அறிவியலை மூடநம்பிக்கைக் கூடாரமாக்குவதா? வன்மையாகக் கண்டிக்கிறோம்!

2024 ஆகஸ்ட் 16-31 தலையங்கம்

நம் நாட்டில் தற்போது மூடநம்பிக்கைகள் ஒரு புதுமுறையில் நிலைக்க, நீடிக்க வைக்கப் பரப்பும் வழிவகைகளை, பழமைச் சக்திகளும், இந்த மூடநம்பிக்கைகளை மூலதனமாக்கிப் பிழைப்பு நடத்தும் கூட்டமும் ஒருங்கிணைந்து இதனை – பெருமுதலாளிகளின் உடைமையாக்கியுள்ளனர். நாளேடுகள், தொலைக்காட்சி மூலம், (அவற்றுக்கு ரேட்டிங் விகிதம் என்ற சாக்கு ஒரு காரணம்) அன்றாடம் அறிவுக்குக் கேடான, அறிவியலுக்கு முரணான செய்திகளைப் பரப்புகின்றனர்.

ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. கூட்டணி அரசோ, பல திட்டங்களிலும் பல்வேறு துறைகளைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களின் அறிவை நாசமாக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியில் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகின்றனர் – சளைக்காமல்.

இப்போது ‘‘தி டெலிகிராப்’’ என்ற ஆங்கில நாளேட்டில் வந்துள்ள ஒரு வேதனைக்கும் வெட்கத்திற்குமுரிய ஒரு செய்தி இதோ:-

‘‘ஜோதிடம் மற்றும் மறுபிறவி உள்ளிட்ட ‘போலி அறிவியல்’ தலைப்புகள், (‘Pseudo Science) உயர்கல்வி நிறுவனங்களில் (HEIS), இந்திய அறிவு அமைப்புகளின் (gks) போர்வையில் அறிமுகப்படுத்தப்படுவது குறித்து, அறிவியல் கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.’’

விஷ உருண்டைக்குச் சர்க்கரைப் பூச்சுடன் வர்ணாஸ்ரமத்தை இதில் இணைத்து இளம் பிஞ்சுப் பருவத்தில் நஞ்சினைத் தந்து – அதுவும் மெல்ல மெல்ல ஆனால், உறுதியாகக் கொல்லும் ஓர் ஆபத்துப் போல, இதில் வர்ண தர்மவாதிகளும், மூடநம்பிக்கைகளை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் காவி வண்ணத்தின் வீச்சாக இப்படி பல புதிய வித்தைகளையும் வியூகங்களையும் பயன்படுத்துகின்றனர்!
அறிவியல் (Science) என்பது வேறு; போலி அறிவியல் (Pseudo science) என்பது வேறு!

வெண்ணெய் வேறு; சுண்ணாம்பு வேறு.இரண்டும் வெள்ளை நிறம் என்பதால் வெண்ணெய்க்குப் பதில் சுண்ணாம்பை உள்ளே நுழைத்தால் விளைவு என்னவாகும்?

பா.ஜ.க. 2014இல் ஆட்சியில் – வளர்ச்சி என்ற போர்வையைக் காட்டி வந்து அமர்ந்தது முதலே இந்த அடாவடித்தனம் ஆட்சி புரியத் தொடங்கியது!

புராணப் புளுகுக் கதைகளை – விஞ்ஞான விளக்கக் கேலிக்கூத்தை – மும்பையில் நடந்த உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதை ஏற்க முடியாது என்று அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானிகள் வெங்கட் போன்றவர்கள் இங்கே வரவே மாட்டேன் என்று சூளுரைத்து வெளியேறினர்!

புராணங்களையும், இதிகாசங்களையும், வரலாறுகளாகவும் (History). மதக் கொள்கைகளையும் தத்துவங்களாகவும் (Philosphy) ஜோதிடம் போன்ற போலி வித்தைகளை (Pseudo science) உண்மையான அறிவியல் போன்றும் பம்மாத்துச் செய்து பரப்பும் பணியை இப்போது உயர்கல்வித் துறைகளே எடுத்துச் செய்தால் நாடு எங்கே போகும்?

21ஆம் நூற்றாண்டிலிருந்து பின்னோக்கி

(பொ.ஆ.க) 2ஆம் ஆண்டுக்குக் கொண்டு செல்லும் அறிவைக் கெடுக்கும் நிலை, (கொடுக்கும் நிலை அல்ல) ஆகிவிடும்!
இதுகுறித்து நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற, அறிவியல் மனப்பாங்குடையவர்கள் ஆழ்ந்த கவலை கொள்வதோடு – களமாடவும் தயாராக வேண்டும்!

இனிமேல், சூரிய சந்திர கிரகணங்களும்கூட ராகு, கேது பாம்பு விழுங்குவதால்தான் ஏற்படுகிறது என்றே இளம் பிள்ளைகளுக்குப் பாடமாகச் சொல்லி, பரீட்சையாக எழுதி, தேர்விலும் வெற்றி பெற வைத்து, அவர்களின் மூளைகளைக் குப்பைத் தொட்டிகளாக்கி விடுவர். அறிவியலுக்குப் புறம்பான இவை போன்ற முயற்சிகளை முறியடிக்க முன்வரவேண்டும்!

அரசியல் சட்டப் பிரிவு 51A(h) எல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய் தானா?
வெட்கம்! மகா மகா வெட்கம்!!

— கி.வீரமணி,
ஆசிரியர்