சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

செப்டம்பர் 16-30

வரதராஜூலு கூட்டிய பார்ப்பனரல்லாதார் கூட்டம்

நூல்    :    பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

ஆசிரியர்    :    பழ. அதியமான்

வெளியீடு    :    காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை, நாகர்கோவில் _ 629 001.

பக்கங்கள் :    480- ரூ. 375.

-நூலிலிருந்து…..

பார்ப்பனரல்லாதாரின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்க தலைவர்கள் கூட்டம் ஒன்றை 1926 அக்டோபரில் வரதராஜுலு கூட்டினார். அக்கூட்டத்திற்குப் பெரியார் உட்பட பல தலைவர்களை அழைத்தார். அதை ஒட்டி தேசிய அறிக்கை ஒன்றினையும் தமிழ்நாடு அலுவலகத்திலிருந்து அனுப்பினார். அதைக் குறித்த பெரியாரின் எதிர்வினை பின்வருமாறு:

சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாக பிரசாரம் செய்து வருகிறது. இம்மாதிரியான நிலைமையை இன்றும் வளர விட்டுக்கொண்டே போனால் பிராமணரல்லாதாருக்குக் கெடுதல் வரும் என்பது வரதராஜுலு அறிக்கையில் கூறியிருக்கும் கருத்துகளில் ஒன்று. இந்த அபிப்பிராயத்தை நாம் இரண்டு வருஷத்திற்கு முன்னதாகவே கொண்டுள்ளோம்…. இதை வெளிப்படையாய் வலியுறுத்த முன்வந்ததற்கு நன்றி. அவர் எடுத்துக்கொள்ளும் எவ்வித முயற்சிக்கும் ஆதரவளிக்க வேண்டியது தமிழ் மக்கள் கடமை (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 2009, ப. 895).
வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசைவிட்டு விலகியபோது இப்போதுதான் காங்கிரசு பரிசுத்தமானது என்று எஸ். சீனிவாச ஐயங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926: 3 அக்டோபர் 1926). பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதல் செய்யும் காங்கிரசு தலைவர் எஸ். சீனிவாச ஐயங்காரோடு வரதராஜுலுவும், திரு.வி.க.வும் இணங்கி இருப்பது பற்றி கேலியும், கிண்டலும், கண்டனமும் பெரியார் செய்துவந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து வரதராஜுலு விலகினார் என அறிந்து நாட்டின் நல்ல காலத்தின் பயன் என்று பெரியார் எழுதினார். (குடிஅரசு, 26 செப்டம்பர் 1926).

காங்கிரசில் பார்ப்பனரல்லாதாரின் நிலைமை

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் எதிர்விளைவாகவே பார்ப்பனர் அல்லாதாருக்குக் காங்கிரசில் மதிப்பும் பதவியும் வாய்ந்தது என்று பல சமயங்களில் பெரியார் எடுத்துக் காட்டினார். அவ்வகையிலேயே காங்கிரசில் வரதராஜுலுவுக்குப் பதவி கிடைத்தது என்றும் ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.

ஜஸ்டிஸ் கட்சியே இல்லாதிருக்குமானால் அரசியல் சங்கங்களிலாவது டாக்டர் வரதராஜுலு நாயுடு, கலியாண சுந்தர முதலியார், தண்டபாணி பிள்ளை, சிங்காரவேலு செட்டியார், பாவலர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப்பிள்ளை, வெங்கிடு கிருஷ்ணப்பிள்ளை, இராமசாமி நாயக்கர், சக்கரை செட்டியார், மயிலை இரத்தினசபாபதி முதலியார், முனுசாமி கவுண்டர், அமீத் கான் சாயபு, ஷபி முகம்மது சாயபு, மாரிமுத்துப் பிள்ளை முதலிய எத்தனையோ கனவான்கள் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் வந்திருக்க முடியுமா? முடியுமென்று சொல்வார்களானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதபோது ஐந்தைந்து வருஷம் ஜெயிலுக்குப் போன உண்மையான தேசபக்தர்களான ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளை முதலிய கனவான்கள் உண்மையான தேசத் துரோகிகளான பல பார்ப்பனர்கள் மூட்டை தூக்கியும், அவர்களைச் சுவாமிகளே என்று கூப்பிட்டுக்கொண்டும் அவர்கள் வாலைப்பிடித்துத் திரிந்தால் மாத்திரம் வாழும்படியான நிலைமையில் இருக்கவில்லையா? (குடிஅரசு, 31 அக்டோபர் 1926).

வரதராஜுலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜுலு கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜுலுவை ஆதரித்தது.

சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகையில் பேர் போடுவதாகவும், படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத் துணியும் உபயோகித்துக்கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொதுஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரியபெரிய உத்தியோகங்களையும், பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா? அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).

குடிஅரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜுலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.

நவீனம்: வரதராஜுலுவும் பெரியாரும்

(மாறிவரும் காலத்தை உணர்ந்து புதியனவற்றை ஏற்றுக்கொள்ளும்) நவீன மனிதராக வரதராஜுலுவைக் கருத முடியாது என அவரோடு நன்கு பழகிய வ.ரா. குறிப்பிட்டுள்ளார். அப்படி பழமைவாதியாக அவரை முற்றாக ஒதுக்கிவிட முடியாது. பெரியாரைப் போல் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டாடுபவராக இருக்கவில்லை என்றாலும் பண்பாட்டு மாற்றங்களைச் சூழ்நிலைக்கேற்ப ஏற்பவராகவே இருந்தார் வரதராஜுலு. அதற்கு ஒரு சான்று 1933இல் மதவாதிகளால் எதிர்க்கப்பட்ட கர்ப்பத் தடையை வரதராஜுலு ஆதரித்தார். பெண் ஏன் அடிமையானாள்? எனச் சிந்தித்த பெரியார் கர்ப்பத் தடையை ஆதரித்தார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பி.எஸ். சிவசாமி ஐயர் தலைமையில் நடந்த கர்ப்பத் தடையின் அவசியம் குறித்த கூட்டத்தில் (31 அக்டோபர் 1933, சென்னை) வரதராஜுலு கலந்துகொண்டார்.

கர்ப்பத் தடை போன்ற லௌகீக விஷயங்களில், சாஸ்திரம் பற்றிக் கவலையே கொள்ளக்கூடாது…. பழைய காலத்து சாஸ்திரங்கள் கர்ப்பத் தடையை ஆதரிக்கின்றனவா அல்லவா என்பது பற்றியும் கவலை வேண்டாம். இந்தக் காலத்தில் நடந்துகொள்ள வேண்டியது பற்றியே கவனிக்க வேண்டும்.

குழந்தைகளில்லாவிட்டால் அது பெருங்குறையாகவிருக்கிறது. அதிகமாகி விட்டாலும் கஷ்டம்… கர்ப்பம் ஏற்படாதபடியே தடுப்பது சரியா? அல்லது கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனைக் கலைப்பது சரியா? கர்ப்பத்தைச் சிதைத்து அது சம்பந்தமான குற்றங்கள் செய்த கைதிகளே பெரும்பாலோராய் சிறையில் இருக்கக் கண்டிருக்கிறேன்… நமது (இந்து) வைதீகர்கள் கர்ப்பத் தடை விஷயத்தில் குறுக்கிட்டு கூச்சல் போடவில்லை. ஆனால் அவ்வேலையைக் கத்தோலிக்கர்களுக்கு விட்டிருக்கிறார்கள்…. சர்க்கார் எவ்வித எதிர்ப்பையும் அலட்சியம் செய்யாமல் ஆஸ்பத்திரிகளில் தகுந்தவர்களைக் கொண்டு கர்ப்பத் தடை முறைகளைப் போதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் (குடிஅரசு, 5 நவம்பர் 1933) என்பது வரதராஜுலு அக்கூட்டத்தில் விடுத்த கோரிக்கையாகும்.

கர்ப்பத் தடையை ஆதரித்துச் சென்னையில் நடந்த அக்கூட்டத்தின் நிகழ்வுகளைச் சுதேசமித்திரன் வெளியிட்டிருந்தது. பலரும் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்த்துப் பிரசுரித்திருந்த அது வரதராஜுலுவின் பேச்சைத் தமிழில் பேசினார் என்று ஒருவரியில் முடித்துவிட்டது. அதைக் கண்டித்து எழுதியது குடிஅரசு.

இங்கிலீஷ் பேச்சுகளை எல்லாம் மொழிபெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜுலுவின் தமிழ்ப் பேச்சைப் பூராவாகப் போடாததற்குக் காரணம் என்ன? தமிழ்மொழி மீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப்பனரல்லாதார் மீதான துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பன பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக! (குடிஅரசு, 5 நவம்பர் 1933).

கட்சியிலும் சமூகத்திலும் தனக்கும் தன் கல்வித் திட்டத்திற்கும் எதிர்ப்பு அதிகமாகிவிட்டதை உணர்ந்த இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து உடல் நிலையைக் காரணம் காட்டி விலக முடிவு செய்தார். அதற்கு முன்னதாகச் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பெற்றது. புதிய தலைவர் தேர்வில் வரதராஜுலுவுக்கும் பெரியாருக்கும் முக்கியப் பங்கிருந்ததாகத் தெரிகிறது.

கூட்டம் (சென்னை சட்டசபை காங்கிரசு கட்சிக் கூட்டம்) ஆறு மணி அடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் துவக்கப்பட்டது. தமக்குப் பதிலாகக் கட்சித் தலைவர்

பதவிக்கு நியமனச் சீட்டுகளைப் பதிவு செய்யுமாறு ஆச்சாரியார் கேட்டுக்கொண்டார். டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு காமராசர் பெயரை முன்மொழிந்தார்.

என்.அண்ணாமலைப் பிள்ளை அதை வழிமொழிந்தார். கி.சுப்பிரமணியத்தின் பெயரை பக்தவத்சலம் முன்மொழிய டாக்டர் யூ.கிருஷ்ணாராவ் வழிமொழிந்தார்.

தேர்தல் நடைபெற்றது. காமராசருக்கு 93 ஓட்டுகளும், சி.சுப்பிரமணியத்துக்கு 41 ஓட்டுகளும் கிடைத்தன. (விடுதலை 31 மார்ச் 1954).

8 ஏப்ரல் 1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதையடுத்து காமராசர் முதலமைச்சரானார். ஏ.பி. ஷெட்டி, எம். பத்வத்சலம், சி. சுப்பிரமணியம், பி. பரமேசுவரன் ஆகியோர் அமைச்சர்களாக அமைந்தனர். காமராசர் பொறுப்பேற்றதும் புதிய கல்வித் திட்டத்தை விலக்கிக் கொண்டார்.

1953 முதல் 1954 வரை நடந்த புதிய கல்வித் திட்ட எதிர்ப்பு போராட்டத்திலும் அதன் இறுதிப் பகுதியாக அமைந்த முதலமைச்சர் மாற்றத்திலும் வரதராஜுலு பெரியாருடன் இணைந்து செயலாற்றியதைக் கண்டோம். 1925இல் நடைபெற்ற சேரன்மாதேவி போராட்டத்தை இது நினைவூட்டுகிறது. இரண்டு போராட்டங்களும் கல்வி சார்ந்தவை. இரண்டும் காங்கிரசுகாரர்களின் செயல் திட்டங்களாக அமைந்தவை. வர்ணாசிரமப் புதுப்பித்தலாகப் பார்ப்பனரல்லாதாரால் கணிக்கப்பட்டவை. 25 ஆண்டுகள் இடைவெளி கொண்ட இரண்டிலும் பார்ப்பனரல்லாத தலைவர்களான வரதராஜுலுவும் பெரியாரும் இணைந்து போராடினார்கள்.

இறுதியான இரண்டு போராட்டங்கள்

காமராசர் முதலமைச்சரான பிறகு வரதராஜுலு மூன்று ஆண்டுகளே வாழ்ந்தார். காமராசர் ஆட்சியின் இக்கட்டத்தில் தேசியக் கொடி, இராமர் பட எரிப்புப் போராட்டங்களில் பெரியார் ஈடுபட்டார். சட்டமன்ற உறுப்பினரான வரதராஜுலு பெரியாருக்கும், காமராசருக்கும் பாலமாகச் செயல்பட்டார்.

1955 ஆகஸ்ட் மாதத்தில் இந்தி எதிர்ப்பின் ஒரு அடையாளமாக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். வரதராஜுலுவின் முயற்சியினால் வெளியான முதலமைச்சர் காமராசரின் அறிக்கையை அடுத்துப் பெரியார் அப்போராட்டத்தை விலக்கிக் கொண்டார். இதன் பின்னணியில் வரதராஜுலு இருந்தார்.

தமிழ்நாட்டவர் மீது இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் வாக்குறுதி கொடுத்து கொடியைக் கொளுத்த வேண்டாம் என்று விரும்புவதாக உணர்கிறேன். ஆகவே நான் எனது தீர்மானம் அமுல் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்று சர்க்கார் விரும்பினால் எப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தேனோ அப்படிப்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

….. முதல் மந்திரியாரின் விருப்பத்திற்கு ஏற்பக் கொடி கொளுத்துவதைத் தற்காலிகமாகவே ஒத்திவைத்து திராவிடர் கழகத்தாரையும் மற்றும் இதில் ஈடுபட இருக்கிற பொது மக்களையும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்றைக்குக் கொடியைக் கொளுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1974, ப. 1836). காமராசர் ஆட்சிக்கு ஊறு வந்துவிடாமலும், அதேசமயம் தன்னுடைய தேசியக் கொள்கையை விட்டுக்கொடுத்து விடாமலும் அரசியல்ரீதியாகப் பெரியார் எதிராகச் சென்றுவிடாமலும் அமையக்கூடிய நடவடிக்கைகளை எடுத்தவராக வரதராஜுலு இச்சந்தர்ப்பங்களில் செயல்பட்டார் எனச் சொல்லலாம்.

1956இல் நிகழ்ந்த பெரியாரின் இராமர் பட எரிப்புப் போராட்டத்தை வரதராஜுலு எதிர்த்தார். அதைப் பெரியார் பின்வருமாறு எதிர்கொண்டார்.

நான் மதிக்கத்தக்க இரண்டு நபர்களிடமிருந்து இராமன் உருவம் கொளுத்தப்டக்கூடாது என்று ஒரு வேண்டுகோள் — அதாவது ஒரு வகை எதிர்ப்பும் கொடி கொளுத்துவதைத் தடை செய்யும்படி சர்க்காரைக் கேட்டுக்கொள்ளும் மற்றொரு வகை எதிர்ப்பு ஒன்றும் ஆக இரண்டு எதிர்ப்புகளைப் பத்திரிகையில் பார்த்தேன்.

இந்தக் கனவான்கள் எனது மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள். இவர்களில் எம்.எல்.ஏ. ஒருவர். இவர் மக்கள் பிரதிநிதி உரிமை கொண்டவர். மற்றொருவர் ஒரு மடாதிபதி ஆவார். இவர்கள் இருவரும் யார் என்றால், வரதராஜுலு நாயுடு அவர்களும் குன்றக்குடி மடாதிபதிகளுமாவார்கள்.

ஆதாரத்தின் மீதும், பலத்தின் மீதும், ஆமோதிப்பின் மீதும் நடத்தப்படுகிற ஒரு காரியத்தை ஒரே வார்த்தையில் வேண்டாம் என்றும், தடைசெய் என்றும் பொறுப்புள்ள மரியாதையுள்ள இரு பெரியார்கள் சொல்லிவிடுவது என்றால் இதில் எப்படி நம் கருத்தைக் கூறாமல் இருக்க முடியும்? மற்ற வேறு யாராவது இருந்தால் நான் இவ்வளவு இலட்சியம் செய்யமாட்டேன்…..

என் உள்கருத்தை அறிந்து, நான் சொல்லும் காரணங்களை காட்டும் ஆதாரங்களை எடுத்துத் தலைப்பில் காட்டி, அதை மறுத்து அல்லது சமாதானம் சொல்லிக் கொளுத்த வேண்டாம், கொளுத்துவது தப்பு என்று சொல்லுவது எதிர்ப்புப் பண்பாகும். நமக்கும் உதவி செய்வதாகும். அப்படியில்லாமல் மக்கள் மனம் புண்படும் என்பது மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பவருக்காகத் தான் கவலைப்படத் தக்கதாகுமே தவிர மக்களை மூடத்தனத்திலிருந்து அதனால் ஏற்பட்ட இழிவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பவனுக்கு மக்கள் மனம் புண்படுவது என்பது மதிக்கத்தக்க தாகுமா? (விடுதலை, 30 ஜூலை 1956). அரசு தடைவிதித்திருந்தாலும் இராமன் பட உருவத்தைக் கொளுத்தியது குற்றமல்ல என்று பெரியார் விடுதலையில் கட்டுரை எழுதும்படி இப்போராட்டம் ஒருவகையாக முடிவுக்கு வந்தது

(விடுதலை, 2 ஆகஸ்டு 1956).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *