நாடு கலந்த காதலர்களின் சுயமரியாதை திருமணம்

அக்டோபர் 1-15

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த அலைஸ் யான்ஸ் டோவா தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு மகேஷைக் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், செப்டம்பர் 17இல், சென்னை பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தத் திருமணத்தின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள  இருவரையும் சென்னை கலைஞர் நகரிலுள்ள அன்பு மகேஷின் வீட்டில் உண்மை இதழுக்காக சந்தித்தோம்.

உண்மை: அலைஸ்யான்ஸ் டோவா, வணக்கம். உங்களைப்பற்றிச் சொல்லுங்கள்?

 

அலைஸ்: நான் செக் ரிபப்ளிக்கின் தலைநகரான பிராஃக்கு என்ற நகரத்தில் பிறந்தவள். எனது தாய் மார்ச்சிலா மிக்கே கோவா. அவர் ஆசிரியராக இருக்கிறார். தந்தை வாக்ஸ்டவ் யான்டா கணக்காளராக இருக்கிறார். (யான்ஸ்டோவா என்றால் `பெண்`என்றும்  யான்ஸ்டா என்றால் `ஆண்`என்றும் பொருள்) நான் நடன ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

உண்மை: தமிழ்நாட்டுக்கு வந்ததன் பின்னணியைப் பற்றி சொல்லுங்கள்?

அலைஸ்: கல்லூரியில், இன்டோலஜி துறையில் முதன்மைப் பாடங்களாக தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், பெங்காலி ஆகிய மொழிகள் இருந்தன. தமிழ் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. ஆகவே, தமிழைத் தேர்ந்தெடுத்தேன். முதலில், கற்றுக் கொள்வதற்கு கடினமாக இருந்தது. கற்றுக் கொள்ள கற்றுக்கொள்ள மிகவும் ஆச்சர்யாக இருந்தது. முன்று மாதங்கள்தான் கற்றுக்கொண்டேன்.

அதற்குள், தமிழர் பண்பாட்டின் மீது ஆர்வம் அதிகரித்தது. ஆகவே, தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று விரும்பினேன். Chouch Surfing (Internet Community Website) மூலமாக இவர் (அன்பு மகேஷை சுட்டுகிறார்) எனக்கு அறிமுகமானார். கல்லூரியில், பொங்கல் திருவிழா தமிழர் கலாச்சார விழாவைப் பார்க்குமாறு சொல்லியிருந்தார்கள். எனது விருப்பத்தை அன்பு மகேஷ் நிறைவேற்றிக் கொடுத்தார். அங்கு சென்றபின், தமிழர் கலாச்சாரத்தின் மீதான பற்று அதிகரித்தது.

உண்மை: அன்பு மகேஷ் நீங்கள் ஒரு கடவுள் மறுப்பாளர் ஆனது எப்படி? பெரியாரின் அறிமுகம் உண்டா?

அன்பு: சிதம்பரத்தில் குமராட்சி பக்கத்தில் வெல்லுர் என்னும் சிறிய கிராமம்தான் நான் பிறந்த ஊர். இயற்கை வளம் நிறைந்த கிராமம். எனது அப்பா, மாவட்ட பதிவாளராக பணிபுரிகிறார். அம்மா பானுமதி வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். என்னைத் தவிர, வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

எனது அம்மா வீட்டில் ஓம் சக்தி கோயிலே வைத்து நடத்தி வந்தார்கள். அதனாலேயே எனக்கு கடவுள் நம்பிக்கை தகர்ந்து கொண்டே வந்தது. ஒருமுறை அண்ணா பல்கலைக்கழகத்துக்-கு எதிரில் உள்ள காந்தி மண்டபத்தில் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். கொடுமையா இருந்தது. அந்த நிமிடத்தில் இருந்து நான் நாத்திகம் ஆனேன். கடவுள் இல்லை. இருந்தாலும் அவர் நல்லவரில்லை. ஆகவே, கடவுள் தொடர்பான விசயங்களில் நான் நேரத்தைக் கடத்த விரும்பவில்லை. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து வாழவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். பெரியார் பற்றி அறிவேன். அவரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் அலைஸ் எனக்கு அறிமுகமானார். 2012 ஜனவரி 7ஆம் தேதிதான் அவரைச் சந்தித்தேன். அவர் விருப்பப்படி பொங்கல் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். மிகவும் ரசித்தார். பழகப் பழக இருவருக்கும் பிடித்துப் போனது. பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களுக்கும் பிடித்துப் போனது. பிறகு, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

உண்மை: சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

அன்பு: திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், சட்டங்களும், சம்பிரதாயங்களும் எங்களை அடிமைப்படுத்திவிட்டன. எளிமையாய் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். எனது நண்பர் முரளிதரன் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. அலைசைப் பொறுத்தவரையில், அவருக்கு மதம் கிடையாது. செக் குடியரசில் திருமணங்கள் ஏறக்குறைய இப்படித்தான் நடக்கும். செக்கில் ஏறக்குறைய மத நம்பிக்கையே கிடையாது. ஆகவே, இது மிகவும் சுலபமாயிற்று.

உண்மை: திருமணத்தை பதிவு செய்து கொண்டீர்களா?

அன்பு: சட்ட ரீதியிலான பிரச்சனைகள் இன்னமும் எங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கெடுபிடி சரிதான். காரணம், தவறுகளும் நடந்து விடுகிறது. இங்கு பதிவு செய்வதற்கு, செக் குடியரசிலிருந்து, அலைஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்று தேவைப்படுகிறது. அது வருவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிடும். ஆகவே, அலைஸின் அடையாள அட்டையில் அந்த குறிப்பு இருக்கிறது. அதை ஒரு நோட்டரி பப்ளிக் மூலம் மொழி மாற்றிய சான்று பெற்று பிறகு பதிவு செய்து கொள்ளவேண்டும்.

உண்மை: நீங்கள் எண்ணியபடியே திருமணம்  நடந்துவிட்டது. எதிர்கால வாழ்க்கை தமிழ்நாட்டிலா? செக் குடியரசிலா?

அலைஸ்: இப்போதைக்கு செக் குடியரசுக்கு திரும்ப இருக்கிறோம். இங்கே சில மாதங்கள் இருப்போம். இந்தக் கேள்வி மிகவும் கடினமானது. இரண்டு பக்கம் இருப்பவர்களையும் தவிர்க்க இயலவில்லை. இருவரும் சேர்ந்து முடிவு செய்வோம்.

நேர்காணல்: உடுமலை வடிவேல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *