குறும்படம்
மௌன மொழி
ஈழத்தமிழர்கள் பட்ட துன்பத்தை, மனிதகுல வரலாற்றில் மனிதர்கள் எத்தனை வகையான துன்பங்களை பட்டார்களோ…, அத்தனை வகையிலும் பட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இதுவரையிலும் கேட்டதும், சொன்னதும், எழுதியதும் அனைத்துமே ஒரளவுதான். சொல்லப்படாதது இன்னும் ஏராளம். அப்படி, சொல்லப்படாத கோணம் ஒன்றில் ஈழத்தமிழரின் இன்னலை இந்த மௌனமொழி -_ குறும்படம் சொல்கிறது.
கதை, இரண்டு காதலர்களுக்கிடையிலான ஊடலில் தொடங்குகிறது. அந்த ஊடல் விரிசலாக மாறுகிறது. இறுதியில் காதலி, காதலனுக்கு நிபந்தனையுடன் கூடிய கெடுவை விதிக்கிறாள். அந்த நிபந்தனையையும் அவனால் குறிப்பிட்ட கெடுவுக்குள் நிறைவேற்ற முடியவில்லை. அதற்குச் காரணமாக சொல்லப்படுவதுதான் நமது மனதில் சுமையை ஏற்றுகிறது.
அகதியாக தப்பி வந்த ஈழத்தமிழர் ஒருவரின் மனைவி ஈழத்தில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள். அந்த செய்தியை நாணயம் பயன்படுத்தும் தொலைபேசி வாயிலாக, அவளது கணவன் மற்றொருவர் மூலமாக அறிந்து வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறான். காரணம், ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. குழந்தை பிறக்குமா? தன் மனைவி உட்பட குடும்பமே குண்டு மழையிலிருந்து தப்பிப் பிழைக்குமா? என்று பரிதவிக்கும் நேரத்தில், தொடர்ந்து பேசுவதற்கு நாணயம் இல்லாமல் போய்விடுகிறது. காதலியின் ஊடலைப் போக்குவதற்கு, முதலில் சொன்ன காதலன், மேற்கண்ட துன்பியலை நேரில் கண்டு, தன்னிடமிருந்த ஒற்றை ரூபாய் நாணயத்தை தொலைபேசி இணைப்பு துண்டிப்பதற்குள் அதற்கான கருவியில் போட்டு விடுகிறான். பேச்சு தொடர்கிறது. நாணயத்தை போட்ட காதலன், தன் காதலியை மறந்து விரக்தியான மனநிலையில் அந்தப் பூங்காவின் இருக்கையில் அமர்ந்திருக்கிறான். இ-றுதியில், அவனது காதலும் கைகூடுகிறது. இதுதான் மொனமொழி _ குறும்படத்தின் கதை.
இயக்குநர் : ஜெய்
தொடர்பு எண்: 9789895953
இணையதளம்
பெரியார் பண்பலை
பெரியாரின் கொள்கைகளை ஒலி வடிவில் வழங்கும் இணைய வானொலி. உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து இணைய வழியே பெரியார் வலம் வரும் ஊடகம். காலப்பேழையாக உள்ள பெரியாரின் உரைத் தொகுப்புகள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நிகழ்ச்சிப் பதிவுகள், திராவிடர் கழக மாநாடுகள், திராவிடர் இயக்க சாதனைத்துளிகள், மூடநம்பிக் கைகளை முறியடிக்கும் அறிவியல் செய்திகள், திராவிடர் கழக இயக்க பாடல்கள், திரையிசையில் பகுத்தறிவுப் பாடல்கள், உங்களுடன் கொஞ்ச நேரம் என்னும் தலைப்பில், உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் நிகழ்வுகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் பகுதி என ஏராளமான பதிவுகள் இதில் உண்டு. எல்லாப்பதிவுகளையும் எப்போதும் கேட்கலாம். எந்த நேரமும் கேட்கலாம்.
பெரியார் ஆயிரம்
தந்தை பெரியாரின் போராட்ட வாழ்க்கை, அயராத உழைப்பு,அவரால் தமிழ்ச் சமூகம் அடைந்த மாபெரும் மாற்றம் உள்ளிட்டவற்றை கேள்வி பதில் வடிவில் வழங்கியுள்ள நூல் இது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு மட்டுமல்லாமல், பெரியாரை அறிந்துகொள்ள முயல்வோருக்கு மிகுந்த பயனளிக்கும் கையேடாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்தனித் தலைப்புகளில் செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். தமிழக சமூக மாற்ற வரலாற்றை உள்ளடக்கிய காலப் பெட்டகமாக நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு: கிடைக்குமிடம்: திராவிடன் புத்தக நிலையம், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, பெரியார் திடல், சென்னை-600 007.
பக்கங்கள்: 232 ரூ. 50/–_