பெண் போலீஸ்
தந்தை பெரியார் அவர்கள் ஆண், பெண் சரிநிகர் சமம் என்ற கொள்கையுடையவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 1973 – கலைஞர் அரசு தமிழ்நாட்டில் முதன் முறையாக, பெண் போலீஸ் பிரிவு ஒன்றை நியமிப்பது என்று அறிவிப்பு வெளியிட்டது. அதனை அய்யா அவர்கள் மிகவும் பாராட்டி வரவேற்கத் தகுந்த ஒன்றாகும் என்று கூறினார்கள். பெண் போலீஸ் படையின் முதல் கட்டமாக, ஒரு சப் – இன்ஸ்பெக்டர், ஒரு ஹெட்கான்ஸ்டெபிள் அந்தப் பிரிவில் இருப்பார்கள். இதற்காக இந்த ஆண்டு ரூபாய் 82 ஆயிரம் செலவழிக்கப்படும் என்று முதலமைச்சர் நேற்று (20.7.1973) நடைபெற்ற நிதிநிலைக் குழுவின் கூட்ட முடிவில் நிருபர்களி டையே விளக்குகையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபற்றி, நீண்ட காலமாக சட்டமன்றத்தில் கேள்வி கேட்பதும், அதற்கு ஆளுங்கட்சி தரப்பில் ஏதோ ஒரு பதிலைச் சொல்வதும் வாடிக்கையான வேடிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. இன்று, நீண்ட நாளைய கனவு பலித்துவிட்டது. – செயல்வடிவம் பெற்றுவிட்டது. பெண்களை அடக்கி, அவர்களை ஆண்களின் அடிமைகளாக வைத்திருப்பதுதான் தருமம், சாஸ்திரம் என்ற மவுடீகம் ஆட்சி செலுத்திய நாட்டில், இன்று பழைமையின் கட்டுகள் ஒவ்வொன்றாக அறுத்து எறியப்படுகின்றன என்பதற்கு இவ்வறிவிப்பும் ஓர் சிறிய எடுத்துக்காட்டாகும்.
தமிழ்ச் சமுதாய விடுதலையின் விடிவெள்ளியாம் நம் அய்யா அவர்கள், அண்மைக் காலத்தில் மிகவும் வலியுறுத்தி வரும் கருத்துகளில் ஒன்று பெண்ணடிமை ஒழிப்பு என்பதாகும். பிராமணன் உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன் என்ற செயற்கைப் பேதத்தை உருவாக்கி வைப்பதற்கு ஜாதி என்ற வருணாசிரம தர்ம ஏற்பாடு என்பது எப்படிப் பயன்படுகின்றதோ, அதேபோல் ஆண் உயர்ந்தவர்; எஜமானர். பெண் தாழ்ந்தவர், அவரது நிரந்தர அடிமை என்பது போன்ற ஒரு நிலையைப் பாதுகாப்பதற்கான ஒரு ஏற்பாடுதான் திருமணம் என்பது என்ற விளக்கத்தினைப் பெண்ணடிமை ஒழிப்பு வீரராம், நம் கருத்துக் கருவூலம் அய்யா அவர்கள் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆணித்தரமாக விளக்கி வருகிறார்கள்.
இன்று, அகில உலகிலும் அக்கருத்து வெகு வேகமாகப் பரவி வருகிறது. திருமணம் என்ற அமைப்பு கூடாது. ‘‘The Institution of marriage must go” என்ற கருத்தினை மேற்கில் பெர்ட்ரண்ட் ரசலும், கிழக்கில் தந்தை பெரியார் அவர்களும்தான் வலியுறுத்தியவர்கள் ஆவார்கள்! இதுகுறித்து, விடுதலையில் தலையங்கம் ஒன்று தீட்டினேன். அதில் ஆழ்ந்து சிந்திக்காமல், வழக்கமான தோய்ந்த பாதையில் செக்குமாடுகள் சுற்றிச் சுற்றி வருவது போன்ற மனப்பான்மை உடையவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம்!
கீழ்ஜாதியினராக உள்ள பலரும்கூட, உரிமையை அனுபவிக்கத் தயங்கி அவர்களே பழைய ஏற்பாட்டினை வலியுறுத்தும் அவலம் போல, பெண்களேகூட இதனை எதிர்ப்பது இந்நாட்டில் ஆச்சரியமானதோ, அதிசயமானதோ இல்லை. நுகத்தடியை விரும்பும் மாடுகள் போல-கசாப்புக் கடைக்காரனை நம்பும் ஆடுகள்போல- விளக்கை நோக்கி ஓடும் விட்டில் பூச்சிகளைப்போல, பெண்களே ஆண்களை நத்தி, அவர்களைச் சார்ந்துதான் வாழவேண்டும் என்ற இழிநிலை பல்லாண்டுக் காலமாகத் தொடர்ந்து வந்துவிட்டதால், அவர்களால்கூட இப்புரட்சி, புதுமைக் கருத்துகள் ஜீரணித்துக் கொள்ளப்பட முடிவதில்லை.
பெண் ஏன் அடிமை ஆனாள்? என்ற நூல் தந்தை பெரியார் அவர்களால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே தரப்பட்ட பெண்கள் விடுதலைச் சாசனம் ஆகும்! எத்தனை தாய்மார்கள் அதனைப் படித்திருக்கிறார்கள்! பெண்களுக்கு நல்ல படிப்பைத் தந்து-கல்விக் கண்ணைத் திறந்து, 24 வயதுக்குமேல் சுதந்திரமாகச் செயல்படும் அளவுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டுவிட்டால் அவர்கள் அடிமைகளாக வேண்டிய அவசியம் ஏற்படவே ஏற்படாது!
சில ஆண்டுகளுக்கு முன் அனைத்திந்திய வானொலிக்குத் தந்த ஒரு பேட்டியில் (அன்றைய மத்திய அமைச்சர் டாக்டர் திரு. எஸ். சந்திரசேகருடன்) தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டபோது, 100 உத்தியோகங்கள் என்றால் அவற்றில் சரிபகுதியினைப் பெண்களுக்கு ஒதுக்கி விடவேண்டும் என்றார்கள்! 100- க்கு 50 சதவிகிதம் அவர்கள்தானே ஓட்டளிக்கிறார்கள். அது தேவைப்படும்போது இது கூடாதா? பெண்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள்- பிள்ளைப்பேறு எந்திரங்கள்-சமையற்கருவிகள் என்ற பழைய பத்தாம்பசலித்தனம் வெகுவேகமாக மாறிவிட்டதே!
இன்று, பிரதமர் அம்மையார் ஒரு பெண்; நான் என்னை ஒரு பலவீனமான பிரிவு என்று எண்ணியதே இல்லை என்று அவர் கூறுகிறாரே! அய்.ஏ.எஸ். முதல், வக்கீல், டாக்டர்கள், ஜட்ஜ்கள், ஸ்தானிகர்கள் முதலிய பலவற்றிலும் அவர்கள் இருக்கிறார்கள். விஞ்ஞானம் முதல் விண்வெளியில் பறப்பதுவரை அவர்கள் அறியாத கலைகளே இல்லை. பின் ஏன் இன்னமும் அவர்கள் ஆமைகளாய்- ஊமைகளாய்-பதுமைகளாய் இருக்கவேண்டும்? மனித சமுதாயத்தின் சரி பகுதி வீணாக ஆவதா? பாழாக ஆவதா? தந்தை பெரியார் அவர்கள் தலை சிறந்த மனிதாபிமானி, எனவே குமுறிக்கேட்கிறார்! அவர்கள் காட்டும் வகையில்தான் எதிர்காலம் அமையும் என்பது பலவகையில் நிரூபிக்கப்படுகிறது!
பெண் போலீஸ் தமிழ்நாட்டில் ஏற்படுவது மிகவும் சிறப்பானது. ஆண்களைவிடத் துடிப்பாகவும் கடமை உணர்வுடனும் அவர்கள் செயல்படுவார்கள் என்பது உறுதி! என்று குறிப்பிட்டு இருந்தேன். புரட்சி இதழில் 39 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் பெண் போலீசு வேண்டும் என்று 22.4.1934 ஆம் நாளிட்ட இதழில் துணிவான கருத்தை வெளியிட்டார்கள். அதை அப்படியே தருவது அறிவுப் பூர்வமானது என்று கூறமுடியும்.
நேற்று ஈரோட்டில் விபச்சார விடுதி வைத்து நடத்தியதற்காக வீரம்மாளுக்கு ஒரு வருஷத் தண்டனை டிப்டி கலெக்டர் விதித்தார். பெண்களுக்குப் பொருளாதாரச் சுயேச்சையில்லாமையும், குடும்பத்தில் சமத்துவமின்மையுமே பெண்களில் சிலரை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கிற தென்பதை யாரும் மறுக்கவே முடியாது. விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்குத் தக்க தொழில் முறையைக் கற்றுக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒருக்காலும் இன்றைய விபச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள் என்பது உறுதி. ஆகவே, விபச்சாரப் பெண்களுக்கு அவர்களுடைய வயிற்றுப்பாட்டுக்குத் தக்கது செய்ய முன் வர வேண்டும்.
டிப்டி கலெக்டர் அவர்கள், மேற்படி கேசில் 1 வருஷத் தண்டனை விதித்தது மிகவும் கடுமை என்பதே நமது வாதம். முதல் தடவையாக, நன்கு எச்சரித்துவிட்டு அனுப்பியிருக்கலாம். அல்லது, மிகச் சிறிய தண்டனையைக் கொடுத்திருக்கலாம். மற்றும் ஒரு விஷயத்தை டிப்டி கலெக்டருக்குத் தெரிவிக்க ஆசைப்படுகிறோம். அதாவது, விபச்சாரத்தை ஒழிக்க ஆண் போலீசைவிட, இந்நிலையில் பெண் போலீசே சிறந்ததென்ற ஓர் முடிவிற்கு வந்து, பல முற்போக்கு நாடுகள் பெண்களை நியமித்திருக்கின்றன.
பெண்களின் பல வழக்குகளில் ஆண் போலீசார் சரியாக நடந்து கொள்ள வில்லை என்பதே மெக்ஸிகோ, பிரான்ஸ், சைனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் துணிந்த முடிவு. குற்றத்திற்கு ஆளான வாலிபப் பெண்களை, ஆண் போலீசார் தக்கவாறு நடத்த இயலுமா? அன்றி, பெண் போலீசாரால் முடியுமா என்பதைக் கலெக்டர் தீர ஆலோசனை செய்து பார்க்கட்டும்.
இன்றைய இந்தியச் சீர்கேடான அமைப்பிலும், பெண்களின் வறுமைத் தன்மையிலும் சிறிது கவனம் செலுத்தி, இனி டிப்டி கலெக்டர் தக்கவாறு நடத்தை எடுத்துக் கொள்வார் என்ற துணிவில் இத்தோடு முடிக்கின்றோம்.
– நினைவுகள் நீளும்…