நீதி தேவன் மயக்கம்…

2024 ஆசிரியர் பதில்கள் செப்டம்பர் 1-15
1. கே: தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களை நிரப்பாமல், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முதலீட்டாளர் மாநாடு கூட்டலாமா? என்ற எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? காலிப் பணியிடங்களை பெருமளவில் நிரப்பாமலிருந்தவர் இவர்தானே?
– கே.கோவிந்தன், தர்மபுரி.
ப: இத்தகைய விமர்சனங்கள் செய்வோர் முதலில் தங்களது ‘காலி இடங்களை’ சரியான முறையில் நிரப்பிக்கொண்டால், இப்படி அபத்தப் பேச்சுகளைப் பேசமாட்டார்கள். முதலீடு என்பதன் முக்கியம் பற்றிய பழுதான பார்வையையும் சரிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
2. கே: ‘நீட்’ ஒழிக்கப்பட்டாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்பது கட்டாயம்தானே?
– எஸ்.சுசீலா, வேளச்சேரி.
ப: சமூகநீதி என்பதற்குக் குறுக்கே  மாறுவேடத்தில் வந்த தடைதான் ‘நீட் தேர்வு’. ஆனால், ஒடுக்கப்பட்
டோரின் உரிமை என்பது சமூகநீதி – அடிப்படை உரிமை சார்ந்தது!
3. கே: வயநாடு நிலச்சரிவைக் காரணம் காட்டி, முல்லைப் பெரியாறு அணையை அகற்ற முயலும் கேரள அரசின் முயற்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– வ.கோபி, இராமநாதபுரம்.
ப: தேவையற்ற வீண் கனவு – வெட்டிப் பேச்சு – அபத்த ஆசைகள்!
4. கே: எதிர்க்கட்சி முதல்வர்கள் மீது வழக்குகளைத் தொடுப்பது, மைனாரிட்டி பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சியிலும் தொடர்வதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் என்ன செய்யவேண்டும்?
– ச.சங்கர், மன்னார்குடி.
ப: களங்களில் மக்கள் மன்றம், நீதிமன்றம், வீதிமன்றம் முதலிய எல்லாவற்றிலும் நீதி கேட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை, முயற்சிகளை முனைப்புடன் செய்யத் தவறக் கூடாது.
5. கே: பதவிக் கால நீட்டிப்பு செய்யப்படாமலே ஆளுநர் பதவியில் தொடர்வதைச் சட்டரீதியாக எப்படித் தடுக்கலாம்?
– கே.புஷ்பா, கோபிசெட்டிப்பாளையம்.
ப: ‘Until Further Orders’ என்பதே  ஒரு விரும்பத்தகாத – இரண்டாம் கட்ட நிலை. சொரணை உள்ளவர்
கள் அத்தகைய பொறுப்பை ஏற்கவே மாட்டார்கள்.
6. கே: ஜாதிக் கலவரம்  நடக்காமல் இருக்க கோயில்களைத் தற்காலிகமாக மூடுவது சரியான நடவடிக்கைதானே? உயர்நீதிமன்றம் இதைக் கண்டிப்பது சரியா?
-ம.சின்னப்பொண்ணு, அரியலூர்.
ப: ‘நீதி தேவன் மயக்கம்’ – அறிஞர் அண்ணாவின் நாடகம் – பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் அந்த நூலைப் படியுங்கள். விடை கிடைக்கும்.
7. கே: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தற்போது எதிர்ப்புத் தெரிவிப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– எம்.லக்ஷ்மிகாந்தன், அரண்வாயில்.
ப: என்னங்க இப்படிக் கேக்குறீங்க… அவர் ‘நிதிஷ்குமார்’ ஆயிற்றே! மறந்துவிட்டீர்களா! ஹி…. ஹி…. ஹி….
8. கே: பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் திராவிட மாடல் செயல் திட்டங்களைப் பின்பற்ற முடிவு செய்திருப்பது, எதிர்கால இந்திய  அரசியலில் நிலைக்க ‘திராவிட மாடல்’தான் ஒரே வழி என்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாமா?
– பி.மகேஷ்வரி, காரைக்குடி.
ப: அவர் ஒரு விசித்திரமான மூடநம்பிக்கைக்கு – முழுக் குத்தகைதாரர். அவரை நம்பி எந்தப் பதிலும் சொல்ல முடியாது.
அவர் கட்டிய கோயில், ‘பிராமணர்களுக்கு 100 கோடி ரூபாய் மானியம் இவற்றை முதலில் நம்பினார். இப்போது மாற்று வழி தேடுகிறார்! எனவே, அவரைப் பற்றி நாம்7  மதிப்பீடு செய்வது அவ்வளவு எளிதல்ல.