வெட்கம் கெட்டவன்
புழுவாய்ப் பிறந்தாலும், புதிய சிறகில் அழகழகாய் அலைந்து திரிந்து
பூத்த மலர்நாடி, புதிய தேனுறிஞ்சி
பதமாய்ப் பத்திரப்படுத்தியதை….
அலட்டிக் கொள்ளாமல், அமாவாசை இருட்டில் வந்து, ஆயிரமாயிரம்
தேனீக்களைத் தீயிட்டுக் கொழுத்தி
திருடிய தேனில் சாமியைக் குளிப்பாட்டி
தீட்டைக் கழிக்கிறான் வெட்கம் கெட்டவன்
பசுவுடன், தேனியும் திட்டுகிறது….
– நா. சுப்புலட்சுமி
திருப்பத்தூர்
யாருக்கு வடை?
வடைமாலை படைத்தார்கள்
வாய்திறவா அனுமாருக்கே _ பின்
வடையைத் தின்றதோ _ வாய்
படைத்த மனிதர்களே!
– ரா. தேன்மொழி
சென்னை
உழைப்பு
சொந்த வீடு….
கட்டுகிறது, குருவி!
நான்,
குடியிருக்கும்
வாடகை வீட்டில்!!
ஆனால்….
குருவி வீட்டில்…
பூஜை அறை இல்லை!
– நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்
பகற்கொள்ளை
பட்டப்பகலில்
துணிகரகொள்ளை
வரதட்சணை
– மணக்காடு ஜெயச்சந்திரன்
ஓடிப்போனவள்
அவள் மனசுக்குப் பிடிச்சவனோட
ஒருநாள்
விடியற்கருக்கலில்
ஓடிப்போனாள்
நொடிப்பொழுதில்
தாலிக்கொடி
வாங்கிக் கொண்டாள்
ஒருவழியாக
ஒரு குழந்தைக்கும்
தாயாகிவிட்டாள்!
ஊர்ப் பெண்டுகள் மட்டும்
குழாயடியிலும்
குளத்துக்கரையிலும்
ஓடிப்போனவள் படத்தை
இன்னமும் ஓட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்!
யானை
அய்யா சாமி…!
தர்மம் பண்ணுங்கய்யா….
ஒரு கை
இல்லாதவனய்யா….
பக்தனிடம்
பிச்சை கேட்கிறது
கோயில் யானை!நத்தை
தன் மேனியெங்கும்
வியர்க்க, வியர்க்க
தான் குடியிருக்கும் வீட்டை
தன் முதுகில் சுமக்கும் சுமைதாங்கி
-ஆட்டோ கணேசன்
அருப்புக்கோட்டை
அய்க்கூ
உண்டியலில் சாமிக்குப்
போட்ட காசு…
பூசாரி பையில்!
– ஞா. நெல்சன்
உடுமலைப்பேட்டை