– மதுமதி
திராவிடம் தீபம் தோன்றியது
தவமிருந்து
பெற்ற குழந்தைக்கு
கிருஷ்ணசாமி என்று பெயரிட்டனர்..
பெயரிட்ட குழந்தைக்கு
உயிரிட்டது
இறைவன் என்றனர்;
அவன் வழி நின்றனர்;
இரண்டாண்டு
இடைவெளியில்
சின்னத்தாயம்மை
மீண்டும் கருவுற
இன்பம் இரட்டிப்பானது..
அவர்களுக்குத் தெரியாது..
கருவில் வளர்வது
சிசுவல்ல- _ -அது
பகுத்தறிவுப் பசு என்று..
பாரெல்லாம்
பகுத்தறிவுப் பாலை
புகட்டப் போகிறது அறியாமை அதனை
அகற்றப்போகிறது என்று
அன்றறியவில்லை அவர்கள்.
தீண்டாமையைத்
தின்ன வந்த திமிங்கலம் அது..
மூடநம்பிக்கையின்
முதுகெலும்பை
உடைக்க வந்த
சுத்தியல் அது..
திராவிடம்
என்ற வார்த்தைக்கு
விளக்கம் சொல்ல வந்த
அகராதி அது..
விதவைகளின்
இருண்டு போன
இல்லறத்தை
வெளிச்சமாக்க வந்த
நெருப்பு அது..
ஆரியர்களின்
அடக்குமுறைகளை
அடக்க வந்த
முரட்டுக் காளை அது..
ஜாதிச் சண்டையில்
காயம் பட்டவர்களுக்கான
முதலுதவிப் பெட்டி அது..
ஜாதி மதங்களைக்
கொன்று புதைக்க வந்த
கோடரி அது..
பாசிசப் பார்ப்பனர்களின்
குடுமியை
அறுக்க வந்த
அரிவாள் அது..
ஆமாம்..
செப்டம்பர் 17,1879
இந்த நாளில்தான்
ஈரோட்டிலே
இன்னுமொரு சாக்ரடீசை
ஈன்றெடுத்தார் சின்னத்தாயம்மை.
இராமனையே
விமர்சிக்கப் போகிற
அந்த வித்தகனுக்கு
இராமன் என்றே
பெயர் சூட்டினர்;
இறை பக்தியை
மெதுவாய் ஊட்டினர்;
ஆமாம்..
அந்த இராமன்தான்
அர்த்தமற்ற
சம்பிரதாயங்களை
சமாதியாக்க வந்த
சாமானியன்..
ஆமாம்..
அந்த இராமன்தான்
திராவிடன்
இழந்திருந்த
மானத்தையும்
மரியாதையையும்
மீட்டெடுக்கப் போராடிய
போராளி..
(ஈரோட்டுச் சூரியன் உதிக்கும்)