வாழ்க்கைத் தரத்தைப் போல உள்ளத் தரத்தையும் அரசு உயர்த்த வேண்டும் ! – குமரன் தாஸ்

2024 ஆகஸ்ட் 16-31

காரைக்குடியில் ஒரு (அரசு) நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இருந்து மாலையில் பள்ளி முடிந்து வெளியே வரும் (இரு பால்) மாணவர்களையும் காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தினமும் அவர்களைக் கவனிக்கிறேன். தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராகச் சீருடை, கழுத்திலே டை, காலுக்கு ஷூ அணிந்து, நல்ல புத்தகப் பைகளைச் (bags) சுமந்தவாறு பிள்ளைகள் பேசிச் சிரித்து மகிழ்ந்து வெளியே வருகின்றனர். அவர்களுக்காக பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக பெரும்பாலான தாய்மார்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து காத்திருந்து பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர்.

நானும் தேடிப் பார்க்கிறேன் – யாராவது சைக்கிளில் வந்து அழைத்துச் செல்கிறார்களா என்று. ஒருவரும் கண்ணில் படவில்லை. ஒரு சில பெண்கள் நடந்து வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். சிலரது பிள்ளைகள் மட்டும் வாடகை ஆட்டோ, வேன்களில் கூட்டமாக ஏறிச் செல்கின்றனர். ஏனெனில், அவர்களது பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கலாம். 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் சைக்கிள்களில் வந்து செல்கின்றனர். அச்சைக்கிள்களிலும் 90 சதவிகிதமானவை நவீனமானவையாக இருப்பதைக் காண முடிகிறது. ஒரு பத்து சதவிகிதம் சைக்கிள்கள் மட்டும் சாதாரண மாடல் சைக்கிள்களாக உள்ளன. அவர்கள் நடுத்தர வர்க்கக்திற்கும் சற்றுக் கீழ் நிலையில் உள்ளவர்களாக இருக்கக் கூடும்.

அதே போல பிள்ளைகளின் உடல்வாகைப் பொறுத்தவரையிலும் கூட மிகவும் மெலிந்த எலும்பும் தோலுமான நிலையில் எவரையும் காண முடியவில்லை. சற்று மெலிவான தேகத்துடன் ஒரு சிலரை மட்டும் காணமுடிகிறது. அதே நேரம் அளவுக்கு அதிகமான குண்டான தேகத்துடன் அதிகக் குழந்தைகளைக் காண முடிகிறது (இதில் ஆண் பிள்ளைகள் அதிகம்).

இவ்விடத்தில் தொடக்கப்பள்ளியில் எனது தலைமுறையினர் பயின்ற 1970களின் பிற்பகுதியை நினைத்துப் பார்க்கிறேன்- காலுக்குச் செருப்பும் இன்றி, ஒரு மஞ்சள் துணிப்பையில் சிலேட்டையும் நோட்டையும் வைத்துக் கொண்டு காக்கி டவுசருடன் பள்ளிக்கு ஓடிய பிள்ளைகளை’. அவர்களில் பெரும்பாலோரது டவுசர்களின் பின்பகுதி கிழிந்தும், தைக்கப்பட்டும் இருக்கும். ஒழுகும் மூக்கும் மெலிந்த தேகமும் பரவலாகத் தென்படும். அந்நிலை இன்றில்லை.

கடந்த அய்ம்பது ஆண்டுகளில் (1975-2024) நமது வாழ் நிலைமை வெகுவாக மாறிவிட்டதையே மேலே நாம் காணும் காட்சிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த வாழ்நிலை மாற்றத்தில் நமது திராவிட இயக்க ஆட்சியாளர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம். ஆக, நமது திராவிட இயக்க ஆட்சியின் நலத் திட்டங்களால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதையும் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பயனையும் இன்றைய சூழலில் அரசுப் பள்ளியின் வாயிலில் நின்று பெற்றோரையும் குழந்தைகளையும் காணும்போதே நாம் தெரிந்து கொள்கிறோம்.

அதேசமயம் வேறு சில செயல்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் தங்களது இருசக்கர வாகனங்களைப் பள்ளியின் வாயிலில் பாதையை மறித்து நிறுத்தி தங்களது பிள்ளைகளை ஏற்றிச் செல்வதில் ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவதால் உருவாகும் போக்குவரத்து நெரிசலால் விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பது; அதே போல பள்ளிச் சாலையில் பள்ளி தொடங்கும் காலை வேளையிலும், பள்ளி விடும் மாலை வேளையிலும் இருக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் வேகமாக அச்சமூட்டும் வகையில் ஓட்டிச் செல்வது, மற்றும் பெரிய கனரக வாகனங்களை ஓட்டிவந்து போக்கு வரத்தை நிலைகுலையச் செய்வது போன்றவற்றை ஒவ்வொருவரும் தத்தம் பங்கிற்கு ஏற்ற வகையில் செய்வதைக் காண்கிறோம்.

இதனைப் பொறுக்க முடியாமல் பெற்றோரில் யாராவது ஒருவர் போய் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? பள்ளி விடும் நேரத்தில் இப்படி வரலாமா? அல்லது ஓரமாக உங்கள் வாகனத்தை நிறுத்தக் கூடாதா? என்று கேட்டு விட்டால், ”நீ யார் என்னைக் கேட்பதற்கு, உனது வேலையைப் பார்” என்று தனிநபர்களுக்கிடையிலான மோதலாகத் தொடங்கி பெரும் பிரச்சனையாகி விடுகிறது. சில சமயத்தில் கைகலப்பும் ஏற்பட்டு விடுகிறது. வர்க்கம், ஜாதி, ஆணாதிக்கம் போன்ற பின்புலங்கள் சார்ந்த திமிரும், ஆதிக்க உணர்வும் அங்கு வெளிப்படுகிறது. அந்த இடத்தில் தான் மூன்றாவதாக ஒரு அதிகாரம் தேவைப்படுறது. அதுதான் அரசு! காவல் துறை!
ஆக அரசும், ஆட்சியாளர்களும் மக்களின் வாழ்நிலையில், பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் வளர்ச்சிக்கு ஏற்ப, மக்களின் மனங்களிலும் ஒரு மாற்றம், வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. அது நடைபெறாத போது சமூக
மனிதர்களுக்கிடையே முரணும், மோதலும், உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன. இதனால் சமுதாயத்தில் பதற்றம் உருவாகிறது. இன்று நாம் காணும் பல்வேறு(தீண்டாமைக் கொடுமை, ஆணவக் கொலை, ஜாதிய மோதல், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், ஒடுக்கு முறைகள்…..) பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைவது இந்த முரணே ஆகும். அதாவது சமூகத்தில் ஏற்பட்டு வருகின்ற வளர்ச்சியும் அதற்கு ஏற்ப மாறாத, பண்படாத, மக்களின் பின்தங்கிய சிந்தனையும், மனப்போக்கும், பிற்போக்கான நம்பிக்கைகளும் முரண்களே.

இதனை – இந்த முரண்பாட்டை வெறும் சட்டங்களால் மட்டும் தீர்த்து விட இயலாது. மனித மனங்களில் மாறுதலைக் கொண்டு வருவதற்கான பன்முகப்பட்ட வேலைத் திட்டங்களை உருவாக்கிச் செய்யப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

நாம் மேலே குறிப்பிட்டது ஓர் எடுத்துக்காட்டு மட்டும்தான். இதே போல பல்வேறு செயல்பாடுகளிலும் மக்கள் மனங்களில் மாறுதல் தேவைப்படுகிறது. உதாரணமாக இன்று தொலைக்காட்சிகளில் காட்டப்படக்கூடிய கருங்காலி மாலை, மந்திரத் தாயத்து, கைச் செயின், மந்திர டாலர், மந்திரத் தட்டு, மந்திரித்த கயிறு, மோதிரம் என வித விதமாக மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்தும் விளம்பரங்களைப் பார்க்கிறோம். இவையெல்லாம் ‘online’ மூலமாக இருந்த இடத்தில் இருந்தபடியே ஆர்டர் போட்டு வாங்கிவிடக் கூடியதாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறோம். அதே போல கடந்த காலத்தைப் போல 11 ரூபாய், 101 ரூபாய் தட்சணை கொடுத்து வாங்கக் கூடிய நிலை மாறி ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் செலுத்தி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
அதாவது, மக்களிடம் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி மீண்டும் அதே பழைய மூடத்தனத்திற்குப் பயன்படுவதைக் காண்கிறோம். இதே போல மக்களின் கணிசமான பொருளாதாரம் சாமி, கோயில், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றிற்குச் செலவிடப்படுவதையும் காண்கிறோம். அண்மையில் நடைபெற்ற அம்பானி வீட்டுத் திருமணத்தில் 5000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக பத்திரிகைகள் எழுதியதைக் கண்டோம்.

ஆக, சமூகத்தின் உச்சநிலையில் இருப்பவர் முதல் கடைக்கோடியில் வசிப்பவர் வரை தனது வருமானத்தில் கணிசமான தொகையை தனது (மூட) நம்பிக்கை, பண்பாடு சார்ந்த காரியங்களுக்கே செலவழிக்கின்றனர் என்பது புரிகிறது. அதாவது, தொழில் நுட்பமும் அறிவியலும் வளர்ச்சி பெற்ற பிறகும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நம்பிக்கையிலேயே மக்களது மனம் தங்கிப் போயிருப்பதைக் காண்கிறோம். இது வளர்ந்த வாலிபப் பருவத்தினருக்கு குழந்தையின் சட்டையை அணிவித்ததுபோல பொருந்தாமல் உள்ளது.

எனவே, இன்று நமது சமூகத்தில் உருவாக்கப் பட்டுள்ள பொருளாதார சுதந்திரத்தினால் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றிற்கு ஏற்ப அறிவியல் மனப்பான்மையும், பகுத்தறிவுச் சிந்தனையும், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மனிதப்
பண்பாடுகளும் மக்களிடம் வளர்க்கப்பட அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி அறிவியல் மனப்பான்
மையை மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் உருவாக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். அப்படிச் செய்தால்தான் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக வளர்ச்சி பெற்று வருவதன் பயனை நமது வருங்கால சந்ததியினர் முழுமையாக அனுபவிக்க இயலும்,