அறிவும் மானமும்

2024 ஆகஸ்ட் 1-15, 2024 சிறந்த நூல்களிலிருந்து சில பக்கங்கள்
நூல் : மனித உரிமைப் போரில் 
பெரியார் பேணிய அடையாளம்
ஆசிரியர் : பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான்
வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
பெரியார் திடல், சென்னை _ 600 007. 
பக்கங்கள் : 192
விலை : ரூ.180/ _-

உயிர்கள் பலவற்றுள் மனிதனின் தனித் தன்மை யென்ன? மனித வாழ்வின் சிறப்பு யாது? அது சிறப்படை வது எவ்வாறு? எதை நோக்கி, எப்படிப் பயன் தந்தும் பயன் பெற்றும் வாழ்வது? பண்புடைய மனித உறவுகள் யாவை? இத்தகைய எண்ணங்கள் ஏதுமின்றி. ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம். உழைத்தோம் உண்டோம் இனத்தைப் பெருக்கினோம் இருப்போம் இறப்போம் என்ற வகையில் சூழலோடு சுழன்று மடிகின்ற மக்களே நம் நாட்டில் மிகுதி.

மனித வாழ்வின் பயனைப் பற்றிப் பெரிதாகச் சிந்திக்கும் சிலரும் கருதுவது என்ன? பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவன் திருவடி நிழலை அடைவது எவ்வாறு? ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு யாது? பாசத்தை விட்டு, பதியை அடைவதற்குப் பசு என்ன செய்ய வேண்டும்? சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றா. வேறா? ஒன்றாயின், சீவான்மா தன்னைப் பரமான்மா அறிவது எங்ஙனம்? வேறாயின் சீவான்மா பரமான்மாவை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? கைலாயத்திற்கும் வைகுண்டத்திற்கும் வழியென்ன?

மெய்யறிவையும் மத நம்பிக்கையையும் இணைத்துக் குழப்பும் இத்தகைய கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சி பல நூற்றாண்டு களாக நமது நாட்டில் நடக்கின்றன. இன்னும் முடிந்தபாடில்லை; தொடர்கிறது. இதன் விளைவு என்ன? அறியாத தெளியாத குழம்பிய மக்கள் பொருளற்ற மோதல்களிலும் பயனற்ற தீயபழக்க வழக்கங்களிலும் மூழ்கி, வறுமையும் பிணியுமுற்று, அஞ்சியடங் கியவராய், இவ்வுலக வாழ்வைத் துன்பம் நிறைந்த ‘நரகம்’ ஆக்கிக் கொண்டனர்.

மோட்சத்திற்கு வழிகாட்டுவதாகக் கூறிப் பொருளற்ற சடங்கு சம்பிரதாயம் வேள்வி வேடிக்கை முதலியவற்றைக் காட்டும் புரோகிதக் கூட்டமும்,அவர்கள் வகுத்தளித்த வருண தர்மத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பணக்கார மற்றும் பதவிக் கூட்டமும் இவ்வுலகைத் தங்களுடைய ‘சொர்க்கம்’ ஆக்கிக் கொண்டார்கள்.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் தேவையற்ற சிக்கல் நிறைந்த வாழ்க்கையின் துன்பமும்
கொடுமையும் இனியும் தொடரத் தான் வேண்டுமா? அவற்றைப் போக்க என்ன?

பெரியாரின் வாழ்க்கை முறை எவ்வளவு எளிமையானதோ. அதைப் போன்றே அவர் காட்டிய வாழ்க்கை நெறியும் எளிமையானது.
மனித வாழ்வின் இலக்காகவும் பயனாகவும் இருப்பவை எவை? இன்பம், இணக்கம், அன்பு, அமைதி ஆகியவை மாந்தனின் இயல்பான பண்புடை நாட்டங்கள் ஆகும்.

இவற்றை நிலைப்படுத்தத் துணையான கொள்கை. திட்டம். அமைப்பு, இயக்கம் நடைமுறை முதலியவற்றை ஆதரித்து வளர்க்க வேண்டும் அல்லாதனவற்றை எதிர்த்து அழிக்கவேண்டும். எது நல்லது. எது தீயது எனப் பகுத்தாய்ந்து தேர்ந்து நடக்க வேண்டும். அவ்வாறு அன்றி, பிணங்கிப் பிரிந்து பகைத்து மோதவைக்கும் தர்மத்தையும் நம்பிக்கையையும் பக்தியையும் கைவிட வேண்டும்.
உயிர்கள் உணர்வு பெற்றவை. மனிதன் பிற உயிர்களைவிட ஒருபடி மேலே சென்று, தன்னுணர்வு பெற்றிருக்கிறான். தன்னுணர்வு இருப்பதால் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து, எதிர்காலத்தைப்பற்றி எண்ண முடிகிறது. இவ்வகையில் காலங்களை இணைக்கும் கற்பனையாற்றல் அவனைச் சிந்திக்கும் தனித்தன்மை உடையவனாக்குகிறது. அலைந்தும் ஒருவரை யொருவர் அழித்தும் துன்புறுத்தியும் விலங்கு நிலையில் வாழும் மனிதனுக்கு, இன்பமும் இணக்கமும் தரும் அமைதியான அன்பு வாழ்க்கைக்குரிய வழிவகைகளைக் காட்ட வல்லது அவனது அறிவியற் பார்வையே!

மனிதன் தன்னுணர்வு பெற்றிருப்பதால் இன்னொரு தனித்தன்மையையும் உடையவனாய் இருக்கிறான். அதுதான் மான உணர்வு. அறிவுள்ள மனிதனுக்கு மான இழப்பைப்போல் துன்பம் தருவது வேறு எதுவுமில்லை!
மனிதனுக்கே உரிய அவன் வாழ்வில் இன்பமும் இணக்கமும் அன்பும் அமைதியும் நிலவச் செய்கின்ற இரு தனித் தன்மைகளான அறிவையும் மானத்தையும் மறந்தும் இழந்தும் தாழ்ந்துவிட்ட தன் இனத்தை உயர்த்தி உயிர் உள்ளவரையும் உழைத்தவர் தந்தை பெரியார்!

எதையும் பயன் கருதி மதிப்பிட வேண்டும் என்பார். இன்பத்தைக் கூட்டுவதைக் கொள்ள வேண்டும். துன்பத்தைப் பெருக்குவதைத் தள்ளவேண்டும், பயன், இன்பம், கூட்டல். பெருக்கல் என்றவுடன், ‘பெரியார் பொருள்கள் தரும் சுகத்தையே மதித்தவர்’ என்ற வகையில், அவரை எப்படிக் கொச்சைப்படுத்தலாம் என எதிர் பார்த்திருப்பவர் கூற முற்படலாம். ஆனால், உண்மை அஃது அன்று!

வள்ளுவரைப் போன்றே பெரியாரும் பொருட்செல்வத்தின் வலிமை. தேவை, பயன் ஆகியவற்றை நன்றாக அறிந்தவர்தான்! ஆனால், அதனினும் மேலான ஒருவன் நிலையாகப் போற்ற வேண்டிய, அவன் இழக்கக் கூடாத, அவனை மனிதனாக வாழ்விக்கின்ற செல்வங்கள் அறிவும் மானமுமே! அவை தரும் இன்பமும் பயனும்தான் உயர்ந்தவை, உண்மையானவை!

கடவுளைக் கற்பித்தான் மனிதன். கற்பனைக்குக் கல்லுருவம் தந்தான். அதன் பக்கத்திலே இடம்பிடித்துக் கொண்டவன். மற்றவரை விலகி நிற்கச் சொன்னான்; அவர்கள் தாழ்ந்தவர்கள் என நம்பவைத்தான். அவர்களால் கடவுள் தீட்டாகும் என்றான். வேத ஆகம விதியைக் காட்டிப் பிறவியில் உயர்வு தாழ்வைக் கற்பித்தான்.

இத்தன்மைத்தான் கடவுளைக் கண்ட பெரியார், அது கல்லேதான் என்று அடித்துச் சொன்னார்.

அஃது ஒரு காலத்தில் கல்லாக இருந்தது. மந்திரத்தை ஏற்றியவுடன் அதற்குத் தெய்வத் தன்மை வந்துவிட்டது எனப் பகர்ந்தனர் வேதியர்.

கல்லைக் கடவுளாக்கும் ஆற்றல் மந்திரத்திற்கு இருக்குமாகில், சாதியில் தாழ்ந்தவனை மனிதனாக்கி, அந்தக் கடவுளுக்கு அருகில் நிறுத்தும் ஆற்றல் அதற்கு ஏன் இல்லை? என்று பெரியார் கேட்டார்.

சனாதனக் கல் நெஞ்சர்களை நோக்கி, 1928இல் சிதம்பரத்தில் விடுக்கப்பட்ட இப்பெருங் கேள்விக்கு, வருண தருமியர் எவரும் இதுவரை, அவர்களுக்கே உரிய வழக்கமான விளக்கெண்ணெய் விளக்கமுங்கூடச் சொல்லத் துணியவில்லை!
தாழ்ந்துவிட்ட தன்னுடைய இனத்தாருக்கு மானமெனும் ஆடையுடுத்தி அவர்களை மனிதர்களாக உயர்த்தப் பெரியாரின் அறிவுக்கைகள் விரைந்தன.

காலம் உருண்டது. பெரியாரின் கொள்கைக்கு ஆதரவு திரண்டது. கலைஞர் மு. கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சு, 1971இல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை நல்கக்கூடிய சட்டத்தைத் தமிழக சட்டசபையில் ஒருமனதான ஒப்புதலுடன் நிறைவேற்றியது. ஆனால் அடுத்த ஆண்டே. அச்சட்டத்தின் நடைமுறைப் பகுதி செல்லாதென. வேத ஆகம விதிகளைக் காட்டி தில்லியில் உள்ள இந்தியப் பேரரசின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெரியாரின் அன்பிலும் அறிவிலும் மலர்ந்த தமிழகச் சட்டத்தை. வேத ஆகம சாத்திர நம்பிக்கையைக் காத்து நிற்கும் இந்திய அரசியல் சட்டம் புறக்கணித்துவிட்டது. வள்ளுவத்தை வேதியம் தள்ளிவிட்டது.

மனித நெறியின்மீது மனுதருமம் தற்காலிக வெற்றி கண்டுள்ளது. இதை நிலையானதாக்கிக் கொள்ள இந்திய ஒற்றுமையின் பெயரால் இந்து-இந்தி ஆதிக்கத்தைத் திணிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஆனால் இனமானம் பெற்றுவிட்ட தமிழர்களை இந்த அறிவு ஊழியிலும் அடக்கி ஆளலாம் என எண்ணுவோர் தோல்வி காண்பது திண்ணம். உரிமை முழக்கம் செய்தவண்ணம் களத்திலே மாண்ட பெரியாரின் குரல் தமிழனைக் கடமை தூங்கச் செய்யாது!
தமிழகம் வென்றெடுத்த மானுட நெறியைத் தில்லி அரசு விழுங்கிவிட்டது. இனி அந்நெறியை மீட்டெடுக்கத் தில்லியின் பிடியிலிருந்து தமிழகத்தையே மீட்டாக வேண்டுமென்பது பெரியார் வெளியிட்ட இறுதி வேட்கை. இன இழிவைத்
தங்கள் மீது திணிக்கும் இந்திய அரசு, தமிழினத்தாருக்கு அந்நியமே என்பது அவர் தீர்ப்பு!

இந்தியன். இந்து எனும் அடையாளங்களைத் துறந்து தமிழின அடையாளத்தைப்பற்றி நிற்பதால் மட்டுமே அவர்கள் உலகின் மற்ற இனங்களுக்கு நிகரான உரிமையைப் பெற முடியும் என்பது பெரியார் கண்ட உறுதி.

கடவுளை மற, மனிதனை நினை என்பது பெரியார் தந்த பொதுமுழக்கம், இதை நினைவிற்கொண்டு, அவர் வழியில் நடை போடும் தொண்டர்கள் இக்காலத்தில் ஆற்றவேண்டிய கடமையைச் செய்வதற்கான குறிக்கோளாக ஏற்றிருக்கும் தனி முழக்கம். ‘இந்து என்று சொல்லாதே. இழிவைத் தேடிக் கொள்ளாதே. தமிழன் என்று சொல், தலை நிமிர்ந்து நில்!’ என்பதாகும்!

பெரியாருக்கு மறைவில்லை; அவர் இன்றும் வாழ்கிறார். வழிகாட்டுகிறார்!

தமிழர்கள் பெருமைக்குரிய நீண்ட நெடிய வரலாறு உடையவர்கள். அய்யாயிரம் ஆண்டுகட்கு மேலாக, வரலாற்றுக் காலம் முதல் மூவேந்தர்களும் பிறரும் ஆண்ட, குமரி முதல் வேங்கடம் வரை பரவியுள்ள நிலத்தில் பதியெழு அறியாப் பழங்குடியினராய் வாழ்கிறவர்கள். இறவாப் புகழ் வள்ளுவப் பெருந்தகையின் உலகு தழுவிய பொதுநோக்குடைய அறநூல் உள்ளிட்ட செழுமையான தொன்மை இலக்கியங்களைக் கொண்ட இன்மொழியினர். தனித்த நன் மரபுகளையும் நாகரிகச் சிறப்புக்களையும் கண்டவர்கள்.

இத்தகு பெற்றிகளை உடைய தமிழ்நாட்டின் பழம் பெருமைகளை நினைத்து அமைந்தவர் அல்லர் பெரியார். இடைக்காலத்தில் நுழைக்கப்பட்ட கடவுளர் பெயராலும் மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தப்பட்ட சமுதாயத்தில் பின்தங்கித் தாழ்ந்தவர்களின் நிலையை மாற்ற முற்பட்டார். சமனிய மனிதநேய அடித்தளத்தின்மீது மானமும் அறிவும் உள்ள மக்களைக் கொண்ட புதிய தமிழ்நாடு உருவாக்க முனைந்து நின்றார். அதற்கு எதிரான அரசியற் பொருளாதார சமுதாயப் பண்பாட்டு ஆதிக்கங்களை அகற்றும் பணியில் அவர் செய்த ஈடிணையற்ற ஈகமும், முன் வைத்த கொள்கைகளும், பின்பற்றிய முறைகளும் மனித இன வரலாற்று ஏட்டில் ஒளிதரும் பக்கங்களாக மிளிர்கின்றன. அவற்றைப் பயில்வோர் பெறுகின்ற பெரும் பயன் உள்ளத் தெளிவும் உறுதியும் ஆகும்.