வரவேற்கப்பட வேண்டிய “லாபட்டா லேடிஸ்!” திருப்பத்தூர் ம.கவிதா

2024 ஆகஸ்ட் 1-15, 2024 திரைப்பார்வை

ஒரு பெண் தன் ஏக்கங்களை தன் கணவனிடம்கூட வெளிப்படையாகப் பேசாமல் கமுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்; தன் கோபதாபங்களையும், சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தங்களையும் குடும்பத்திலோ பொதுவெளியிலோ உடைத்துப் பேசாமல் இருப்பது தான் நல்ல பெண்ணுக்கான அழகு!இப்படியாகிய குப்பைச் சிந்தனைகளைக் கூட்டிப் பெருக்கி தூரக் கொட்டி, தனக்கானதைத் தயக்கமற பெண்கள் உரக்கப் பேசுகிற காலம் தற்காலம்!

முக்காடுக்குள் முகம் மறைத்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் வட இந்திய திருமணச் சடங்குகளின் கேலிக்கூத்து திறம்பட திரைப்படமாகி வெளிவந்திருப்பது தான் ”லாபட்டா லேடிஸ்” – அதாவது, தொலைந்து போன பெண்கள்!
பெண்கள் மொத்தமாய் இச்சமூகத்தில் தொலைந்து போய்த்தான் கிடக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் பெண்கள் எங்கே தொலைந்தார்கள் என்று (தேடிப்) பார்ப்போம் வாருங்கள்…

மாறிப்போன மணமகள்கள்!

மணம் முடிந்து மணமகள் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு மணமக்கள் செல்கிறார்கள். மணப்பெண் என்பதால் அதற்கென்று தனியே அவர்கள் வழக்கப்படியான சிவப்புப் புடவையைக் கட்ட வைத்து, தலை குனிந்து நடக்க வேண்டும் என்ற அறிவுரையோடு, தலைக்கும் அதே சிவப்புத் திரைச்சீலையோடு கூடிய ஜிகு ஜிகு முக்காடு அணிவித்து பெண்ணின் குடும்பத்தார் வழியனுப்புகிறார்கள்.

இருசக்கர வாகனத்திலும் பேருந்தின் மேலமர்ந்தும் (இது வட நாடு) ரயிலிலும் பயணம் தொடர, கூட்ட நெரிசலில் ஏதோ ஓரிடம் பார்த்து பெண்ணை அமர வைக்க, அந்தப் பெட்டியில் அதே சிவப்புப் புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் முக்காடுடன் பல மணமகள்கள் உள்ளனர்.

உனக்கு எவ்வளவு? அவனுக்கு எவ்வளவென வரதட்சணை பற்றிய அரட்டையோடு ரயில் ஓட ஒவ்வொருவராய் அமர, எழ, என இடம் மாற மணப்பெண்ணும் மாறிவிட, சற்றுத் தூங்கிய கணவன் ஊர் வந்ததென அவசரமாய்ப் பக்கத்தில் இருப்பவர் தன் மனைவி என்று எழுப்பி இறக்கி விட, மேளதாளத்தோடு மணமகன் வீட்டார் வரவேற்க, வீடு வந்து ஆரத்தி எடுக்கும்போதுதான் வந்தவர் வேறு மணமகள் என்று தெரியவர எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி!

‘ஒரே மாதிரி முகத்தை மூடி வைத்திருந்தார்களே, நான் என்ன செய்வது?’ என்கிறார் மணமகன்.”டிபன் பாக்ஸ் மாத்தி எடுத்துட்டு வருவ, குடைய மாத்தி எடுத்துட்டு வருவ, இப்ப கல்யாணமான பொண்ணையே மாத்திக் கூட்டிட்டு வந்திருக்கியே’ என்கிறார் அப்பா.
“அவரைச் சொல்லித் தப்பில்லை. பெண்கள் தலை குனிந்தே வரவேண்டும் என்றீர்கள்… தலைகுனிந்தால் ஷூ மட்டும் தெரிகிறது. அதுவும் மணமகன்கள் ஒரே மாதிரி புதியதாகவே ஷூ அணிந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி அடையாளம் தெரியும்?” என்கிறார் புஷ்பா என தன் பெயரை மாற்றிச் சொல்லி, தந்தை பெயரை மாற்றிச் சொல்லி, ஊர்ப் பெயர் தெரியாதது போல்
காட்டிக் கொண்டு, இடம் மாறியதைத் தெரிந்தே இறங்கிய இன்னொரு மணமகள் ஜெயா.

இங்கே மணமகளாக வரவேண்டிய பூல் குமாரி, கடைசி ஸ்டேஷனில் கணவனைத் தேடிக் காணாமல் போனதும் பதறுகிறாள்.அங்கே ஒற்றையாய் நிற்கும் மணமகன் இவளில்லையெனத் தெரிந்ததும் தன் மனைவி எங்கோ ஓடிவிட்டாள் என்று கோபம் கொண்டாலும், பரவாயில்லை மோட்டார் பைக் வந்ததென சமாதானமாகிறான். அவன் அம்மா 20 பவுன் நகை போனதென்று புலம்புகிறாள்.

இதைக் கண்டு பயத்தில் வெறித்து நிற்பவளுக்கு உதவ வருகிற ஸ்டேஷன் மாஸ்டர் ஊர்ப் பெயர் கேட்க, கங்காபுரம் என்கிறாள். ‘சத்தீஸ்கரில் நூற்றுக்கணக்கான கங்காபுரம் உள்ளதே! எப்படிக் கண்டுபிடிப்பது என்கிறார். கணவன் ஊர் கேட்டால், ஏதோ பூ பூ என்று வரும் என்கிறாள், கணவன் பெயர் கேட்டாலும் சொல்லக்கூடாது என்பதால் உள்ளங்கையைக் காட்டுகிறாள். எந்த விவரமும் தெரியாமல் நான் ஒன்றும் செய்ய முடியாது. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போங்க’ என்று அனுப்பி விடுகிறார். தள்ளுவண்டிக் கடையில் பணி புரியும் ஒரு சிறுவன் அவளுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, கடை நடத்தும் அந்த நடுத்தர வயதுப் பெண்மணியிடம் அழைத்துச் செல்கிறான்.

அணைப்பதற்காக அடித்தேன்…

இப்படியெல்லாம் கூட நடக்குமா! இது ஒரு புதுக் கதையாக இருக்கிறதே என்று அவர் ஆச்சரியப்பட்டு “போகும் இடத்தில் எப்படி அடக்கமாக வாழ்வது? எப்படிச் சமைப்பது என்று சொல்லிக் கொடுத்தாங்க; எங்காவது விட்டுட்டு வந்தா திரும்பி வீட்டுக்கு எப்படி வர்றது என்பதை உங்க வீட்டில் சொல்லிக் கொடுத்தாங்களா?” என்று நச்சென்று கேட்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் முக்காடு போட்ட பெண்கள் உலா வருவதைப் போல மூடத்தனத்தைத் தோலுரிக்கும் வசனங்களும் வந்து வந்து தெறித்து விழுகின்றன.

மரபுகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டுமென நம்பி அதை மீறாமல் பாதுகாக்கும் அப்பாவிப் பெண்ணாக பூல்குமாரியும், தனக்குப் பின்னால் பிறந்தவர்களைக் கரையேற்றவும், ஏற்கனவே மனைவியை எரித்த வழக்குள்ள ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட வைத்த தன் குடும்பத்திடமிருந்து தப்பித்து எப்படியாவது தான் விரும்பிய இயற்கை வேளாண்மைப் படிப்பைப் படிக்க வழிவகை செய்யவும் துணிந்து போராடுகிற ஜெயாவும் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்கள் சந்திக்கும் பெண்கள் குழாமில் பேசும் வசனங்கள் மிக இயல்பாக பழைமைக்கு வேட்டாய் ஆர்ப்பாட்டமின்றி அதிர்ந்து ஒலிக்கின்றன.

“உன்னையே பாதுகாப்பா வச்சிக்கத் தெரியாத கணவனை இந்த மஞ்சளும் அரிசியும் முடிஞ்சு வச்சதா பாதுகாக்கும்?”

“என்றைக்குப் பெண்கள் அவர்களுக்குப் பிடித்ததைச் செய்து சாப்பிட்டு இருக்காங்க? அப்படி ஏதாவது நமக்குப் பிடிச்சது இருக்காங்கறதே மறந்து போச்சு…”

“அந்தப் பையன் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்/புறான். பெண்களால அனுப்ப முடியுமா? ஆம்பளைங்க செய்ற எல்லாமே பொம்பளைங்களாலும் செய்ய முடியும். ஆனால் இது தெரிந்தால் ஆண்களோட காலடியில் பெண்கள் இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறாங்க…”

“அடக்க ஒடுக்கம் என்கிற பெயரில் பெண்களை முடக்கி வைத்திருக்கிறது இந்தச் சமுதாயம். இதுக்குப் பெயர் சீட்டிங்.”

“முதலில் உன் கணவரின் பெயரை ஓபனா சொல்ல கத்துக்கோ…”

‘என் கணவன் குடிச்சிட்டு அடிச்சான், ஏன்னு தட்டிக் கேட்டா அடிக்கிற கைதான் அணைக்கும்னு சொன்னான். ஒரு நாள் ‘பளார்’ என்று விட்டேன். ஏன்னு கேட்டான். அணைக்கத்தான்னு சொன்னேன். அன்னைக்கு விட்டுட்டு ஓடிப் போனவன் தான்…”

“என் புருஷன் வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாரு. நான் எப்படி யாரிடம் பேசிச் சிரிக்க முடியும்…?”
இப்படித் தூள் பறக்கிறது… (சபாஷ், வசனகர்த்தா!)

இந்தாங்க தாலியை எடுத்துக்கோங்க!

காவல் நிலையத்தில் தன் கன்னத்தில் அறைந்து நகைகளைப் பிடுங்கிக் கொண்டு, உன் தோலை உரித்து விடுகிறேனென இழுத்துப் போக முற்படும் கணவன் கட்டிய தாலியைக் கழற்றி, இதை வேணும்னா நீங்க வச்சுக்கங்க என்று வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியிடம் ஜெயா நீட்டும் போது, ஒரு பெண் தனக்கான வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும் என்றும், திருமணமானாலும் அது உடைக்க முடியாத பந்தமல்ல என்பதையும் அழுத்தமாகப் பேசியிருக்கிறார்கள்.

படிக்க வேண்டுமென பிடிவாதமாய் இருந்து ஜெயா எப்படி வெற்றி பெற்றார் என்பதும் தொலைந்தவர்கள் சேர்வதும் இடையில் நடக்கும் விறுவிறு கதை.

சிறுகச் சிறுக அறிவு பெற்று எந்த முகத்தை மூடிக்கொண்டு தொலைந்தாரோ அதை, பூரிப்புடன் வெளிக்காட்டி, தான் செய்த வேலைக்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை தன் முந்தானையில் முடிந்து கொண்டு, தன்னந்தனியாய் ரயிலில் பயணம் செய்து, பெரிய கூட்டத்தில் தீபக் என்று பெயர் சொல்லி அழைத்துக் கணவனோடு சேர்கிறார் பூல் குமாரி.

தொலைந்து தெளிந்த பெண்கள்!

நீங்கள் இல்லாமலிருந்தால் என்னைக் கண்டுபிடித்திருக்கவே முடியாதென நெகிழ்ந்து ஜெயாவிடம் சொல்ல, நீங்க இல்லாமல் போயிருந்தால் என்னை நானே தேடிக் கண்டுபிடித்திருக்க முடியாதென ஜெயா சொல்ல, உங்களுக்குத் தான் தொந்தரவு கொடுத்து விட்டேனென்று கதாநாயகனிடம் மன்னிப்புக் கேட்க, உங்கள் கனவுகளுக்காக நீங்கள் யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்று அவர் சொல்ல, பெண்கள் அவரவர்கள் சிக்கல்களைப் பேசுவதோடு நில்லாமல் தீர்வுகளையும் போராடிப் பெற முடியும் என்ற அழுத்தமான கருத்தை அன்றாட நிகழ்வுகளில் நின்று பேசுகிறது இப்படம்.

பொதுவாக, மனித இனத்துக்கு அடையாளமாயுள்ள முகத்தை பெண்கள் மட்டும் ஏன் மூட வேண்டும்? எதற்குத் தலை குனிந்தே நடக்க வேண்டும்? (குனிந்த பெண்ணின் தலையை நிமிர்த்தியவர்கள் இருவர் தான்; ஒருவர் தந்தை பெரியார்; இன்னொருவர் போட்டோகிராபர் என்று ஆசிரியர் அவர்கள் சொல்வதுண்டு)

அதுவும் ஒளிப்படம் எடுக்கும் போதும் முகத்தை மூடிக்கொள்ளச் சொல்கிற (சிறு குழந்தைகளும் கை கொட்டிச் சிரிக்கும்) வேடிக்கையை மதச்சடங்கு என்கிற பெயரில் இச் சமூகம் செய்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பது பெரும் வெட்கக்கேடு. இவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, முன்பே எழுதிய கதையைப் படமாக்கி, பிரச்சனைகளை பேசத் தொடங்கியதோடு அவற்றுக்கான தீர்ப்புகளையும் அவர்களே எழுதும் நாள் வந்துவிட்டது என்கிறது லாபட்டா லேடிஸ்!

இவர்கள் தொலைந்து போன பெண்கள் மட்டுமல்ல; தொலைந்து போன இடங்களில் தங்களைத் தேடிக் கண்டுபிடித்த பெண்கள்! நெட்பிளிக்சில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் இயக்குநர் கிரண் ராவும் ஒரு பெண்ணே!
பிகே, தங்கல், தாரே ஜமீன் பார், 3 இடியட்ஸ் உள்ளிட்ட சிந்தனைகளைத் தூண்டும் படங்களைக் கொடுத்த சிறந்த நடிகரான அமீர்கான் இப்படத்தைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,