற்றியும் பேசுங்கள்.

தந்தை பெரியார் சொன்னது போல “ஒருவருக்கொருவர் ஒத்த நண்பர்களாய் இருங்கள். மானம் பாராது விட்டுக் கொடுங்கள். பணிவிடை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திச் செய்யுங்கள்”. மண வாழ்க்கை இனிக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *