நூல் : சமயங்களின் அரசியல்
ஆசிரியர் : முனைவர் தொ. பரமசிவன்
வெளியீடு : விகடன் பிரசுரம்,757, அண்ணா சாலை,சென்னை – 600 002
பக்கங்கள் : 176 ரூ. 85.
நூலிலிருந்து…
தமிழகத்தில் எழுந்த பல்லவ, பாண்டிய அரசுகள் தங்கள் உருவாக்கத்தின்போது சமணம் அல்லது வைணவம் அல்லது சைவம் என வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மதச்சார்பு நிலையினை எடுத்தன. ஆனால், அதற்குப் பின்னர் பேரரசாக (ஏகாதிபத்தியமாக) உருவெடுத்த சோழ அரசு, அரச மதமாகச் சைவத்தை மட்டுமே கொண்டிருந்தது.
எல்லாவற்றையும் தன்னுள் கரைத்து அல்லது அழித்து மேலேழுதல் என்னும் அதிகார மேலாண்மைக்குச் சைவ சமய நிறுவனங்களான கோயில்கள் அவர்களுக்குத் துணைநின்றன. இதனால், கோயில் கட்டட அமைப்பில் இரண்டு மாற்றங்களைச் சோழ அரசு உருவாக்கியது.
பல்லவர்கள் எடுப்பித்த சிவன் கோயில் கருவறை உட்சுவரில் வழிபாட்டிற்குரிய மூர்த்தமாக (திருமேனியாக) சோமாஸ்கந்தப் படிவங்களே வடிக்கப்பெற்றன. சிவபெருமான் உமையுடனும் குழந்தைக் கந்தனோடும் (ச+உமா+ஸ்கந்த = சோமாஸ்கந்த) இருக்கின்ற இந்தப் படிமம் சமணர்களின் துறவு நெறிக்கு மாற்றாகக் குடும்ப அமைப்பை நிலைநிறுத்தும் சைவர்களின் முயற்சியாகும். இம்முயற்சிக்கான குறிப்புகளை அப்பர் தேவாரத்தில் நிறையவே காணலாம்.
ஆனால், சோழ அரசு வடக்கிலும் தெற்கிலும் தன் ஆதிக்கத்தை விரிவு செய்தபோது சைவக்கோயில் கருவறை மூர்த்தங்கள் (திருமேனிகள்) அப்புறப்படுத்தப்பட்டு அருவுருவமான சிவலிங்கம் திருநிலைப்படுத்தப்பட்டது. இது முதல்நிலை மாற்றமாகவும் அடுத்த நிலை மாற்றமாகப் பழைய கோயில்களில் மரியாதை பெற்றிருந்த பழைய தாய்த் தெய்வங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
சோழர்களின் தொடக்க காலக் கட்டுமானக் கோயில்களில் சிவபெருமானுக்கு மட்டுமே கருவறைகள் எடுக்கப் பட்டன. (கி.பி.1012இல் சோழ ஏகாதிபத்தியத்தின் உச்ச கட்ட வெளிப்பாடான தஞ்சைப் பெருவுடையார் கோயிலை முதலாம் இராசராசன் கட்டினான்).
இந்தக் கோயில் அரசதிகாரத்தின் பருண்மை யான வெளிப்பாடாக அமைந்தது. தமிழகத்தில் அன்றும் இன்றும் 196 அடி உயரமுள்ள விமானம் (கருவறை மேற்பகுதி) அமைந்த கோயில் வேறெதுவும் இல்லை.
கோயில் என்பது அரசனின் உடைமை என்று காட்டுவது போல அரசனின் பெயரே கோயிலுக்கும் இடப்பட்டது. இந்தக் கோயிலின் முதற் கல்வெட்டு அரசன் கூறுவதுபோல அமைந்துள்ளது. பாண்டிய குலாசனி (பாண்டியர்களுக்கு இடிபோல் அமைந்தவன்) வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச இக்கற்றளி இராஜராஜீச்வரம் உடையார்க்கு என்பதே அந்தக் கல்வெட்டின் முதல் வாசகமாகும். அதாவது, கோயில் என்பது அரசதிகாரத்தின் மறுபக்கமாகவும், துணை அதிகாரமாகவும் செயலாற்றியது என்பதே இதன் பொருளாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டுத் தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு இறுதியில் முதலாம் இராசராசன் ஒரு பேரரசை உருவாக்கும் காலம் வரை அரங்கேறிய நிகழ்வுகளே தமிழ்ச் சமூகத்தின் மேல் வைதீகம் பெற்ற வெற்றியை உணர்த்தப் போதுமானவை யாகும். பல்லவ அரசின் சரிவு, சோழ அரசின் எழுச்சி ஆகிய இரண்டின் ஊடாகவும் தனக்கெனத் தனிவழி ஒன்றினைக் கொண்ட வைதீகம் வெற்றிகரமாகச் செயல்பட்டது. அந்த வெற்றிக்கான காரணங்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காணலாம்.
1. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமண, பௌத்த மதங்களிலிருந்து பல்லவ அரசு மரபு நிரந்தரமாக வெளியேறியது. மறுதலையாகத் தொடர்ந்து அதனுடைய வீழ்ச்சிக் காலம் வரை வேதப் பார்ப்பனர்களுக்கான விளைநிலக்கொடை, மனநிலக் கொடை ஆகியவை அரசின் தலையாய கடமையாகப் பல்லவ அரசு மரபினரால் மாற்றப்பட்டுவிட்டன.
வேதக் கல்வியின் குறைந்த படிப்பான க்ரமம் வரை படித்த க்ரம வித்தகர்களுக்கு வழங்கப்பட்ட மனைநிலமும் மனையுமே கிராமம் என்று பெயர்பெற்றன. விளைநிலக்கொடையும் மனைக் கொடையும் வேதக் கல்விக்கான கொடையும் (வேத விருத்தி) வேதத்தின் அங்கங்களுக்கு உரை சொல்லுவோருக்கான நிலக்கொடையும் (பாஷ்ய விருத்தி) கோயிலில் அர்ச்சனை செய்யும் சிவப் பிராமணர்களுக்கு அர்ச்சனா போகமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.
இவையன்றி ஹிரண்ய கர்ப்ப, கோகர்ப்ப தானங்களும் அரசர்களால் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன. ஆக, நஞ்சை நிலத்து உபரியால் உருவான அரசு உருவாக்கம் என்பது மறுபுறமாகத் தமிழ்நாட்டில் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தைத் தன் முதுகிலே ஏற்றிச் சுமந்து வந்தது. பின்வந்த சோழ அரசர்களும் பாண்டிய அரசர்களும் பல்லவர்களின் இந்த வைதீக ஆதரவுப் போக்கினைச் சில சிறிய மாற்றங்களுடன் பின்பற்றினர். சில நிலைகளில் பெரிதாகவும் வளர்த்தனர்.
2. வேளாண் பொருளாதாரம் என்பது பார்ப்பனர் பூசை செய்யும் பெருங்கோயிலோடு பிணைக்கப்பட்டது. வேளாண் பொருளாதாரக் கட்டமைப்பில் உற்பத்தி சாதியார் மட்டுமின்றி சேவைச் சாதியாரும் கோயிலோடு பிணைக்கப்பட்டனர். கோயிலை நம்பிக் குடிகள், கோயிலை நம்பிக் குசவன் பிழைத்தான் என்பது போன்ற சொல்லாடல்களும் இக்காலத்தில்தான் தோன்றின.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஓர் அறவுரையன்று: ஓர் எச்சரிக்கையாகும். எனவே, அது சார்ந்த உற்பத்திச் சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் கோயிலோடு சேர்த்தே நாம் பேசியாக வேண்டும். உற்பத்தி உறவுகள் என்பன உழவர், கொல்லர், தச்சர், இடையர் எனக் கோயிலோடு இறுகப் பிணைக்கப்பட்ட முறையாகும்.
3. பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடங்கிய வட்டாரத் தலைவர்களும் அரசுக்கு நெருக்கமாக வேண்டி, கோயில்களை எடுப்பித்தனர். பல்லவர் காலச் சைவத்தை மேலும் பார்ப்பனிய மயமாக்க சோழ அரசு செய்த மாற்றங்கள் குறிப்பிடத் தகுந்தன.
அவற்றுள் ஒன்று, இயற்கை உரத்தின் (மூல வளத்தின்) தெய்வ மான மூதேவியினை வைதீக அரங்கிலிருந்து (பெருங்கோயில் உள்ளிருந்து) வெளியேற்றியதாகும். இம்மாற்றத் திற்கான காரணம் அரசு உருவாக்கத்திற்கு அடிப்படையான பண்பாட்டுத் தேவையாகும். விளைந்த நெல்லிற்கும் அதனால் பெற்ற பொன்னிற்கும் இலக்குமி (திருமகள்) தெய்வமாவாள்.
ஆனால், இலையும் தழையும் சாணமும் சேறுமான மண் சார்ந்த அழுக்கினை உரமாக மாற்றும் மூதேவி (மூத்த தேவி) தெய்வம் மூலவளத்தின் தெய்வமாகும். இன்னும் சொல்லுவதானால் நிலத்தின் மீதான முதல் உரிமை நிலத்துக்கு வளத்தினைத் தரும் அந்தத் தெய்வத்திற்கே உரிமையாகும். நெல்லைப் போலப் பிரித்தெடுக்க முடியாதபடி நிலத்தின் மீது உரமும் உரிமையும் உடைய தெய்வத்தினை, நிலத்தின் மீது முற்றுரிமை கொண்டாடும் அரசதிகாரத்தால் சகித்துக்கொள்ள இயலவில்லை. முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி.
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள
என்று தொடங்குகிறது. செல்வங்களையும் நிலத்தையும் தான் ஒருவனே கொள்ள வேண்டுமென்று அரசன் விரும்புகின்றான். விளைவு தரும் நிலத்தைப் பெண்ணாக உருவகிப்பது மரவு. நிலத்தின் மீதான முற்றுரிமையினைத் தாமே அனுபவிக்க விரும்பிய பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் மனைவியருக்கு அவனி முழுதுடையாள், புவனமுழுதுடையாள், தரணிமுழுதுடையாள், மூவுலகுடையாள், திரிபுவன மாதேவி என்று பட்டப் பெயர்கள் இட்டுக் கொண்டதற்கு ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
இந்தப் பின்னணியில் விளைநிலத்தின் முதல் தேவியான மூத்த தேவியின் வழிபாடு பெருந்தெய்வக் கோயில்களிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளலாம். அதாவது, இயற்கை என்னும் மூல ஆதாரத்தை அதிகார மையங்கள் முழுமையாக வெற்றிகொள்ளும்போதே அரசு உருவாகின்றது என்பதை இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.
4. சோழ அரசு பேரரசாக உருவாகிற போது சைவ சமயம் அரச மதமாயிற்று. ஆனால், அது திருநாவுக்கரசர் கட்டமைத்த தமிழ்ச் சைவமாக அமையவில்லை. மாறாகத் திருஞானசம்பந்தர் கட்டமைத்த வேள்வியினை மையம் கொண்ட வைதீக சைவ சமயமாக இருந்தது.
அதாவது வேள்விச்சாலை(யாகசாலை)ப் பொறுப்பிலிருந்த பார்ப்பனர்கள் கருவறைப் பூசை செய்யும் சிவப்பிராமணர்களாகவும் மாறிக்கொள்ள அது வழிவகுத்தது. இந்த வடமொழிச் சார்பு பற்றியே சோழ மன்னர்களின் சைவ குருமார்கள் காஷ்மீரத்துப் பண்டிதர்களாக அமைந்தனர். எனவே, கோயிலுக்கும் யாகசாலைக்கும், கருவறைக்குமான உறவு இன்றளவும் பிரிக்க முடியாதவையாயிற்று. தஞ்சைக் கல்வெட்டுக்களில் காணப்படும் அரசர்களின், சைவ குருமார்களின் பெயர்கள் எதுவும் தேவாரத்திலிருந்து பெறப்படவில்லை.
மாறாக, வடமொழிப் பெயர்களாக உள்ளன. இந்த வைதீகச் சார்பு பற்றி நிகழ்ந்த மற்றொரு மாற்றத்தை முன்னரே கண்டோம். எல்லாவற்றையும் ஒரு தரப்படுத்துதல் அல்லது ஒருமுகப்படுத்துதல் என்பது அதிகார மையங்களின் செயல்பாடாகும். இதன் வழியாக, ஒருவனே அரசன் என்பது போல இறைவனுக்கும் ஒரே சிவலிங்கத் திருமேனியை சோழ அரசு கற்பித்தது. தொடக்க காலப் பல்லவர்களின் சிவன் கோயில்களில், கருவறையின் உட்புறச்சுவரில் சிவமூர்த்தங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
இன்றளவும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும், திருத்தணி வீரட்டானேசுவர் கோயிலிலும் அவ்வகையான மூர்த்தங்களைக் காணலம். ஆனால், சோழ நாட்டுக் கோயில்களிலும் சோழர்களால் வெற்றி கொள்ளப்பட்ட பாண்டிநாட்டுக் கோயில்களிலும் சிவ மூர்த்தங்கள் அகற்றப்பட்டு சிவலிங்கம் நடப்பட்டது.
சிவலிங்கம் என்பது உருவமும் அல்லாத அருவமும் அல்லாத அருவுருவத் திருமேனி என்று கூறப்பட்டது. ஆனால், மக்களின் உருவ வழிபாட்டு உணர்வினை ஈடு செய்வதற்காகக் கருவறைச் சுவரின் மேற்கு தேவகோட்டத்தில் லிங்கோற்பவ திருமேனிகள் அமைக்கப்பட்டன.
இது சிவலிங்கத்திற்குள் உருவம் செதுக்கப்பட்ட வடிவமாகும். தேவாரம் கூறும் ஏனைய வடிவங்கள் திருவிழாவிற்குரிய ஊர்வலச் (உற்சவ) செப்புத் திருமேனிகளாக வெண்கலத்தில் வடிக்கப்பட்டன. கருவறையில் சிவலிங்கம் மட்டுமே நிலை கொண்டது. சோழர்கள் பின்பற்றிய காஷ்மீரிய சைவ நெறியிலிருந்து இது உருவாகியிருக்க வேண்டும்.
சோழர் காலத்தில் சைவம் மேலும் மேலும் வைதீக மயப்படுத்தப்பட்டதற்கு மீண்டும் ஒரு சான்றினை எடுத்துக் காட்டலாம். கி.பி.11ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாம் இராசேந்திரன் எடுப்பித்த கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலில் மிக நேர்த்தியாகப் பெரிய அளவில் வடிக்கப்பட்ட சரஸ்வதி (கலைமகள்) சிற்பம் காணப்படுகிறது.
திராவிடத் தெய்வமான மூதேவி மதிப்பிழந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் சரசுவதி என்ற வைதீகப் பெண் தெய்வம் கோயிலுக்குள் நுழைக்கப்பட்டது. தோற்றக் காலத்தில் வெள்ளைச் சேலை உடுத்திய சரசுவதி, சமண மரபில் பிறந்த வாக்தேவி (சொற்களின் தலைவவி) ஆவாள். இத்தெய்வத்தையே சிந்தாமணிக் காப்பியத்தில் நாமகள் என்று திருத்தக்கத் தேவர் குறிக்கின்றார். சமண மரபிலிருந்து வைதீகத்தால் திருடப்பட்டு சரஸ்வதி (சரஸ்-_பொய்கை; பொய்கையிலுள்ள வெள்ளைத் தாமரையில் வதிபவள்) எனப் பெயரிடப்பட்டு சைவக் கோயிலுக்குள் நுழைக்கப்பட்டாள்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், பத்தாம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்தில் வைணவத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். பல்லவ அரச மரபு, தமிழ் அரசாக எழுவதற்கு முந்தியவர்களே முதலாழ்வார்கள் மூவரும். இவர்கள் மூவரும் தொண்டை மண்டலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பாடல்களில் (பாசுரங்களில்) பல்லவ அரச மரபு பற்றிக் குறிப்பு எதும் இல்லை. மொத்தத்தில் ஆழ்வார்களின் பாசுரங்களில் இரண்டு கட்ட வளர்ச்சி நிலைகளையே நாம் பார்க்க முடிகிறது. ஒன்று _ பாகவதக் கதைகளை (கிருஷ்ணாவதாரத்தின் ஆயப்பாடிக் கதைகளை) முன்னிறுத்திய முதற்கட்டமாகும்.
இரண்டாவது _ இராமாயணம், மகாபாரதம் ஆகிய பெருங்கதையாடல்களை முன்வைத்த காலப் பகுதியாகும். மூன்றாவது _ கீதை உரைத்த கண்ணனை முன்னிலைப்படுத்தியது 19ஆம் நூற்றாண்டுப் பிராமணியமும் அதற்குப் பின்னர் வந்த சர்.பி.இராதாகிருஷ்ணனும் ஆவர்.
12 ஆழ்வார்களின் பாசுரங்களிலும் கீதையைப் பற்றிய குறிப்பு, மாயன் அன்று ஓதிய வாக்கு என திருமழிசை ஆழ்வாரின் ஒரே ஒரு பாசுரத்தில் மட்டுமே வருகின்றது என்பது நிகழ்கால இந்துக்களுக்கு அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். சிவப் பிராமணர்களைப் போலவே வைணவ அர்ச்சனைப் பிரிவினரான பட்டாச்சாரியர்களும் கலப்புச் சாதியினரே ஆவர். (இதனைப் பின்னர் விளக்கலாம்) ஆனால், (ஸ்மார்த்த) வைதீகம் அதற்குள்ளும் வேலை செய்தது. தன் சாதி மேலாண்மையினை மறு உற்பத்தி செய்து கொண்டது.
வைணவக் கோயில்களின் கருவறையில் பூசனை செய்வோரில் ஒரு பிரிவினர், தங்களை வைகானசர் எனக் கூறிக்கொண்டனர். அதாவது, தங்களை விகானஸ் என்னும் முனிவர் (ரிஷி) மரபில் வந்தவர்கள் என்றும், தாங்கள் திருமாலைத் (விஷ்ணுவை) தவிர, வேறு கோலங்களைப் (மூர்த்தங்களை _ திருமேனிகளை) பூசனை செய்யமாட்டோம் என்றும் வாதிட்டனர். இதன் உண்மையான பொருள் என்னவென்றால் ஆழ்வார்கள் என்ற பெயரில் கோயிலுக்கு உள்ளாக திருநிலைப்படுத்தப்பட்ட சந்நிதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதே ஆகும்.
பல்வேறு சாதிகளிலும் மனிதராகப் பிறந்து, திருமாலைப் பாடிப் புனிதராக மாறிய ஆழ்வார்களை சாதி மேலாண்மை உணர்வுடன் போற்ற மறுத்தது வைகானசம் ஆகும். இவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆழ்வார்களைக் கொண்டாடிய மறுதரப்பினர் தங்களை பாஞ்சராத்ரிகள் என அழைத்துக் கொண்டனர். இந்த முரண் இன்றுவரை மண உறவுகளிலும் நிலைத்து நிற்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
வைகானசம் ரிஷிப்ரோக்தம், பாஞ்சராத்ரம் வேதப்ரோக்தம் (வைகானசம் முனிவர் வழிப்பட்டது, பாஞ்சராத்திரம் வேத வழிப்பட்டது) என்பதே வைணவர்களின் நம்பிக்கையாகும். பாஞ்சராத்திர ஆகமங்களை இறைவனே அய்ந்து இரவுகளில் வெளிப்படுத்தி அருளினான் என்பது பாஞ்ச ராத்திரிகளின் நம்பிக்கையாகும்.
ஆனால், நடைமுறையில் பெறப்பட்ட உண்மை என்பது ஆழ்வார்களின் புனிதத்தை வைகாசனர் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர் என்பதேயாகும். அன்றைய அரசதிகாரம் அவர்களையே ஆதரித்திருக்க வேண்டும். இல்லையென்றால், பாஞ்சராத்திரப் பெரும்பான்மையரை எதிர்க்கும் தைரியம் அன்று சிறுபான்மையினருக்குக் கிடைத்திராது. பிராமணியத்திற்கு உள்ளும் வைதீகம், பிறப்பு வழி மேன்மையினைப் பேசி வருகின்றது என்பதால் தமிழ்நாட்டு வைணவக் கோயில்களில் இதுவே இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
வைகாசனப் பிராமணருக்கும், பாஞ்சராத்திரப் பிராமணருக்கும் இடையிலான மற்றொரு வேறுபாடு வைணவ முத்திரை (சமாச்ரயணம்) பெறுதல் ஆகும். ஒரு வைணவ ஆசாரியனை அணுகி, தீயில் சுடப்பட்ட சங்கு சக்கரப் பொறிகளை அவர் வழி இரண்டு தோள்களிலும் ஒரு வைணவன் பொறித்துக்கொள்ள வேண்டும். இந்தத் தீட்சையினைப் பாஞ்சராத்திர பிராமணர்கள் பெற்றுக் கொள்வர்.
தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி
திகழ்திருச் சக்கரத்தே நின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு
குடிகுடி ஆட்செய்கின்றோம்
_ (பெரியாழ்வார் திருமொழி திருப்பல்லாண்டு _ 1:7) என்பது பெரியாழ்வாரின் பாசுரம். ஆழ்வார்களையும் அவர்களது புனிதப் பாசுரங்களையும் ஏற்றுக் கொள்ளாத வைகாசனப் பிராமணர்கள், மற்றவர்களை (அதாவது பாஞ்ச ராத்திரிகளையும், வைணவ தீட்சை பெறுகின்ற மற்ற சாதிக்காரர்களையும்) ராமானுஜ மதஸ்தார் என்று குறைவாகவே குறிப்பிடுவர்.
சிவப் பிராமணர்களைப் போலவே வைணவப் பிராமணரும் கலப்புச் சாதியினராகவே உருவாகி இருக்க வேண்டும். பிராமணர்கள் கி.பி.ஏழாம் நூற்றாண்டளவிலேயே பிற சாதிகளில் பெண் கொண்டனர் என்றும், பிராமணப் பெண்களைப் பிற சாதியினர் மணந்து கொண்டனர் என்றும் சி.மீனாட்சி குறிப்பிடுகிறார். பேரா. ந. சுப்பிரமணியனும் இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறார்.
சமூக அடுக்குகளின்படி மேல் சாதி ஆண் ஒருவன் கீழ் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்வது அனுலோமம் என்றும், கீழ் சாதி ஆண் ஒருவன் மேல் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்வது பிரதிலோமம் என்றும் வடசொற்களால் குறிக்கப்பட்டன. தமிழிலும் ஏனைய திராவிட மொழிகளிலும்கூட இந்த வழக்கத்தினைக் குறிக்கும் சொற்கள் இல்லை. எனவே, இந்த நடைமுறை, இடம்பெயர்ந்து வந்த பிராமணர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிரதிலோமத் திருமண உறவுகளால் தங்கள் மனித வளத்தைப் பெருக்கிக் கொண்ட பிராமணர் சாதிப்புனிதம் சாதி இழிவு ஆகியவற்றை நிலைநிறுத்த மற்றொரு வேலையினைச் செய்தனர். வேள்விச் சாலையில் வேத மொழியினையும் கோயிற் கருவறைக்குள் வடமொழியினையும் அரசதிகா ரத்தின் துணையோடு கொண்டு சென்ற பிராமணர்கள், தங்கள் வீட்டு மொழியாகச் சமஸ்கிருதத்தை (வடமொழியை)க் கொள்ள வில்லை.
விளைநிலமும் மனையும் அளித்த பல்லவ, சோழ மன்னர்களை நோக்கி வடநாட்டிலிருந்து விரைவாக இடம் பெயர்ந்த பிராமணர்கள் தங்களுடன் பெண்கள் இன்றியே வந்தனர். எனவே, அவர்கள் வேறு வழியின்றித் தம்மிலும் தாழ்ந்த சாதிப் பெண்களைத் திருமணம் செய்தபோது, சமஸ்கிருதம் வீட்டு மொழியாக விளங்க இயலாது போயிற்று.
ஏனென்றால், தாய்மொழி என்பது அடுத்த தலைமுறையினருக்குப் பெண்களின் வழியாகவே கடத்தப்படுகின்றது. இதுவே, மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். சமஸ்கிருதம் பிராமணர்களுக்குத் தாய்மொழியாகவும் வீட்டு மொழியாகவும் விளங்க இயலாமற் போனதற்கும் இதுவே காரணம். அது மட்டுமன்று. பிராமணர்கள் சாதி ஆதிக்க உணர்வோடும் ஆணாதிக்க உணர்வோடும் பெண்களுக்கு சமஸ்கிருதக் கல்வியைத்தர மறுத்தனர்.
மேல்சாதி உணர்வும் ஆணாதிக்க உணர்வும் சேர்ந்த காரணத்தால் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பிராமணப் பெண்களுக்கு சமஸ்கிருதக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மணவாள மாமுனிகள் தனது முமுட்சுப்படி உரை முன்னுரையில் ஸ்ரீய:பதிப்படி உபயதோஷமுமின்றிக்கேயிருந்தாகிலும் ஸமஸ்கிருத வாக்ய பஹுளமாகையாலே பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமையாலும் என்று குறிப்பிடுகிறார். இதன்படி பேதைகளைப் போலவே பெண்களும் சமஸ்கிருதக் கல்விக்குத் தகுதியற்றவர்கள் என்று பிராமணர்கள் கருதியது தெரியவருகின்றது.
வேதப் புனிதத்தைப் போலவே சமஸ்கிருதப் புனிதத்தையும் கொண்டாடிய காரணத்தால் முதலில் இடம்பெயர்ந்த பிராமணர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடிய ஆழ்வார்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், பின்வந்த பிராமணர்கள் கோயிலுக்குள் ஆழ்வார் திருமேனிகளை (மூர்த்தங்களை) கொண்டு வந்தபோது அவர்களின் எண்ணிக்கை வலிமை கருதி வைகானசர் அதனை ஏற்றுக்கொண்டு ஒரே கோயிலுக்குள் ஆழ்வார் சந்நிதிகளில் பாஞ்சராத்திரப் பிராமணரைப் பூசனை செய்ய அனுமதித்தனர்.
கி.பி.ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் சோழ அரசு பேரரசாக உருவெடுத்தபோது வைணவக் கோயில்கள் பெரும்பாலும் வைகானசம் சார்ந்தே அமைக்கப் பட்டன. பாண்டி நாட்டில் தாமிரவருணிக்கரைக் கோயில்களில் பெரும்பான்மையானவை வைகாசனக் கோயில்களே.