அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் (D.C.) 31.7.2005 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், “தந்தை பெரியார் நேற்றும் இன்றும்” என்ற தலைப்பில் நாம் பேருரையாற்றினோம்.
வர்ஜீனியா, மேரிலாண்ட், வடகரோலினா மாநிலங்கள் மற்றும் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் பெருமளவில் உரையைக் கேட்கக் கூடினார்கள். இவர்களில் பலர் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர்கள்.
வாஷிங்டன் பகுதி தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் எம்.எம். ராஜ் அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு மேனாள் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆண்டிகிரி, சீரிய தமிழ்ப் பற்றாளர் பீட்டர், எரோனிமுஸ் ஆகியோர் கூட்ட ஏற்பாட்டிற்குப் பெரிதும் துணைபுரிந்தார்கள்.
இக்கூட்டத்தில் “வாழ்வியல் சிந்தனைகள்” (பாகம்-2) நூல் அறிமுகமும் நடந்தது.
வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.பி.சிவா வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் மேனாள் செயலாளர் கொழந்தவேல், ராமசாமி அவர்கள் தமிழ்மொழி வாழ்த்து பாடியபின் கூட்டம் தொடங்கியது.
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை விளக்கி எமது உரையைத் தொடங்கினோம். பல்வேறு வரலாற்று ரீதியான தந்தை பெரியார் மற்றும் அவருடைய பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை மீட்சிக்கான பெரும்பணிகளை விரிவாக விளக்கினோம்.
திராவிடர் கழகத்தின் தற்காலப் பணிகளின் சிறப்பை விளக்கும்போது இயக்கத்தைப் பற்றித் தெரியாத தமிழ் நண்பர்கள் பெரிதும் வியந்தனர்.
அதன்பின் 2 மணி நேரம் கேள்வி – பதில் நிகழ்வு நடந்தது. வழக்கமாக கேள்வி – பதில் நிகழ்ச்சி என்பது அமெரிக்க இந்தியரின் கூட்டங்களில் 15 முதல் 30 நிமிடங்கள் இருக்கும். ஆனால் அன்று 2 மணி நேரம் நீடித்தது! அனைத்தும் அறிவுக்கு விருந்தாக இருந்தன.
இக்கூட்டத்திற்குப் பெருமளவில் பெண்களும் வந்தது தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்தது.
வாஷிங்டன் தமிழ்ச் சங்க நிருவாகக் குழு இயக்குநர் மணி குமரன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது..
அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் சிகாகோ- லாகிராகில் 6.8.2005ஆம் தேதி மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆங்கிலத்தில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர். மனிதநேய இயக்க முன்னணியினர் கலந்துகொண்டனர்.
செயின்ட் லூயிஸ் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பொற்செழியன் இரு கிராமச் சாதனையாளர்கள் பற்றி விளக்கினார். படிக்காதவரான அன்னா என்பவர் மகாராஷ்டிராவிலும், கோவை அருகே கிளியஞ்சோலை சின்னப்பிள்ளை அம்மையாரும் எவ்வாறு தங்கள் கிராமங்களை முன்னேற்றியுள்ளார்கள் என்பதை விளக்கினார். பத்திரிகைத் துறையோ சினிமாவுக்குக் காட்டும் அக்கறையை இந்தச் சமூக உழைப்பாளிகட்குத் தருவதில்லை என்று இடித்துரைத்தார்.
பஞ்சாபிப் பெண்மணி கரம்சித் கவுர் “பெண்கள் படும்பாடு- யார் கவனிக்கிறார்கள்?” என்பதை ஆழமாக ஆதாரங்களுடன், எடுத்துரைத்தார். பெண் குழந்தைகளைக் கொல்லுதல் காரணமாக ஆண்- பெண் எண்ணிக்கை மாறி பெரிய இடர்களை ஏற்படுத்துவதை விளக்கினார்.
அமெரிக்காவின் தலைசிறந்த தலித் தலைவரான டாக்டர் தீபங்கர், எம்மை அறிமுகப்படுத்திப் பேசினார். இந்திய மனிதநேயத் தலைவர்கள் ஜோதிபா ஃபுலே, சாகுமகராஜ், தந்தை பெரியார், நாராயணகுரு, டாக்டர் அம்பேத்கர் ஆகியோரைப் பற்றி எடுத்துரைத்தார்.
தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கையை வைக்கம் முதல் தொடர்ந்து நிகழ்த்திய பல சாதனைகளை எடுத்துரைத்து unesco மன்றத்தின் பாராட்டு வாசகங்களைப் படித்துக் காட்டினார்.
அந்தச் சமூகநீதி ஒளிவிளக்கைத் தாங்கி உலகெங்கும் ஒளிபரப்பி வருபவர் என்று அப்போது குறிப்பிட்டார்.
நிறைவாக நாம் தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், சாதனைகளையும் விளக்கிப் பேசினோம்.
கூட்டம் முடிந்தவுடன் பலரும் சூழ்ந்து கொண்டு ’ஆங்கிலத்தில் முதல்முறையாக இப்போதுதான் உங்கள் பேச்சைக் கேட்டு வியந்தோம்’ என்று பாராட்டி நெகிழச் செய்தனர்.
பெரியாரின் பெருமைகளைப் பேசாத நாள்கள் எல்லாம் பிறவாத நாள்கள் என்று கருதும் நாம் இந்தப் பாராட்டுகளை மேலும் உழைக்கக் கிடைத்த ஊக்கமாகக் கொண்டோம்.
91.5 Chicago NB Radio FM என்பது ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் முக்கிய நேரங்களில் (அந்தப் பகுதி நேரத்திற்கு ஏற்ப) பலரும் கேட்டு மகிழும் ஒரு வானொலி ஒலிபரப்பாகும்.
அதில் புகழ்பெற்ற பேட்டியாளர் ஜெரோம் மாக்டொனால்ட் (Jerome Macdonald) என்பவர், உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள் முதலிய பலரையும் உலகக் கண்ணோட்டம் ‘World outlook’ என்ற தலைப்பில் பேட்டி கண்டு 20 நிமிடங்கள் ஒலிபரப்புவது வழமை.
தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளை நடத்தும் அவரும், அதன் தயாரிப்பாளரான ஆண்டிரியா என்ற பெண்மணியும் எம்மைப் பேட்டி கண்டனர். இயக்கம் பற்றியும், இந்திய சமூக அமைப்பு, மதவெறி பற்றியும் பல கேள்விகளைக் கேட்டு, பதிவு செய்து 26.8.2005 அன்று ஒலிபரப்பினர். அமெரிக்காவின் பல மாநிலங்களில் உள்ள பலரும் பல பகுதிகளில் கேட்டு மகிழ்ந்தனர். பெரியார் கொள்கை, சாதனைகள் பற்றிப் புகழ்ந்தனர். இணையதளத்திலும் அதைக் கேட்டு பலர் மகிழ்ந்தனர். இந்த வாய்ப்பும் அரிதான ஒன்றுதான் எனக்குக் கிடைத்தது!
பெரியார் உலக மயமாகி இருக்கிறார் என்பதற்கான சான்று இது. எனக்கு மட்டும் பெருமை அல்ல. நமக்கானப் பாராட்டு.
சிகாகோவில் என் மகள் அருள்பாலு அவர்கள் இல்லத்தில் இருந்தபோது, அமெரிக்க நேரப்படி 13.08.2005 காலை 10 மணி அளவில் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையனாரின் மறைவுச் செய்தி அறிந்தேன்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள இயலாத நிலையில்,
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இறையனார் மறைவுச் செய்தி அறிந்தவுடன் 13.8.2005 அன்று காலை 7.30 மணிக்கு சென்னை – பெரியார் திடலுக்கு வந்து இறையனார் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இறையனார் அவர்களின் துணைவியார் திருமகள் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கலைஞர் அவர்களுடன் தி.மு.க., பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உடன் வந்திருந்தார். நம் கலைஞர் அவர்கள் மிகுந்த பாச உணர்ச்சி மேலிட இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைவதாகக் கூறி, தொலைபேசி மூலம் எமக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார்கள். இரண்டு நாள் முன்புதான் நீங்கள் அவரைப்பற்றி உரையாற்றியதை ‘விடுதலை’யில் படித்துப் பெருமை கொண்டேன் என்று கூறித் தேற்றினார்கள்.
அவர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
இறையனாரை இழந்த ஆற்றொணாத் துயரத்தில், அரிய தங்கத்தை, என் அங்கத்தை இழந்து தவிக்கும் கொடுமை இவ்வளவு விரைவில் ஏற்பட்டு விட்டதே! என்ன செய்ய? இறையனாரின் இனநலப் பற்றும், எதையும் ஏற்று இன்முகத்தோடு செயல் புரிந்திட்ட பாங்கும், அவரது தனித்தமிழ் அறிவும், ஆர்வமும் தனித்தன்மை வாய்ந்தவை. எவரைக் கொண்டும் அவர்தம் இடத்தை நிரப்பிட இனி ஒரு போதும் முடியாது; முடியவே முடியாது!
பதவி ஓய்வு என்ற நிலைக்குப் பின்னும் அவரது தொண்டறம் இயக்கத்தின் எல்லா முனைகளுக்கும் வற்றாது கிடைத்தது! வரலாறாக நிலைத்தது!! எழுதுவதில், பேசுவதில் வாதாடுவதில், ஆய்வு செய்தலில் அவருக்கு இணையில்லை என்று நிறுவி- இயக்க வரலாற்றில் நிலைத்தவர்.
ஜாதியை ஒழிப்பதில் அவர் ஓர் ஒப்பற்ற செயல் வீரர்; அதற்கு அவரது குடும்பமே ஒரு சிறு போர்ப்படை! அவரது கொள்கைப் பற்று, வெறும் எழுத்து, பேச்சோடு நின்றுவிடவில்லை செயல், மூலமும் ஒளிவீசித் திகழ்பவை! அவரது ஆற்றல் பல்துறை ஆற்றல்.
ஆய்வுத்துறையில் அவரது தலைசிறந்த படைப்பு, காலத்தால் அழியாதது – சாவாலும் பறிக்க முடியாத ஒன்று; அவரது ஆய்வு நூலான ‘இதழாளர் பெரியார்’ என்னும் நூல் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடான உரைக் கொத்து. 40 ஆண்டுகளுக்கு மேலான எமது நட்புறவில் நிகழ்ந்த எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் அடுக்கடுக்காக நினைவில் வந்து நின்று எம்மை வேதனைப்படுத்தின.
அவருக்கு இயக்கத்தின் சார்பில் தலை தாழ்ந்த வீரவணக்கம் கூறுகிறோம். அவரது தொண்டறத்தால் அவருக்கு மறைவேது? நம் ஒவ்வொருவரின் இதயங்களில் நிறைந்து இயக்க வரலாற்றின் இணையற்ற பொன்னேடாகத் திகழ்வார்; திகழ்ந்து கொண்டே இருப்பார்.
அவரது மறைவையொட்டி, கழகக் கொடிகள் 3 நாள்கள் இயக்க சார்பில் துக்கம் அனுசரிக்க, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்” என்று அறிக்கையில் தெரிவித்தோம்.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்தது.
உச்சநீதிமன்றம் அதன் எல்லை தாண்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கொள்கை முடிவுகளைக்கூட, தூக்கி எறிவதுபோல் அத்தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும்; மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினையும் குலைப்பதாகும்.” என்று எமது அறிக்கையில் (15.8.2005) எதிர்ப்புத் தெரிவித்தோம்.
களை எடுக்கிறோம் என்று கூறி பயிர்களை அழித்தால் எவரேனும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? என்று அப்போது நம் கருத்தைத் தெரிவித்தோம்.
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இத் தீய விளைவுகளை மாற்றியும், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைக்குச் செயல் வடிவம் தந்தும் உடனடியாக தக்கதோர் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதோடு, 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பில் அவை வைக்கப்படுதல் அவசியம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தினோம். தமிழ்நாடு சென்றவுடன் (06.09.2005) அன்று ‘‘உச்சநீதிமன்றம் சமூகநீதியும்’’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தினோம்.
திராவிடர் கழகத்தினர், 22.8.2005 அன்று காலை ஒவ்வொரு மாவட்டத் தலைநகரம், ஒன்றியங்களில் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் ஒன்றிய அரசு அலுவலகத்திற்குமுன் நடத்தினர்..
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாநிலத்தில் பஃபெல்லோ நகருக்கு அருகே ஆம்கர்ஸ்ட் (Amherst) என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகப் பகுத்தறிவு மய்யம் செயல்பட்டு வருகிறது. இந்த மய்யத்தை நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் பால்கர்ட்ஸ் அவர்கள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர் சர்.ரிச்சர்டு டாக்கின்ஸ் போன்ற உலகப் பகுத்தறிவுவாதிகள் பங்கேற்கும் பகுத்தறிவு மாநாடுகள் நடத்தியவர். இந்தப் பகுத்தறிவு மய்யத்தில் உள்ள நூலகத்தில் உலகப் பகுத்தறிவுவாதிகளின் 60,000க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. நமது Modern Rationalist இதழும் இடம் பெற்றுள்ளது!
நாம் இந்த மய்யத்திற்கு 19.8.2005 அன்று சென்றோம். பஃப்பெல்லோ விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றார் பால்கர்ட்ஸ் அவர்கள்.
விமானத்தில் பயணத்தின்போது எங்களுடைய பெட்டி வராத நிலையில், வேடிக்கயான அனுபவம் எனக்கும் டாக்டர் சோம இளங்கோவன் அவர்களுக்கும் ஏற்பட்டது. அது ஒரு சுவையான கதை. வாழ்வியல் சிந்தனையில் இதை எழுதியிருக்கிறேன்.
20.8.2005ஆம் தேதி நாம் அங்கு சென்று பேராசிரியர் பால்கர்ட்ஸ் அவர்களைச் சந்தித்து இயக்க நடவடிக்கைகளை எடுத்துரைத்தோம். அவரும் அவரது அமைப்பின் கிளை மன்றங்கள் பல இயங்கி வந்ததையும் பிற செயல்பாடுகளையும் விவரித்தார். பின்னர் மிகப்பெரிய பகுத்தறிவு வெளியீட்டகமான ‘ப்ராமிதியஸ்’ (Promethius) பதிப்பகத்துடன் திராவிடன் பதிப்பகம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நான் கையொப்பமிட்டேன். அப்போது மானமிகு இலக்குவன் தமிழ், சோம. இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த உடன்பாட்டின்படி அவர்களது வெளியீட்டை நாமும் நமது வெளியீடுகளை அவர்களும் வெளியீடு செய்துகொள்ளலாம். பேராசிரியர் பால்கர்ட்ஸ் அவர்கள் என்னிடம் ‘பெரியார் களஞ்சியத் தொகுப்பு’ நூலை அவரே ஒரு நூலாக வெளியிட விருப்பம் தெரிவித்தார்.
பாரீஸ், லண்டன், அமெரிக்க ஆகிய மேலை நாடுகளில் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப பயணம் மேற்கொண்டு அதை வெற்றிகரமாக நிறைவேற்றிட என்னையும் என் இணையர் மோகனா அவர்களையும், 29.8.2005 திங்கள் அன்று சிகாகோ ஓகேர் (Ohare) விமான நிலையத்தில், மாலை 5.30 மணிக்கு லண்டன் புறப்பட்ட (பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில்) அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டு அமைப்பின் இயக்குநரும், சீரிய பொதுநல ஆர்வலருமான பொறியாளர் விசுவநாதன் அவர்களும், அருள்- பாலு, கவுதமன், நீலன் ஆகியோரும் வழியனுப்பி வைத்தனர்.
30.8.2005 காலை 7 மணியளவில் அந்த விமானம் லண்டன் ஹீத்துரு (Heathrow) விமான நிலையம் அடைந்தது. எங்களை லண்டன், பரோ- கிராய்டன் நகரக் கவுன்சிலரும், வீட்டு அமைப்பின் அமைச்சரும் (அந்தப் பகுதிக்கு) உறுப்பினருமான பெரியார் பெருந்தொண்டர் திரு. மைக்கல் செல்வநாயகம்,
திரு.ஜெயம் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் லண்டன் விமான நிலையத்தில் எங்களை பி.பி.சி., வானொலி புகழ் சங்கர், செல்வநாயகம், கவிஞர் செ.வை.ரெ. சிகாமணி, அவர்தம் செல்வன் பொற்செழியன் (இவர் லண்டனில் வாழ்பவர்) திருமதி மாலினி பொற்செழியன், ஜெயம் ஆகியோர் பகல் ஒரு மணியளவில் சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
அமெரிக்காவில் பல பகுதிகளில் வாழும் நண்பர்கள் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் சரோஜா நியூஜெர்சியிலிருந்தும், டாக்டர் இலக்குவன் தமிழ் டல்லாஸ் நகரிலிருந்தும், அரசு – மீனா ஆகியோர் வாஷிங்டன் மேரிலாந்து பகுதியிலிருந்தும், டாக்டர் எம்.என். நல்லதம்பி அட்லாண்டாவிலிருந்தும், வாஷிங்டன் ராஜ் அவருடைய இணையர் திருமதி. சரோஜினி, நியூஜெர்சியிலிருந்து கவிதா- ஞானசம்பந்தம் ஆகியோரும், நியூயார்க்கிலிருந்து அமுதா வெங்கடாசலம் அவர்களும், நியூஜெர்சியிலிருந்து மோகனம் அவர்களும், மேரிலாந்து பகுதியிலிருந்து டாக்டர் சித்தானந்தம், முத்துவேல், செல்லையா மற்றும் நண்பர்களும் தொலைபேசி மூலமே பேசி வழியனுப்பி வைத்தனர்.
பகல் 1.40 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்ட மற்றொரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருவரும் பயணமாகி, சென்னை- அண்ணா விமான நிலையத்தை 31.8.2005 அன்று காலை 4 மணியளவில் வந்தடைந்தோம்.
முதல் நிகழ்ச்சியாக திடலுக்குச் சென்று பெரியார் பேருரையாளர் இறையனார் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி, படத்திற்கு மாலை அணிவித்தேன்.
சென்னை பெரியார் திடலில் பெரியார் மருத்துவமனை சார்பில் நீரிழிவு நோய் இலவச பரிசோதனை முகாமை 1.9.2005ஆம் தேதி காலை நாம் தொடங்கி வைத்தோம். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் 40 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் இரத்தம் மற்றும் சிறுநீரில் நீரிழிவு நோய் உள்ளதா என பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.
கல்பாக்கம் அ. இராமச்சந்திரன் – சே.வசந்தி ஆகியோரின் மகள் வ.இரா. சங்கவைக்கும், திருச்சி காட்டூர் அ.சந்தானம்- சலேத்தம்மாள் இணையரின் மகன் ச. இரவிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை திருச்சி பால் பண்ணை
யில் உள்ள திருமண மண்டபத்தில் 3.9.2005 அன்று தலைமையேற்று நடத்தி வைத்து சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிப் பேசினோம்.