– மஞ்சை வசந்தன்
கடவுள், மதம், சாத்திரம் என்றால் அவை அனைத்தும் புனிதமானவை, மேலானவை, அவற்றிற்காக உயிரையும் கொடுக்க வேண்டும் என்று உலகிற்கெல்லாம் உணர்வு ஊட்டுகின்றனர் (வெறி ஏற்றுகின்றனர்) மனிதர்களை மறந்த மதவாதிகள்.
அதிலும் குறிப்பாக இந்துமதத்தை ஏந்திப் பிடிக்கும் இந்துத்வாவாதிகள் அதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
இல்லாத ஒரு மதத்தை ஏற்றிப் போற்றும் அறியா மக்களின் கூட்டம் பெரும் பகுதியாய் இருக்க, இந்து மதத்தை வைத்து தன் ஆதிக்கத்தை இருபத்தோறாம் நூற்றாண்டிலும் நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் இந்துமத வெறியர்கள் பல பரிமாணங்களில், பரிவாரங்களில் அலைந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட வெறிக் கூட்டத்திற்கு சிந்தனைகளைக் கொத்துக் கொத்தாய்க் கொடுத்து, சிந்தாந்தம் நல்கி அவர்களை உசுப்பி விட்டவர்தான் கோல்வால்கர்.
இந்த கோல்வால்கர்களுக்கும், அவர் வழிச் செல்லும் இந்துமத வெறியர்களுக்கும் கடவுளும் இல்லை; மதமும் இல்லை. அவற்றின் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. அவையெல்லாம் அவர்களுக்குக் கருவிகள். அவர்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அவையெல்லாம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. மற்றபடி அவர்கள் கடவுள் நம்பிக்கையுடையவர்களும் அல்ல; மதப்பற்று உடையவர்களும் அல்ல.
இப்படிக் கூறும்போது பலருக்கு வியப்பாகக்கூட இருக்கும். ஆனால் உண்மை அதுதான். ஆம். அதை கோல்வால்கரே கூறுகிறார் பாருங்கள்.
மக்கள் கோயில்களுக்குச் சென்று, அங்குள்ள சிலைகளையே எல்லாம் வல்ல தெய்வத்தின் சின்னங்களாகக் கருதி அவற்றின்மீது கவனம் குவிக்கின்றனர். ஆனால், இவையெல்லாம் கர்மயோகிகளான (செயல் நிறைந்தவர்களான) எங்களுக்கு (உடன்பாடான தல்ல) நிறைவு தருவது அல்ல. எங்களுக்குத் தேவை (வேண்டியது) ஓர் உயிருள்ள கடவுள். கோயில்களுக்குச் செல்கின்றவர்கள் கூறுவதை மட்டும் கேட்கக்கூடிய, ஆனால் பதில் சொல்லாத ஒரு கடவுளால் என்ன பயன்? இந்தச் சிலைகள் (சின்னங்கள்) அழுவதுமில்லை சிரிப்பதுமில்லை, எதிர்வினை ஏதும் புரிவதும் இல்லை என்கிறார் கோல்வால்கர்.
(Quoted by Anderson and Damle, Ibid, P.16 தரவு: இந்து இந்தியா -_ எஸ்.வி.இராஜதுரை, பக்கம் 100)
இந்துமதம் என்று சொல்லப்படும் ஒரு கற்பனை மதத்தின் (தொகுக்கப்பட்ட கதம்பத்தின்) அடிப்படைத் தத்துவமே சிலை வழிபாடுதான். சிலை வழிபாடு இல்லையென்றால் கோவில் இல்லை, அபிஷேக ஆராதனை இல்லை, அதற்கான மந்திரங்கள் இல்லை, அர்ச்சகர் இல்லை, கருவறை இல்லை, கருவறை புனிதம் இல்லை, தீட்டு இல்லை.
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியயே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? என்று நமது தமிழர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கோல்வால்கர் சொல்லிவிட்டபின் மதம் ஏது? உருவ வழிபாட்டை மறுத்து, மதத்தை வெறுத்து வள்ளலார் சொன்னதை கோல்வால்கரும் ஒப்புக் கொண்ட பின் மதம் ஏது?
உருவ வழிபாட்டையே மறுக்கும் இஸ்லாம் மதத்தின் கொள்கையை கோல்வால்கரும் கூறிவிட்டபின் இந்துமதம் ஏது? பின் மத மோதல்கள் ஏன்?
கடவுளுக்கு உருவம் இல்லை என்று ஏற்றுக்கொண்டபின் கடவுளுக்கு உடல் இல்லையென்று உறுதியாகிறது. உடலில்லா கடவுள் என்றால் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்திரியன், இடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்ற கொள்கை நொறுங்கிப் பொடியாகிறது. அப்படியாயின் பிராமணன் ஏது? பூணூல் ஏது? மனுதர்மம் ஏது? மற்றவை ஏது? அப்படியாயின் பிராமணன் உயர்ந்தவன் என்ற சித்தாந்தம் சிதறிப் போகிறது.
ஆனால், இவர்கள் இந்து மதத்தை ஏந்திப் பிடிக்கிறார்கள், பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறார்கள்.
ஆக, இவர்களுக்கு கொள்கை கிடையாது. கோட்பாடு கிடையாது; தெளிவு கிடையாது; திடமான வரையறை கிடையாது. ஆனால், ஒன்றில் மட்டும் உறுதியாய் நிற்கிறார்கள். அது, பிராமணன் மட்டுமே உயர்ந்தவன்; அனைத்துக்கும் உரியவன்; அவனே அறிவின் கர்த்தா; அனைத்தையும் ஆளவும் அனுபவிக்கவும் பிறந்தவன்.
மற்றவர்களெல்லாம் அவர்கள் நலத்திற்கு அடிமை வேலை செய்யப் பிறந்தவர்கள்; விலங்கு போன்றவர்கள். இதில் அவர்கள் அன்றும் உறுதியாக இருந்தார்கள். இன்றும் உறுதியாய் நிற்கிறார்கள். இதையும் கோல்வால்கர் தனது சிந்தனைக் கொத்து என்ற நூலில் ஓர் நிகழ்வை எடுத்துக் காட்டி விளக்குகிறார்.
உருவ வழிபாடு பயனற்றது என்கிறார். ஆனால், அதன் அடிப்படையில் பிராமணர்களுக்குக் கிட்டிய அனைத்து பலன்களும் வேண்டும் என்கிறார். இதுதான் பார்ப்பனப் பித்தலாட்டம் என்பது.
எனவே, கோல்வால்கருக்கும் இந்துத்வாவாதி களுக்கும் பிராமண ஆதிக்கம் வேண்டும். மற்றபடி மதம், கடவுள் என்பதெல்லாம் கருவிகள்.
அதனால்தான் பேசாத சிலை வேண்டாம். உயிருள்ள கடவுள் வேண்டும் என்கின்றனர்.
உயிருள்ள கடவுள் ஏது? இல்லையே! இது அவர்களுக்கும் தெரியும். பின் ஏன் கேட்கிறார்கள்? எதைக் கேட்கிறார்கள்.
அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சகல அதிகாரமும் கொண்ட ஆரிய பார்ப்பன இனத் தலைவன் ஒருவன் இந்தியாவுக்கு தேவை! இதுவே இவர்கள் வேட்கை. அன்றைக்கு இராமன் செய்ததை இன்றைக்கு செய்ய ஓர் ஆட்சியாளனும் ஆட்சி அமைப்பும் வேண்டும். மற்றபடி அவர்களுக்கு கடவுள்களும் வேண்டாம், கோயில்களும் வேண்டாம்.
இவையெல்லாம் நம்மை ஏமாற்ற ஏற்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் அவ்வளவே. எனவே, நட்ட கல்லை சுற்றிவரும் நம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்!