கண்ணியத்தின் உறைவிடம் கலைவாணர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

2024 ஆகஸ்ட் 16-31
நாடறிந்த கலைவாணர் சான்றோர் போற்றும்
நற்குணத்தர்; உயர்மனத்தர்! வாழ்நாள் எல்லாம்
பீடார்ந்த அறிவியக்கப் பாதை சென்ற
பெற்றியராய் எளியோரின் நிழலாய் அன்னோர்
கேடெல்லாம் நீங்கிடவே துணையாய் நின்றார்!
கேட்போர்க்கு மறுப்பின்றிக் கொடையை நல்கி
ஈடற்ற புகழ்குவித்தார்! இழிந்த நெஞ்சர்
இடக்கெல்லாம் வீழ்த்திடவே எதிர்த்து வென்றார்!
கொஞ்சுதமிழ்ப் படங்களிலே புதுமை சேர்த்தார்
குடியரசாம் இதழ்படித்தே பெரியார் கொள்கை
நெஞ்சாரப் போற்றுகிற மாண்பைப் பெற்றார்!
நினைவெல்லாம் தமிழரது மேன்மை என்றார்!
வஞ்சகத்தார் விரித்திட்ட வலையில் வீழா
வல்லமையைப் பெறவேண்டி உழைத்தார்! நாளும்
அஞ்சாமல் ஆண்மையுடன் கருத்தைக் கூறி
அறிவியக்கத் தூதுவராய்க் களத்தில் நின்றார்!
பெரியாரின் கருத்தியலை முழுதும் ஏற்றே
பெருமளவில் கொள்கைவிதை ஊன்றி வந்தே
நரியாரை நடுநடுங்கச் செய்தார்! என்றும்
நகைச்சுவையின் பேரிமயம் ஆனார்! வெள்ளைச்
சிரிப்பாலே நாட்டுநடப் பெல்லாம் கூறிச்
சிந்திக்க மக்களையே தூண்டி வந்தார்!
சரியான புரிதலுடன் மதங்கள், சாதிச்
சழக்குகளைப் புறந்தள்ளி மானம் காத்தார்!
கலைவாணர் கலைத்துறைக்கே பெருமை சேர்த்தார்!
கண்ணியத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்து வந்தார்!
நிலைமாறா நெஞ்சுரத்தைப் பெற்றார்! மாந்த
நேயத்தைக் கடைப்பிடித்த நேர்மை யாளர்!
விலைபோகும் பதரனையார் சுமத்தி வந்த
வீண்பழிகள் யாவையுமே வீழ்த்தி வென்றார்!
கலையுலகில் முடிசூடா மன்ன ராகக்
காலமெலாம் புகழாலே வாழ்கின் றாரே!