அயோத்தி அகாடா – சரவணா ராஜேந்திரன்

2024 ஆகஸ்ட் 1-15, 2024 கட்டுரைகள்

அயோத்தியில் அகாடா என்னும் பெயரில் பல மடங்கள் உள்ளன. இந்த மடங்கள் அனைத்தும் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் வரும் பார்ப்பனர்களுக்குச் சிறப்புக் கவனம் செய்து அவர்களை கவனித்துக் கொள்கின்றன. அங்கு எத்தனை நாள் வேண்டுமென்றாலும் தங்கலாம்.

பார்ப்பனர் அல்லாத சாமியார்களுக்கு அவரவர் ஜாதிகளுக்கு என்றே அங்கு அகாடாக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் ரமேஷ் பிஸ்ட் என்ற ஆதித்யநாத் உத்தரகாண்ட் தாக்கூர் என்ற உயர் ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் நாத் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர் அல்ல. இவரது முன்னோர்கள் சிவனுக்கு ஆடை நெய்து தந்ததாகவும் கதைவிடுவார்கள். இவர்களின் ஜாதிக்கு என்றே அயோத்தியில் வஸ்த்ராகாடா (வஸ்திரா அகாடா) என்ற ஒரு மடம் உண்டு.

சாமியார் ஆதித்யநாத் அயோத்தி சென்றால் இந்த அகாடாவில் இருந்து வரும் உணவைத்தான் உண்பார். தங்குவதும் இங்கேதான். அவர்கள் கொடுக்கும் ஆடைகளைத்தான் அணிந்துகொள்வார். அயோத்தியில் இருக்கும் வரை குறிப்பிட்ட அகாடா தான் அவருக்குச் சேவை செய்யும். மற்ற அகாடாக்கள் எதுவுமே அந்தச் சாமியார் முதலமைச்சருக்கு ஒன்றுமே செய்யாது. அப்படிச் செய்ய யாராவது கட்டளையிட்டால் அடிதடி கொலைகள் நடக்கும்.

அயோத்தியில் உள்ள அகாடாக்களில் நடக்கும் இது போன்ற கொலைகள் குறித்த விரிவான விவரம் ஏற்கனவே ‘உண்மை’ இதழில் சான்றுகளோடு வெளிவந்துள்ளது.

அதே நேரத்தில் அயோத்தியில் உள்ள சாமானியர்களுக்கு அங்குள்ள அகாடாக்களில் விசேஷ நாட்களில் என்ன தருவார்கள் என்றால் மாட்டுமூத்திரமும் சாணியும் தயிரும் கலந்த திரிகவ்யம் தான் பிரசாதமாகத் தருவார்கள்.

இந்தத் திரிகவ்யம் குறித்து நீண்ட காலமாக யாருக்குமே தெரியாமல் இருந்தது. 2010ஆம் ஆண்டில்தான் ஒரு வெளிநாட்டுப் பயணி,
அவர்கள் தரும் பிரசாதத்தில் மாட்டு மூத்திரம், சாணி மற்றும் தயிர் கலந்திருப்பதை கண்டுபிடித்துக் கூறினார்.

அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இருப்பினும் இதை அகாடாக்கள் மறுத்தே வந்தன.

கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த அகாடாக்களில் நானோ நீங்களோ என்றால் அதன் படிகளில் கூட அமர அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்த அகாடாக்களுக்கு அன்னதானம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் தனித்தனியாக வட மாநில அரசுகள் தொகை ஒதுக்கி அனுப்பும். இந்த நிலையில் ராமர் கோவில் கட்டப்பட்டது. அதற்கான அறக்கட்டளைக்கு மோடி உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க. அமைச்சர்களும் பல பொதுத்துறை நிறுவனங்களும் பல்வேறு பெயர்களில் கோடிக்கணக்கான தொகைகளை வாரி வழங்கி உள்ளனர்.

கோவிலுக்கு வரும் அனைவருக்குமே அன்னதானம் என்று ராமர்கோவில் அறக்கட்டளை அறிவித்தது. அகாடா போன்று குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் என்று இல்லாமல் அனைவருக்கும் அன்னதானம் என்பதால் கோவிலுக்கு பட்டினியோடு (விரதமிருந்தாம்) பல ஊர்களில் இருந்து வந்து கோவிலுக்குச் சென்று சாமியைக் கும்பிட்ட பிறகு அவர்களுக்கு உணவிடும் திட்டத்தின் கீழ் உணவு வழங்க கோவிலுக்கு வெளிப்புறத்தில் உணவுக் கூடம் திறக்கப்பட்டுள்ளது. அந்த உணவுக் கூடத்தில் ஒருவர் உணவிடும் காட்சிதான் இது.
ஒரு பார்ப்பனச் சாமியார் இரண்டு பெரிய அண்டாக்களில் உணவுப்பொருளை வைத்து வரிசையில் நிற்கும் நபர்களுக்கு உணவு வழங்கிக்கொண்டு இருக்கிறார்.

அவர் உள்ளாடை அணியாமல் வெறும் துண்டை மட்டுமே இடுப்பில் அணிந்துள்ளார். ஒரு காலைச் சோற்றுப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டும் மறு காலைத் தரையில் வைத்துக் கொண்டும் உணவு வழங்கும் இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் அருவருக்கத்தக்க முறையில் இப்படி உணவு வழங்குவதை சுயமரியாதை உள்ள யாருமே ஏற்கமாட்டார்கள். ஆனால், மதத்தின் பெயரால் மூடமதியினர் இதை பக்தியோடு வாங்கி உண்கின்றனர். மற்றொரு புறம் செல்வந்தர்கள் அயோத்தியைக் கூறுபோட்டு வாங்கிகொண்டு இருக்கின்றனர்.