தனி மனிதர்களால் வரலாறு படைக்கப் படுவதில்லை! மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், தனிமனிதர்களால் மனிதகுலத்தின் முன்னேற்றத்தைச் சீரழிக்க முடியும் என்பதற்கு இங்கு முன்னுதாரணங்கள் நிறைய உள்ளன. அதைப்போலவே மனிதகுலத்தை முன்னேற்றுவதற்குப் பாடுபட்ட மாமனிதர்கள் வரலாற்றில் நிலைக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகளாகப் பலர் உள்ளனர்.
அந்த அடிப்படையில்தான் நாம், கடந்த காலத்தில் மக்களின் நல்வாழ்க்கைக்குப் பாடுபட்ட மாமனிதர்களையும் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் போற்றுவதோடு நில்லாமல் நிகழ்காலத்திலும் மக்கள் நலனைக் காக்கும், எதிர்காலச் சந்ததியினரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தலைவர்களையும் போற்றுகின்றோம். அவர்களை ஆதரிக்கின்றோம். இதில் தனிப்பட்ட எந்த சுய நலமும் இல்லை. மக்கள் நலன் எனும் பொது நலனே முன்னிற்கிறது. ஆனால், தனது சுயநலனுக்காக – தனது குடும்பத்தினரின் சுக போக வாழ்க்கைக்காக – தனது பணத் தேவைக்காக எத்தகைய
மனிதகுல விரோதக் கட்சியையும் ஆதரிக்கவும், மனிதகுல விரோதிகளைப் போற்றவும், அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை செய்யவும் கூடியவர்கள் இன்று அரசியலில் புகுந்து இளைய தலைமுறையைச் சீரழிக்கின்றனர். இவர்கள் மக்களிடம் ஏற்கனவே உள்ள அனைத்துப் பிற்போக்குத் தனங்களையும் ஆதரிக்கின்றனர். அதனை நியாயப்படுத்திப் பேசவும் செய்கின்றனர்.
திராவிட இயக்கமோ, பொதுவுடைமை இயக்கமோ இவ்வாறு ஒருபோதும் செய்வதில்லை. மாறாக, அனைத்துப் பிற்போக்குத்தனங்களையும், சீர்கேடுகளையும் கடுமையாக எதிர்த்து விமர்சிக்கவும் செய்வதுடன் தனது உறுப்பினர்களிடமுள்ள சீர்கேடுகளையும், பிற்போக்குத்தனங்களையும் கண்டிக்கவும் செய்தது; செய்தும் வருகிறது. இந்த விமர்சனங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலர் ஓடியதுமுண்டு. அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலான இது போன்ற விமர்சனம், பயிற்றுவித்தல், பிரச்சாரம் காரணமாகத்தான் இந்தியாவுக்குள் தமிழ்நாடு மட்டும் ஜாதி மத, ஆணாதிக்க, மூடத் தனங்களுக்கு எதிரான கூடுதல் விழிப்புணர்வு கொண்ட மாநிலமாக விளங்குகின்றது என்பதை இன்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆனால், இப்போது பழமைவாதக் கருத்துகளை யெல்லாம் சரியானதுதான் என்று நியாயப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டு தேர்தல் அரசியலுக்குள் சிலரால் வளர்க்கப் பட்டு வருவதுதான் தமிழ்நாட்டுக்கு நேர்ந்துள்ள அவலமாகும். ஒருபுறம் பா.ஜ.க
மத வெறியை விதைத்து பிற மதத்தினர் மீது வெறுப்பைத் தூண்டி இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறது. அதேபோல சில ஜாதியக் கட்சிகள் பிற ஜாதியைச் சேர்ந்த குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பைத் தூண்டி இளைஞர்களிடம் கொலை வெறியை வளர்க்கின்றன.
இவ்வாறு ஜாதி, மத வெறியூட்டப்பட்ட இளம் வயதினர் கொடிய ஆயுதங்களை ஏந்தியவாறு பிற ஜாதி மக்களைக் குறித்து இழித்தும் பழித்தும் பேசி முகநூலில் வீடியோப் பதிவுகளை இடுவதைக் காண்கிறோம். தமிழ்ச் சமூகத்தின் சிறப்பே வட மாநிலங்கள் மதக்கலவரங்களில் ஈடுபட்டு ரத்தம் சிந்திய போது இங்கு மத நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்த
வரலாற்றுக்குச் சொந்தமானவர்கள் என்பதுதான். அதேபோல ஒரு சில வேண்டாத ஜாதிக் கலவரங்கள் இங்கு நடைபெற்ற போதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடக் கட்சிகளிலும் திராவிடர் இயக்கங்களிலும் அனைத்துச் ஜாதி, மத மக்களும் ஒன்று திரட்டப்பட்டு ஒற்றுமையாக இயங்கிவருவதே தமிழ்நாட்டின் சிறப்பாகும்.
மேலும் தமிழ்நாட்டில் முதன்மையாக இன்று இயங்கிவரும் கட்சிகளான திராவிட, பொதுவுடைமை, காங்கிரஸ் ஆகிய மூன்றுமே வன்முறையில் நம்பிக்கையற்ற அறவழிக் கட்சிகளாகவே செயல்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம். சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் விடுபட்டு ஆயுதக் குழுக்களாகச் செயல்பட்டுள்ளனர். அதே போல இடைக்காலத்தில் சில ஆயுத வழியில் நம்பிக்கை கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களும் இங்கு செயல்பட்டுத் தோற்றுப்போனதும் வரலாறு ஆகும்.
ஆனால், அறிவாசான் தந்தை பெரியார் துவங்கி அவர் வழிவந்த அறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் என அனைவருமே வன்முறைக்கு எதிரானவர்களாக இருந்து வந்துள்ளனர். எப்போதும் அறிவுப் பிரச்சாரத்தையும், அறவழிப் போராட்டத்தையும் மட்டுமே நடத்தியுள்ளனர். இதன் காரணமாகவே தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்ற பெயரைத் தாங்கிய மாநிலமாக விளங்கி வருகிறது.
இந்த நற்பெயரைக் கெடுக்கும் விதமாகத்தான் -/ளஜாதி மத வெறிக் கட்சிகள் தமிழ்நாட்டில்
கலவரத்தையும் வன்முறையையும் தூண்ட முனைகின்றன. தேர்தல் கட்சியாக இருந்து கொண்டே சிலர் தங்களது மேடையில் வெட்டு, குத்து, அரிவாள் எனப் பேசி இளைஞர்களுக்கு ரத்த வெறி யூட்டுகின்றனர். இவர்களால், இவர்கள் பேசும் இனவெறி மற்றும் குடிப்
பெருமை அரசியலால் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. சீரழிவு மட்டுமே மிஞ்சும்!
இந்தச் சீரழிவாளர்கள், தந்தை பெரியாரையும் திராவிட இயக்கத்தையுமே தங்களது முதன்மை எதிரியாக அறிவிக்கின்றனர். இது மிகவும் சரியானது. இவ்வாறு அறிவித்ததன் மூலம் தங்களுக்கான சவக்குழியை தாங்களே தோண்டத் தொடங்கிவிட்டனர். ஆம் தந்தை பெரியாரை எதிர்ப்பவர்களை தமிழ்நாட்டில் வாழவும், வளரவும் ஒருபோதும் மக்கள் அனுமதிப்பதில்லை! எனவே இவர்களுக்கு எதிர்காலமில்லை!