இதுதான் என் கடைசி ஆசை

அக்டோபர் 1-15

புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயண கவியார், தம் 82ஆம் அகவையில் – தி.பி. 2012 (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார்.

அந்த ஆவணத்தில், செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை.

மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள்.

இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை.

கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!

– சந்திரன் வீராசாமி, திருச்சிராப்பள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *