ஆனந்த விகடன் இதழில் பிரபல சமூக ஆர்வலர் அருந்ததிராய் அவர்களின் பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.
கேள்வி: இந்தியாவில் இன்றைய பிரச்சினைக்கு மக்களிடையே உள்ள சுயநலமும், சொரணையற்ற தன்மையும்தான் காரணமா?.
பதில்: அடிப்படையில் இங்கும் பிரச்சினைக்குக் காரணம் என்னவென்றால் சாதிய அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே சாதியில் சிக்குண்டு கிடக்கிறது. அந்தச் சாதிதான் ஜனநாயகம், அரசியல், ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் சொல்லவேண்டும் என்றால், சாதிய அமைப்பு நிலபிரபுத்துவ முறையில் இருந்து கார்பரேட் முறைக்கு மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் சமூக அமைப்பை சரியாக உணர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள்.
முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இருந்த காகா கலேல்கர் இந்தியாவின் குடியரசு தலைவரிடம் அளித்த அறிக்கையில் (பக்கம் 40) இந்தக் கருத்தினைத் தெளிவாகவே கூறியுள்ளார்.
ஜாதி அமைப்பானது உலகில் எங்கும் கிடையாது. இங்குதான் இருக்கிறது. பொருளாதாரம், முன்னேற்றம் அடைந்தால் சமுதாய அமைப்பு மாறினால் ஜாதி ஒழிந்துவிடும் என்கின்றனர் சிலர். அந்த வாதமே தவறானது ஆகும்.
ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியில்லை. உணவு இல்லை, உடையில்லை. இது பொருளாதார அமைப்பினால் வந்தது என்பது தவறு. ஜாதி அமைப்பினால்தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருவது உண்மையாகும். பொருளாதாரத்தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர ஜாதி தோன்றுவதற் குரிய காரணம் அல்ல என்று தெளிவுபடுத்தியும் உள்ளார்.
குன்னர் மிர்தால்
இதே கருத்தினைத்தான் சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னர் மிர்தால் எழுதிய ஆசியன் டிராமா எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.
“Caste is deeply entrenched in indian tradition and it could be removed only by a drastic surgery.
இந்திய சமூக அமைப்பில் ஜாதி ஆழமாக ஊடுருவியுள்ளது. கடுமையான அறுவை சிகிச்சை மூலம்தான் அதனை அகற்ற முடியும் என்று சொன்னார்.
தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாள் நெடுகவும் கூறிவந்த கருத்தைத்தான் குன்னர் மிர்தலும் எழுதி இருக்கிறார். அதற்காக அவருக்கு நொபெல் பரிசு கிடைத்தது. (தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்குக் கிடைத்தது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்)
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளும், கோட்பாடுகளும், பிரச்சாரமும், போராட்டங்களும் ஜாதி ஒழிப்பை நோக்கி வீறு கொண்டு பாய்ந்ததன் அருமையை காலந்தாழ்ந்தேனும் உலக அறிஞர்கள் இந்தியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒப்புக்கொண்டது வரவேற்கத் தக்கதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வெறும் தீண்டாமை ஒழிப்பு என்னும் கிளிப்பிள்ளை பாட்டு பயனற்றது; அதற்கு மூலகாரணமாக இருக்கக் கூடிய ஜாதியை அரசமைப்பு சாசன ரீதியாக ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாளின் இறுதியில் சென்னை பெரியார் திடலில் கூட்டிய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் இதனைத்தான் கூறுகிறது.
இந்தியாவில் உள்ள சமூக அமைப்புகளும் சரி, அரசியல் அமைப்புகளும் சரி இவற்றைப் புரிந்து கொண்டு, தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு, ஆதரவு கரம் நீட்டுவதே சரியான தீர்வுக்கான முடிவாக இருக்க முடியும்.
அருந்ததிராய் கருத்தில்கூட ஒரு நெருடல் இருக்கிறது. சுருங்கச் சொல்லவேண்டும் என்றால் சாதிய அமைப்பு நில பிரபுத்துவ முறையில் இருந்து, கார்ப்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அது கூட சரி என்று கூறிட முடியாது. உலகெங்கும் நிலப்பிரபுத்துவம் இருந்து வந்துள்ளது. அங்கெல்லாம் வருணாசிரம முறை ஜாதி நச்சுப் பார்த்தினியம் உருவாகவில்லையே. இந்தியாவில், பார்ப்பனீயம் என்னும் நச்சு கர்ப்பத்தில் ஜனித்து பிறவியிலேயே பேதம் கற்பிக்கும் இந்த ஜாதி அமைப்புமுறை! மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சித்தாந்தவாதி என்று கூறப்படும் தோழர் சி.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இதர நாடுகளைப் போல பெரும்பான்மை மக்களை அடிமையாக்கி மிருகங்களைப் போல வேலை வாங்கும் முறையில் அடிமைத்தனம் இந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக நான்கு வர்ணங்களும், ஜாதி முறையும்தான் இங்கு உருவாகியது என்று குறிப்பிட்டுள்ளார்.
(இந்திய வரலாறு _- ஒரு மார்க்சிய கண்ணோட்டம் -_ பக்கம் – 87)
புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீசிலும், ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கே உருவாகியது;
சிந்து சமவெளி தடயங்களைப் பரிசீலிக்கும்போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீசிலும், ரோமிலும் இருந்தது போன்ற அடிமை முறை சிந்து சமவெளி சமூகத்தில் இருந்திருக்கவில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஆனால் சிந்துவெளி நாகரிகத்தையே அழித்து, ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள், அடிமைகள் எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உப ஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.
இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கே உரித்தான ஒரு விசேச தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதைப்போல தெளிவானதும், மறுக்க முடியாததுமான சுரண்டல் முறைக்குப் பதிலாக வர்ணாசிரம தர்மத்தினுடையவும், ஜாதி ஆசாரங்களுடையவும் இவைகளுக்கு நியாயம் கற்பிக்கிற மத நம்பிக்கைகளுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த ஜாதி ஆதிக்கமும் மேலோங்கி வந்தது.
இதற்குப் பார்தீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன என்று அதே நூலில் (பக்கம் 46, 47) தோழர் ஈ.எம்.எஸ். அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். சாதிய அமைப்பு கார்ப்பரேட் முறைக்கு மாறியிருப்பதாக அருந்ததிராய் கூறியுள்ள கருத்து _ அனைத்துத் தரப்பு மக்களாலும் கருத்தூன்றிக் கவனிக்கத் தக்கதாகும்.
எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியில் (11.8.2012) வந்துள்ள ஒரு புள்ளி விவரம். அருந்ததி ராயின் கருத்துக்குக் கட்டியம் கூறக் கூடியதாகும்.
இந்திய அளவில் உள்ள 4000 கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆய்வுக்கு ஆயிரம் நிறுவனங்கள் எடுக்கப்பட்டன. இந்த ஓராயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 இயக்குநர்கள் உள்ளனர்.
இதில் பார்ப்பனர்கள் மட்டும் 4037 (44.5 சதவிகிதம்) பிற்படுத்தப்பட்டோர் 346 (3.8 சதவிகிதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 319 (3.5 சதவிகிதம்).
இந்தப் புள்ளி விவரங்கள் என்ன சொல்லுகின்றன. அருந்ததிராய் அவர்கள் ஏதோ மேலோட்டமாகச் சொல்லவில்லை.
அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு வந்துவிட்டது. தகுதி திறமை இருந்தும் பார்ப்பனர்களுக்கு அங்கெல்லாம் வாய்ப்பு இல்லை; கதவு அடைக்கப்பட்டு விட்டது என்று கதறுகிறார்கள் பார்ப்பனர்கள் _ குருதி கக்கி எழுதுகின்றன பார்ப்பன ஊடகங்கள்.
பார்ப்பனர்கள் எல்லாம் லகரங்களில் சம்பளம் வாங்கி கார்ப்பரேட்டுகளின் உச்ச அதிகார மய்யங்களில் நங்கூரம் இட்டுள்ளனர்.
அங்குப் பணிக்கு ஆள் எடுக்கப்பட்டால் யாருக்குத் தாம்பூலம் வைத்து அழைக்கப்படும்?
பெரியார் அந்தக் காலத்தில் ஆதிக்கத்தை எதிர்த்தது சரி, திராவிடர் கழகம் போராடியதெல்லாம் நியாயம்தான். இப்பொழுது தேவை என்ன என்று நியாயத் தராசு பிடிப்பதுபோல பேசுவோர் திரை மறைவில் நடக்கும் சன்னமான இந்த ஆதிக்கப் பின்னலைக் கவனிக்க வேண்டாமா?
இந்த இடத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பொருளாதார சிந்தனைக்காக நோபெல் பரிசுபெற்ற அறிஞர் அமர்த்தியா சென் கூறியுள்ள கருத்து இணைத்துப் பார்க்கத்தக்கது.
இடஒதுக்கீடு அளித்தால் தகுதி குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கை யோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக் கீடு அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்பட்ட மாண வரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால் அதை எப்படிப் பார்க்க வேண்டும்?
ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க் கக்கூடாது. நதியின் ஒட்டு மொத்த போக்கினைக் காண வேண்டும். அது போல்தான் நீண்டகால கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பயன்களை நோக்க வேண்டும்.
நீதி என்ற அடிப் படையில் இதற்கு மிக எளிமையான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப் படையில் நீண்டகால நோக்கில் இதைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே! அதுவும் அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்திய இடமும் மிக முக்கியமானது. பார்ப்பன ஆதிக்கப்புரியான சென்னை அய்.அய்.டி.யில் தான் (22.12.2009) இந்த சமூகநீதி அறிவாயுதத்தைச் சுழல விட்டுள்ளார்.
இந்தியா முன்னேறவிடாமல் தடுப்பவை இந்துத்துவ சக்திகளே!
அய்க்கிய நாடுகள் மன்றம், தன்னுடைய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேற்றுமை மலிந்த இன்றைய உலகில் கலாச்சாரச் சுதந்திரம் என்ற ஆய்வு அறிக்கையை 2004இல் வெளியிட்டது. மய்ய அரசின் செய்தி – ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, அதைப் புதுடில்லியில் வெளியிட்டார்.
வாழ்நாள் நீட்டிப்பு அளவு, பிஞ்சுக் குழந்தைகள் இறப்பு விகிதம், கல்வியில் திட்ட இலக்கு, எழுதப்படிக்கத் தெரிந்தோர் விழுக்காடு, பள்ளி செல்லும் வயதில் படிக்க முடியாத குழந்தைகள் விழுக்காடு, தனி நபர் வருமான அளவு, சுற்றுச் சூழல், சமூக ஒற்றுமை, பொதுச் சுகாதாரம் போன்ற சமூக நடப்புகளில், உலகின் 177 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு அந்நாடுகளின் சாதனைத் தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தி ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
பட்டியலிலிருந்து ஒப்புமைக்காக சில நாடுகளின் தரவரிசை
2002 2001
நார்வே 1 1
அய்க்கிய அமெரிக்கா 8 7
ஜப்பான் 9 9
பிரிட்டன் 12 13
ரஷ்யா 57 63
சீனா 94 104
இலங்கை 96 99
இந்தியா 127 127
பங்களாதேஷ் 139 139
இப் பட்டியலில் 2002ஆம் ஆண்டு இந்தியா 127ஆவது இடத்தில் இருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டும் அதே வரிசையில்தான் இருந்தது. வசதிமிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியச் சமூகத்தின் பன்முக அடிப்படையையும், மதங்கள், மொழிகள், வட்டார _ கலாச்சார வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எல்லாவற்றையும் மீறி, ஏழ்மை ஒழிப்பு, படிப்பறிவு, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு, சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம் போன்ற முனைகளில் இந்தியா முன்னேறும் முயற்சி தெரிகிறது.
என்றாலும், இந்தத் தரவரிசைப் பட்டியலில் முன்னே போகவிடாமல் தடுப்பது இந்தியாவில் ஆரவாரத்துடன் செயல்படும் இந்துமத அமைப்புகள்தான். அமைதி வளர்ச்சி, தனிமனித சுதந்திரம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக மக்களுக்கிடையே அவநம்பிக்கையும் வெறுப்பும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
பல்லாயிரம் பேரைக் கொன்றுவிட்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மேலும் பல்லாயிரம் பேரை தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டுப் பிழைத்தால் போதும் என்று புலம் பெயர வைத்த கொடுமை குஜராத்தில் நடந்தது. இத்தனையும் செய்துவிட்டுத் தங்களைக் கலாச்சார இணக்கத்துக்கான தூதுவர்கள் என்று அவர்களே பாராட்டிக் கொள்ளுகிறார்கள்.
இந்தியாவில் குஜராத்தில் இந்துத் தீவிரவாதிகள் திட்டமிட்டு முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையைத் தூண்டிவிட்டார்கள். அதற்குப் பதிலாக முஸ்லிம் தீவிரவாதிகளும் இந்துக்களைக் குறிவைத்துத் தாக்கினார்கள்.
பல்வகை வேறுபாடுகள் கொண்ட அடையாளங்களோடு வாழ்ந்தாலும், சமூகத்தோடு இணக்கமாக இருப்பது என்ற நல்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்திய மக்களின்மீது, இந்து என்ற ஒரு மத அடையாளத்தைத் திணிக்க முயலும் வன்முறைச் சக்திகள் இந்தியாவுக்குக் கடுமையான அறைகூவலாகவே உள்ளன.
இத்தகைய அச்சுறுத்தல்கள் சிறுபான்மையினர், தாங்களும் இந்திய சமுதாயத்தின் ஓர் அங்கம் என்று கருதும் ஈடுபாட்டைத் தகர்த்து எறிந்து, அவர்கள் உரிமைகளைப் பறிப்பதாகவே உள்ளன. இத்தகைய மத வன்முறைகள் இந்தியாவின் முந்தைய சாதனைகளைச் சாய்த்துவிட்டு, சமூக அவலங்களுக்கே வழிவகுக்கும். மேலே சொல்லப்பெற்ற கருத்துகள் அனைத்தும், இவ்வாண்டு வெளியிடப்பட்ட அய்.நா.மன்ற ஆய்வு அறிக்கையில் உள்ளனவே.
சென்ற ஆண்டில் 104ஆம் இடத்தில் இருந்த சீனா இந்த ஆண்டில் 94ஆம் இடத்துக்கு முன்னேறிவிட்டது. 63ஆம் இடத்தில் இருந்த ரஷ்யா 57ஆம் இடத்துக்கு முன்னேறிவிட்டது.
இந்தியா இன்னமும் 127ஆம் இடத்திலேயே இருக்கிறது.
முன்னேறவிடாமல், காலை வாரிவிடும் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், அயோத்தி வெறியர்களின் ஆட்டம் ஒழிந்தால், இந்தியா 2010ஆம் ஆண்டுக்குள் 100ஆவது இடத்தைப் பிடிக்கும் அளவு முன்னேறிவிடும் என்கிறார்கள் இந்திய ஆய்வாளர்கள்.
அரசியல் தளத்தில் அநாகரிகக் கீழ்வெட்டுச் செயல்கள் அரங்கேறாமல் இருந்தாலே, முன்னேற்றத்தின் ஒளிக்கீற்று பளிச்செனத் தெரியும். இந்து மதவாதக் கும்பல் தலைதூக்காமல் பார்த்துக் கொள்வது நமது தலையாய கடமை.
இந்தியச் சமூக வளர்ச்சியின் தேக்கம் பற்றி அய்.நா.வெளியிட்ட இந்த அறிக்கையை தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் கவனித்தால் தந்தை பெரியார் அவர்களின் தத்துவமும் சிந்தனைகளும்தான் சரியான திறவுகோல் என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.