மனமின்றி அமையாது உலகு!-மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

2024 ஆகஸ்ட் 16-31 கட்டுரைகள்

மனம் என்றால் என்ன?
அது எங்கிருக்கிறது?

உடலின் மற்ற பாகங்களைப் போல மனம் அதிகமாகப் புரிந்துகொள்ளப்படாததற்குக் காரணம் அதற்கு உருவமோ அல்லது அமைப்போ இல்லாததே!. மனதிற்கும் ஒரு உருவம் இருந்திருந்தால் அதை ஸ்கேன் செய்து பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், அப்படி எந்த உருவமும் இல்லாமலிருப்பதால்தான் அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பதே அத்தனை குழப்பமானதாக இருக்கிறது.

மனதிற்கு உருவமில்லையென்றால் அது என்னவாக இருக்கிறது? எங்கிருக்கிறது?
மனது என்று ஒன்று இருக்கிறதா?

முந்தைய பகுதிகளில் சொன்னது போல, மனம் என்பது ஒரு மென்பொருள். கணினியில் வன்பொருள், மென்பொருள் என்று இருப்பதைப் போல, நமது உடலிலும் வன்பொருள், மென்பொருள் என்று இருக்கின்றன. உடலின் பாகங்களெல்லாம் வன்பொருட்கள்தாம், மூளை ஒரு வன்பொருள். மனம் என்பது மூளை என்னும் வன்பொருளில் உள்ளீடு செய்யப்பட்ட மென்பொருள். அதாவது, செல்போனில் இருக்கும் சாஃப்ட்வேரைப் போல மனம் என்பது மூளையில் இன்ஸ்டால் செய்யப்பட்ட சாஃப்ட்வேர்.
நம் அனைவருக்கும் வன்பொருட்களில் எந்த வேறுபாடுமில்லை. உங்களது மூளையையும், எனது மூளையையும் கழற்றி ஒரு மேசையில் வைத்துப் பார்த்தால் எந்த வேறுபாடும் இருக்காது. ஆனால், உங்களுக்கும் எனக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளுக்கு காரணம் நம் மனம் எனும் மென்பொருள். மனம் தான் தனித்துவமானது. மிருகங்களில் இருந்து மனிதன் வேறுபட்டிருப்பதற்கும், ஒவ்வொரு மனிதரும் தன்னளவில் பிறரிடமிருந்து வேறுபட்டிருப்பதற்கும் மனம் தான் காரணம்.

மூளை எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி உணர்ச்சிவசப்பட வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதை அலட்சியப்படுத்த வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்வது மனமே! ஒரு சினிமாவைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், அந்தச் சினிமா காட்சியாக, ஒலியாக மூளைக்கு வரும்போது அதையொட்டிய உணர்வுகள் மனம் வழியாக வெளிப்படும். அந்தச் சினிமாவைப் பார்க்கும் எல்லோருடைய மூளைக்கும் ஒரே காட்சி, ஒரே ஒலிதான் செல்கிறது, ஆனால், சிலருக்கு அந்தச் சினிமா பிடித்துப்போகிறது, சிலர் ஒரு முறை பார்க்கலாம் என்கிறார்கள், சிலர் குடும்பமாகப் பார்த்தால் ‘ஓகே’ என்கிறார்கள், சிலர் சூரமொக்கை என்கிறார்கள். அந்தச் சினிமா ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு உணர்வைக் கொடுப்பதற்குக் காரணம் மூளை அல்ல, மனமே!. மனதில் எழும் உணர்வுகளைப் பொறுத்தே ஒரு செயல் நமக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்காமல் போகிறது. அதே போலவே மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை. மூளையின் அமைப்பில் மட்டுமல்ல; அதன் செயல்பாடுகளின் வழியாகவே நாம் ஒவ்வொரு வரும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறோம், அந்தச் செயல்பாட்டு அலகே மனம்!.

மூளையின் செயல்பாடுகளில் ஏதேனும் கோளாறு வருகிறதென்றால் மூளையின் வன்பொருளும் காரணமாக இருக்கலாம் அல்லது மென்பொருளான மனமும் காரணமாக இருக்கலாம். காரணத்தை இரண்டிலும் தேட வேண்டும். வன்பொருளில் உள்ள கோளாறுகளை ‘ஸ்கேன்’ உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். ஆனால், மென்பொருளின் கோளாறுகளை எந்தப் பரிசோதனைகளாலும் கண்டறிய முடியாது, எந்தப் பரிசோதனையிலும் கண்டறிய முடியவில்லை என்பதற்காக, கோளாறே இல்லை எனச் சொல்ல முடியாது. கோளாறு வன்பொருளில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இருபத்தைந்து வயது இளைஞன் ஒருவனுக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன, ஒரு நாள் இரவு திடீரென அவனுக்கு இதயம் வேகவேகமாகத் துடித்தது, படபடப்பாய் இருந்தது, மூச்சு அடைத்தது, கண்கள் இருண்டன, உடலெல்லாம் வியர்த்துப் போனது, ஏதோ ஓர் இனம் புரியாத பயம், பெரிய பாறையை வைத்தது போல அவனது நெஞ்சை அடைத்தது.
உடனடியாக அவனது மனைவி பயந்து போய் மருத்துவமனைக்கு அழைத்துப் போனாள். அங்கு ஈசிஜி, இரத்தப் பரிசோதனை, எக்கோ என அனைத்துப் பரிசோதனைகளும் எடுக்கப் பட்டன, அத்தனையும் இயல்பாக இருந்தன. சிறிது
நேரத்திலேயே அவனது படபடப்பும் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தான்.

“எல்லாம் நார்மலாக இருக்கிறது, ஏதோ ஸ்ட்ரெஸ் தான், மனதைத் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள்” என மருத்துவர் அறிவுரை வழங்கி அனுப்பினார். அதற்குப் பிறகு அடிக்கடி அவனுக்கு அதே போல வர ஆரம்பித்தது, ஒவ்வொரு முறையும் மருத்துவமனை, பரிசோதனை, சற்று நேரத்தில் இயல்பு நிலை என அதே சங்கிலித் தொடர் போல் நிகழ்ந்தது.

ஒரு கட்டத்தில் அவனது மனைவி சலிப் புற்றாள். “நீங்க நார்மலாகத் தான் இருக்கீங்க, ஒவ்வொரு முறையும் எல்லா டெஸ்ட்டும் நார்மலாகத் தானே இருக்கு? உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என டாக்டர்
சொல்லிவிட்டார். நீங்களா தான் தேவையில்லாமல் பயப்படறீங்க” என்று ஒரு நாள் கோபமாக அவனிடம் கத்தினாள்.
“நிஜமா என்னால முடியல, நான் வேணும்னு பண்ணல, திடீர்னு எனக்குள்ள என்னமோ நடக்குது, அந்த நேரத்துல என்னால ஒண்ணும் பண்ண முடியல, ஏன் அப்படி வருதுனு தெரியல, எல்லா டெஸ்டும் நார்மலா தான் இருக்கு நான் ஒத்துக்குறேன், ஆனா நான் நார்மலா இல்ல” எனக் கூறி அழுதான்.

அவன் மனைவி சொல்வது போல அந்த இளைஞர் நார்மலாகத்தான் இருக்கிறாரா? அல்லது ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? பிரச்சினை இருக்கிறது என்றால் ஏன் எல்லா பரிசோதனைகளும் நார்மலாக இருக்கின்றன?

அந்த இளைஞனுக்குப் பிரச்சினை இருக்கிறது; ஆனால், அந்தப் பிரச்சினை உடலில் இல்லை மனதில்! உடல் ரீதியான தொந்தரவுகளாக இருப்பதால் எல்லாரும் அதன் காரணத்தை உடலில் தேடுகிறார்கள். இதயம் படபடத்து அடிப்பதனால் இதயம் சரியாக இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைகள்தான் செய்யப்பட்டன. அந்த பரிசோதனைகள் நார்மல் என்றால் இதயம் நார்மலாக இருக்கிறது என்று தான் பொருளே தவிர, அந்த இளைஞன் நார்மலாக இருக்கிறான் என்று பொருள் அல்ல. அவனுடைய பிரச் சினைக்கு இதயமோ அல்லது மற்ற வன்பொருட்களோ காரணமல்ல, மாறாக, அவனுடைய மென்பொருள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதாவது மனதின் பிரச்சினைளும் உடலின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்று யாரும் உணர்வதில்லை. அதே போல மனதின் நோய்மைகளை எந்தப் பரிசோதனை வழியாகவும் கண்டுபிடிக்க முடியாது. குறிப்பிட்ட அந்த இளைஞனுக்கு நோய்மை உடலில் அல்ல; மனதில்.

உடலின் நோய்மைகளை நாம் ஆராய்ந்து, சிகிச்சையளித்துக் குணப்படுத்துவதைப் போல மனதின் நோய்மைகளையும் ஆராய்ந்து, சிகிச்சையளித்துக் குணப்படுத்த வேண்டும். ஆனால், நாம் அதைச் செய்வதில்லை, மாறாக, “மனதைத்
தைரியமாக வைத்துக்கொள்” என்று அறிவுரையை
மட்டும் சொல்லிவிட்டு, மனதின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விடுகிறோம். தைரியமாக வைக்க முடிந்தால் அவன் ஏன் உதவியை நாடப் போகிறான் என யாரும் யோசிப்பதில்லை.

கேள்வி :

என் தாய் படிக்காதவள்; எப்போதுமே கரடுமுரடாகத் தான் பேசுவார். என் சிறுவயதில் ஒருமுறை தெருவில் வைத்து எல்லோர் முன்பும் திட்டியதால் அன்று முதல் இன்று வரை அவளிடம் பேசுவதில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பேசாமலே இருக்கிறேன், ஒரே வீட்டில். இது அப்போது எழுந்த கோபத்தின் நீட்சியா என்று தெரியவில்லை.
அவளிடம் திட்டு (வன் சொற்கள்) வாங்குவதைத் தவிர்க்கவே பேசாமல் இருக்கிறேன். அவர்களை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. இதை எப்படி எதிர்கொள்வது?

– விமல், புதுச்சேரி

பதில்:
ஒருவரை உதாசீனப்படுத்த அல்லது காயப்படுத்த நம்மிடம் இருக்கும் எளிமையான வழிகளில் ஒன்று அவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது. ஒருவருடன் நாம் பேசுவது என்பதே அவருக்கு நாம் தரும் மரியாதை.ஒருவரின் மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பு என்பது அந்த உரையாடலுக்கு அவசியமானது.
ஒரு தற்காலிக ஊடலின் நிமித்தம் அல்லது சிறு மனஸ்தாபங்கள் விளைவாக நாம் எப்போதும் யாராவது ஒருவரிடம் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அவருடன் திரும்பப் பேசுவது என்பது பல காரணிகளைப் பொறுத்தது.

ஒரே வீட்டில் இருக்கிறோம்; அல்லது அருகாமையிலேயே இருக்கிறோம் என்பதற்காக மட்டுமே நாம் நமது சண்டைகளை முடித்துக் கொள்வதில்லை. ஒரே வீட்டில் இருந்து கொண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பேசாமல் இருக்கும் கணவன் மனைவிகளை யெல்லாம் எனக்குத் தெரியும். இதில் இருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். ஏதோ சில நிர்ப்பந்தங்களின் நிமித்தமாக மனிதர்கள் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அன்பு? அன்பை நிர்ப்பந்தித்துப் பெறவும் முடியாது; கொடுக்கவும் முடியாது.

ஒருவருடன் உரையாடுவது என்பது பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அதில் முக்கியமானது அவரின் மீது நாம் வைத்திருக்கும் அன்பு மற்றும் மதிப்பு. இவையே அவருடனான உரையாடலைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. எந்தவித மதிப்போ அல்லது அன்போ இல்லாத ஒருவரிடம் அல்லது புதிதாகப் பேசும் ஒருவரிடம் நாம் பெரும்பாலும் கோபம் கொள்வது கிடையாது. அந்த நபர் நம்மை அவமானப்படுத்தினாலும் அல்லது நம்மை அசிங்கப்படுத்தினாலும்கூட, அது அவ்வளவாக நம்மைப் பாதிப்பதில்லை. அதுவே நாம் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நம்மை ஒரு சிறு கடும் சொல் சொல்லிவிட்டால் அது நம்மை அத்தனை தூரம் பாதிக்கிறது; ஒரு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. இங்கு ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட, அதைச் சொல்கிறவர் நமக்கு யாராக இருக்கிறார் என்பதே முக்கியமானது. ‘நாம் பெரு மதிப்பு வைத்திருப்பவர்கள் எப்போதும் ஏன் நம்மைக் காயப்படுத்துகிறவர்களாகவே இருக்கிறார்கள்?’. ஏனென்றால், அவர்கள்தான் நமது உணர்வுகளைச் சமநிலை இழக்கச் செய்கிறார்கள். நமது உணர்வுகளைத் தூண்டாமல் நம்மை யாராலும் கோபப்படுத்த முடியாது. அப்போது கோபம் என்பதே தூண்டப்பட்ட ஒரு அதீத உணர்வு நிலை.

அந்த அதீத உணர்வு நிலையில் நாம் செய்யும் செயல்களும் அல்லது எடுக்கும் முடிவுகளும் அந்த உணர்வு நிலையைச் சார்ந்ததாகத் தானே இருக்கும். அந்த நேரத்தில் எந்த விதமான தர்க்கக் கோட்பாடுகளும் நமக்கு விளங்காது. உங்கள் தாயின் செயல் அல்லது உங்கள் மீதான அவரது ஒரு கடும்சொல் உங்களது உணர்வுகளைச் சமநிலையிழக்கச் செய்திருக்கலாம். அதன் விளைவாக உங்கள் தாயின் மீது அளவு கடந்த கோபம் வெடித்த தருணத்தில் உங்கள் தாயைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகள் தான் அதிகமாக இருந்திருக்கும். அந்த எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையிலேயே உங்கள் தாயுடன் இனி எப்போதும் பேசுவதில்லை என்ற முடிவை நீங்கள் எடுத்திருக்க முடியும். இந்த முடிவு என்பது மாறக்கூடிய ஒன்றாகத் தான் இருந்திருக்கும். உங்கள் உணர்வு நீங்கள் சமநிலையை அடையும் போது நீங்கள் கொண்டிருந்த இந்த உணர்வு எவ்வளவு அபத்தமானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அதை மனதிற்கொண்டே ஒரு சமரசத்தை தாயுடன் ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் விளைந்திருக்கலாம். ஆனால், உங்களது ஆளுமை அதை நிராகரித்திருக்கலாம்.

“நான்” என்பதன் மீதான உங்களது கறாரான தன்மையும், உங்களின் சுயத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் ‘ஈகோ’ என்பதுவும் தான் அவருடன் உரையாடலைத் தொடர்வதில் உள்ள சிக்கல். நாம், நமது தவறுகளை அங்கீகரிப்பதை விட, அதன் காரணமாக மற்றவர்களின் சிறிய தவறுகளைப் மேன்மேலும் பெரிதாக மாற்றுவதையே தான் வழக்கமாகச் செய்து கொண்டிருக்கிறோம்.

உங்கள் தாய் “படிக்காதவர், கரடு முரடாக நடந்து கொள்பவர்” போன்ற விவரிப்புகள் எல்லாம் இதைத் தான் சுட்டுகின்றன. ஒரு நாள் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் பேசாமல் இருப்பது என்பது தவறான முடிவு. உங்களது தவறான முடிவை “நான்” என்ற ‘ஈகோ’வை (அகந்தையை) கலைந்து விட்டு வெறும் கண்களுடன், திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதன் வழியாகவே அந்தத் தவறான முடிவில் இருந்து மீண்டு வர முடியும்.

நாம் கொண்ட உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்களும், கருத்து வேற்றுமைகளும் ஏற்படுவது இயல்பானதே. அதன் காரணமாக மோசமான சம்பவங்களோ அல்லது கடுமையான அனுபவங்களோ கூட ஏற்படலாம். அது அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரிய உணர்வெழுச்சியை நமக்குள் ஏற்படுத்தலாம். அதன் விளைவாக அந்த நபர் தொடர்பாக நமக்குள் பல எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். இவை அத்தனையும் தற்காலிகமானதே. ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பும், மதிப்பும் இவை போன்ற தற்காலிக நிகழ்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அந்த நிகழ்வு சார்ந்து நாம் நம் மீது செய்து கொள்ளும் சுய விமர்சனம் தான் அந்த நபர் மீதான நமது அன்பை உறுதி செய்யும் ஒன்றாக அமையும்.

“நீ பேசியிருந்தால் அன்றைக்கே நான் பேசியிருப்பேன்” என பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரிடம் சொல்வதைக் காட்டிலும்
“இப்படிப்பட்ட சின்னச் சின்ன மனஸ்தாபங் களுக்கெல்லாம் உன் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பையும், அன்பையும் மாற்றிக்கொள்ள மாட்டேன்” என அப்போதே சொல்வதுதான் அத்தனை மகத்துவமானது. அதனால் நீங்களும் உங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு உங்களது தாயுடன் பேசத் தொடங்குங்கள்.

(தொடரும்)