தமிழ்த் தேசியம் பேசுவோர்…தமிழுக்கும் தமிழர்க்கும் செய்தது என்ன ?

2024 Uncategorized ஆகஸ்ட் 16-31

இங்கிலாந்து நாடு ஈன்ற இணையற்ற நாத்திகப் பெரியார்! உலகப் புகழ் பெற்ற கணித மேதை! சமரசமற்ற அஞ்சா நெஞ்சங்கொண்ட தற்சிந்தனையாளர்! அறிவியல் மனப்பான்மை மிக்க தத்துவஞானி! உலக அமைதிக்காகப் பணியாற்றிய (Pacifist) போர் ஒழிப்புக் கோட்பாட்டாளர்! உலகின் பல நாடுகளிலும் சுழன்றுலவி அணுஆயுத ஒழிப்புக் குரலை ஓங்கி ஒலித்த மனித நலக்காப்பாளர்! கடவுள், மத, மூடநம்பிக்கை எதிர்ப்பில் வாழ்வின் இறுதிவரை உறுதியாகப் பற்றி நின்ற பெற்றியர்! மதவெறியர்கள் இழைத்த இடையூறுகளுக்கு அஞ்சாமல் பகுத்தறிவுப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்த பண்பாளர்! லண்டன் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தைத் தோற்றுவிக்கத் துணை நின்றவர்களுள் முதன்மையானவர்! அறிவார்ந்த நூல்கள் பல இயற்றிய அறிவுலக மேதை! ஆற்றல் மிகு கருத்துரையாளர்! பேராசிரியப் பெருந்தகையாக விளங்கிய பெருமகன்!
இப்படிப் பல்துறைக் கொள்கலனாக விளங்கிய பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் அவர்கள்
தந்தை பெரியார் பிறப்பதற்கு ஏழு ஆண்டுகள் நான்கு மாதங்களுக்கு முன், அதாவது 1872ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் மாலை 5.45 மணிக்கு இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். (Born in Ravenscraft, the country home of his parents near trellech Monmouthshire, wales England)

இளமையில் இயல்பாய் அமைந்த அறிவார்வம்

1. ரசல் அவர்களின் சீரிளம் பருவத்திலேயே அவரிடம் இயல்பாய் அமைந்த அறிவார்வமும் (Inquisitiveness) எதையும் ஏன் என்று கேட்டு ஆராயும் தன்மையும் அவரை ஒரு தனித்த சிந்தனைத் திறம்மிக்கவராகப் பலரும் வியந்து நோக்கும் வகையில் அமைந்தன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் நிகழ்ந்த ஒருசில நிகழ்ச்சிகளை இங்குக் காண்போம்.

அ) ரசலின் அய்ந்தாம் வயதில் அவர் பயின்ற தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் கற்பித்த நிலவியல் பாடத்தில் பூமியின் உருவம் உருண்டையானது என்று கூறிய கருத்தின்மீது அவருக்கு அய்யம் ஏற்பட்டது. உடனே அவர் மாலையில் தோட்டத்துக்குச் சென்று நிலத்தை ஆழமாகத் தோண்டிக்கொண்டிருந்தார். ஏன் நிலத்தைத் தோண்டுகிறாய் என்று கேட்டதற்கு, “இந்த வழியே கீழ்நோக்கிச் சென்று ஆஸ்திரேலியாவைக் காணப்போகிறேன்” என்று கூறினார்.

ஆ) ஒருமுறை ரசலிடம் தூங்கும் மக்கள் ஒவ்வொருவரையும் தேவதைகள் காத்து நிற்பதாகக் கூறப்பட்டது. சிறுவனாக இருந்த ரசல் இக்கூற்றின்மீது அய்யம் கொண்டு, தான், எந்தத் தேவதையையும் கண்டதில்லை என்று பதிலளித்தார். நாம் கண்களைத் திறந்தவுடனேயே தேவதைகள் மாயமாய் மறைந்துவிடும் என்று அவரிடம் மீண்டும் கூறப்பட்டது. இதைக் கேட்ட ரசல் இரவில் கண்களை நன்கு இறுக மூடிக்கொண்டிருந்துவிட்டு திடீரென்று திறந்து பார்த்து தேவதை எதுவும் அங்கு இல்லை என்று அறிந்து கொண்டார். இது மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கட்டுக்கதை என்பதைப் புரிந்துகொண்டார்.

இ) ரசல் ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது. அப்போது, புகழ் பெற்ற பெரிய ஜோதிடர் ஒருவர், இந்த நிலவுலகம் 1881இல் முற்றிலுமாக அழிந்து போய்விடும் என்று கூறினார். அந்த ஜோதிடத்தின் உண்மையை அறிய ரசல் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், ஜோதிடர் கூறியபடி 1881இல் உலகம் அழியவில்லை. மாறாக ரசலிடம் இருந்த ஜோதிடம் பற்றிய எண்ணம் அழிந்தது. ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு கற்பிதம் என்பதை அவர் அந்தச் சிறு வயதிலேயே அறிந்துகொண்டார். (ப. செங்குட்டுவன் எழுதிய பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் எனும் நூல் பக்கங்கள் 15-16. வெளியீடு: சேகர் பதிப்பகம், சென்னை-83, பதிப்பு ஆண்டு- 1976)

2. அ) தந்தை பெரியார் சிறுவனாக இருந்தபோது அவருக்குப் புழங்கக்கூடாத ஜாதியினர் வீட்டில் நீர் அருந்தக்கூடாது; அவர்களிடம் எந்தப் பண்டமும் பெற்று உண்ணக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தல் பல்வேறு வினாக்களை அவர் உள்ளத்தில் எழுப்பியது. ஏன் அவர்களிடம் புழங்கக்கூடாது? அவர்கள் அளிக்கும் உணவை ஏன் உண்ணக்கூடாது? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? என்பன போன்ற அய்ய வினாக்கள் அவரைத் துளைத்தெடுத்தன. அவ்வினாக்களுக்கு உரிய விடை கிடைக்காததால் அவற்றை மீறுவது என்னும் துணிவு இயல்
பாகவே அவருக்கு ஏற்பட்டது.

ஆ) கட்டுக்கடங்காத முரட்டுப் பிள்ளையாகத் திரிந்த பெரியார், சமுதாய மக்கள் பலரும் அனுசரித்து வரும் ஜாதி அனுஷ்டானங்களை நாடோறும் மீறி வந்தார். சமுதாயத்தில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட வாணியர், பணிக்கர், குறவர் முதலியோர் வீடுகளிலும் முஸ்லிம் வீடுகளிலும் நீர் பருகுவதும் பண்டங்களை உண்பதும் அவரின் அன்றாட நடவடிக்கைகளாக இருந்தன. அந்நிலை வளர வளர, மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருப்பது தவறு என்றும், சுயநல வாழ்வுக்காரர்களின் சூழ்ச்சியினாலேயே செயற்கை முறையில் மனித இனம் பிரிந்து கிடக்கிறது என்றும் உணரத் தலைப்பட்டார்.

இ) மதநம்பிக்கையின் பேரால் பொருளற்ற முறையில் சடங்குகள் செய்து பேய் ஓட்டுதல், கண்ணேறு கழித்தல், காக்கைக்குச் சோறு எறிதல் போன்ற சடங்குகளைச் செய்து மக்களால் தெருவிலும் முச்சந்தியிலும் எறியப்பட்ட தேங்காய், பழம் போன்ற பண்டங்களை எடுத்துத் துடைத்துவிட்டும், கழுவாமலும் சிறிதும் அச்சமின்றி சிறுபிள்ளைப் பருவத்தில் உண்டார்.

ஈ) செல்வமும் வைதீகமும் ஒருங்கே நிறைந்த தனது இல்லத்தை நாடி வந்த சந்நியாசிகள் சாமியார்கள், பாகவதர்கள், வித்துவான்கள், பார்ப்பனர்கள் முதலிய பக்திப் பிரச்சாரகர்களிடம் புராணங்கள் சாஸ்திரங்களில் இருக்கும் அறிவுக்குப் புறம்பான கருத்துகள் ஒவ்வொன்றின் மீதும் தனக்கு ஏற்படும் அய்யங்களைக் குறுக்குக் கேள்வி கேட்டு அவர்களைத் திணற அடிப்பது அவரது வழக்கமாக அமைந்துவிட்டது. இந்த வினாக்களுக்கு அவர்கள் விடை அளிக்க இயலாமல் நழுவிப் போனார்களே தவிர, இவரது வாதத்தை எதிர்கொள்ள இயலவில்லை. தந்தை பெரியாரிடம் சிறு வயதிலேயே இயல்பாய் அமைந்த அறிவார்வத்தையும் எதையும் ஆராயும் தன்மையையும் அஞ்சாமையையும் புலப்படுத்தும் இவை போன்ற நிகழ்ச்சிகள் அவரது வரலாற்றில் காணக் கிடக்கின்றன.
கடவுள் எனும் கற்பிதம்

1. அ) ரசல் இளமையில் முழுமுதற்காரணம் எனும் (First Cause) (கடவுள்) கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார். ஜான் ஸ்டூவர்ட் மில் எனும் அறிஞரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த பின்னரே அந்த நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.

ஜான் ஸ்டூவர்ட் மில் (John stuart Mill 1806-1873) என்பவர் யார்? இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதி; சிந்தனையாளர். அரசியல் பொருளாதாரத் தத்துவங்களில் புதிய கருத்துகளை உருவாக்கியவர். எதையும் பகுத்தறிவுக் கண்கொண்டே ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியவர். “பெண் அடிமைப்பட்டிருக்கும் நிலை” எனும் புகழ்பெற்ற இவரது நூல் பெண் விடுதலையை வலியுறுத்தும் சிறந்த படைப்பாகும். குடிகாரனை வெறுப்பது போலவே குழந்தைகளை மிகுதியாகப் பெற்றுக்கொள்பவரையும் வெறுக்கின்ற காலம் வரை ஒழுக்கத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது அரிது என்று கூறியவர்.

ஆ. ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்றால் கடவுளுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். ஒரு காரணமும் இன்றி கடவுள் உண்டாகியிருக்க முடியும் என்றால், இந்த உலகமும் ஒரு காரணமுமின்றி ஏன் உண்டாகியிருக்கக் கூடாது? என்ற வினாவை ஜான் ஸ்டூவர்ட் மில் அவர்களின் நூலைப் படித்தபின் ரசல் எழுப்பினார்.

இ. இக்கருத்தை எதிரொலிக்கும் வகையில் ‘First Cause is existence not God” என்னும் தலைப்பில் நத்தானியேல் பிரண்டன் (Nathaniel Branden) எனும் உளவியலாளர் மற்றும் ஆசிரியர், “American Atheists” எனும் இதழில் வினா விடை வடிவில் குறிப்பிட்டுள்ள கருத்தினை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும்.

(தொடரும்)